மீண்டும் மேலோங்கும் ஜாதி வெறி!
[ ஜாதி வெறியை நியாயப்படுத்தி நிலைநிறுத்த அரசியல் சாசனம் அமைக்கத் தலைமை தாங்கியவர் ஒரு கீழ் ஜாதியாக இழிவுபடுத்தப்பட்டவர்.
பாபரி மஸ்ஜிதைத் தரைமட்டமாகக்க உ.பி. முதல்வராகப் பயன்பட்டவர் ஒரு கீழ் ஜாதி என இழிவுபடுத்தப் பட்டவர்.
அதே போல் இன்று இந்தியாவில் மீண்டும் ஜாதி வெறியை உயிர்ப்பித்து நிலைநாட்டப் பிரதமராக ஆக்கப்பட்டவர் ஒரு கீழ் ஜாதி என இழிவு படுத்தப்படுபவர்.
இப்படி கீழ் ஜாதி என இழிவு படுத்தப்படும் எண்ணற்றோர் மேல் ஜாதி என பெருமை பேசுபவர்களுக்குத் துணை போகும் நிலையில், அற்ப அறிவு படைத்த மனிதனால் ஜாதி வெறியை, தீண்டாமைக் கொடுமையை, இன இழிவைப் போக்க முடியுமா? ஒருபோதும் முடியாது.
அந்தக் கொடுமையைத்தான் பல ஆயிரம் ஆண்டுகளாக பள்ளு, பறை, சக்கிலி என அநியாயமாக இழிவுபடுத்தப்படும் பெரும்பான்மை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.]
உலகில் வாழ்ந்த, வாழுகின்ற, வாழப்போகும் மனித குலத்தினர் அனைவரும் ஒரே தாய்க்கும், தந்தைக்கும் பிறந்தவர்கள் என்பதை அகில உலக மக்களுக்கும் சொந்தமான முழுமைபெற்ற, உலகம் அழியும் வரை நடைமுறைப்படுத்த வேண்டிய, தன்னந் தனியனான இணை, துணை, தேவை, இடைத்தரகு, மனைவி மக்கள் எதுவும் இல்லாத இறைவன் அருளிய இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனின் அத்தியாயம் 4 வசன எண் 1 திட்ட வட்டமாகத் தெளிவாக நேரடியாகக் கூறுகிறது. அறிவியல் ஆய்வுகளும் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் இந்த உண்மையை ஒப்புக் கொள்கின்றன. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற டார்வின் தியரி இன்று அறிவியல் ஆய்வின் மூலம் கடைந்தெடுத்த பொய் என நிரூபணமாகிவிட்டது.
ஆதி மனிதனிலிருந்து இறைவன் கொடுத்தது ஒரே நேர்வழி-சாந்தி மார்க்கம். முஸ்லிம் அறிஞர்கள்(!!!) கடந்த ஆயிரம் வருடங்களாக அகில உலக மக்களுக்கும் சொந்தமான அல்குர்ஆனை-நேர்வழி காட்டும் நூலை, இதர வேதங்களைப் போல் ஒரு வேதமாகக் கற்பனை செய்து, அது முஸ்லிம்களின் வேதம் என அண்டப் புளுகைக் கூறி முஸ்லிம் அல்லாதவர்கள் அதை நெருங்க விடாமல் ஆக்கி விட்டார்கள்.
முஸ்லிம்களையும் அதை நேரடியாகப் படித்து விளங்குவதைத் தடை செய்து விட்டார்கள். இதன் பரிணாம வளர்ச்சிதான் இந்து மத குருமார்கள் சொல்லும் கீழ் ஜாதி(?) மக்கள் வேதம் படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும், வேதத்தைப் படித்தால் நாக்கைத் துண்டிக்க வேண்டும் என்ற சுயநல மூடச் சட்டம்.
