இதய முத்திரை
S.M. அமீர்
அறிந்து கொள்ளுங்கள். மனிதனின் உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது நல்ல முறையில் சீரடைந்து விட்டால் முழு உடலும் சீரடைந்து விடுகிறது. அது (தவறான வழிகளில்) சீர் கெட்டு விட்டால் முழு உடலும் சீர் கெட்டு விடுகிறது. புரிந்து கொள்ளுங்கள் அதுதான் இதயம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நுஃமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி : 52, முஸ்லிம்)
எவர் ஒருவர் பரிசுத்த(மான) இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்) சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக, (பின்னர்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக, (சூரியனால்) பகல் வெளியாகும்போது அதன் மீதும் சத்தியமாக, (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக, வானத்தின் மீதும் அதை (ஒழுங்குற) அமைந்திருப்பதன் மீதும் சத்தியமாக பூமியின் மீதும் இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக ஆத்மாவின் மீதும் அதை ஒழுங்குபடுத்தியதன் மீதும் சத்தியமாக 91 அத்.1-7 வசனம் வரை ஏழு விசயங்கள் மீது அல்லாஹ் சத்தியம் செய்து விட்டு அப்பால் (அல்லாஹ்வாகிய) அவன் (ஆத்மாவாகிய) அதற்கு அதன் தீமையையும் அதன் நன்மையையும் உணர்த்தினான் (ஆத்மாவாகிய) அதைப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். ஆனால் எவன் (ஆத்மாவாகிய) அதை(பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாக தோல்வியடைந் தான். (அல்குர்ஆன் 91 அத்தியாயம் 8-10)
அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தமது இறைவனின் ஒளியில் இருக்கிறார். (ஆனால்) அல்லாஹ்வுடைய நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இத்தகையோர் பகிரங்கமான வழி கேட்டில் இருக்கின்றனர். (39 அத்தியாயம் 22வது வசனம்)
அல்லாஹ்வே (இறை) நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்). அவன் அவர்களை இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான். ஆனால் (அல்லாஹ்வின் அத்தாட்சிகளை) நிராகரிப்பவர்களுக்கோ (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தான் அவர்களின் பாதுகாவலர்கள். அவை அவர்களை வெளிச்சத்தில் இருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர். (2ம் அத்தியாயம் 257வது வசனம்)
அல்லாஹ் தனது திருப்தியை நாடுகிறவர்களுக்கு அமைதி (அமைதியான) இதமான வழியைக் காட்டுவதாக இங்கு அறிவிக்கிறான். தன் மீது முழு நம்பிக்கை கொண்ட அடியார்களை இறை மறுப்பு, சந்தேகம், குழப்பம் ஆகிய இன்னபிற இருள்களிலிருந்தும் வெளியேற்றி சத்திய ஒளிக்கு அல்லாஹ் கொண்டு வருவான். அது தெளிவான வெளிப்படையான குழப்பமற்ற எளிய இதமான வழியாகும். ஆனால் இறை மறுப்பாளர்களுக்கு ஷைத்தான் தான் உதவியாளன். அவர்களிடம் உள்ள அறியாமை, தவறான வழி ஆகியவற்றை அவர்களுக்கு அவன் அலங்கரித்து காட்டுகிறான். சத்திய பாதையிலிருந்து அவர்களைத் தூர வெளியேற்றித் திசை திருப்பி அசத்திய பாதையான பொய், புரட்டு மற்றும் இறை மறுப்பிற்கு அவன் கொண்டு செல்கிறான். அத்தகையவர்கள் தான் நரகவாசிகள். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். உங்களை இருளில் இருந்து வெளியேற்றி ஒளியின்பால் கொண்டு வருவதற்காக உங்கள் மீது அருள் புரிகிறவன் அவனே. (அல்குர்ஆன் 5:16, 14:1,5, 24:35, 33:43, 57:9,28)
அல்லாஹ் இறை நம்பிக்கையை உங்களுக்கு விருப்பமானதாக ஆக்கினான். உங்கள் உள்ளங்களில் அதை அழகாக்கினான். (49:7) ஒரு மனிதனுக்கும் அவனது உள்ளத்திற்குமிடையே அல்லாஹ் இருக்கிறான். (8:24) அவனது அருள் இன்றி நாம் நேர்வழியில் நிலைத்திருக்க முடியாது. ஆக குறைந்தது ஒரு நாளைக்கு 17 தடவைகள் இறைவா உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! (அல்குர்ஆன் 1:4,5) என்று பிரார்த்திப்பது நம் மீது கடமையாகும். முன், பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட (அல்குர்ஆன் 48:2)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மரணிக்கும் வரை அது கடமையாக்கப்பட்டது. (நபியே!) உமக்கு மரணம் வரும் வரை உமது இறைவனை(த்தொழுது) வணங்குவீராக. (அல்குர்ஆன் 15:98,99) (புகாரி : 4706)
