ஒற்றுமை என்பதை நடுநிலைக் கண்ணோட்டத்தோடு பார்த்தால் தங்களது கொள்கைக்கு மாற்றமாக போய்விடுமே என்பதற்காக ஒற்றுமை என்பதே இஸ்லாத்துக்கு புறம்பான செயல் என்பதுபோல் எதிர்மறை சிந்தனையை மக்களிடம் திணிக்க முயல்பவர்களை எண்ணி பரிதாபம்தான் ஏற்படுகிறது.
ஓற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு ஹதீஸ்:
‘எவருக்கு எல்லா பேறுகளின் வளமும், நீண்ட ஆயுளும் ஏற்பட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதோ அவர் உறவுடன் ஒட்டி வாழட்டும்.’
ஒற்றுமையைக் கடைப்பிடிக்க ஆவலைத் தூண்டும் அற்புதமான வார்த்தைகளல்லவா இது! அனைத்து வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ எவருக்கத்தான் ஆசையிருக்காது?
இந்த ஹதீஸை கொஞ்சம் விரிவாக சிந்தனை செய்து பாருங்கள்:
‘உறவுடன் ஒட்டி வாழட்டும்!’ உறவு என்றால், நம் சொந்த ரத்த பந்தங்களை மட்டுமா குறிக்கிறது?
திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்படி மனித இனம் அத்தனையும் ஒரே தாய் தந்தை மூலம் உலகிற்கு வந்தவர்கள் தானே! யோசிக்க வேண்டாமா?
குடும்பத்தார்கள் மட்டுமின்றி அனைவருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியமல்லவா?
‘காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். ஆயினும், எவர்கள் நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்களையும் செய்து, சகித்துக்கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர! (இவர்கள் நஷ்டவாளிகள் அல்ல)’ (திருக்குர்ஆன் 103 : 1௩) சகிப்புத்தன்மை இல்லாமல் ஒற்றுமை வருமா என்ன?
பொதுவாக ஒற்றுமையின் அவசியத்தை பெரும்பாலானோர் இறிந்தே இருக்கின்றனர். ஆனால், அதை கடைப்பிடிக்கத்தான் வழி தெரியாதவர்களாக, விழியிருந்தும் குருடர்களாகத் தடுமாறுகிறார்கள். திருக்குர்ஆனின் ஒளியும, திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலும் நம்மிடையே இருந்தும், அதை அலட்சியம் செய்பவர்களாக வாழ்வதால் அல்லவா இன்றைய இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையின்றி பிளவுபட்டு நிற்கிறது!
இஸ்லாமிய கோட்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்துத் தான் நமது சமுதாயம் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியது. எப்பொழுது அதன் ‘அசல் கோட்பாட்டை’ விட்டு விலகி யதோ, அது முதல் ஒற்றுமை குன்றிய சமுதாயமாக மாறிவிட்டது.இந்த மாபெரும் சறுக்கலுக்கு அறிஞர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆணிவேராக இருந்துள்ளாரகள் என்பதை மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது!
-M.A.Mohamed Ali