அறியப்படாத வரலாறு: முஆவியா – ஹுஸைன் – யஜீது – அப்துல்லாஹ் – உரைனப்
[ அவசர கதியில் தலாக் கூறுகின்றவர்களுக்கான வரலாற்றுப் படிப்பினை ]
அக்ரமுல்லாஹ் சைய்யித்
டமாஸ்கஸ் அபூதர்தா என்பவரின் உறவுப்பெண் உரைனப். பேரழகு படைத்தவர் என்பதோடு செல்வந்தரும் கூட.
முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் யஜீது இவர் மீது ஆசைப்படுகிறார்.
அவர் விருப்பம் தெரிவிப்பதற்கு முன்பாக சலாம் என்பவரது மகன், இராக் கவர்னர் அப்துல்லாஹ்வை உரைனப் திருமணம் செய்துகொள்கிறார்.
மகன் யஜீதின் ஆசையை தனது அடிமை ராஃபிக் மூலம் அறியும் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு மகனிடம் வினவுகிறார்..
“ஆசைப்பட்டேன், ஆனால் திருமணம் முடிந்து விட்டது, இனி ஒன்றும் செய்ய முடியாது” என்றுரைக்கின்றார் யஜீது.
சிரியாவிலிருந்த முஆவியா, இராக்கிலுள்ள அப்துல்லாஹ்வுக்கு கடிதம் எழுதுகின்றார். “உனக்கு எனது மகளைத் திருமணம் முடித்துத் தருகிறேன், நீ உன் மனைவி ‘உரைனப்பை’ தலாக் கூறு” என்று!
பொறுப்பிலிருக்கும் மிகப் பெரிய மனிதர் தனக்கு அவரது மகளைத் திருமணம் முடித்துத்தருகிறேன் என்கிறாரே! அப்துல்லாஹ்வின் மனம் சந்தோஷமும், சபலமும் அடைகிறது.
அபூதர்தா, அபூஹுரைரா ஆகிய இருவரையும் முஆவியாவிடம் அனுப்பி அவரது மகளின் சம்மதம் குறித்து அறிந்து வரச் சொல்கிறார் அப்துல்லாஹ்.
அவர்கள் வருவதை அறிந்த முஆவியா தன் மகளிடம், அபூதர்தா வருவார். அவரிடம், “அப்துல்லாஹ் நல்ல மனிதர். நெருங்கிய உறவினர். தகுதியிலும் எங்களுக்குச் சமமானவர். ஆனால் அவர் உரைனப்பை நிகாஹ் முடித்துள்ளார். அவரைத் திருமணம் முடித்தால் உரைனப்பை போன்று எனக்கும் போட்டி வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது… சரி! இருந்தாலும் பரவாயில்லை, உரைனப்பை தலாக் கூறி வந்தால் அவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.” இவ்வாறு கூறு எனத் தன் மகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறார்.
மகளும் அபூதர்தாவிடம் அவ்வாறே கூற, அபூதர்தாவும் அதனை அப்படியே அப்துல்லாஹ்விடம் சென்று எடுத்துரைக்கின்றார்.
அதனை உண்மை என்று நம்பும் அப்துல்லாஹ் உரைனப்பை தலாக் கூறி விடுகிறார்.
“அப்துல்லாஹ், உரைனப்பை தலாக் கூறிவிட்டார். உங்கள் மகளைப் பெண் கேட்கிறார்” என்று அபூதர்தாவும் முஆவியாவிடம் வந்து கூறினார்.
“அப்படியா! ஏன் அப்துல்லாஹ் அவசரப்பட்டு உரைனப்பை தலாக் கூறினார்? உரைனப் இருக்கும்போதே என் மகளையும் அவருக்கு நிகாஹ் செய்து தந்திருப்பேனே!” இவ்வாறு பாசாங்கு செய்த முஆவியா, “சரி! என் மகளிடம் போய் கேளுங்கள், சம்மதித்தால் மணமுடித்து வைக்கிறேன்” என்று கூறுகிறார்.
அபூதர்தாவிடம் முஆவியாவின் மகள் உரைக்கின்றார்; “அப்துல்லாஹ் குரைஷிகளில் முக்கியப் பதவி வகிப்பவர் என்று எங்களுக்குத் தெரியும். திருமணம் என்பது அற்பமான விஷயமல்ல. ஆராய்ந்து அவசரப்படாமல் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. ஒப்பந்தம் செய்தால் வாழ்க்கை முழுவதும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் யோசித்துக் கூறுகிறேன், சென்று வாருங்கள்” எனக் கூறிவிடுகின்றார்.