எங்கள் இறைவா! எங்களை நீ நேர் வழியில் செலுத்திய பிறகு (அதிலிருந்து) எங்கள் உள்ளங்களைப் பிறழச் செய்து விடாதே என்று அவர்கள் பிரார்த்திப்பார்கள். (அல்குர்ஆன் 3:8);
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “யா முகல்லிபுல்குலூப் ஃதப்பித் அலா தீனிக்க” என்று (பெரும்பாலும்) கூறுவர்கள். உள்ளங்களைப் புரட்டுபவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தின் மீதே நிலைப்படுத்துவாயாக. மேலும் எங்கள் இறைவனே எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பிறகு (அதிலிருந்து) எங்கள் உள்ளங்களை தடம் பிறழச் செய்துவிடாதே. எங்களுக்கு உன்னிடமிருந்து (விசேஇ) அருளை வழங்குவாயாக (என்று கூறி) பிரார்த்திப்பார்கள். அறிவிப்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் உம்மு சல்மா ரளியல்லாஹு அன்ஹா தப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தப்ஸீர் இப்னு கசீர், 2:24, முஸ்னத் அஹமத், திர்மிதி.
மற்றுமொறு அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹும்ம முகல்லிபல் குலூப் ஃதப்பித் கல்பீ அலா தீனிக்க’ (இறைவா உள்ளங்களை புரட்டுபவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தின் மீது நிலைப்படுத்துவாயாக) என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே உள்ளங்கள் புரளுமா? என்று கேட்டேன். அதற்கு ஆம் அல்லாஹ் படைத்த ஆதமுடைய மக்கள் அனைவரின் உள்ளங்களும், வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கிடையே தான் உள்ளன. அவன் நினைத்தால் அவற்றை நேர்த்தியாக்குவான். நினைத்தால் அவற்றை பிறழச் செய்து விடுவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். உம்மு சல்மா ரளியல்லாஹு அன்ஹா முஸ்னது அஹமத், தப்ஸீர் இப்னு மர்தவைஹி தப்சீர் தபரீ, தப்சீர், இப்னு கசீர் 2:24,25 மற்றுமோர் அறிவிப்பில் எந்தவோர் உள்ளமும் அருளாளனின் விரல்களின் இரு விரல்களுக்கிடையே தான் உள்ளன. அவன் அதை நேர்த்தியாக்க நினைத்தால் நேரத்தியாக்குவான். அதைப் பிறழச் செய்ய நாடினால் பிறழச் செய்துவிடுவான். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, புகாரி : 6617,6628, 7391, திர்மிதி 2226 தப்சீர் இப்னு மர்த்தவைஹி, தப்ஸீர் இப்னு கஸீர் 2:26)
வெட்ட வெளியில் காற்றுகளால் புரட்டி அடிக்கப்படும் இறகு போன்றது தான் (மனித) உள்ளங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூசா அல் அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹு, இப்னு மாஜா 8:24, சுமார் நான்காவது வயதில் ஒரு தடவையும், நபித்துவம் கொடுக்கப்பட்டு மிஃறாஜ் செல்லப் புறப்படுவதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நெஞ்சைப் பிளந்து இதயத்தை வெளியே எடுத்துத் தங்கத் தட்டில் வைத்து ஜம் ஜம் புனித நீரால் கழுவி ஈமானும், ஞானமும் நிரம்பிய தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டுவந்து அதிலுள்ள ஈமானையும், ஞானத்தையும் நிரப்பி மூடப்பட்ட புனித நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயந்த விதம் பாரீர். (புகாரி 1636, 349, 3232, 3235, 3239, 3437, 3886, 3887, 3888, 4710, 4716, 6613, 7517 முஸ்லிம். 159,263,267,272,276,278,280,283,290, 292 பைஹகீ முஸ்லிம் அஹமத் ரஹீக் : 77,78)
இறைவா எங்கள் உள்ளங்களை நேர்வழியில் நிலைநிறுத்திப் பின்னர் அதிலிருந்து (வேறு பக்கம்) சாய்த்து விடாதே. யாருடைய உள்ளத்தில் கோளாறு உள்ளதோ அவர்களைப் போன்று எங்களை ஆக்கி விடாதே. உம்மு சல்மா ரளியல்லாஹு அன்ஹா, திர்மிதி முஸ்னத் அஹமத், தப்ஸீர் இப்னு அபூஹாத்திம். இதய சுத்திக்கு நல்லவற்றைப் பார்ப்பது, நல்லவற்றைக் கேட்பது, நல்லவற்றைச் சிந்திப்பது, நல்லவற்றைப் பேசுவதென்பது போன்றவை சிறப்பு வழிகளாகும். ஆனால் கைசேதம் ஜின்களிலும், மனிதர்களிலும் அதிகமானோரை நாம் நரகத்திற்காகவே படைத்துள்ளோம் அவர்களுக்கு இதயங்கள் இருக்கும் (ஆனால்) அவற்றால் (நல்லதை) புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்க ளுக்கு கண்கள் இருக்கும் அவற்றால் (நல்லதைப்) பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகள் இருக்கும் அவற்றால் (நல்லதை) செவியுற மாட்டார்கள். அவர்கள் கால் நடைகளைப் போன்றவர்கள். ஏன் (அவற்றை விட வும்) மிகவும் கேடுகெட்டவர்கள். அவர்களே அலட்சியவாதிகள் (அல்குர்ஆன் 7:179).