இந்த நிலையில் காரல் மார்க்கஸ், ஏங்கல்ஸ், பெரியார், அம்பேத்கர், மற்றும் எண்ணற்றோர் உண்மையில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஜாதி வேற்றுமையின் கொடுமைகளிலிருந்து மக்களை விடுவிக்க, பெரும் செல்வந்தர்கள் தொழி லாளிகளின் உழைப்பை உறிஞ்சுவதைத் தடுக்க பெரும் பெரும் முயற்சி எடுத்தவர்களுக்கு, அன்று வாழ்க்கை நெறிநூல் குர்ஆனைப் படித்து விளங்குதற்குத் தடை இல்லாமல் இருந்திருந்தால், அவர்கள் புதிய புதிய திட்டங்களை வகுத்து புதிய புதிய இயக்கங்களை – மனுநீதியை -மதங்களைக் கற்பனை செய்திருக்கமாட்டார்கள். அவர்களும் குர்ஆனை நேரடி யாகப் படித்து விளங்கும் உரிமையை முஸ்லிம் அறிஞர்கள்(!!!) கடந்த ஆயிரம் வருடங்களாகத் தடுத்து வருவதால், அவர்களும் அவர்களின் கற்பனையில் உதித்த, இறைவன் கொடுத்த நேர்வழிக்கு முரணானப் பல கோணல் வழிகளைக் கற்பனை செய்யக் காரணமாயிற்று.
மனிதர்களில் எப்படிப்பட்ட மேதைகளாக இருந்தாலும், என்ன தான் ஆய்வு செய்து அறிந்திருந்தாலும் அவர் “”கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு” என்று அவ்வைப் பாட்டியே கூறியுள்ளார்.
இறைவனும் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவு மிகமிகச் சொற்பமானது என்று குர்ஆன் 17:85-ல் கூறுகிறான். உதாரணத்திற்குக் கூறுவதென்றால், கடலில் ஓர் ஊசியை முக்கி எடுத்தால் அதில் ஒட்டியிருக்கும் நீர் அளவுதான் மனித அறிவு, கடல் அளவு முக்காலமும் அறிந்த இறைவனின் அறிவு. இந்த அற்ப அறிவைக் கொண்ட மனிதன், மனிதனுக்குரிய நேர்வழியை-அமைதி வழியைக் காட்ட முடியுமா? ஒருபோதும் முடியாது. அதனால்தான் மனிதன் கற்பனை செய்த ஜனநாயகம், சர்வாதிகாரம், அனைத்து இஸங்கள், நாத்திகம் அனைத்தும் காலப்போக்கில் மதங்களாக மாறி (மனிதக் கற்பனை) மனித இனத்திற்குப் போதையை, வெறியை ஊட்டிக் கொண்டிருக்கின்றன.
மனிதன் நடுநிலையுடன் சிந்திக்க வேண்டும். ரஷ்யன் தயாரித்த ஒரு கருவிக்கு, ரஷ்யனின் வழி காட்டலையும், பொறிஞரையும் ஏற்கிறான். அமெரிக்கனின் வழிகாட்டலை ஏற்பதில்லை. அமெரிக்கன் தயாரித்த ஒரு கருவிக்கு ரஷ்யனின் வழிகாட்டலை ஏற்பதில்லை. இப்படி எவன் கருவியைத் தயாரித்தானோ அவனின் வழிகாட்டலையே ஏற்கிறான்.
இவனைப் போன்ற அற்பமான அறிவு படைத்த ஒரு மனிதன் படைத்த ஒரு கருவியை இயக்க அவனது வழிகாட்டலையே ஏற்கிறான். இத்தனைக்கும் முயன்றால் அக்கருவியை இவனாலும் தயாரிக்கவும் முடியும். இந்த நிலையில் முழுமையான அறிவுடைய முக்காலமும் அறிந்த ஏகன் இறைவன் படைத்த மனிதக் கருவியை இயக்க, அந்த இறைவ னின் வழிகாட்டலை நிராகரித்து, மனிதனே தன் அற்ப அறிவுப்படி இயக்க முற்படுவது அறிவுடைமையா? அறிவீனமான செயலா? சிந்தியுங்கள்.
