Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உத்தம நபியும் உளவியலும்

Posted on March 7, 2015 by admin

உத்தம நபியும் உளவியலும்

  மெளலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ.,எம்ஃபில்.  

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கள் மனங்களை அறிந்து அதற்கேற்பச் செயல்படுபவர்கள் என்பதை நாம் அறிவோம். மக்கள் மனங்களில் சிறு கீறல்கூட விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒவ்வொரு வார்த்தையாக நிதானமாகப் பேசும் பண்புடையவர்கள். மக்களுக்குப் புரிந்ததோ இல்லையோ என்பதற்காகப் பெரும்பாலும் மும்மூன்று தடவை கூறுவார்கள். உளவியல் என்பது என்ன? மக்களின் உளமறிந்து அவர்களுக்கேற்றவாறு நடந்துகொள்வதே ஆகும். இதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்தாம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
 
பிறரின் உள்ளத்தை ஒரு கண்ணாடியைப்போல் பாவித்து, தாம் பேசும் சொற்கள் கடுமையாகவோ சூடாகவோ இருந்தால் அவைகூட அக்கண்ணாடியில் கீறலை ஏற்படுத்திவிடும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்திப் பேசுவார்கள். அதேநேரத்தில் மக்கள் இஸ்லாமிய ஷரீஅத்திற்கு முரணாகச் செயல்படுகிறபோது மிகுந்த சினம் கொண்டிருக்கின்றார்கள். அது அவர்கள் மக்கள்மீது கொண்ட வெறுப்பன்று. ஷரீஅத் சட்டத்திற்குச் செலுத்திய மரியாதையும் கண்ணியமும் முக்கியத்துவமும் ஆகும்.
 
சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், தோழர்கள், அயல்நாட்டினர், மனைவியர் எனப் பலதரப்பட்ட மக்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தனை பேரிடமும் மிகுந்த கவனத்தோடும் மரியாதையோடும் உரையாடியிருக்கிறார்கள் என்பதைக் காணும்போது நாம் மிகுந்த வியப்படைகிறோம்.

தொடர்ந்து தம்மீது குப்பையைக் கொட்டிய மூதாட்டி ஒரு நாள் குப்பையைக் கொட்டாததால், அவரைப்பற்றி அருகிலுள்ளோரிடமும் விசாரித்து, அம்மூதாட்டிக்கு நோய் என்று கேள்விப்பட்டதும் அவர் தமக்குச் செய்த கொடுமையை மனதில் எண்ணாமல் மிகுந்த அக்கறையோடு சென்று அம்மூதாட்டியை நலம் விசாரிக்கின்றார்கள். நபிகளாரின் வருகையைச் சற்றும் எதிர்பாராத அம்மூதாட்டி செய்வதறியாது மனமுருகிறார். மனம் நெகிழ்ந்து இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்கிறார்.
 
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதுகொண்டிருந்த போது அருகே விளையாடிக்கொண்டிருந்த பேரர் ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு நபிகளாரின் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டார். அச்சமயத்தில் அண்ணல் நபியவர்கள் சஜ்தா நிலையில் இருந்தார்கள். அன்று அவர்கள் தம் தலையை உயர்த்துவதற்கு நீண்ட நேரமாகிவிட்டது. தொழுகை முடிந்தபின், நீண்ட நேரம் சஜ்தாவிலிருந்து எழாதது குறித்து வினவப்பட்டபோது, என் பேரர் முதுகில் அமர்ந்துகொண்டிருந்தார். அவருடைய விளையாட்டை முடித்துக்கொண்டு இறங்கும் வரை நான் அவருடைய விளையாட்டை நிறுத்த விரும்பவில்லை என்று பதிலளித்தார்கள்.
 