அவர்களுக்கு நாம் செவிப்புலனையும், பார்வையையும், உள்ளங்களையும் ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் செவிப் புலனோ, பார்வையோ, உள்ளங்களோ அவர்களுக்கு எந்தப் பலனையும் தரவில்லை. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள் (46:26) அவர்கள் செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள். எனவே அவர்கள் (நல்வழிக்குத்) திரும்ப மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:18) அவர்கள் செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள். எனவே இவர்கள் விளங்கமாடார்கள் (அல்குர்ஆன் 2:171). (அவர்களின் வெளிப்) பார்வைகள் குருடாகவில்லை. ஆனால் அவர்களின் நெஞ்சங்களிலுள்ள அகங்களே குருடாக இருக்கின்றன (அல்குர்ஆன் 22:46) அவர்கள் பூமியில் பயணி(த்துச் சுற்றிப்பார்)க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) விளங்குகின்ற உள்ளங்கள் அவர்களுக்கு இருந்திருக்கும். அல்லது கேட்கின்ற செவி கள் அவர்களுக்கு இருந்திருக்கும். (அல்குர்ஆன் 22:46)
யார் (நல்லுபதேசங்களை) செவியுறாமல் இருந்துவிட்டு நாங்கள் (நல்லுபதேசங்களை) செவியுற்றோம் என்று (பொய்) சொன்னார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். உயிரினங்களிலேயே அல்லாஹ்விடம் (மிக) மோசமானவர்கள் (உண்மையை) விளங்கிக் கொள்ளாத செவிடரும், ஊமையரும் தான் (அல்குர்ஆன் 8:21,22) அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறை நம்பிக்கையாளன் ஒரு பாவம் புரிந்துவிட்டால் (ஆன்மீக அடிப்படையில் வெள்ளைத்துணி போன்ற) அவ ரது உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி விழு கின்றது. அவர் (அப்)பாவத்தை விட்டு விலகி (உடன்) தவ்பா செய்து திருந்திவிட்டால் (அக்கரும் புள்ளி அகற்றப் பட்டு) அவரது உள்ளம் தூய்மையாக்கப்பட்டு விடு கின்றது. (அவ்வாறு இல்லாது) அவர் (மேலும் மேலும் அப்)பாவத்தை அதிகரித்துக் கொண்டே சென்றால் அக்கரும்புள்ளியும்) ஒவ் வொன்றாக உள்ளத்தில் நிலைபெற்று) பெரிதாகிக் கொண்டே வந்து இறுதியில் அவரது உள்ளம் முழு வதையும் (வியாபித்த அது முழு இருளாக) மிகைத்து விடும். அதுதான் அவர்கள் செய்து கொண்டிருந்த பாவங்களின் (காரணமாக) அவர்களின் உள்ளங் களில் கறையாகப் படிந்துவிட்டன என்றும் 83:14 வசனத்தில் அல்லாஹ் கூறியுள்ள கறையாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதி நஸயீ இப்னு மாஜா தப்ஸீர் இப்னு கஸீர் 1:87, புஹாரி 2475, 5578, 6772)
அதாவது இறை நம்பிக்கையாளர் ஒருவர் தொடர்ந்து குற்றங்களைச் செய்யும்போது அவரிட மிருந்து இறை நம்பிக்கை எனும் ஒளி விடை பெற்று விடுகின்றது. குற்றத்தை விட்டு தவ்பா செய்து விலகிய பிறகு மீண்டும் அவருடன் வந்து சேர்ந்து கொள்கிறது. தொடர்ந்தும் ஒருவர் குற்றங்கள் புரிந்து வந்தால் பாவம் எனும் கரும்புள்ளி அவரது உள்ளத்தைப் படிப்படியாக ஆக்கிரமித்துக் கொண்டு விரிவடைந்து கொண்டே செல்லும். மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரினால் உள்ளம் பிரகாசமடையும். ஆக உண்மையான இறை நம்பிக்கையாளர் (ஒருவர் தொடர்ந்து) குற்றங்களை புரிய மாட்டார். ஏனெனில் உண்மையான இறை நம்பிக்கையாளர் தம்மை இறைவன் ஒவ்வொரு நொடியும் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என உறுதியாக நம்புவார். (ஃபத்ஹுல் பாரீ, புகாரி : பா. 7, பக்கம் 273, 6809)
