மதரஸாக்கள்: ஜீவனைச் சுமந்து செல்லும் தோணிகள்
இக்வான் அமீர்
உண்மையில் மதரஸாக்களில் என்னதான் நடக்கிறது? என்பதை அறிந்து முகப்புக் கட்டுரை வெளியிட அந்த இதழ் தீர்மானித்திருந்தது. அதற்காக ஒரு மூன்று மதரஸாக்களைத் தேர்ந்தெடுத்து அந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள்.
தமிழகத்தின் மிக முக்கியமான அந்த மதரஸாக்களுக்கு நேரிடையாகச் சென்று அங்கு தங்கி மதரஸா நிர்வாகிகள், மாணவர்கள், அண்டை அயலில் வாழும் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து உண்மை நிலவரத்தை அறிந்து வர வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு அது. – இக்வான் அமீர்
2001-2001-ம், ஆண்டுகளில் மாதமிருமுறை மற்றும் வார இதழ்களுக்காக மிக முக்கியமான செய்தி சேகரிக்கும் பணிக்காக சென்னைக்கு அப்பால் உள்ள சில மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த இரண்டு பணிகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவைதான்.
மதரஸாக்கள் எனப்படும் இஸ்லாமிய கல்வி நிலையங்கள், கலாச்சாலைகள் பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருப்பதாக மத்தியில் ஆண்டுவரும் வகுப்புவாத அரசும் இன்னும் சில ஊடகங்களும் பெருத்து ஓலமிட்டுக் கொண்டிருந்தன. இது சம்பந்தமான உண்மை நிலவரத்தை அறியவே அந்த இதழியல் பயணம்.
நாட்டின் சிறிய, பெரிய இஸ்லாமிய கல்விநிலையங்கள் அனைத்தும் உளவுத்துறையின் கண்காணிப்புக்கு ஆளாகிவருகின்றன. கண்காணிப்பு என்பது உளவுத்துறையின் கடமை என்றாலும் அது சிறுபான்மையினரைப் பொருத்தவரை மறைமுகமான அச்சுறுத்தல். மதரஸாக்களுக்கு அடிக்கடி சென்று பார்வையிடுவது (சோதனையிடுவது), முதல்வர்களையும், மாணவர்களையும் விசாரிப்பது என்று பல்வேறு உளவியல் ரீதியான மிரட்டல்கள் அவை. சமூக அந்தஸ்தை குலைக்கும் வித்தை!
சுதந்திர இந்தியாவின் வயதுடைய மதரஸா ஈரோட்டிலுள்ள ‘தாவூதியா அரபிக் கல்லூரி’. போக்குவரத்து மிகுந்த பிரதானச் சாலையில் அமைந்துள்ள கல்லூரி இது.
நான் சென்றிருந்தபோது, இதன் முதல்வராக (பொறுப்பு) இருந்தவர் மௌலவி எம்.எஸ்.உமர் பாரூஃக் தாவூதி.
“மதரஸாக்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது தவறான செய்தி!” – என்றார் அவர். “..மதரஸாக்களில் என்ன போதிக்கப்படுகிறது என்று மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும், மதரஸாக்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சொல்லப்படுவது உள்நோக்கம் வாய்ந்தது. ஒரு சமயத்தை அழிக்க நினைப்போர்.. அதைக் குறித்து மக்களிடையே தவறான கருத்தை விதைக்க முயல்வோர்.. அந்த சமயத்தார் எதைப் புனிதமாக கருதி வருகிறார்களோ முதலில் அவற்றைத்தான் களங்கப்படுத்துகிறார்கள்!” – என்றார் தொடர்ந்து.
மௌலவி உமர் பாரூஃக் யதார்த்தமாக சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது: “.. பொதுவாக அரபி மதரஸாக்களின் மாணவர்களுக்கு மிகச் சாதாரணமான உலக விவகாரங்கள்கூட தெரிவிதில்லை. சட்டமன்றம், பாராளுமன்றம், அமைச்சர்கள் இவர்கள் குறித்துக்கூட அவர்கள் அறிந்திருப்பதில்லை. அதானல்தான், எங்களை ‘உலகம் தெரியாதவர்கள்’ என்றுகூட சொல்கிறார்கள்.