ஒரு தடவை தம் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென நடுநிசி நேரத்தில் அல்லாஹ்வின் உத்தரவுக்கிணங்க எழுந்து செல்ல எத்தனிக்கிறார்கள். எனவே மெதுவாக எழுந்து, மெதுவாக ஆடைகளை அணிந்துகொண்டு மெதுவாகக் கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார்கள். உறங்கிக்கொண்டிருக்கிற தம் துணைவியாரின் உறக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு எல்லாவற்றையும் மெதுவாகச் செய்தார்கள். அந்நேரத்தில் எதேச்சையாக விழித்துக்கொண்ட அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்தாம் இச்செய்தியையே நமக்குத் தெரிவிக்கின்றார்கள்.
 
இன்றைய மனிதர்களின் நிலையைச் சற்று ஒப்பிட்டுப் பார்க்கிறோம். திடீரென வெளியே புறப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் உடனே தூங்கிக்கொண்டிருக்கிற மனைவியை எழுப்புவது அல்லது எல்லா மின்விளக்குகளையும் போட்டுவிட்டுத் தடதடவென ஒரு சப்தத்தோடு வெளியே புறப்படுவதுதான் நம்முள் பெரும்பாலோரின் நிலை.
 
ஒரு பெண்மணி அன்போடு நபிகளாருக்குத் திராட்சைப் பழத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். எப்போதும் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும் பழக்கமுடைய நபிகளார் அன்று எல்லாவற்றையும் தாமே உண்டு முடிக்கின்றார்கள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பெண்மணி மிக்க மகிழ்ச்சியோடு திரும்புகிறார். வழமைக்கு மாறான நபிகளாரின் செயலைக் கண்ட தோழர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பெண்மணி சென்றபின் அதற்கான காரணத்தைக் கேட்கின்றார்கள். அதற்கவர்கள், நான் முதல் பழத்தைச் சாப்பிடவுடனேயே அதன் புளிப்புச்சுவையை உணர்ந்துகொண்டேன். அதை உங்களிடம் கொடுத்தால், இது புளிக்கிறது என்று கூறி அப்பெண்மணியின் மனதைச் சங்கடப்படுத்தியிருப்பீர்கள். எனவேதான் நான் உங்களுக்குத் தராமல் நானே அனைத்தையும் சாப்பிட்டேன் என்று பதிலளித்தார்கள்.
 
ஒரு முஸ்லிமின் நாவிலிருந்தும் கையிலிருந்தும் எவர் பாதுகாப்புப் பெறுகின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் என்ற நபிகளாரின் கூற்றிற்கு அவர்களே முதல் உதாரணம். தம் நாவால் பிறர் மனதைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டிருக்கின்றார்கள்.
 
நாம் இன்றைக்கு எத்தனையோ உறவினர்களைச் சந்திக்கிறோம். அவர்களோடு உரையாடும்போது சூடான கோபமான வார்த்தைகளால் அவர்களின் மனதை நாம் புண்படுத்தி விடுகிறோம். அவர்களின் இளகிய மனதைக் காயப்படுத்திவிடுகிறோம். நம்மிடம் நாள்தோறும் உரையாடக்கூடிய நம் அன்பான மனைவியின் உள்ளத்தை நம் வார்த்தைகளால் காயப்படுத்துகிறோம். சில பெண்கள் தம் கணவரின் புண்பட்ட உள்ளத்திற்கு மருந்திடுவதற்குப் பதிலாக வார்த்தைகளால் காயப்படுத்துவதைக் கேள்விப்படுகிறோம். இப்படியாக, மனைவி, பிள்ளைகள், தாய், தந்தை, உறவினர்கள் முதலானோரின் உள்ளங்களைக் காயப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறோம். ஆனால் அவர்களின் அன்பான மனதை நாம் உணர்வதே இல்லை. நபிகளார்மீது ஆழிய அன்பு கொண்டுள்ள நாம் பிறர் மனதைப் புண்படுத்தாமல் பண்படுத்தும் வார்த்தைகளைப் பேசுவோம். அதுவே நம்மை அவர்களின் மனதில் உயர்ந்தவராகக் காட்டும்.
 
நன்றி : இனிய திசைகள் – பிப்ரவரி 2015

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

94 − = 85

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb