இயேசுவின் இரண்டாம் வருகை!
ரஹ்மத் ராஜகுமாரன்
1905 ஆம் ஆண்டு சூரிச் (Zurich) பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சிறப்பு சார்பியல் தத்துவத்தை சமர்ப்பித்தார்.
காலம் என்று தனிப்பட்டு ஒன்றும் கிடையாது.
சம்பவங்கள் இல்லையேல் காலமே கிடையாது.
இரண்டு பொருட்கள் இல்லாது தனிப்பட்ட இடைவெளியே கிடையாது.
அது போல தூரத்தையும் அல்லது இடைவெளிகளையும் காலத்திலிருந்து தனியாகப் பிரிக்க முடியாது.
ஒளியின் வேகத்தில் பயணிக்கக்கூடியவர்களுக்கு காலம் என்பது இயங்குவது இல்லை.
மேற்கண்ட தத்துவத்தின் சாரம்சம் “தவ்ராத்” என்னும் பழைய ஏற்பாடு வேதம், இஞ்ஜீல் என்னும் பைபிள்- விவிலியம் புதிய ஏற்பாடு மற்றும் அல்குர்ஆன் ஆகியவற்றில், சில சம்பவங்கள் குறித்து பேசும்போது சம்பவங்கள் இல்லாத நிகழ்வுகளுக்கு காலமே இல்லாது இருப்பது குறித்து நம்மை வற்றாத ஆச்சரியத்தில் திளைக்கச்செய்கிறது.
கணிதப்பாடத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள். “Empty Set” என்னும் வெறுமை, அது போன்றே வேதத்தின் சில நிகழ்வுகள் காலமே இல்லாத வெறுமையாக காட்சி அளிக்கிறது.
ஒரே சூலில் இரட்டைக் குழந்தைகள். ஒரு குழந்தை மற்ற குழந்தையை விட சில நிமிடங்களுக்கு முன் பிறந்தது. அவர்கள் இருவரும் ஒரே நாளில் இறப்பெய்தினர். ஆனால், அவர்களில் ஒருவருக்கு வயது ஐம்பது. மற்றவருக்கு வயது நூற்றி ஐம்பது. இது எவ்வாறு சாத்தியம்?
ஒரு வரலாற்று சம்பவத்தைப் பார்ப்போம். அதன் முடிவில் மேற்கண்ட கேள்விக்குறிய பதிலைத் தேடுவோம்.
“புஸ்து நஸ்ர்” என்பவனுக்கு தவ்ராத் வேதம் எங்கு ஓதக் கேட்டாலோ அல்லது அதை மனப்பாடம் செய்தவரைக் கண்டாலோ முதல் வேலை அவர்களைக் கொன்றொழித்து விட்டு தான் மறுவேலை! இது என்ன சைக்கோ…? தெரியவில்லை.
அவனுக்கு ஒரு செய்தி கிடைத்தது. பைத்துல் முகத்தஸ் (ஜெருஸ்ஸலம்) செல்லும் வழியில் ஒரு நகரம்; அங்குள்ளோர் அனைவரும் தவ்ராத் வேதத்தைக் கற்றவர்கள் என்று!
உடனே அவனின் படையெடுப்பால் அந்த சின்ன நகரம் சின்னாபின்னமாக்கப்பட்டு அதன் முகடெல்லாம் உடைந்து பாழடைந்து போனது.
அவ்வழியே நபி உஜைர் (Uzyre) அலைஹிஸ்ஸலாம் (வயது 30) செல்லும்போது அந்நகரை எப்படி இறைவன் மீண்டும் உருவாக்குவான்? என்ற சிந்தனையிலேயே ஒரு மர நிழலில் அமர்ந்து சில அத்திப்பழங்களையும், திராட்சைப் பழச்சாறையும் சிறிது குடித்ததும், அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரை மரணித்திருக்கச் செய்து, பின்னர் அவரை உயிர்ப்பித்தான். தன் அருகில் இருந்த அவருடைய உணவும், அவருடைய பானமும் கெட்டுப் போகவில்லை.
ஆனால், கழுதை இறந்து அதன் எலும்புகள் மட்டும் கிடக்கக்கண்டார். இறந்த உயிரை தன்னால் உயிர்ப்பிக்க இயலும் என்பதை அவருக்கு உணர்த்த விரும்பிய இறைவன், அக்கழுதையை உயிர்ப்பெற்று எழச் செய்தான்.
இப்போது உயிர்ப்பெற்றெழுந்த உஜைர் (Uzyre) நபிக்கு வயது அதே 30 தான்!
நபி உஜைர் (Uzyre) அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் ஒரே நேரத்தில் பிறந்தவர் அவரது சகோதரர் அஜீஸ் (Azeez) ஆவார். ஒரே சூலில் பிறந்த இரட்டையர். ஆனாலும் இப்போது அஜீஸ் அவர்களுக்கு வயது 130 ஆக இருந்தது. இதனால் 30 வயதுடைய தன் சகோதரர் நபி உஜைர் என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு நபி உஜைரின் நபித்துவத்தின் அங்க முத்திரையான “நுபுவ்வத்” உடலில் மச்சமாக இருப்பதை இனம் காணப்பட்டு தன் தம்பி உஜைர் தான் அவர் என்பதை ஏற்றுக்கொண்டார்.
அதற்குப்பின் நபி உஜைர் (Uzyre) அலைஹிஸ்ஸலாம் தனது சகோதரர் அஜீஸுடன் இவ்வுலகில் இருபது வருடம் வாழ்ந்தார். ஒரே நாளில் சகோதரர்கள் இருவரும் இறப்பெய்தினர். இறக்கும்போது உஜைர் நபிக்கு வயது 50 ஆக இருந்தது. அவருடைய சகோதரருக்கு இறக்கும்போது வயது 150 ஆக இருந்தது. உஜைர் நபி மரணித்திருந்த நூறு வருடங்களில் உலக சம்பவங்கள் எதுவும் அவருக்கு இல்லை. எனவே, அவருக்கு காலமும் இயங்கவில்லை.
அடுத்து ஆஸியா மைனான் மேற்கு கரையிலுள்ள ஸமீர்னாவுக்கு 50 மைல் தெற்கேயுள்ள இபிஸியஸ் நகரத்தில் ஏழு வாலிபர்கள் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள். இவர்கள் அனைவரும் ஏக இறைவழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர்.
கி.பி. 249 முதல் கி.பி.251 வரை ஆட்சி புரிந்த டிஷியல் என்ற மன்னன் கொடுங்கோலனாக இருந்ததால் ஏழு வாலிபர்கள் ஏக இறைவழிபாட்டுக்கு இடையூறுகள் பல விளைவித்தான்.
மன்னனின் தொல்லைகளில் இருந்து தங்களைத் தர்காத்துக்கொள்ள அவ்வாலிபர்கள் அருகிலுள்ள மலைக் குகை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்று இறைவழிபாட்டில் மூழ்கினார்கள். கூடவே அவர்கள் கூட்டிச்சென்ற நாயும் அவர்களுடன் இருந்தது. சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கம் அவர்களை ஆட்கொண்டது.
ஆழ்ந்த உறக்கம் தெளிந்து விழித்தபோது அவர்கள் அனைவருக்கும் பசித்தது. சிறிது நேரம்தான் உறங்கி இருப்போம் என்று கருதி தங்களின் ஒருவரிடம் பணம் கொடுத்து ஊருக்குள் சென்று உணவு வாங்கி வருமாறு அனுப்பினார்கள்.
அந்த வாலிபர் கொண்டு சென்ற வெள்ளிக்காசுகளை உணவுக்கடைக்காரர்கள் செல்லாதவை என்று வாங்க மறுத்துவிட்டனர். மேலும் வாலிபரின் உடை அலங்காரமும் மிகப் பழமையானதாக இருந்தது.
இறுதியில் அந்த வாலிபர் அவ்வூரின் அரசரிடம் சென்று முறையிட்டார். அந்த வெள்ளிக்காசுகளை வாங்கிப்பார்த்த அரசன் அவை 300 வருடங்களுக்கு முந்திய நாணயங்களாக இருந்தது கண்டு அதிசயித்து விசாரித்தான். அவர்கள் ஓரிரு தினங்களுக்கு முன்புதான் குகையினுள் சென்றதாக அந்த வாலிபர் தெரிவித்தார். இதனை விசாரித்த அரசனின் பெயர் இரண்டாம் தியோஷியஸ்.