இந்நியதி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் விதிவிலக்கல்ல. ஆதமுடைய மக்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே. பாவம் செய்பவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருபவர்களே. (அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு திர்மிதி : 2423. இப்னு மாஜா 4241, தாரமி 2611, அஹமது 12576)
(நபியே) உமது பாவத்திற்காக பாவமன்னிப்புக் கேட்பீராக. உமது இறைவனை காலையிலும், மாலையிலும் போற்றிப் புகழ்வீராக (அல்குர்ஆன் 40:55, 47:19, 4:106, 110:3, – புகாரீ : 4961, 4968-4970)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். (சில) பாவங்கள் காரணமாக எனது உள்ளத்தில் ஒரு திரை ஏற்படுகின்றது. அதனால் நான் (ஒரு நாளைக்கு) நூறு தடவைகள் தவ்பா செய்கிறேன். அறிவிப்பு அல்கரீம் அல்முஸ்னி ரளியல்லாஹு அன்ஹு முஸ்லிம். அல்லாஹ்வின்மீது ஆணையாக நான் ஒரு நாளைக்கு எழுபது தடவைகளுக்கு மேல் அஸ்தஃக் ஃபிருல்லாஹ் வஅதூபு இலைஹி என்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி: 6307)
(அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிப்பதற்கு (சொற்ப வேளைக்கு) முன்னர் அல்லாஹ்வைப் புகழ்ந்து தஸ்பீஹ் செய்கிறேன். அல்லாஹ்விடமே பிழை பொறுப்புத் தேடுகிறேன். அவனிடமே தவ்பா செய்து மீளுகிறேன் என்று அதிக மதிகம் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பு : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, முஸ்லிம் : 484, ரியாளுஸ்ஸாலிஹீன் 1877)
முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டதாக 48:2 இறைவனால் நற்சான்று அறிவிக்கப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நாளொன்றுக்கு 70க்கும் அதிக மான 100 தடவைகள் பாவமன்னிப்புக் கோரி இருக்கிறார்கள் என்றால், நாம் எந்தளவுக்கு பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்பதை உணர வேண்டும். நாளும் பொழுதும் மன்னிப்புக் கோரி பாவக்கறைகள் அற்றவர்களாக அல்லாஹ்வை அடைய நாம் முயற்சிக்க வேண்டும். பாவங்கள் சேகரமாகி இதயமுத்திரை வருவதை நாம் அஞ்ச வேண்டும்.
ஜுமுஆக்களை விட்டுவிடக் கூடிய சில கூட்டத்தார் (அப்பாவத்திலிருந்து) விலகிக் கொள்ளட்டும். இல்லையயனில், அல்லாஹ் அவர்களின் உள்ளங் களில் முத்திரையிட்டு விடுவான். பிறகு அவர்கள் பொடுபோக்கானவர்களாக என்றும் ஆகிவிடுவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, (முஸ்லிம் : 865, ரியாழுஸ்ஸாலிஹீன் : 1150)
ஆக பாவங்கள் தொடரும்போது கரும்புள்ளிகள் ஒன்றாகச் சேர்ந்து பெரிதாகிக் கொண்டே வந்து உள்ளம் முழுவதையும் திரையிட்டு மூடிவிடுகின்றது. அப்போதுதான் அல்லாஹ்விடமிருந்து இதய முத்திரை வந்து சேருகின்றது. (அல்குர்ஆன் 2:10,74, 4:155, 6:110, 9:124,125, 83:14) (நவூதுபில்லாஹ்)
பாவங்களின் காரணமாக சுவர்க்கத்திலிருந்து கொண்டுவரப்பட்ட வெண்மையான கல் கூட கறுப்பாகி விட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வத் என்ற கறுப்புக்கல் சுவர்க்கத்தில் இருந்து (கொண்டு) வந்த (விசேஇ) கல்லாகும். மனிதர்களின் பாவக்கறைகளால் தான் அது கறுப்பாக மாறிவிட்டதென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். திர்மிதி, நஸயீ, அஹ்மத். பாவங்களின் காரணமாக சுவர்க்கத்துக் கற்பாறை கூட கறுப்பாக மாறிவிட்டதென்பது நமக்கு அச்சத்தை எற்படுத்துகின்றது.