இப்போது அப்பெண் ஒப்புக்கொள்ளவில்லை, நாட்கள் நகர்வில் ஒப்புக்கொள்வார் என்று இருவரும் அப்துல்லாஹ்வை சமாதானம் செய்தனர்.
“எதையும் சரியாகக் கேட்காமல் இந்த அப்துல்லாஹ் அவசரப்பட்டு உரைனப்பை தலாக் கூறிவிட்டாரே!” என்று அப்துல்லாஹ்வின் குடிமக்கள் அவரை பழித்தனர். மீண்டும் போய்க்கேட்கக் கூறி முஆவியாவிடம் அனுப்பி வைத்தனர்.
“என் நலன் விரும்பிகளிடம் கேட்டுவிட்டேன். சலாம் மகன் அப்துல்லாஹ்வை நிகாஹ் செய்ய ஒரு சிலர் ஒப்புக்கொள்ளச் சொன்னாலும் பலர் வேண்டாம் என்கின்றனர். அதனால் அவரை நான் திருமணம் செய்ய இயலாது” என்று முஆவியாவின் மகள் கூறிவிடுகின்றார்.
அப்துல்லாஹ் தான் ஏமாற்றப்படதை உணர்ந்தார். அவர் நிர்வாகத்தில் இருந்த மக்கள் முஆவியாவை வசைபாடினர். முஆவியா திட்டத்தின் முதல்படி வெற்றிகரமாக அமைந்தது.
திட்டத்தின் இரண்டாவது படியை செயல்படுத்தத் துவங்கியபோது அதற்குள் நுழைந்தார்கள், ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
தலாக் கூறப்பட்ட உரைனப் “இத்தா” காலம் முடிந்தது. முஆவியா, தனது மகன் யஜீதுவை மணம் முடிக்க உரைனப்பிடம் சம்மதம் கேட்டு வருமாறு அபூதர்தாவிடம் கூறுகின்றார்.
உரைனப் இல்லத்திற்கு அபூதர்தா செல்லும் வழியில் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்திக்கின்றார்.
“எங்கே செல்கின்றீர் அபூதர்தா அவர்களே?”
“யஜீது நிகாஹ் முடிக்க உரைனப்பிடம் சம்மதம் கேட்கச் செல்கிறேன்”
“நானும் உரைனப்பை திருமணம் முடிக்கச் சம்மதம் கேட்கவே செல்கின்றேன். யஜீது தரும் மஹரை விட அதிகமாக மஹர் தந்து திருமணம் முடித்துக் கொள்கிறேன். கேட்டுச் சொல்லுங்கள்.” ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூற “சரி” என்று செல்கின்றார் அபூதர்தா.
“உரைனப்பை சந்திக்கும் அபூதர்தா, “உரைனப்! உனக்கு ஒரு கெட்டது நடந்தது. இரண்டு நல்லது வந்திருக்கிறது. ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பேரர் ஹுஸைன் (ரளியல்லாஹு அன்ஹு) உன்னை மணமுடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். முஆவியா (ரளியல்லாஹு அன்ஹு) மகன் யஜீதும் உன்னை மணமுடிக்க விரும்புகின்றார். நீ யாரைத் தேர்வு செய்யப் போகிறாய்?” என்று கேட்கிறார்.
“வேறு எவராவது கேட்டிருந்தால் என் சுய விருப்பத்தைச் சொல்லலாம். நீங்களோ எனக்கு மாமா முறை! உங்களிடம் எப்படிக் கூறுவது? நீங்களே எவரை நான் மணமுடிக்கலாம் என்று கூறுங்கள்” என்கிறார் உரைனப்.
“நீ ஹுஸைன் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களையே நிகாஹ் செய்துகொள்.”
அபூதர்தாவின் அறிவுரைக்க திருமணமும் நிறைவேறுகிறது.
“என் மகனுக்கு பெண் கேட்க உன்னை அனுப்பினேனே! இப்படிச் செய்துவிட்ட்டயே!” என்று அபூதர்தாவை கடிந்து கொண்டார் முஆவியா.
