நிர்வாண உலகம்!
ரஹ்மத் ராஜகுமாரன்
[ குர்ஆன் நிர்வாணம் பற்றி பேசுகிறது. அதுவும் சற்று சுவாரசியமாக…!]
மனித இனத்தின் மிகப்பெரிய இரண்டு கேள்விகள்… “நாம் யார்…? இந்தப் பிரபஞ்சம் எப்படி தோன்றியது…?”
இந்த கேள்விக்கான பதிலை தேடும்போது இறைவன் வந்து விடுகின்றான்.
ஆன்மீகவாதிகள் தேடிக் கண்டடைகிறார்கள். நாத்திகவாதிகள் இன்னும் விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள், இறைவன் விஷயத்தில்.
இந்த இரண்டு சித்தாந்தங்களையும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு சித்தார்த்த கவ்தம புத்தருக்கு (கி.மு. 563-483) 29 வயதில் ஞானோதயம் கிடைத்ததாக சில வரலாறு கூறுகிறது.
புத்தருக்கு எல்லாம் கிடைத்திருந்தது. இமயமலை அடிவாரத்தில் ஒரு சிறிய ராஜ்யம். அவருக்கு நல்லது நினைத்த தந்தை அழகான மனைவி, ராகுலன் என்கிற மகன்… இத்தனை சவுகரியங்கள் இருந்தும் அவருக்கு மனிதகுலத்தின் மூப்பு, வியாதி, மரணம் இம்மூன்றும் தவிர்க்க முடியாதவை என்பதை கவனித்து, இதன் காரணத்தைக் கண்டுபிடிக்க ஓரிரவில் அரண்மனையின் அத்தனை ஆடம்பர வாழ்வையும், குடும்பத்தையும் உதறித் தள்ளி இதற்காக உண்மையை எப்படித் தேடுவது என்று அலைந்தார்.
விடை ரிஷிகளிடம் கிடைக்கவில்லை. மெய்வருத்தத்திலும் கிடைக்கவில்லை. அலைந்து திரிந்தார். ஒரு கட்டத்தில் பளிச்சென்று வெளிச்சம் போட்டதுபோல் அவருக்கு விடை, “ஆசையும் பற்றும்தான் ஆதாரக் காரணங்கள். இவற்றை துறந்தால் கிடைக்கும் ஞானம் “நிப்பாணா” (நிர்வாணம்) என்றார்.
இந்த நிர்வாணம் எப்படிப்பட்டது…?
இன்றைய அன்றாட அர்த்தத்தில் நிர்வாணம் என்பது உடைகள் அனைத்தையும் சுழற்றி விட்டுத் திரிவது என்பது அல்ல. புத்தரின் நிர்வாணம் ஒரு விதத்தில் களைதல் தான். ஆசைகளை, பற்றுகளை, உடைமைகளை… அதாவது மனம் நிர்வாணமாகுதல் ஆகும்.
எதையும் விரும்பாமல் இருக்கும்போது ஒருவன் எதையும் கைப்பற்றுவதில்லை. எதையும் கைப்பற்ற்வில்லை என்றால் அவனுக்கு கவலை இல்லை. மனதுக்கு அமைதி கிடைக்கிறது. (‘மஜ்ஜின நிக்காயா” என்னும் பாலி மொழிப் பிரதியிலிருந்து)
சிறிது சிறிதாக பவுத்த மதத்தின் ஆரம்ப காரணங்கள் விலகிப் போய் அதன் சடங்குகள் மட்டும் மிச்சமிருக்கும் நிலை. எல்லா மதத்துக்கும் வெவேறு அலவில் உண்டு. பவுத்தம்; அது பிறந்த இந்தியாவில் ஞாபகச் சின்னங்களாகவும், மற்ற நாடுகளில் தொடர்ச்சியற்ற மேம்போக்கான சடங்குகளாகவும், விழாக்களிலும், பிரார்த்தனைகளிலும் புத்தரின் பவுத்த மதம் நிர்வணமாகவே காட்சி அளிக்கிறது….!
இதற்கு முக்கிய ஒரு காரணம் வலுவான இறைவன் ஒருவன் அதற்கு இல்லாததே!
ஆனால், குர்ஆன் நிர்வாணம் பற்றி பேசுகிறது. அதுவும் சற்று சுவாரசியமாக…!
“நாம் ஆதமை நோக்கி, ஆதமே! நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கும், உங்களுடைய மனைவிக்கும் எதிரியாவான். உங்கள் இருவரையும் இச்சோலையிலிருந்து அவன் வெளிப்படுத்தி விடாது நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். இல்லையேல் நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள்” என்று கூறினோம்.
நிச்சயமாக நீங்கள் பசியாகவோ, நிர்வாணமாகவோ இருக்க மாட்டீர்கள்.
நிச்சயமாக நீங்கள் இதில் தாகிக்காமலும், வெயிலால் தாக்கப்படாமலும் இருப்பீர்கள் என்று கூறினோம்.
எனினும் ஷைத்தான் அவர்களுக்கு ஊசலாட்டத்தை உண்டு பண்ணி, “ஆதமே! நிரந்தர வாழ்விற்குரிய மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் நான் உங்களுக்கு அறிவிக்கவா…? என்று கூறினான்” (எவ்வளவு பெரிய பேராசை…!) (அல்குர்ஆன் 20:117-120)
குறிப்பிட்ட மரத்தின் கனியைப் புசித்தால் நீங்கள் இருவரும் மலக்குகளாகவோ அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடுக்கவில்லை” (இது மிகப் பெரிய பேராசை)
அவ்விருவரும் அம்மரத்தின் பழத்தை சுவைக்கவே அவ்விருவரின் மர்ம உருப்புக்களும் அவர்களுக்கு வெளிப்பட்டு வெளியே தெரிந்தன. (அவர்கள் நிர்வாணமானார்கள்).