தபால் நிலையங்களின் பொதிகளை இட்ட பைகளிலும், உரைகளிலும் இடப்படும் முத்திரைகளை நாம் உடைத்துவிட முடியும். உள்ளே இருப் பதை வெளியே எடுக்கவும் வெளியே இருப்பதை உள்ளே புகுத்தவும் முடியும். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ்விடமிருந்து வரும் இதய முத்திரை போடப்பட்டுவிட்டாலோ அவ் இதயத்தில் இறை நம்பிக்கைக்கு வழியே இராது. உள்ளே இருக்கும் இறை மறுப்பு, பெருமை, அகம்பாவம், ஆணவம், வெளியேறவும் முடியாது. வெளியே இருந்து இறை விசுவாசம் எனும் ஒளி உள்ளே நுழையவும் வாய்ப்பே இல்லை.
A. ஆக பாவங்களினால் இதயம் முழுவதும் இருளாகிவிடுகிறது. அவர்கள் செய்தது அவர்களின் உள்ளங்களில் துருவாகப் படிந்து விட்டது (அல்குர்ஆன் 2:10,14, 4:155, 6:110, 9:124,125, 83:14)
B. இருளாகிவிட்ட இதயத்தின்மேல் இறைவனின் இதயமுத்திரை குத்தப்பட்டு கடினமாகி விடுகின்றது. அவர்களின் உள்ளங்களிலும் செவியிலும் முத்திரையிட்டு விட்டான். (அல்குர்ஆன் 2:7, 6:25, 16:108, 17:23, 45:23, 63:3)
C. முத்திரையிட்ட அவர்களின் இதயங்களின் மேல் (மேற்கொண்டு) மூடிகளையும் இட்டான் 17:46 எங்கள் இதயங்கள் மூடப்பட்டு விட்டன. (அல்குர்ஆன் 41:5) (என்று அவர்கள் சொல்வார்கள்)
D. மூடப்பட்ட இதயத்தின்மேல் மேற்கொண்டும் திரை போடப்பட்டது (அல்குர்ஆன் 2:88, 4:155, 17:45)
அவர்களின் பார்வைகள் மீதும் திரை விழுந்துவிட்டது. (அல்குர்ஆன் 2:7, 6:25, 16:108, 41:5, 45:23)
E. போதாமைக்கு அவர்களுக்கு தீய கூட்டாளிகளையும் (அல்லாஹ்) இணைத்துவிட்டான். (அதனால்) அவர்கள் முன்னால் இருப்பதையும், பின்னால் இருப்பதையும் அழகாக்கிக் காண்பிக்கிறார்கள். (அல்குர்ஆன் 19:83, 41:25, 43:36-38,40)
F. மேற்கொண்டு ஷைத்தானை உற்ற நண்பனாக (அவர்கள் மீது) அல்லாஹ் சாட்டிவிடுகிறான். (அல்குர்ஆன் 7:27,30, 14:21,22)
G. அதன் பின்னர் அல்லாஹ் அவர்களை சபித்தான். (அல்குர்ஆன் 2:15,40,88,89,152,158,159,161, 3:87, 4:46,47,52, 93,118,147, 5:13,60, 7:44, 9:68,79, 11:18, 24:7, 38:78, 47:23, 48:6, 64:17, 76:22)
அல்லாஹ்வே சாபமிட்ட பிறகு அவர்களுக்கு ஹிதாயத் எனும் ஒளி ஏது? எவர்களை அல்லாஹ் (சபித்து) தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான். 7:186 எனும் இந்த வசனத்தில் நேர்வழி அறியாது யார் வழி தவறிச் செல்வது விதியாகிவிட்டதோ அவரை யாராலும் நல்வழிப்படுத்த இயலாது என்றும் அவர் தமக் காக எதைச் சிந்தித்தாலும் அவருக்கு எந்தப் பயனும் அளிக்காது என்றும் அல்லாஹ் உணர்த்துகிறான்.