அதன் விளைவு, மனித வாழ்க்கைக்கு வழி காட்ட, மனிதனால் கற்பனை செய்யப்பட்ட ஜன நாயக, கம்யூனிசம், செக்யூரலிசம், கேப்பிடலிசம், என அனைத்து இசங்கள் முதல் எல்லா வழிகாட்டல்களும், வலுவிழந்து நீர்த்துப் போய்க் கொண்டிருக்கின்றன. அவையும் மனுநீதி மதங்களாகி போதையை, வெறியை ஊட்டுகின்றன. ஷைத்தானின் நேரடி முகவர்களான (ஏஜண்ட்) மதகுருமார்களின் ஆதிக்கமே தலைதூக்குகிறது. ஷைத்தான் மனித குலத்தினரில் பெரும்பாலோரை வழி கெடுத்து நரகை நிரப்புவதாக இறைவனிடம் சபதம் செய்து, அதற்குரிய வரத்தையும் பெற்றுள்ளான். (பார்க்க : 15:39)
அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்ற பலரின் முயற்சியால் சாதி வெறி ஓரளவு மட்டுப் படுத்தப்பட்டிருந்தது. இன்று அப்படிப்பட்டவர்களின் தொண்டர்களாலேயே அவர்களின் போதனைகள் புறக்கணிக்கப்பட்டு, மீண்டும் ஜாதி வெறி, இன இழிவு தலை தூக்க ஆரம்பித்துவிட்டது.
சாணக்கியத்தில் பேர் போன உயர் ஜாதியினர் எனப் பீற்றிக் கொள்ளும் மதகுருமார்கள் கீழ் ஜாதியினர் என அவர்களால் அநியாயமாக இழிவுபடுத்தப்படுபவர்களை வைத்தே தங்களின் மிகவும் தவறான உயர்ஜாதி வெறியை நிலைநாட்டிக் கொள்வது சாணக்கியத்திலும் பெரும் சாணக்கியம் தான். இன்று அவர்கள் ஜாதி வெறியை நிலை நாட்டத் தூக்கிப் பிடிக்கும் ராமாயணம், பகவத் கீதை போன்ற நூல்களின் படைப்பாளர்கள் கீழ் ஜாதியாக இழிவுபடுத்தப்பட்டவர்களே!
ஜாதி வெறியை நியாயப்படுத்தி நிலைநிறுத்த அரசியல் சாசனம் அமைக்கத் தலைமை தாங்கியவர் ஒரு கீழ் ஜாதியாக இழிவுபடுத்தப்பட்டவர். பாபரி மஸ்ஜிதைத் தரைமட்டமாகக்க உ.பி. முதல்வராகப் பயன்பட்டவர் ஒரு கீழ் ஜாதி என இழிவுபடுத்தப் பட்டவர். அதே போல் இன்று இந்தியாவில் மீண்டும் ஜாதி வெறியை உயிர்ப்பித்து நிலைநாட்டப் பிரதமராக ஆக்கப்பட்டவர் ஒரு கீழ் ஜாதி என இழிவு படுத்தப்படுபவர். இப்படி கீழ் ஜாதி என இழிவு படுத்தப்படும் எண்ணற்றோர் மேல் ஜாதி என பெருமை பேசுபவர்களுக்குத் துணை போகும் நிலையில், அற்ப அறிவு படைத்த மனிதனால் ஜாதி வெறியை, தீண்டாமைக் கொடுமையை, இன இழிவைப் போக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. அந்தக் கொடுமையைத்தான் பல ஆயிரம் ஆண்டுகளாக பள்ளு, பறை, சக்கிலி என அநியாயமாக இழிவுபடுத்தப்படும் பெரும்பான்மை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
