இடமில்லா இடம்
“காலம்” (TIME), இடம் (SPACE) ஆகிய இரண்டுமே இல்லாத ஒரு இடத்தில் நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடியுமா….?
அட, இந்தக் கேள்வியே தப்பு. அபத்தமாக இருக்கிறது. “இடம்” இல்லாத ஒரு இடத்தில் எப்படி இருக்க முடியும்…?
சரி… இப்போ இடம் இல்லாத இடத்திற்கு கூட்டிக்கொண்டு போகிறேன்.
உங்கள் வீட்டில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். உங்கள் வீடு சென்னையில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சென்னையிலிருக்கும் வீட்டில் நீங்கள் இருப்பதை உங்களால் கற்பனை பண்ண முடியுமல்லவா…?
ஆம், முடியும்.
சென்னை, இந்தியாவில் இருக்கிறது. இந்தியா பூமியிலும், பூமி சூரியக் குடும்பம் பால்வெளி மண்டபத்திலும், பால்வெளி மண்டலம், பேரண்டத்திலும் இருக்கிறது. சரியா…?
இப்போது யோசித்துப் பாருங்கள், இந்தப் பேரண்டத்தில் எங்கோவொரு மூலையில் நுண்ணியதொரு புள்ளியாக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்பது புரியும்.
திடீரென ஒரு கணத்தில், பேரண்டமே காணாமல் போய்விடுகிறது. பூமி மட்டும் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமியைத் தவிர எங்கும், எதுவும் இல்லை.. இப்படியொரு இந்த நிலையைக் கூட உங்களால் கற்பனைப் பண்ணிப்பார்க்க முடியும்.
இப்போது பூமியும் படிப்படியாக மறையத் தொடங்குகிறது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே மறைந்து போகின்ரன. இறுதியில் உங்கள் வீடும், நீங்கள் நிற்கும் தரையும் இல்லாமல் போகின்றது. ஆனால் நீங்கள் மட்டும் இருக்கிறீர்கள். உங்களைச் சுற்றியோ, மேலேயோ, கீழேயோ எதுவுமே இல்லை. எதுவுமே இல்லை என்றால் எதுவுமே இல்லை, முழுமையான வெற்றிடம்.
அதை வெற்றிடம் என்று கூடச் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அங்கு வெற்றிடம் என்று ஒன்று இருக்கிறது என்று உங்கள் மனம் சொல்லும். அதனால் வெற்றிடம் கூட அங்கில்லை. அது என்ன நிலை என்றே சொல்ல முடியாத ஒரு நிலை. அந்த நிலையில் நீங்கள் நிற்கிறீர்கள்.
எந்தச் செயலையும் செய்ய முடியாத ஒரு உறைந்த நிலையாக அது இருக்கும். நீங்கள் நடக்க முடியாது. நடப்பதற்குத் தான் இடமே இல்லையே, பின் எப்படி நடக்க முடியும்? பார்க்க முடியாது, பார்ப்பதற்கு எந்த பொருளும் இல்லையே! மொத்தத்தில் எதுவுமே செய்ய முடியாது.
அங்குக் காலம் (நேரம்) என்பது கூட இல்லை. காலம் என்பதற்கான எந்த அர்த்தமும் அங்கில்லை.
இப்போது முதலில் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் உங்களிடம் கேட்டிருந்த அந்தக் கேள்வியை மீண்டும் பாருங்கள்.
காலம், இடம் இந்த இரண்டும் இல்லாத ஒரு நிலையில் நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா…? கற்பனை செய்து பார்க்கவே முடியவில்ல அல்லவா…?
கற்பனையே பண்ணமுடியாத அப்படியானதொரு நிலை உண்மையில் இருந்துதானிருக்கிறது. அந்த நிலையில் உங்களுக்கென்று தனியாக சொல்லும்படியான உடலே இல்லை. ஆனாலும் இருந்தீர்கள். நீங்கள் நீங்களாகவே இருந்தீர்கள். உடலே இல்லாமல் உங்களைப் படைத்த அந்த மாபெரும் சக்தி உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த சக்தி உங்களிடம் பேசியது. நீங்கள் அதனிடம் பேசினீர்கள். பேசுவதற்குத்தான் வாயே இல்லையே! அப்புறம் எப்படி பேசினேன் என்று கேட்டு விடாதீர்கள். பேசினீர்கள், அதுவும் உறுதி மொழி எடுத்துக் கொண்டீர்கள்.
அந்த சக்தி கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நீங்கள் பதிலாய் உறுதி மொழியாய் மொழிந்தீர்கள். அத்தனை உறுதிமொழிகளுக்கும் உங்களைப் போன்ற உருவமற்றவர்களை அந்த சக்தி சாட்சியாக்கி உங்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டது. நீங்கள் அந்த மாபெரும் சக்தியிடம் பேசியது சத்தியம். எதுவுமே இல்லாத இடத்தில் எல்லாம் பேசினீர்கள் எல்லோரும் இருந்தோம். யாருக்குமே மெய், வாய், கண், மூக்கு, செவி என்று குறிப்பிடும்படியான எந்த உடலும் இல்லாமல் இருந்தோம். இருந்தாலும் பேசினோம். இது சத்தியம். அதுவும் வேத சத்தியம். நம்ப முடியவில்லையா… இப்போது புனித வேதமாம் அல்குர்ஆனைப் பாருங்கள்.
“(நபியே) உங்களது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய தந்தைகளின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி அவர்களையே அவர்களுக்கு சாட்சியமாகவும் வைத்து, அவர்களை நோக்கி, “நான் உங்கள் இறைவனாக இல்லையா…?” என்று கேட்டதற்கு, “ஏன் இல்லை நீதான் எங்கள் இறைவன் என்று நாங்கள் சாட்சியம் கூறுகிறோம்” என்று அவர்கள் கூறியதை நீங்கள் அவர்களுக்கு ஞாபகம் மூட்டுங்கள். ஏனென்றால் இதனை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால் நிச்சயமாக நாங்கள் இதனை மறந்துவிட்டு பாராமுகமாகி இருந்தோம்” என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காக (நாம் தான் இதனை செய்தோம்). (அல்குர்ஆன் 7:172)
இப்போது பேரண்டம் இருக்கிறது.
இந்த பேரண்டத்தில் பால்வெளி மண்டலம் இருக்கிறது.
பால்வெளி மண்டலத்தில் சூரிய குடும்பம் இருக்கிறது.
சூரியக் குடும்பத்தில் பூமி இருக்கிறது.
பூமியில் இந்தியா இருக்கிறது.
இந்தியாவில் சென்னை இருக்கிறது.
சென்னையில் உங்கள் வீட்டில் இருக்கிறீர்கள்.
நீங்கள் நீங்களாக இருப்பதற்கு உங்களுக்கென்று ஒரு உடம்பு இருக்கிறது.
…எல்லாம் இருக்கிறது.
…அந்த மாபெரும் சக்தியான இறைவன் இடமில்லா இடத்தில் உங்களிடம் கேட்ட கேள்வி உங்கள் ஞாபகத்தில் இருக்கிறதா…?
-ரஹ்மத் ராஜகுமாரன் செல்: 944 344 6903
நன்றி: “ரஹ்மத்” மாத இதழ், மார்ச் 2015