இதன் பின்னரும் உங்களின் இதயங்கள் இறுகி விட்டன. அவை கற்பாறையைப் போல் ஆகிவிட்டன. அல்லது அதை விடவும் அதிகக் கடினமாகின. ஏனெனில் திடமாக கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும் சில (பாறைகள்) பிளவுபட்டுத் திடமாக அவற்றிலிருந்து தண்ணீர் வெளிப்படுவதுமுண்டு. இன்னும் திடமாக அல்லாஹ்வின் மீது உள்ள அச்சத்தால் சில(கற் பாறைகள்) உருண்டு விழக்கூடியதுமுண்டு. மேலும் அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றிக் கவனிக்காமல் இல்லை (அல்குர்ஆன் 2:74)
(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:18, 6:39, 22:46)
அதாவது நல்லதை கேட்க விரும்பாத செவிடர்கள் உண்மையை உரைக்க மறுக்கும் ஊமையர்கள் இருளில் மூழ்கிப்போன கருத்துக் குருடர்களாகும் (அல்குர்ஆன் 6:39)
எப்படிப்பட்ட இருளது? ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகின்றது. அதற்கு மேல் மற்றொரு அலை அதன் மேல் மேகம், ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல இருள்கள் (அதில்) அவன் தனது கையை நீட்டினால் கூட (அவனால் அதை) பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எவ்வித ஒளியுமில்லை (அல்குர்ஆன் 24:40)
இங்கு அலைக்கு மேல் அலை வந்து அதை மூடு கின்றது என்பதாவது இறை மறுப்பாளனின் இதயம், செவி, பார்வை ஆகியவற்றின் மேல் உள்ள மூடியை குறிக்கின்றது என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். தப்ஸீர் இப்னு கஸிர் 6-387, 2:7, 45:23. ஒன்றன்மேல் ஒன்றாக பல இருள்கள் எனும் தொடருக்கு உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கமளித்தாவது ஓர் இறை மறுப்பாளன் 5 வகையான இருளில் புரண்டுகொண்டிருக்கிறான்.
1. அவனது பேச்சு ஓர் இருளாகும்
2. அவனது செயல் ஓர் இருளாகும்
3. அவனது பிரவேசம் ஓர் இருளாகும்
4. அவனது வெளியேற்றம் ஓர் இருளாகும்
5. மறுமை நாளில் அவன் மீளுவது இருளின் பக்கமே (தப்ஸீர் இப்னு கஸீர் : 6:387)
இத்தகையோருக்கு ஓர் உதாரணம் இருளில் சிக்கிக்கொண்ட வழிப்போக்கர்கள் போன்று அவர்கள் வழி அறிய வேண்டி வெளிச்சத்திற்காக நெருப்பை மூட்டியவர்கள் போன்று அவர்கள் மூட்டிய நெருப்பு அவர்களை சூழ முடியாதவாறு அவர்களின் (கண்) ஒளியைப் பறித்து காரிருளில் (அவர்களை) விட்டு விட்டான் (அல்குர்ஆன் 2:17) அவர்களில் சிலர் உமது பேச்சைக் கேட்(பது போன்று பாவனை செய்)கின்றனர். நாம் அவர்களின் உள்ளங்களில் அதை விளங்கிக் கொள் ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர் களின் காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற் படுத்தினோம். இன்னும் அவர்கள் எல்லா(வித) அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை அவர்கள் நம்பமாட்டார்கள். (அல்குர்ஆன் 2:171, 6:25)
அதாவது நீர் குர்ஆனை ஓதும்போது அதைச் செவியுறுவதற்காக அவர்கள் உம்மிடம் வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு எவ்விதப் பலனும் இல்லை. ஏனெனில் அவர்கள் குர்ஆனை புரிந்து கொள்ளாமலிருப்பதற்காக அவர்களின் உள்ளங்களில் திரைகளை-மூடிகளை அல்லாஹ் ஏற்படுத்தி, மேலும் அவர்களின் காதுகளில் கேளாத்தன்மையை பயனுள்ளவற்றைக் கேட்க முடியாதவாறு செவிட்டுத் தன்மை அவன் ஏற்படுத்தினான்.