இக்கொடுமைகளுக்கு மனித அறிவு கொண்டு தீர்வு காண முடியாது. அதற்கு மாறாக ஷைத்தானின் துணையுடன் அவனது முகவர்களான மதகுருமார்களான மேல் ஜாதியினர், மீண்டும் ஜாதி வேற்றுமைகளையும், மதவாதத்தையும் நிலை நாட்ட அவர்களுக்கே வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்ற முறை கூட்டணி ஆட்சியிலிருக்கும்போதே ஆட்சி அதிகாரத்தின் முக்கியத் துறைகளில் தங்கள் ஆட்களைக் கொண்டு நிரப்பி விட்டார்கள். இப் போது முழுப் பலத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ள னர். எனவே மிகமிக எளிதாக தங்களின் காவிக் கொள்கையை நிலைநாட்டி ஆட்சியையே சொந்த மாக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னர் தமிழகத்தில் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற நிலைப்பாடே இருந்தது. வடக்கிலிருந்து வந்த ஜாதி வெறி ஆரியர்கள் சாணக்கியத் தந்திரம் கொண்டு ஆட்சியாளர்களையும், அதிகார வர்க்கத்தினரையும் தம் வசப்படுத்தி ஒன்றுபட்ட ஒரே சமுதாய மக்களை நான்கு ஜாதிகளாக வேற்றுமைப்படுத்தி, பிளவுபடுத்தி தங்களை உயர் ஜாதியாகக் கற்பனை செய்து நிலைநாட்டிக் கொண்டார்கள். பஞ்சமர் என்ற ஐந்தாம் ஜாதியையும் கற்பனை செய்தார்கள். கீழ் ஜாதியாகக் கற்பனை செய்யப்பட்டவர்கள் இன இழிவு, தீண்டாமைக் கொடுமைகளில் புழுவாகத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களை இன இழிவை விட் டும் விடுவிக்க சிலர் பெரும் முயற்சி எடுத்தும் அவை உரிய பலனைத் தரவில்லை.
அதே சமயம் பள்ளு, பறை, சக்கிலி என்ற இழி நிலையிலிருந்தவர்களில் பலர் இஸ்லாத்தைத் தழுவியதன் மூலம் அவர்களை விட்டும் இனி இழிவு, ஜாதிக் கொடுமை முற்றிலும் நீங்கிவிட்டது. எனது முன்னோர்கள் கூட அந்தக் கீழ் ஜாதிப் பட்டியலில் இருந்தவர்களாகத் தான் இருக்க முடியும்! ஆனாலும் அவர்கள் மதம் மாறினார்களே அல்லாமல் மனம் மாறவில்லை. குர்ஆன் கூறும் சத்திய மார்க்கத்தை அறியும் வழியை இம்மதகுருமார்கள் சுய நலத்துடன் தடுத்துவிட்டார்கள். எனவே மதங்களில் காணப்படும் அனைத்து மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அநாச்சாரங்கள் அனைத்தையும் அரபு மொழி பெயர் மாற்றத்துடன் செயல் படுத்துகின்றனர். அவை முஸ்லிம் மதகுரு மார்களுக்கு அற்ப உலக ஆதாயத்தைப் பெற்றுத் தருவதால் முஸ்லிம் மதகுருமார்களும் அவற்றில் முங்கிக் குளிக்கிறார்கள்.
எனவே, உண்மையில் பெரும்பான்மை மக்களின் ஜாதிக் கொடுமைகளை, இன இழிவைப் போக்கும் சுயநலமில்லா ஆசை இருக்கும் அறிஞர் பெருமக்களே, இன்றைய முஸ்லிம்களையோ, அவர்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் முஸ்லிம் மதகுரு மார்களையோ நீங்கள் பார்க்காதீர்கள். அவர்களின் மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அநாச்சாரங்கள் இவற்றை வைத்து தூய இஸ் லாத்தை எடை போடாதீர்கள். உங்களுக்கும் சொந்தமான குர்ஆனை நீங்களே நடுநிலையுடன் படித்து விளங்கி அதன் போதனைப்படி நடக்க, மக்களுக்குப் போதிக்க முன்வாருங்கள். அதுவே இன்றைய உலகின் இழிநிலையைப் போக்கி மனித குலம் உய்ய வழிவகுக்கும். முன் வருவீர்களா?