இந்த நாட்டில் எத்தனையோ கல்லூரிகள் உள்ளன. பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. எவ்வளவோ முறைஸ எத்தனையோ மாணவர்கள்ஸ பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். போராட்டங்களில் பங்கெடுத்து வன்முறை, அடிதடி என்றுகூட நடந்துள்ளது. ஆனால், இதுவரை ஒரே ஒரு மதரஸா அல்லது ஒரே ஒரு மதரஸா மாணவன்கூட இத்தகையப் போராட்டம், வன்முறைகளில் கலந்துகொண்ட சம்பவம் ஒன்றைக்கூட சொல்லவே முடியாது!
ஏனென்றால், அரபி மதரஸாக்களில் போதிக்கப்படுவது எல்லாம் ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை முறைமை. எச்சில் துப்புவது ஒரு சாதாரணமான செயல்தான். இருந்தாலும் அதைக்கூட பிறருக்கு இடையூறு தரும் பொது இடங்களில் செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறது இஸ்லாம்.!”
அடுத்தது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது ‘உமராபாத்’. சாதி, மத பேதங்கள் இல்லாமல் கலந்து உறவாடும் ஊர்.
உமராபாத் என்ற பெயருக்கு பின்னால் ‘சமயநல்லிணக்கம்’ அழுத்தமாக வர்ணம் பூசிக் கொண்டிருக்கிறது. திப்புச் சுல்தான் படையினர் தங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் இது. இங்குதான், ‘ஜாமியா தாருஸ் ஸலாம்’ அமைந்துள்ளது. அமைதியை தன் பெயரிலேயே தாங்கி அமைதியே உருவாகக் காட்சி அளிக்கும் கலாசாலை இது.
இந்தக் கலாசாலையின் ஆஸ்தான தச்சர் 100 வயதைத் தாண்டிய முதலியார் இனத்தவரான ‘பிச்சு ஆச்சாரி’. இவர் வளர்ந்தது காலஞ்சென்ற காக்கா உமர் சாஹெபின் வீட்டில்.
“எஜமான் காக்கா உமர் அய்யாவின் வீட்டில் வளர்ந்தவன் நான். அவர்தான் என்னை வளர்த்தார். திருமணமும் செய்து வைத்தார். இப்போ உமராபாத் என்று அழைக்கப்படும் இந்த இடம் அய்யாவின் பெயரால்தான் அழைக்கப்படுகிறது” – பிச்சு ஆச்சாரி பெருமைக் கொப்பளிக்க கூறுகிறார்.
ஜாமியா தாருஸ் ஸலாம், 1924-ல், துவங்கியது. கிட்டதட்ட 75 ஆண்டுகால பழமை வாய்ந்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்றது. பல்வேறு சமூகச் சேவைகளில் ஈடுபட்டுவரும் கலாச்சாலை.
நான் சென்றிருந்தபோது, மதரஸாவின் நாஸிமாக இருந்தவர் மௌலானா கலீலுல் ரஹ்மான்.
“வடஇந்தியாவில் தேவ் பந்த் மதரஸா, இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளை உருவாக்கிய கலாச்சாலை. பெரும்.. பெரும்ஸ இஸ்லாமிய அறிஞர்களை, உலமாக்களை சுதந்திரப் போராட்டத்துக்கு அர்ப்பணித்த மதரஸா. அப்படிப்பட்ட நாட்டுப்பற்று மிக்கவர்களை அரசாங்கம் சந்தேகப்படுவது அவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும்!” – என்றார் வருத்தத்துடன்.
“…மத்திய அரசின் குற்றச்சாட்டில் எவ்வித ஆதாரமும் இல்லை. மதரஸாக்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததற்கான ஆதாரமாக சிக்கியத் தடயங்கள்தான் என்ன? எதுவுமேயில்லை!
மதரஸாக்களில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான (திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் போதனைகள்) மார்க்க கல்விதான் போதிக்கப்படுகின்றது. இஸ்லாத்தின் கொள்கையோடு பிற சமயங்கள் குறித்த சகிப்புணர்வையும் சேர்த்து போதிக்கிறோம்.
எங்கள் கல்லூரியில் கற்று முடித்த மாணவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக, நாட்டின் தலைச்சிறந்த யூனானி மருத்துவர்களாக, பல்வேறு பள்ளிவாசல்களின் இமாம்களாக சேவையாற்றி வருகிறார்கள்!” – என்றார் மௌலான கலீலுல் ரஹ்மான்.
