அண்மையில் நடந்த துக்ளக் விழாவில் மனித நேய மக்கள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டு ஆற்றிய உரை!
துக்ளக் வார இதழின் 45வது ஆண்டுவிழாவில் பங்குக் கொண்டு நான் ஆற்றிய உரையின் முழு வடிவத்தை இங்கே தருகிறேன். தலா 15 நிமிடங்கள் மட்டுமே மூன்று விருந்தாளிகளுக்கும் வழங்கப்பட்டது. நான் 19 நிமிடங்கள் பேசினேன். இன்னும் பல செய்திகளை சொல்வதற்கு நான் தயார் நிலையில் இருந்த போதினும் குறுகிய காலத்தில் எண்ணிய அனைத்தையும் பதிவுச் செய்ய இயலவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.
இருப்பினும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரும் அவர்களது அபிமானிகளும் நிறைந்திருந்த அந்த நிகழ்வில் மோடி ஆட்சியின் அவலத்தை அவர்கள் உணரும் வகையில் பேசும் வல்லமை தந்த ஏக இறைவனுக்கே எல்லா புகழும்
தொடக்கமாக இந்த நிகழ்விலே பங்குக் கொண்டு உரையாற்ற வாய்ப்பு தந்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 1983ல் நான் சார்ந்திருந்த மாணவர் இஸ்லாமிய இயக்கம் சார்பாக நடத்தப்பட்ட தீமை எதிர்ப்பு வாரத்தின் நிறைவாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் எங்கள் அழைப்பை ஏற்று வருகை புரிந்து மது ஆபாசம் வட்டி லாட்டரி முதலிய தீமைகளுக்கு எதிராக உரையாற்றினார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அவரது அழைப்பை ஏற்று நான் தங்கள் முன் உரையாற்ற நிற்கிறேன்.
மாணவப் பருவத்திலிருந்து துக்ளக் இதழை நான் வாசித்து வந்துள்ளேன். துக்ளக் வெளியிடும் கருத்துகளில் எனக்கு ஏராளமான மாற்றுக் கருத்து இருந்த போதினும் வெகுஜன தமிழ் அரசியல் வார இதழ்பத்திரிகை உலகில் துக்ளகின் வருகை ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்வு குறித்து புலனாய்வு செய்துக் கொண்டிருந்த இதழ்களுக்கு இடையே துக்ளக் பிரசுரமாகி அரசியல் ரீதியான சிந்தனைகளை பரவச் செய்ய வழிவகுத்தது. 1992 டிசம்பர 6 அன்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது அந்த சட்டவிரோத செயல் நடைபெற்ற தினம் ஒரு கருப்பு தினம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் முழுமையாக கருப்பு வண்ணத்தில் துக்ளக் வெளிவந்ததையும் நான் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.
”இன்றைய அரசியல்” என்ற தலைப்பில் உரையாற்றுமாறு நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். 2014ம் ஆண்டு மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்த ஆண்டாக அமைந்தது. திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 282 இடங்களிலும் அது தலைமை தாங்கிய தேசீய ஜனநாயக கூட்டணி 336 இடங்களிலும் வெற்றிப் பெற்றன. இருப்பினும் வாக்களித்த மக்களில் 69 விழுக்காட்டினர் மோடிக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதை நாம் மறக்க முடியாது.
சேது சமுத்திரத் திட்டம்
பல்வேறு கவர்ச்சிகரமான மனதை சுண்டியிழுக்கும் வாக்குறுதிகளை அளித்து திரு. நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்தது. ஆனால் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் பல ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்படவில்லை. , முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு நடைபெற்ற போது பாஜக எடுத்த நிலைப்பாட்டிற்கு நேர்மாற்றமாக மோடி அரசு செயல்பட்டு வருகின்றது. முந்தைய காங்கிரஸ் கட்சி போட்ட பாதையிலேயே இந்த அரசும் பயணிக்கின்றது. எடுத்துக் காட்டாக திரு. வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது தொடங்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை பின்னர் பாஜக கடுமையாக எதிர்த்தது. தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் மாற்று வழியில் அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வேட்டு தான் ஏழைகளின் அரசின் லட்சணமா?