உணவு வாங்க வந்த வாலிபரின் வாயிலாக குகைத் தோழர்களைப் பற்றி அறிந்த அரசன், அவரையும் அழைத்துக்கொண்டு குகைக்குச் சென்றான். அப்போதுதான் உணவு வாங்க வந்த வாலிபருக்கு தாங்கள் 300 வருடங்கள் உறங்கிவிட்ட உண்மை புலப்பட்டது.
சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர்களாக இருந்த அவர்களுக்கு 300 வருடங்கள் தூங்கி எழுந்த பிறகு அவர்களின் வயது 320 ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் 20 வயது உடையவர்களாகவே அவர்கள் இருந்துள்ளனர். அப்படியென்றால் அவர்கள் உறங்கிய அந்த 300 ஆண்டுகள் என்ன ஆனது….?
உறங்கிய 300 ஆண்டுகளில் இந்த ஏழு வாலிபர்களும் உலக சம்பவங்கள் எதிலும் பங்கு கொள்ளவில்லை. எனவே, இவ்வேழு வாலிபர்களுக்கும் காலம் இயங்கவில்லை.
குகைக்கு வந்த வாலிபருடன் சென்ற அரசன், அந்தக் குகையில் இவருடன் சேர்ந்து ஏழு வாலிபர்களும் அவர்களது நாயும் உறங்கிக்கொண்டிருக்க கண்டான். அரசனைக் கூட்டி வந்த வாலிபரும் குகைக்குள் சென்று மீண்டும் தன் உற்ற தோழர்களுடன் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். குகையின் வாயிலும் அடைபட்டுவிட்டது.
அரசனும், அவனுடன் வந்தவர்களும் தாங்கள் கண்கூடாக நேரில் கண்ட அந்த அற்புதக் காட்சியைப் பற்றி அந்த மலைக்குகை வாசலின் கல்லில் விரிவாக எழுதி வைத்து விடுத் திரும்பினர்.
இதனை இறைமறையாம் திருக்குர்ஆன் கூறுவதைப் பார்ப்போமே!
“குகைத் தோழர்களும் அந்த மலையில் பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டும் நம்முடைய அத்தாட்சிகளில் ஆச்சரியமாக இருந்தனர் என்று நீர் எண்ணுகிறீரா…?” (அல்குர்ஆன் 18:9)
ஆங்கில சரித்திர ஆசிரியரான லார்டு வில்லியம் மூர் “கிறிஸ்துவ தேவாலயங்களின் வரலாறு” என்ற நூலில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிட்டு, இது உண்மையே என மேலும் உறுதிப்படுத்துகிறார்.
அடுத்து, ஹளரத் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் என்னும் இயேசு தன் சீடர்களுடன் இரவுச் சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தார்கள். பின் தம்முடைய சீடர்களை நோக்கி “நான் உங்களை விட்டு பிரிவது பற்றி நீங்கள் வருத்தமுறுகிறீர்கள். இஸ்ரவேலர்கள் என்னைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். எனினும் எனக்குச் செய்யும் இழிவை விட்டும் நீங்கள் என்னை காக்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு அவர்கள், “எங்களின் உடலில் உயிர் உள்ளவரை எங்களுடைய எதிரிகளால் உங்களுக்கு ய்யதொரு இன்னலும் இழைத்துவிட முடியாது” என்று கூறினார்கள்.
அப்போது இயேசு, ஷம்ஊனை அழைத்து “நீர் இவர்களின் தலைவராயிருந்த போதிலும் நீர் என்னை இறைத்தூதர் என ஏற்றுக்கொள்ள மறுப்பீர்; அதுவும் மும்முறை மறுப்பீர்” என்று கூறினார்.
அதன்பின் தம் சீடர்களை நோக்கி புன்முறுவல் பூத்தவண்ணம், “இன்று இரவு உங்களில் ஒருவர் என்னை சொற்ப விலைக்கு விற்றுவிடுவார். ஆனால், அந்தோ அவர் பொழுது புலர்வதற்கு முன் கொல்லப்படுவார்” என்று இயேசு கூறினார்.
