அன்புதான் பெண்ணின் பலம்!
இறைவன் பெண்களை பல உன்னதமான உடல் மற்றும் மன இயல்புகளுடன் படைத்துள்ளான். பெண் ஆணைவிட பலமானவளும் இல்லை பலவீனமானவளும் இல்லை. பல வேறுபாடுகளுடன் சமமானவள்.
பெண்களுக்கு இயல்பாகவே பல மென்மையான உணர்வுகள் உண்டு. கலை, அன்பு, அழகுணர்ச்சி, தாய்மை, கருணை, காதல், பரிவு போன்ற உணர்வுகள் சற்றே கூடுதலாகத்தான் இருக்கும். அதனால்தான் அவள் உடல் அமைப்பிலும் ஒரு மென்மையை காண முடிகிறது. ஆனால் மென்மையான ஒன்று வலிமையற்றதாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. மென்மையாகவும் அதே நேரம் வலிமையாகவும் இருப்பவள்தான் பெண். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெண்களிடம் மென்மையும், வலிமையும் குறைந்திருப்பதையே பல நிகழ்வுகள் காட்டுகின்றன.
இக்கட்டுரையில் இன்றைய பெண்களிடம் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களையே நம் கருத்திற்கு எடுத்துக்கொள்வோம்.
குடும்பத்தில் சகிப்புத்தன்மை:
இன்றைய பெண்கள் படிப்பு, மேற்படிப்பு, வேலை, உள்நாடு மற்றும் வெளிநாட்டுப்பயணங்கள் என்று பல துறைகளிலும் பிசியாக இருக்கிறார்கள். இதனால் குடும்பத்தில் மற்றவர் எதிர்பார்க்கும் பராமரிப்பை, கவனிப்பை கொடுக்க முடியாமல் போகலாம். ஆனால் குடும்பமே ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பையும், மகிழ்ச்சியையும், நிம்மதியையும், அங்கீகாரத்தையும் வழங்கும் முக்கிய இடம்.
இங்கு பெற்றோர், கணவர் மற்றும் குழந்தைகளிடம் போதுமான அன்பையும், அனுசரணையும் வழங்க பெண்கள் எப்போதும் தயங்கக்கூடாது. மற்றவர் மனமறிந்து விட்டுக்கொடுத்து, சிறு தவறுகள் மன்னித்து பொருப்பாய் நடக்க தவறக்கூடாது. அதே நேரத்தில் கணவரோ, குழந்தைகளோ தன் பெற்றோர் மற்றும் கணவரின் பெற்றோரோ தவறு செய்தாலும் அதை தட்டிக்கேட்க தயங்கக்கூடாது.
பெரியவர்களின் தவறை நாசூக்காய் சுட்டிக்காட்ட வேண்டும். குழந்தைகளின் தவறை புத்திசாலித்தனமாய் அணுக வேண்டும்.
இன்று பல திருமண மையங்களில் பெண்களின் விருப்பம் என்ற இடத்தில் பெற்றோர் இல்லாத பையன் வேண்டும் என்றோ, பெற்றோர் இருந்தாலும் தங்களுடன் அவர்கள் தங்கக்கூடாது என்றும் நிபந்தனையை எழுதிவைத்துள்ளார்கள். இந்த போக்கை பெண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
மாறாக கணவரின் பெற்றோரைப்போல் தன் பெற்றோரையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுவதே பெண்களின் மதிப்பை மேலும் கூட்டுவதாக இருக்கும். சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொண்டால் அன்பான குடும்பத்திற்கு தலைவியாக நல்ல சமுதாயத்திற்கு வித்திடுபவராகவும் தன் குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாகவும் பெண்கள் திகழலாம்.
இன்றைய பெண்களிடம் பரவலாக காணப்படுவது இரண்டு பெரிய பிரச்சனைகள். ஒன்று சினைப்பை நீர்க்கட்டி மற்றொன்று பிரசவத்தின்போது சிஸரியேன் தேவைப்படுகிறது. இளம் பெண்கள், படிப்பு, வேலை, குடும்ப சூழல் காரணங்களால் இயல்பாக இருக்க முடியாமல் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். பதட்டம், பயம், சந்தேகம், தன்னம்பிக்கையின்மை போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு அதனால் உடலின் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகின்றன். இதனால் திருமணமாகாத பெண்களிடையே சினைப்பை நீர்க்கட்டி, மாதவிடாய் கோளாறுகள் மாதவிடாய் வலி என்று பல பிரச்சனைகள் தோன்றுகிறது.
அதேபோல் கருவுற்ற பெண்கள் அமைதியான, மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போதுதான் ஹார்மோன்கள் சரியாக இயங்குகிறது. மேலும் பிரசவத்தின்போது பயம், சந்தேகம், பதட்டம் போன்ற உணர்வுகள் மேலோங்கியிருந்தால் கருப்பை வாய் நெகிழாமல் இறுக்கமாகி விடுவதுடன் தானாய் திறப்பதும் இல்லை. இதனாலேயே இன்று பல பெண்களுக்கு சிஸரியேன் தேவைப்படுகிறது.
தன்னம்பிக்கை, பிறர் மேல் நம்பிக்கை, அன்பு, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் நிரம்பியிருப்பதுடன், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்வதாலும் இம்மாதிரியான பல பிரச்சனைகளிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
அன்பாய், கருணையாய் இருப்பது என்பது பெண்களின் இயல்பான குணம் என்பதால் அதை விட்டு விட்டால் தான் வலிமையாய் இருக்க முடியும் என்று நினைப்பது தவறு. மென்மையும் வலிமையும் சேர்ந்தே இருப்பதும் பெண்களின் இயல்புதான். எனவே பெண்களே! அன்பை விட்டுக்கொடுக்காமல் வலிமையாய் வாழலாம் வளரலாம்.
நன்றி: தினத்தந்தி