வேலூர் என்றதும் பளிச்சென்று நினைவுக்கு வருவது இந்தியாவின் மார்க்க கலாச்சாலைகளின் மிக முக்கியமானதாக விளங்கும் ‘ஜாமியா அல் பாகியாத்துஸ் ஸாலிஹாத்’.
இன்றைக்கு சற்றேறக் குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அஃலா ஹஜரத்’ என்றழைக்கப்பட்ட அப்துல் வஹாப் சாஹெப் (ரஹ்) அவர்களுடைய வீட்டுத் திண்ணையில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று ஆல்போல தழைத்து வளர்ந்துள்ள கலாசாலை இது. தனது பெயருடன் பாகவி என்ற பட்டத்தை தாங்கி உள்ள எண்ணற்ற மார்க்க அறிஞர்கள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் அளப்பரிய பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது இதன் சிறப்பு.
1990-களில், எனது மனைவி இஸ்லாமிக் சென்டரில் தலைமை ஆசிரியையாகப் பணி புரிந்துவந்தார். வார விடுமுறை நாட்களில் அவரைச் சந்திக்க செல்லும்போது, ‘பஜ்ர் – வைகறை’ தொழுகைக்காக ‘ரஹ்மத்பாளாவிலிருந்து’ பாக்கியாத் ஸாலிஹாத் பள்ளிவாசலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். பேராசிரியர் கான் ஹஜ்ரத்தையும், பேராசிரியர் முஹம்மது இல்யாஸ் ஹஜ்ரத்தையும் சந்தித்து கருத்துரைகள் பரிமாறிக் கொள்வது வழக்கம்.
பஜ்ர் தொழுகை முடிந்ததோ இல்லையோ மாணவர்கள் திருக்குர்ஆனை ஓதத் தொடங்கிவிடுவார்கள். குளிர்காலத்து அந்த அதிகாலைப் பனிப்பொழிவில் சில்லென்று வீசும் காற்றோடு பள்ளிவாசலின் அமைதியைக் கிழித்துக் கொண்டு மாமறையின் அந்த அழகிய ஓசை தேவலோக கானமாக இனிக்கும்.
‘மதரஸா ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் குறித்து ஒருவர் அஃலா ஹஜரத்திடம் கேட்டார். அப்போது, “உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது சகோதரரே!” – என்றாராம் ஹஜரத்.
கேட்டவர் புரியாமால் விழிக்க, “என்ன புரியவில்லையா? பாகியாத்துஸ் ஸாலிஹாத் அதாவது நிலையான நல்லறங்கள் என்று பொருள். நற்செயல்கள் நிலைத்திருந்து.. நல்லவர்கள் தோன்றியவாறே இருக்க வேண்டும் என்பதே நோக்கம்!” – என்றாராம் அஃலா ஹஜரத்.
“மதரஸாக்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தீவிரவாதத்தை இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை. எங்கள் பாடத்திட்டத்தின் எந்த ஓர் இடத்திலும் தீவிரவாதத்தைப் பற்றி போதிப்பதில்லை!” – என்றார் பேராசியர் மௌலவி முஹம்மது இல்யாஸ் பாஸில் பாகவி. இவர் ஒரு கால்நூற்றாண்டாக இங்கு கல்வி சேவையாற்றி வருபவர்.
மற்றொரு பயணம், ‘பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் நிதி வசூல்’ – என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்டர், 06.01.2002 இதழில் ஒரு முகப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தது.
இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றை கொச்சைப்படுத்தும் கட்டுரை அது.
ரமளான் மாதத்தில் நடக்கும் தரும காரியங்களுக்கான ஒரு சாதாரண நிதி வசூலைத் திரித்து குமுதம், இதழியல் மோசடி செய்திருந்தது. அந்தச் செய்தியின் உண்மை நிலவரம் என்னவென்று அறிய வேலூர் மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிய வேண்டியிருந்தது. மாவட்டத்தின் உயர் காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் என்று அரசின் முக்கிய நபர்களையும் சந்தித்து உண்மை அறிய வேண்டியிருந்தது.