திரு. நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்த அரசு ஏழைகளுக்குச் சொந்தமான அரசு. ஏழைகளுக்கு வறுமையை ஒழிக்கும் வல்லமையை அளிப்போம். அதன் மூலம் அவர்கள் கண்ணியமாக வாழ்வதற்கு வழிவகுப்போம் என்றார். திரு.மோடி அவர்கள் இது போன்று கவர்ச்சிகரமாக பேசுவதில் தான் வல்லவராக இருக்கின்றார். ஆனால் அவரது செயல்பாடு இதற்கு நேர் மாற்றமாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமெனில் 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்குவதற்கு மோடி அரச எடுத்துள்ள நடவடிக்கையை குறிப்பிடலாம்.
மகாத்மா காந்தி தேசீய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் உலகம் கண்டிராத மிகப் பெரும் அரசு வேலை வாய்ப்பு திட்டமாக இருந்து வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 4.8 கோடி வீடுகளைச் சேர்ந்த 7.4 கோடி மக்கள் பயனடைந்தார்கள். இத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு அரசுக்கு ஏற்பட்ட செலவீனம் 39 ஆயிரம் கோடி ரூபாய். ஜிடிபி (ஒத்துமொத்த உள்நாட்டு உற்பத்தி) 0.5 விழுக்காடு மட்டுமே. பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டவாறு கிராம புற ஏழைகள் வறுமையை ஒழிக்க உதவிடும் இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி இன்னும் அதிமான மக்களை அது சென்றடைய செய்திருக்க வேண்டும். ஆனால் மாநிலஅரசுகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை பெரும் அளவில் குறைத்துள்ளதுடன் அதன் பயனை மட்டுப்படுத்தும் முடிவையும் எடுத்துள்ளது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் 385 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வந்த இந்த திட்டம் தற்போது 98 ஊராட்சிகள் என்ற அளவு குறைந்து கிராமபுற ஏழை மக்களை பெரிதும் பாதித்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனடைந்த ஏழை மக்களிடமிருந்து நல்ல நாட்கள் விடைப் பெற்று சென்று விட்டன.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் வேட்டு
இதே போல் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இது வரை அனுபவித்து வந்த நல்ல நாட்களும் பறிபோய்விடும் போல் தெரிகின்றது. சுய உதவி குழுக்கள் கலைக்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கருத்து வெளியிட்டுள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்களால் தான், தமிழகத்தின் கிராமப்புற பொருளாதாரம் மேம்பட்டிருப்பதோடு, குடும்பத்தில் இருக்கும் பெண்கள், பிறரை சாராமல் தன்னிறைவு பெற்றுள்ளனர். . நாடு முழுவதும் பரவலான வளர்ச்சியை, பெண்கள் மத்தியில், சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தி உள்ள நிலையில் அவற்றை கலைப்பது தான் மோடி அரசுக்கு வளர்ச்சியாக தெரிகின்றதா?
மோடி அரசின் அச்சே தீன் பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே
திரு. நரேந்திர மோடிதேர்தலில் வெற்றிப் பெற்றவுடன் பாரதம் வெற்றிப் பெற்றுள்ளது. இனி அச்சே தீன் அதாவது நல்ல நாட்கள் வரப் போகின்றன என்றார். ஆனால் அவரது ஆட்சியில் பெரும் கார்ப்ரேட் முதலாளிகளும் மேல் தட்டு மக்களும் தான் நல்ல நாட்களை அனுபவித்து வருகின்றார்கள். எடுத்துக்காட்டாக கல்வி உதவி தொகை கடன் பெறுவதற்கு நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் சாமனிய மாணவர்களை பெரிதும் அலைக்ககழிக்கின்றன. எங்களை போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்தாலும் கல்வி உதவி தொகை அளிப்பதில்லை. ஆனால் பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்ற போது அவருடைய நண்பரும் பெரும் முதலாளியுமான அதானியையும் அழைத்துச் சென்றார். குவின்ஸ்லாந்து மாகாணத்தில் நிலக்கரி சுரங்க திட்டத்தை அதானி குழுமம் தொடங்குகின்றது. இத்திட்டத்திற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஐந்து முக்கிய வங்கிகள் அதானி குழுமத்திற்கு கடன் அளிக்க மறுத்து விட்டன. இச்சூழலில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக பாரத ஸ்டேட் வங்கி 6200 கோடி ரூபாய் கடன் அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையிலேயே கையெழுத்தாகின்றது. எனவே தான் நாம் சொல்கிறோம் பிரதமர் மோடி சொன்ன நல்ல நாட்கள் பெரும் கார்ப்ரெட் முதலாளிகளுக்கு மட்டுமே வந்துள்ளன.