அதுகேட்ட சீடர்களில் ஒருவர், இயேசு அவர்களை நோக்கி, “யார் அவர்? என்னிடம் கூறுங்கள்” என்று வேண்டினார். அதற்கு இயேசு, “அதுபற்றி கூறுவதற்கான தருணம் இதுவல்ல; விரைவில் அத்தீயோனே தன்னை எவன் என்று காட்டி விடுவான். நான் உலகை விட்டுப் புறப்படும் நேரம் நெருங்கி விட்டது” என்று கூறினார்.
இயேசு அவர்களின் பதிமூன்றாவது சீடனாகிய ஜூடாஸ் எஸ்கேயட் (யஹூதா) என்பவன் பணம் வாங்கிக்கொண்டு யூதர்களிடம் அவர்களைக் காட்டிக்கொடுத்தான். அவன் வாங்கிய தொகை வெறும் 30 பொற்காசுகள் என்று பைபிள் கூறுகிறது.
இறுதியாக இஸ்ரவேலர்கள் இயேசு அவர்களை ஒரு வீட்டில் சிறை வைத்தனர். பின் அவருடன் ஷம்ஊன் பக்கம் திரும்பி, “நீர் இயேசுவை இறைத்தூதர் அல்ல என்று கூறினாலொழிய நாங்கள் உம்மை உயிரோடு விட மாட்டோம்” என்று மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சி அவ்வாறே அவரும் மும்முறை மறுத்தளித்து கூறினார். இயேசு அதுகேட்டு புன்முறுவல் பூத்தார்.
பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் கி.பி. 33 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு தஹ்ஜத் என்னும் பின் நேரம்; இறைவன் அவர்களை விண்ணகத்துக்கு அழைத்துக் கொண்டு தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அப்போது இயேசு அவர்களின் வயது 33 என்பதை நினைவில் கொள்ளவும்.
இயேசு என்கிற நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திமிஷ்கின் கிழக்குப் பகுதியிலுள்ள பெரிய பள்ளிவாசலில் உள்ள “மனாரத்துல் பைளாவு” எனும் வெள்ளை மனாரா அருகே இரவு தஹ்ஜத் என்னும் பின் நேரம் விண்ணிலிலிருந்து இறங்கி வருவார்கள். அப்போது அவர்களின் வயது அதே 33 ஆகத்தான் இருக்கும்.
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை உயர்த்தப்பட்டு, இவ்வருடம் 2015 லிருந்து கணக்கிட்டால் 2015 – 33 = 1982 வருடம் பூர்த்தியாகிறது. இவ்வருடமே இயேசு (நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்) வருவதாக வைத்துக் கொண்டால் 1981 வயது நிரம்பியவராக அவர் வரமாட்டார். அதே 33 வயது உடையவராகத்தான் இப்பூமிக்கு வருவார். விண்ணிற்கு உயர்த்தப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை உலக சம்பவங்கள் எதுவும் அவருக்கு இல்லை. எனவே, அவருக்கு காலமும் இயங்கவில்லை என்பதே விஞ்ஞான உண்மை.
நபி உஜைர் அலைஹிஸ்ஸாலாம் 30 வயதில் மரணித்து 100 வருடம் கழித்து உயிர்த்தெழுந்து வரும்போது 130 வயதுடையவராக் வரவில்லை. அதே 30 வயதுடையவராககத்தான் வந்தார்.
குகைத் தோழர்கள் 20 வயதுடையவர்களாக குகையில் ஆழ்ந்த நித்திரையில் 300 வருடம் தூங்கிய பிறகு அவர்கள் அனைவரும் 320 வயதுடையவர்களாக விழித்தெழவில்லை. அதே 20 வயதுடையவர்களாகவே வந்தனர்.
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் (இயேசு) 33 வயதுடையவராக விண்ணில் உயர்த்தப்பட்டு விண்ணில் வாழ்ந்து வருபவர் எப்போது இப்பூமிக்கு வந்தாலும் அதே 33 வயதுடையவராககத்தான் வருவார்கள்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
-ரஹ்மத் ராஜகுமாரன்
நன்றி: “குர்ஆனின் குரல்” மாத இதழ், மார்ச் 2015,