இத்தோடு சம்பவத்தின் முக்கிய பகுதிகளாக குமுதம் அடையாளப்படுத்தியிருந்த ஆந்திர மாநிலத்தின் பல்வேறு குக்கிராமங்களுக்கும் மழை, வெய்யில் என்று பாராமல் சுற்றித் திரிந்து ‘புலனாய்வு செய்தி’ சேகரித்த அந்தப் பயணம் மறக்க முடியாதது.
வேலூர் நகரின் சைதாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது ‘மஸ்ஜிதே காதர்ஷா’ என்ற பள்ளிவாசல். இதன் இமாமாக 23 ஆண்டுகளாக ஹாபிஸ் முஹம்மது அஸ்கர் பணி புரிந்துவருகிறார். தாய்மொழி உருது. தமிழ் சரளமாக பேச வராது. இவர் பல்வேறு சமூகச் சேவை அமைப்புகளை நடத்தி வருகிறார்.
இந்த சமூகச் சேவை அமைப்பு ஒன்றின் ரசீது ஹோட்டல் ஒன்றில் உளவுத்துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ரசீது குமுதம் ரிப்போர்ட்டரிடம் தரப்பட்டு ‘பாக். தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் நிதி வசூல்’ என்ற தலைப்பில் முகப்புக் கட்டுரையாக வெளிவந்தது.
குமுதம் ரிப்போர்ட்டரில் அதன் செய்தியாளர் என்று சொல்லிக் கொண்டு ஒருவர், ஹாபிஸ் முஹம்மது அஸ்கரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘காகதி நகர்’ ஷம்ஷீத்தீன் தங்கள் பகுதி மசூதி மற்றும் மதரஸாவுக்கு நன்கொடை வசூலிக்க அதன் பிரதிநிதியாக அங்கே வந்தார்.
அவர் கொண்டு வந்திருந்த ‘பிரதிநிதி’ என்பதற்கான அத்தாட்சி கடிதத்தின் பின்புறத்தில் டிசம்பர் டிசம்பர் 13, என்று ஆங்கிலத்தில் எழுதி அதற்கு மேலாக உருதுவில் ஒரு வாசகமும் எழுதப்பட்டிருந்தது. மொத்த வாசகத்தின் பொருள் இதுதான்: ‘டிசம்பர் 13, ரமளான் பிறை 27, வியாழக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு (நன்கொடைக்காக) சந்திக்கவும்’ என்று மீண்டும் வசூலுக்கு வருவதை நினைவூட்டும் வாசகம்தான் அது.
அந்த கடிதத்தை கைப்பற்றிய செய்தியாளருக்கு டிசம்பர் 13 என்ற ஆங்கில வாசகங்களைக் கண்டதும் கற்பனை ஊற்றெடுத்திருக்கிறது. அதை பாராளுமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்துடன் முடிச்சுப் போட்டிருக்கிறார். பிறகு அந்த குக்கிராமத்து இளைஞரை மிரட்ட அவர் பேந்த பேந்த விழித்துக் கொண்டே சென்றுவிட்டார்.
இதையெல்லாம் ஒன்று சேர்த்து கதையாக்கி, கற்பனை நயத்துடன் முகப்புக் கட்டுரையாக்கி வெளியிட்டது குமுதம் ரிப்போர்ட்டர்.
புனித ரமளான் மாதத்தில் கல்விசாலைகள் மற்றும் இறையில்லங்களுக்கான நன்கொடைகள் தாராளமாக வழங்கப்படுகின்றன. அறச்செயல்களுக்கான கூலி பன்மடங்காக இறைவனிடம் கிடைக்கும் ரமளானில் சிலர் தொடர்ச்சியாக மதரஸாக்கள் எனப்படும் கல்விநிலையங்களுக்கும், மஸ்ஜித் எனப்படும் இறையில்லங்களுக்கும் நன்கொடை வழங்குவது உலகம் முழுவதும் வழக்கம். இந்த நன்கொடைகள் வசூலிப்போருக்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாக கிடைப்பதால் இந்த வருவாய்க்காக சிலர் மெனக்கெட்டு முஸ்லிம் நன்கொடையாளர்களைத் தேடி அலைவதும் உண்டு.