மோடி அரசின் விளம்பரப் பித்து
வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான பணிகள் நடக்கின்றதோ இல்லையோ மோடி ஆட்சியில் பகட்டான விளம்பரங்கள் மட்டும் தாராளமாக அரங்கேற்றப்படுகின்றன. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு சுவச் பாரத் தூய்மை இந்தியா திட்டம். திரு. சோ அவர்களே (22.10.2014) இந்த திட்டம் விளம்பரம் பெறுவதற்கான திட்டம்; தூய்மை இந்தியா பேனர்கள் போஸ்டர்கள் எல்லாம் குப்பையோடு குப்பையாக கலந்திருக்கும் என்று மிக சரியாக சொல்லியிருக்கிறார். தலைநகர் டெல்லியில் பாஜக தலைவர் சதீஸ் உபாத்யாயா குப்பைகளை கொட்டிவிட்டு பிறகு அதனை தூய்மைப்படுத்தியதை 26 10 இதழில் ஸ்டன்ட் என்று வர்ணிக்கிறார் சோ. எந்த அளவிற்கு இந்த விளம்பர மோகம் இந்த அரசை ஆட்டி படைக்கின்றது என்பதற்கு இது மட்டுமல்ல இன்னும் பல சான்றுகள் உள்ளன. சமீபத்தில் இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் விடுதலைச் செய்யப்பட்டார்கள். இதில் மத்திய அரசிற்கு பெரும் பங்கு இருப்பது போல் தமிழக அரசுக்கும் பங்கு உண்டு.
தூக்கு தண்டனை அளிக்கப்பட்டட செய்தி வந்தவுடன் பொங்கியெழுந்து போராட்டங்கள் நடத்திய ராமேஸ்வரம் மீனவர்களுக்கும் இது போல் இந்த 5 மீனவர்களும் விடுதலைச் செய்யப்பட வேண்டுமென்று ஒருமித்து குரல் எழுப்பிய தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிககள் மற்றும் பொது நல அமைப்புகளுக்கும் உண்டு. ஆனால் இந்த மீனவர்கள் விடுதலைச் செய்யப்பட்டவுடன் திருச்சி அழைத்து வராமல் டெல்லிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை வரவேற்க காத்திருந்த தமிழக அரசின் பிரதிநிதிகளுக்கு கூட காட்டாமல் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ராஜபக்சேவிற்கு நன்றி பிரதமர் மோடிக்க நன்றி என்று துர்தர்ஷன் மற்றும் எஎன்ஐ நிறுவனங்களுக்கு மட்டும் சொல்ல வைத்து மீண்டும் அவர்களை சென்னைக்கு திருப்பி அனுப்பியதின் மர்மம் என்ன? கொழும்புவிலிருந்த தங்கச்சி மடம் வர குறுக்கு வழி கொழும்பு டெல்லி சென்னை ராமநாதபுரம் தானா?
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் திரு மோடி அவர்கள் தான் ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் பிரச்னை தீர்க்கப்படும் என்றும் மீனவர்களுக்கான தனி அமைச்சகம் அமைக்கப்படுமென்றும் வாக்குறுதி அளித்தார். தமிழக மீனவர்களுக்கும் நல்ல நாட்கள் வந்தபாடில்லை. அன்றாடம் உயிரை பணயம் வைத்து நமது மீனவர்கள் கடலுக்குச் செல்லும் நிலை உள்ளது. மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கை கைப்பற்றியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளில் ஒன்றை கூட மீட்க முடியாத வலிமையான பிரதமராக அவர் உள்ளார். இது வரை 90 தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை வசம் உள்ளன.
பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளுக்கு காத்திருக்கிறது ஆபத்து
பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பறிக்கும் திட்டமும் மோடி அரசிடம் உள்ளது. பசுமை புரட்சி வென்மை புரட்சியை தொடர்ந்து நீலப் புரட்சியை ஏற்படுத்துவோம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளளார். இந்த நீலப் புரட்சி என்பது நமது கடற்கரையோரம் கடலை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வுரிமையை பறிப்பது தான். இதற்கு ஏதுவாக மத்திய வேளான்மைத் துறையில் உதவி தலைமை இயக்குனராக இருக்கும் மீனா குமாரி தலைமையிலான குழு மத்திய அரசிடம் கடந்த ஆகஸ்ட் 20 அன்று சமர்பித்துள்ள அறிக்கை அமைந்துள்ளது. வெளிநாட்டு மீன்பிடி படகுகளும் அதனை இயக்குவதற்கு வெளிநாட்டு படகோட்டிகளும் நமது கடல் பகுதியில் உருவாக்கப்பட போகும் exclusive economic zone பிரத்யோக பொருளாதார மண்டல்த்தில் ல் இயங்கப் போகின்றார்கள். இது ஐடிசி டன்லப் மற்றும் டாட்டா முதலிய பெருமுதலாளிகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் திட்டத்திற்கு வழிவகுத்து அவர்களுக்கு அச்சே தீனை மோடி அரசு வழங்கிட பெரிதும் உதவிடும்.
தமிழகத்தில் அணு உலைகளும் மீத்தேனும்
சமீபத்தில் ரஷ்யா அதிபர் புதின் இந்திய வருகை தந்த போது 12 அணுஉலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இவற்றில் பெரும்பாலனவை தமிழகத்தில் கூடங்குளத்தில் தான் அமைக்கப்படும். தமிழகத்தில் மட்டும் தான் இரண்டு ஊர்களில் கூடங்குளம் மற்றும் கல்பாக்கத்தில் அணுஉலைகள் உள்ளன. ஏனைய மாநிலங்களில் ஒரே இடத்தில் மட்டுமே உள்ளது. மராட்டியத்தில் ஜைத்தாபூரில் அணுஉலை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று பிஜேபியை சேர்ந்த அம்மாநீலத்தின் சுற்றுச் சூழல் அமைச்சர் கதம் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளளார்.. தமிழக அரசு மட்டும் தமிழ்நாட்டை அணுஉலைகளின் குப்பைத் தொட்டியாக மாற்றுவதற்கு அனுமதிப்பது நியாயமா?
இதே போல் தமிழகத்தின் நெல் களஞ்சியமான காவிரி படுக்கை பகுதியான பழைய தஞ்சை பகுதியீல் மீதேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இது காவிரி படுக்கை பகுதியில் 50 லட்சம் உழவர்களை விரட்டியடிக்கும் திட்டம். முதலில் மீத்தேன் எரிவாயு பிறகு நிலக்கரி எடுக்கும் திட்டம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு காவிரி படுக்கை பகுதி விவசாய பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களின் விருப்பம். இது குறித்து மத்திய மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அப்போது தான் டெல்டா பகுதி மக்களுக்கு மட்டும் அல்ல தமிழக மக்களுக்கே நல்ல நாள் பிறக்கும்.
சங்கபரிவாரின் வரம்புமீறிய பேச்சுகள்
‘ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து மனுஷனைக் கடித்த கதையாக பாபர் மசூதியை இடித்த ஹிந்து பரிவாரம், ராமருக்குக் கோவில் எழுப்புவதில் ஆரம்பித்து இப்போது கோட்ஸேவுக்குக் கோவில் கட்டுவது வரை வந்து விட்டது. இவர்களைப் பிடித்தாட்டுகிற ஹிந்துத்துவ வெறியில் இன்னும் யார் யாருக்கெல்லாம் கோவில் கட்டப் போகிறார்களோ, யார் யாருக்கெல்லாம் சிலை வைக்க வேண்டுமென்னு சொல்வார்களோ தெரியவில்லை. ஹிந்துத்துவ வெறி இவர்களைப் படாதபாடு படுத்துகிறது ‘ என்று நான் சொல்ல வில்லை துர்வாசர் துக்ளக் ஜனவரி 14 இதழில் ஆணித்தரமாக பதிவுச் செய்துள்ளார். இது அவரது எண்ணோட்டம் மட்டுமல்ல நமது நாடு மதசார்பற்ற நாடாக நீடித்து நிலைக்க வேண்டும் என்று விரும்பும் அனைவரது கவலையும் இது தான்.