(ஏக இறைவனை) மறுத்து விட்ட அவர்களின் நிலையானது சப்தமிட்டு அழைக்கப்படுகின்ற (ஆடு, மாடு போன்ற)வற்றின் நிலையை ஒத்திருக்கின்றது. அவை வெறும் அழைப்போசையையும் கூப்பாட்டையும் தவிர (சிறந்த கருத்து) எதையும் கேட்(டு விளங்)கா இவர்கள் செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள் (அல்குர்ஆன் 2:171)
அறியாமையிலும், தவறான வழியிலும் உழன்று வரும் இறை மறுப்பாளர்கள் மேய்ந்து திரியும் கால் நடைகளைப் போன்றவர்கள். அவற்றுக்கு சொல்லப்படும் எதையும் அவை விளங்குவதில்லை. மாறாக அவற்றை மேய்க்கும் இடையன் அவற்றை கூவி அழைத்தால் மட்டுமே அவற்றின் காதுகளில் சத்த மாக விழும். அதாவது அவற்றை அவை போய் சேர வேண்டிய இடத்திற்கு அழைத்தால் இடையன் கூறும் வார்த்தை நடைகளை அவை விளங்குவதோ புரிந்துகொள்வதோ இல்லை. மாறாக அவனது சப்தத்தை மட்டுமே கேட்கின்றன என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள். (தப்ஸீர் இப்னு கஸீர் : 1:5250)
அல்லது நிச்சயமாக அவர்களின் பெரும்பாலானோர் (உமது உபதேசத்தைக்)கேட்கிறார்கள் அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களே அன்றி வேறில்லை அல்ல (அவற்றை விடவும்) அவர்கள் மிகவும் கேடுகெட்டவர்கள் (அல்குர்ஆன் 25:44)
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப் பிராணிகளில் மிகக் கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும், ஊமையர்களும் தான் (அல்குர்ஆன் 8:22)
(இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும் மிருகங்கள் தீனி தின்பதை போல தின்று கொண்டும் இருக்கின்றனர். (நரக) நெருப்பே இவர் கள் தங்குமிடமாக இருக்கும் (அல்குர்ஆன் 47:12)
(நபியே!) நீர் அவர்களுக்கு ஓர் மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நமது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம். எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவி விட்டான். அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான். அதனால் அவன் வழிதவறியவர்களில் ஒருவனாகி விட்டான். நாம் நாடி இருந்தால் நமது அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தி இருப்போம். எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான். அவனுக்கு உதாரணம் நாயைப் போன்றது. அதை நீர் விரட்டினாலும் நாக்கை தொங்க விடுகின்றது. அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கை தொங்க விடுகின்றது (அல்குர்ஆன் 7:176)
(நபியே!) எவன் தன்னுடைய (சரீர மனோ) இச்சையை தனது தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ அவனை நீர் பார்த்தீரா? மேலும் அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனது காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு இன்னும் அவனின் பார்வை மீதும் திரையை அமைத்து விட்டான். எனவே அல்லாஹ்வுக்கு பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவன் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? (அல்குர்ஆன் 45:23)
ஆகவே(நபியே!) மரித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது. (உம்முடைய சத்திய வழி அழைப்பைப்) புறக்கணித்து திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது. இன்னும் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டில் இருந்து நேர்வழியில் திருப்புவோராகவும் நீர் இல்லை. 27:80,81, 30:52,53. ஆனால் எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கின்றதோ அவர்களு டைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது. அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலை யிலேயே மரிப்பார்கள் (அல்குர்ஆன் 9:125)
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல்ஆம் பின் பஊரா என்பவர் மிகப் பிரபல்யமான துறவியாக இருந்தார். வணக்க வழிபாடுகளில் அதிக மாக ஈடுபாட்டுடன் இருந்தார். அவருக்கு அல்லாஹ் தனது மகத்தான பெயராகிய அல் இஸ்முல் அஃழம் என்பதை கற்றுக் கொடுத்திருந்தான். அந்த பெயர் கூறி பிரார்த்தித்தால் கேட்டது கிடைக்கும்; பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படுபவராக அவர் கேட்டு அல்லாஹ் எதையும் கொடுக்காமல் இருந்ததில்லை. அந்தளவுக்குப் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படுபவராக இருந்தார். ஆனால் அவர் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரம் மற்றும் பகட்டின் பக்கம் சாய்ந்து அதன் இன்பங்களையும், சுகபோகங்களையும் எதிர்நோக்க ஆரம்பித்து பாவங்களில் குதித்தார். இறுதியில் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காகவும், அவர்களுடன் இருந் தவர்களுக்கு எதிராகவும் பிரார்த்தனை செய்ய எழுந்து நின்றார். இறுதியில் அகப் பார்வையை இழந்து அல்லாஹ்வுடைய அருளை விட்டும் தூரமாகி அழிவில் போய் விழுந்தார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகள் அகற்றப் பட்டது. அவரது நாக்கு வெளியே தள்ளி நெஞ்சு வரை வந்து தொங்கியது. சுருக்கம் அறிவிப்பு : இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, முஸன்னஃப் அப்தில் ரசாக், இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, (தப்ஸீர் தபரி, தப்ஸீர் இப்னு கஸீர் : 7:175-177, விரிவுரை பாகம் :3 பக்கம் : 954-965)
(நபியே! இஸ்ரவேலர்களில்) ஒருவரை பற்றிய செய்திகளை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! நாம் அவருக்கு நம் சான்றுகளை வழங்கியிருந்தோம். (ஆனால்) அவர் அவற்றிலிருந்து நழுவிக் கொண்டார். ஆகவே அவனை ஷைத்தான் தனது ஆதரவாளராக ஆக்கிக்கொண்டான். (இதையடுத்து) தவறான (வழியில் சிக்கி அழிந்து போன)வர்களில் ஒருவராக ஆகிவிட்டார். நாம் நாடியிருந்தால் (அந்தச்) சான்றுகள் மூலம் அவரை உயர்த்தியிருப் போம். ஆனால் அவர் இவ்வுலக (இன்ப)த்தில் மையல் கொண்டு தமது மனவிருப்பத்தை பின்பற்றினர். அவரது நிலை நாயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதை நீர் துரத்தினாலும் நாக்கைத் தொங்க விடும்; அதை நீர் விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிடும். இதுவே நமது வசனங்களைப் பொய்யயன கருதிய மக்களது நிலையாகும். (நபியே இதுபோன்ற) வரலாறுகளை (அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக! (இதனால்) அவர்கள் சிந்தித்து உணரலாம். நமது வசனங்களைப் பொய்யென கருதி தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்ட மக்களே மோசமான (முன்) உதாரணமாவர்.