மனதில் ஆசை குடிகொண்டதும் உடலின் ஆடைகள் காணாமல் போய் நிர்வாணம் உண்டானது. சற்று புத்தரின் ஞானத்தை யோசியுங்கள்….
சுவனத்து ஆடை நகம் போன்று இருந்தது என்றும், இன்னும் அது மிருதுவாகவும், வெண்மையாகவும் இருந்தது என்றும், அவர்கள் அந்த விலக்கப்பட்ட மரத்தின் கனியைத் தின்னவே அவர்களின் ஆடைகள் சுருங்க ஆரம்பித்தன்…! உடனே இருவரும் ஆடைகள் விலகாமல் இருப்பதற்காக தடுக்க விரல்களினால் பற்றிப் பிடிக்க, விரல்களின் நுனியில் மட்டும் அந்த சுவனத்து ஆடை கொஞ்சம் தங்கிவிட்டது என்றும், அதன் அடையாளமாகவே ஆதத்துடைய மக்களுக்கு இப்பொழுது நகங்கள் இருக்கின்றன என்றும், ஒருவனுக்கு அடங்காத சிரிப்பு ஏற்படும்போது அவனுடைய நகங்களை பார்ப்பின் அவனுடைய சிரிப்பு அடங்கிவிடும் என்றும் தப்ஸீரே மதாரியில் எழுதப்பட்டுள்ளது. சிரித்துப்பார்த்து சோதித்துக்கொள்ளவும்.
அடுத்து நிர்வாணம் குறித்து குர்ஆனில்,…
“நபியே நாம் மலைகள், மரங்கள், செடிகல் போன்ற பூமியிலுள்ள அனைத்தையும் அகற்றிவிடும் நாளில் நீங்கள் பூமியைச் சமமான வெட்ட வெளியாகக் காண்பீர்கள்” (அல்குர்ஆன் 18: 47)
(இது பூமிக்கு ஏற்பட்ட நிர்வாண நிலையைக் குறிக்கிறதோ…)
மேற்கண்ட வசனத்தைத் தொடர்ந்து அடுத்த வசனத்தில்,
“அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; “நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே (நிர்வாணமாக) திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்). (அல்குர்ஆன் 18:48)
மேற்கண்ட வசனம் பற்றி… ஹளரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது: “ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “மனிதர்களே! இறுதி நாளில் செருப்பற்ற வெறுங்காலுடனும், முழு நிர்வாணமாகவும், ஆண் குறியின் முன் தோல் கத்தரிக்கப்படாமலும், பிறந்தமேனியாக அல்லா ஹ்வின்பால், ஒன்று திரட்டிக் கொண்டு வரப்படுவீர்கள். நாம் முதலில் படைத்தது போன்றே மீண்டும் கொண்டு வருவோம். இது நமது வாக்குறுதி” – என இறைவனே கூறியுள்ளான்.
மேற்கண்ட வசனம் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், “யா ரசூலல்லாஹ்! எல்லோருமே நிர்வாண கோலத்தில் இருக்கும்போது நமக்கு வெட்கமாக இருக்காதா…?” எனக் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அந்நாள் மிகக் கடுமையான நாள், வெட்கத்தை விட எல்லோருடைய மனதிலும், ‘நாம் என்ன ஆவோம்…?’ என்ற பயமே மிகைத்திருக்கும் என்றார்கள்” (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
மறுமை நாளில் நிர்வாணமாக எழுப்பப்படுவதால் ஹளரத் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் இறந்ததும் கஃபன் செய்து அடக்கப்படும்போது பழைய துணியைக் கொண்டே கஃபன் செய்து அடக்க உத்தரவிட்டார்கள். “அந்த புதுக் கஃபன் துணியை உயிருள்ளவர்கள் அணிந்து கொள்ளட்டும்” என்றார்கள்.
இஸ்லாத்திற்கு முன், அறியாமைக் காலத்திலும் ‘ ஹஜ்’ செய்யும் வழக்கம் இருந்தது. அக்கால அரபு மக்கள் கஅபா ஆலயத்தை நிர்வாணமாக தவாஃப் (வலம்) சுற்றி வருவார்கள். அருவருக்கத்தக்க செயலைச் செய்தது மட்டுமின்றி, ஆடையில்லாமல் தான் பிறந்தோம், அதே நிலையில் தான் கஅபாவை வலம் வர வேண்டும் என்று அதற்குக் காரணமும் சொன்னார்கள்.
கஅபாவின் காவலர்கள் என்ற முறையில் குறைஷிகள் மட்டும் ஆடையுடன் வலம் வருவார்கள். மாற்ற ஆண்களும், பெண்களும் நிர்வாணமாகவே வலம் சுற்றி வந்தார்கள். இந்த மானக்கேடான் செயலைத் தடுப்பதற்காக குர்ஆனில் அல்லாஹ்;
“(நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், “எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். “(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் – நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.” (அல்குர்ஆன் 7:28)
நிர்வாணமாக தவாஃப் செய்வதையே இங்கு மானக்கேடான செயல் என்று கூறப்பட்டுள்ளது. இதுவே பெரும்பாலான திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் கருத்தாகும். (நூல்: ரூஹுல் மஆனி)
நன்றி: “குர்ஆனின் குரல்”