‘பாஜகவில் உள்ள சிலர் எம்.பி.க்கள் முக்கியஸ்தர்கள் மனம் போன போக்கில் பேசி வருகின்றார்கள். ‘மோடியை ஏற்காதவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம்.. ராமரைத் தந்தையாக ஏற்காதவர்கள் முறைகேடாக பிறந்தவர்கள் என்பது போல் துவேஷத்தைத் தூண்டுகிற பல பேச்சுக்கள் ஹிந்துத்துவ அமைப்புகளால் அரங்கேற்றப்பட்டு வருகின்றன’ என்று மீண்டும் நான் சொல்லவில்லை துக்ளக் டிசம்பர் 24 தலையங்கம் குறிப்பிடுகின்றது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கண்டவர்கள் பேசுவதற்கெல்லாம் மோடி பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது என்றார் திரு சோ. ஆனால் அவரே துக்ளக் செப்டம்பர் 10, 2014 இதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதை இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
‘பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து விட்டதால் இந்த மாதிரிப் பிரசாரங்கள் நடக்கின்றன. இதற்கு அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மோடியோ அமித் ஷாவோ இது பற்றிப் பேசாமல் இருப்பது இதற்கு அவர்களுடைய அங்கீகாரம் உண்டு என்று கூறுவது போல் இருக்கின்றது’ என்ற விமர்சனம் மற்ற மதத்தினரிடையே மாத்திரமல்ல, ஹிந்துக்களிடையே கூடத் தோன்றும்’ என்று அந்த தலையங்கம் கூறியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டமே இணைப்பு பாலம்
நமது நாடு பல பூக்கள் பூக்கும் ஒரு கதம்ப மலர் தோட்டம். இந்த பூக்களின் வண்ணங்களும் வாசங்களும் வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால் அத்தனை பூக்களும் அந்த தோட்டத்தின் மலர்கள் என்று பெருமைக் கொள்ளும் வகையில் அனைத்து இந்தியர்களையும் இணைக்கும் ஒரே புள்ளி இந்தியாவின் மதசார்பின்மையை உறுதிச் செய்யும் நமது அரசியலமைப்புச் சட்டம் தான். அந்த இணைப்பு பாலத்திற்கு பங்கம் வரும் வகையில் யார் பேசினாலும் செயல்பட்டாலும் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் மட்டும் அல்ல சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் மோடி அரசு அப்படி நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எங்களைப்போன்றோருக்கு இல்லை.
பாரிஸ் பெஷாவர் தாக்குதல்கள்
இறுதியாக பிரான்ஸ் நாட்டில் சார்லி பெப்டே என்று நையாண்டி பத்திரிகையை தாக்கி அதன் ஆசிரியர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இதனை யார் செய்தார்கள் என்பது உறுதியாக இது வரை தெரியாவிட்டாலும் தாக்குதல் நடத்தியவர்கள் இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து கேலி சித்திரம் வரைந்ததற்காக பலி வாங்கினோம் என்று சொன்னதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாக ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம்களுக்கு பெரும் துரோகம் இழைத்துவிட்டார்கள் என்பதே உண்மை. பெஷாவரில் பள்ளிக்கூடம் மீது நடைபெற்ற தாக்குதல்கள் எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது. இதே போல் ஐஎஸ் அமைப்பும் போகோ ஹராம் அமைப்பும் செய்வதாக ஊடகங்கள் தெரிவிக்கும் நடவடிக்கைகளும் காட்டுமிராண்டித்தனமானவை. இந்த பயங்கரவாதிகளுக்கும் இஸ்லாத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை. ஏனெனில் இந்த அமைப்புகள் செய்து வருவது போன்ற பயங்கரவாதத்தை ஒரு போதும் இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை.
பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை. ஆனால் முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்யும் பயங்கரவாதம் மட்டும் ஒரு சாரார் இஸ்லாத்துடன் இணைத்து பார்க்கப்படுகின்றது.
திருக்குர்ஆனில் வெறுப்பை போதிக்கும் வசனம் எதுவும் இல்லை -சுஜாதா
இந்த போக்கு குறித்து நமது சமகாலத்தில் வாழ்ந்து மறைந்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு தரமான பல இலக்கியங்களை வழங்கிய சுஜாதா அவர்களின் பதிலுடன் என் உரைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு திரு. இராம சம்பந்தன் ஆசிரியராக இருந்த போது தினமணி வெளியிட்ட ரமலான் பெருநாள் மலரில் திருக்குர்ஆன் குறித்து ஒரு கட்டுரையை எழுதினார் சுஜாதா. அதன் இறுதி வரிகளில் ‘திருக்குர்ஆனை முதலிலிருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும் மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம் தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய என் கண்களை திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்’
(நிகழ்வு குறித்து தினமணியில் (16 01 2015) வெளியான செய்தி)