இப்படி பிழைப்பைத் தேடி வந்த அந்த ஆந்திரத்து அப்பாவி இளைஞர் ஒருவர் குமுதம் ரிப்போட்டரால், பாக்கிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கற்பனை ஏஜெண்டாக மாற்றப்பட்டார். வேலூர் நிதி திரட்டிதரும் மாவட்டமானது. ஷம்ஷீத்தீன் மசூதி கற்பனை என்றும் கதைக்கப்பட்டது.
ஆனால், சித்தூர் மாவட்டத்தின் குக்கிராமம் ‘காகதி’ என்பது உண்மை. 20 முஸ்லிம்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் ஷம்ஷீத்தீன் மசூதி மற்றும் மதரஸா (எல்லாமே ஓலை குடிசைகள்தான்) இருந்ததையும் பல்வேறு சாகஸங்கள் மத்தியில் கண்டுப்பிடித்து பதிவும் செய்யப்பட்டது.
அதேபோல, குமுதம் ரிப்போர்ட்டர் தனது கட்டுரையை வளர்க்க, பேரணாம்பட்டின் 6 கி.மீட்டர் தொலைவிலிருக்கும் ‘பகதூர் பள்ளி’ கிராமத்தில் அமைந்துள்ள அநாதை ஏழைப் பிள்ளைகளுக்கான ‘மதரஸே குதாதாத்’ மர்ம நபர்களின் அடைக்கலப் பகுதியாக சித்தரித்தது.
தமிழகம், ஆந்திரம் வி,கோட்டா பிரதானச் சாலையில் உள்ள ‘மதரஸே குதாதாத்’ பக்கத்திலேயே வனத்துறையினரின் காவல்சாவடி (‘செக் போஸ்ட்) ஒன்றும் உள்ளது. அப்படி இருந்தும் அங்கு தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக குமுதம் ரிப்போர்ட்டர் பொய் செய்தி வெளியிட்டிருந்தது.
அநாதைப் பிள்ளைகளுக்கான மதரஸாவுக்கு எதிரில் ஒரு பெரிய மாந்தோப்பு உள்ளது. அங்கு வார விடுமுறை நாட்களில் பேரணாம்பட்டிலிருந்து சிலர் சீட்டாட வருவது வழக்கம். அவர்கள் கையில் கட்டுச்சோற்றுடன் வந்து அங்கேயே மாலைவரை தங்கி செல்வது வழக்கம். இந்த சூதாட்டக்காரர்கள்தான் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள்.
மதரஸாவின் வளாகத்தில், அரசாங்கத்தின் ‘கிராமந்தோறும் தொலைபேசி’ திட்டத்துக்கான தொலைபேசி கோபுரம் தீவிரவாதிகளின் தகவல் தொடர்பு சாதனமாக நாக்கூசாமல் பொய்யாக்கி குமுதம் ரிப்போர்ட்டர் எழுதியிருந்தது.
இதைத்தொடர்ந்து ஊர் மக்கள், காவல்சாவடி அதிகாரிகள், மதரஸா நிர்வாகிகள், மாணவர்கள் அண்டை, அயலார் என்று பலரைச் சந்தித்து தீவிரவாதிகள் குறித்து விசாரித்தும் குமுதம் ரிப்போர்ட்டரின் எந்த தகவலும் உண்மை இல்லை என்றும் தெரிந்தது.
கடைசியாக வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மாவட்டத்தின் உயர் மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு நடந்தது. குமுதம் ரிப்போர்ட்டரின் நகல்களைக் காட்டியதும், அவர் போனில் தொடர்பு கொண்டு உளவுதுறையின் அதிகாரிகளை அழைத்தார். அங்கு வந்த உளவுத்துறை அதிகாரிகள் அவர்கள் ஏற்கனவே விசாரித்து வைத்திருந்த தகவல்களின் அடிப்படையில் குமுதம் ரிப்போட்டரின் தகவல்கள் பொய் என்று சொன்னார்கள்.
குமுதம் ரிப்போர்ட்டரின் இதழியல் மோசடி நேரடியான, நேர்மையான புலனாய்வு இதழியல் மூலமாக கடைசியில் முறியடிக்கப்பட்டது.