ஹுஸைன் (ரளியல்லாஹு அன்ஹு) – உரைனப் திருமணம் முடிந்தது. அப்துல்லாஹ், கையில் காசில்லாத நிலையில் இராக் திரும்புகின்றார். அவரது பணம், பொருட்கள் அனைத்தும் உரைனப்பிடம் இருந்தன. தலாக் கூறியதால் கோபமாக இருப்பார். அவரிடம் எப்படிச் சென்று தனது உடைமைகளை கேட்பது என்ற அச்சத்துடன் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்திக்கின்றார் அப்துல்லாஹ்.
“உரைனப் நல்ல பெண். நான் தான் தவறு செய்து விட்டேன்” என்று தனது முன்னால் மனைவி பற்றி பெருமையாகக் கூறிய அப்துல்லாஹ், தான் வறுமையில் இருப்பதாகவும், உரைனப்பிடம் உள்ள தனது பணத்தை பெற்றுத் தந்தால் நன்றாக இருக்கும்” என்று ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றார்.
வீட்டுக்கு வந்த ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் மனைவியிடம், “உரைனப், இன்று அப்துல்லாஹ் என்னை சந்தித்தார். உன்னை மிகவும் புகழ்ந்தார். டமாஸ்கஸ் செல்லும்போது உன்னிடம் பணத்தை விட்டுச் சென்றாராமே! அப்பணம் அவருக்குத் தேவைப்படுகிறதாம்!”
“ஆமாம்! சில மூட்டைகளை வைத்துச் சென்றார். நான் அதை பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. தருகிறேன், அவரிடம் கொடுத்து விடுங்கள்.”
மனைவி கூறியது கேட்டு சந்தோஷமடைந்த ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “நான் கொடுப்பதைவிடவும், உன் கையால் நீயே கொடுத்து விடு, அவரை கூட்டி வருகிறேன்” என்று கூறிச்சென்றார்கள்.
அப்துல்லாஹ்விடம் வந்த ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “உரைனப்பிடம் நீங்கள் கூறியதை கூறிவிட்டேன். மூட்டைகள் திறக்கப்படவில்லை. அப்படியே இருக்கின்றன. வந்து வாங்கிக்கொண்டு போகச்சொல்லுங்கள் எனக் கூறுகிறார். போய் வாங்கிக் கொள்ளுங்கள்.”
“உரைனப்பை பார்ப்பதற்கு எனக்கு அவமானமாக இருக்கிறது” என்கிறார் அப்துல்லாஹ்.
“நீங்கள் எந்த முறையில் ஒப்படைத்தீர்களோ அதே முறையில் அவரது கையிலிருந்து தான் பெற வேண்டும். வாருங்கள் எனக் கூட்டிச்சென்ற ஹுஸை ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “உரைனப்! இதோ சலாம் மகன் அப்துல்லாஹ் வந்திருக்கிறார். அவரிடம் எந்த முறையில் எதை வாங்கினாயோ அதே முறையில் அவற்றைக் கொடுத்துவிடு” என்று கூறி வெளியே சென்று விடுகின்றார்கள்.
வீட்டினுள் திரைக்குப் பின்பாக இருந்து கொண்டு திரைக்கு முன் மூட்டைகளை வைத்த உரைனப், “இதோ நீங்கள் கொடுத்த பொருட்கள் உள்ளன. சரிபார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்கிறார்.
மூட்டையைப் பிரித்து கொஞ்சம் தீனார்களை எடுத்த அப்துல்லாஹ் அவற்றை வைத்துக் கொள்ளுமாறு உரைனப்பிடம் நீட்டினார். அதனைப் பெறாது கண்களில் நீர் வழிந்தோடியது உரைனப்புக்கு.
உரைனப்பின் அழுகை அரவம் கேட்டு அப்துல்லாஹ் கண்ணிலும் கண்ணீர் வழிந்தோடியது.
சில நிமிடங்களில் இருவரும் சத்தமிட்டு அழத் தொடங்கினர்
இருவருடைய அழுகைக் குரல் கேட்டு வெளியே நின்றிருந்த ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள். இருவரையும் பார்த்து, “என்னைக் கவனியுங்கள்! அல்லாஹ்வை சாட்சியாக வைத்து உரைனப் – உன்னை தலாக் கூறிவிட்டேன். அதே அல்லாஹ்வை சாட்சியாக வைத்து உரைக்கின்றேன் உரைனப், உன்னை நான் மணமுடித்தது உன்னுடைய அழகிற்கோ, செல்வத்திற்காகவோ அல்ல. சட்டப்படி முதல் கணவனுக்கு உன்னை மணமுடித்து வைக்கவே செய்தேன்” எனக் கூறி வெளியேறினார்கள்.