இங்கே நாய்க்கு ஒப்பிட்டுக் கூறியதானது நாயானது உணவையும், உடல் ஆசையையும் அடைவதில் மட்டுமே குறியாக இருக்கும். நல்லறிவு, நல்வழி ஆகிய உயர் தளத்தை விட்டு வெளியேறி ஆசைகளை முன்னிருத்தி மனவிருப்பத்தைப் பின்பற்றி வாழ்பவன் ஏறத்தாள நாயின் குணத்தைப் பெற்றவனாகின்றான்.
நான் உங்கள் மீது மிகவும் அஞ்சுவது ஒரு (வகை) மனிதரைப் பற்றி தான். அவர் குர்ஆனை ஓதுவார். அதன் பொலிவு அவரிடம் காணப்படும். அவர் இஸ்லாத்துக்கு பக்க பலமாக இருப்பார். (இந்நிலையில் அவரது பாவங்களின் காரணமாக) அல்லாஹ் அவரை தான் நாடியவாறு (வழிகேட்டின் பக்கமாக) மாற்றிவிடுவான். அவரிடமிருந்து அந்த பொலிவு கழன்றுவிடும். அவர் அதை தனது முதுகுக்குப் பின் னால் தூக்கி எறிந்து விடுவார் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதாக ஹுதைஃபா பின் அல் யமான் ரளியல்லாஹு அன்ஹு, (இப்னு ஹிப்பான், தப்ஸீர் இப்னு கஸீர் : 3:959)
உண்மையின்றி பூமியில் பெருமையடிப்பவர்களை (அல்லாஹ்வாகிய நான்) எனது வசனங்களை விட்டு(த்திசை) திருப்பி விடுவேன். அவர்கள் ஒவ்வொரு (ஆயத்களான)வசனங்களை (தெளிவாக) கண்டாலும் அவற்றை நம்பமாட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கண்டால் அதை (தங்களது வழியாக) ஏற்க மாட்டார்கள். கோணல் வழியைக் கண்டாலோ அதையே (தங்களுக்குரிய சிறந்த வழியாய்) ஏற்பார்கள். ஏனெனில் நமது வசனங்க(ளாகிய ஆயத்க)ளை அவர்கள் பொய்ப்பித்து அவற்றை புறக்கணித்தும் வருகின்றனர். (அல்குர்ஆன் 7:146)
அதாவது சக மனிதர்களிடம் நியாயமின்றி எவர்கள் பெருமையடிக்கின் றார்களோ அவர்களின் உள்ளங்களை எனது பெருமைக்கும் மார்க்க நெறிக்கும் ஆதாரமாக விளங்கும் சான்றுகளைப் புரிந்துகொள்ள விடாமல் தடுத்து விடுவேன். நியாயமின்றி கர்வம் கொண்ட அவர்களுக்கு அறியாமை எனும் அவமானம் சரியான தண்டனையாகும். இதனையே வேறு வசனங்களில், அவர்களின் உள்ளங்களையும் பார்வைகளையும் நாம் பிறழச் செய்து விடுவோம். எல்லை மீறலில் தடுமாற அவர்களை நாம் விட்டு விடுவோம் (அல்குர்ஆன் 6:110)
அவர்கள் (நேர்வழியிலிருந்து) தடம் புரண்டபோது, அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களைத் தடம் புரளச் செய்துவிட்டான் (அல்குர்ஆன் 61:5)
-S.M. அமீர், நிந்தவூர், இலங்கை – 0094776096957