இஸ்லாம் என்பது வாழ்வியல் நெறி. அமைதிக்கான வழிமுறை; மார்க்கம். பிரபஞ்ச இயக்கம். படைத்தவனின் படைப்பினங்களுக்கான வழிகாட்டுதல். வெற்றிக்கான நேரிய பாதை. அந்த வாழ்க்கை முறையைப் போதிக்கும் திருவேதமே குர்ஆன். அதைப் போதிக்க வந்த இறுதித்தூதரே அண்ணல் நபி. இந்த நேர்வழியைப் பின்பற்றுபவர்கள்தான் முஸ்லிம்கள் அதாவது இறைவனின் அடிமைகள்.
ஒரு சூரியனைப் போல, ஒரு சந்திரனைப் போல, காற்றைப் போல மற்ற சக உயிரினங்களைப் போல மொத்தத்தில் இந்த பிரபஞ்சத்தைப் போல இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ வேண்டியவர்கள்; முஸ்லிம்கள். அமைதியை நிலைநிறுத்த வேண்டியவர்கள்.
அந்த அமைதி வாழ்க்கைக்கான வழிமுறை திருக்குர்ஆனில் உள்ளதால் அதைப் பாதுகாத்து பின்பற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமையும் சாரும். அது முஸ்லிம்களின் இறைநம்பிக்கையின் ஜீவனாகும்.
நபிகளாரின் காலத்திலேயே திருக்குர்ஆனின் அறிவைப் பெறுவதும் அதைப் பரப்புவதும் சிரத்தையுடன் மேற்கொள்ளப்பட்டது. மதீனாவில் உள்ள ‘மஸ்ஜிதுன் நபவீ’ – திருநபியின் பள்ளிவாசல்’ என்ற பெயராலேயே அழைக்கப்படும் மசூதியின் வெளிப்புறத்தில் அமைந்திருந்தது ஒரு திண்ணை. அந்த திண்ணையையே தங்களின் இருப்பிடமாக்கிக் கொண்டு எண்ணற்ற நபித்தோழர்கள் திருக்குர்ஆனின் அறிவைப் பெறுவதும், அதை பரப்புவதுமாய் இருந்தார்கள். இதுதான் வரலாற்று ரீதியான முதல் மதரஸா – கல்வி நிலையம்.
இதற்கும் சற்று முன்பாக வரலாற்றைப் புரட்டினால், திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்கள் இறங்க.. இறங்க.. அதை நபித்தோழர்களிடையே அன்பு நபி போதித்தவாறே இருந்தார்கள். இந்த அறப்போதனை வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு வேளாண் பணிகளையே தங்கள் தொழிலாகக் கொண்டிருந்த நபித்தோழர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். முறை வைத்து அந்தத் அறிவுப்பாசறையில் கலந்து கொள்வார்கள்.
மதீனாவின் எல்லைப்புறத்தில்தான் வேளாண் நிலங்கள் இருந்தன. தோட்டந்துறவுப் பணிகளால் நகருக்கு வர முடியாத நிலை. அதனாலேயே இந்த ஏற்பாடு.
இவைதான் இறைநம்பிக்கையாளர்கள் திருக்குர்ஆன் அறிவுரைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்கான வரலாற்றுச் சான்று.
இந்த அடிப்படையில், இறைமார்க்கப் போதனைகளுக்கான ஊற்றுகளாக இருப்பவைதான் மதரஸாக்கள் எனப்படும் மார்க்க காலாச்சாலைகள். படைத்தவனின் போதனைகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கான சமுதாய கூட்டு முயற்சி இது. நல்லவை தழைத்தோங்குவதற்கான கடும் உழைப்பு. இறைவனின் விருப்பம் போல, மறுமைநாள்வரை தொடரும் தொடர் முயற்சி இது.
இந்த அரும்பணியைச் சீர்குலைத்து மனிதனை விலங்குகளாக்கும் முயற்சியே மேலைக்கலாச்சார அமைப்பு. உலகளவில் அதன் அங்கம்தான் அமெரிக்காவின் மதரஸாக்கள் சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள். அதன் ஒரு பகுதிதான் இந்திய வகுப்புவாதிகளின் பெருங்கூச்சல்கள்.
இவை அத்தனையையும் கடந்து இறைப்போதனைகள் என்னும் ஜீவனைச் சுமந்து செல்லும் தோணிகள்தான் மதரஸாக்கள். அமைதியை உலகில் நிலைநாட்டும் இறைவனின் சிப்பாய்களை உருவாக்கும் கலாச்சாலைகள்.