இதன் மூலம் முஆவியாவின் இரண்டாவது படியையையும் தோல்வியுறச் செய்தார்கள்.
“ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வாங்கிய மஹரை திருப்பிக்கொடு” என்று உரைனப்பிடம் பெற்று வந்து அப்துல்லாஹ் கொடுத்தார். அதனை வாங்க மறுத்த ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “இதற்கான வெகுமானம் அல்லாஹ்விடம் மறுமையில் பெற்றுக்கொள்வேன். அந்த வெகுமானம் இந்த உலகச் செல்வங்கள் எல்லாவற்றையும் விட மேலானது” என்றார்கள். (source: ezsoftech.com)
குறிப்பு:
இஸ்லாமிய சட்டம் ஒரு கணவன் தனது மனைவியை அவசரப்பட்டு தலாக் கூறிவிடக்கூடாது என்பதற்காக சில வரமுறைகள் வைத்திருக்கிறது. அவற்றைப் பின்பற்றித்தான் விவாகரத்து செய்ய வேண்டும். அவசரப்பட்டுக் கூறிவிட்டால், கூறியவர் தான் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து அதே பெண்ணுடன் மீண்டும் வாழ நினைத்தால் அக்கணவனுக்குத் தண்டனையாக ஒரு விதிமுறையை இஸ்லாம் வைத்திருக்கிறது.
தலாக் கூறிய பெண்ணை வேறு ஒருவர் திருமணம் முடிக்க வேண்டும். அவரோடு அப்பெண் வாழ வேண்டும். (ஒரு முறையேனும் தாம்பத்ய உறவு கொண்டிருக்க வேண்டும்.) பிறகு அவர் அப்பெண்ணை தலாக் கூற வேண்டும். அப்பெண் அவருக்கு கற்பம் தரித்திருக்கிறார என்று பார்க்க “இத்தா” தனிமைக் காலம் கழிக்க வேண்டும். அந்நாட்கள் முடிவுக்குப்பிறகு அப்பெண் விரும்பினால் முந்தைய கணவனை மணம் செய்து வாழலாம்.
இதில் முந்தைய கணவன் மட்டும் மணம் செய்ய விரும்பி, தலாக் சொல்லப்பட்ட அப்பெண் விரும்பவில்லையானால் வேண்டாம் என அப்பெண் மறுக்கலாம் அல்லது அப்பெண்ணை மணமுடித்திருக்கும் இரண்டாம் கணவர் உன்னுடன் நான் வாழ விரும்புகிறேன், தலாக் விட முடியாது என்றும் மறுக்கலாம்.
இந்த சிக்கல்களை இஸ்லாம் வைத்திருப்பதற்குக் காரணமே அவசர கதியில் தலாக் கூறக்கூடாது என்பதற்கே!
மேலே கண்ட வரலாற்றில் உரைனப்பை யஜீது திருமணம் முடித்திருந்தால் அவர் தலாக் சொல்ல மாட்டார். வாழ்ந்தே ஆக வேண்டும். ஆனால், அப்துல்லாஹ்வோ அவசரப்பட்டு, பேராசைப்பட்டு, சபலப்பட்டு தலாக் சொல்லிவிட்டார். ஆனால் கணவன் மனைவி இருவருக்குள்ளும் பிரிவினை இல்லை. அன்பு, பாசம் எல்லாமே இருந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் அழுகை.
சூழ்ச்சிக்கு அடிமையானதால் ஏற்பட்ட விளைவு. அதற்கு முடிவு கட்டவும், அப்துல்லாஹ் போன்ற சபலபுத்திக்காரர்களுக்கும், அவரைப்போன்ற முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாக்கவும் அல்லாஹ் இந்நிகழ்வை-எடுத்துக்காக ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்வில் ஆக்கியிருக்கின்றான்.
தமிழில்: ஏ.ஜெ.என்.
நன்றி: “முஸ்லிம் முரசு” மாத இதழ், பிப்ரவரி 2015