Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மலர்ந்தும் மலராத பாதி மலரிலே மடிந்த இளந்தளிரே!

Posted on January 30, 2015 by admin

மலர்ந்தும் மலராத பாதி மலரிலே மடிந்த இளந்தளிரே!

  Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) 

17.12.2014 அன்று எனக்கு இளங்கோ என்ற நடைப் பயிற்சியில் அறிமுகமான நபர் மூலம் ‘தீபக் டிஜி’ என்பவர் அனுப்பிய செய்தி ‘வாட்ஸ் அப்’ என்ற தகவல் பரிமாற்றம் மூலம் கிடைக்கப் பெற்றேன். அந்த செய்தி, ‘இன்று பாகிஸ்தான் இராணுவப் பள்ளி மீது நடந்த தாக்குதலைக் கொண்டாடுங்கள், ஏனெறால் உலகின் ஜனத்தொகையில் 200 முஸ்லிம்கள் குறைந்தார்கள். இதுபோன்ற தாக்குதல் தொடரவேண்டும்’.

உடனே நான் இளங்கோவிற்கு, ‘இதுபோன்ற சமூதாய நல்லிணக்கத்திற்கு உலை வைக்கும் செய்திகளை அனுப்ப வேண்டாம்’ என்று தகவல் அனுப்பினேன். அவரும் அதனை ஏற்றுக் கொண்டு, ‘பள்ளிக் குழந்தைகளைக் கொன்ற தீவிரவாதிகளை விட கொடியவன் இவன்’ என்று தீபக்கினை சாடினார்.

அண்டை நாடான பாக்கிஸ்தானில் ஸ்வாட் மற்றும் கைபர் பள்ளத்தாக்கில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த மலாலா யுசுப்சி, தாலிபான் தீவிரவாதிகளால் 9.10.2012ல் சுடப் பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்பு நோபல் பரிசும், உலக ஐ.நா. சபையில் பேசும் முதல் சிறுமி என்ற புகழுக்கு சென்ற செய்தி அடங்குமுன்னரே 16.12.2014 அன்று பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளியில் புகுந்து பச்சிளம் தளிர்களான 132 மாணவர்களையும் 9 ஆசிரியர்களையும் தீவிர வாதம் காவு கொண்டிருக்கின்றது என்ற கொடுமை வாய்விட்டு அழும் நிலைக்கு மனித இனத்தினை தள்ளி இருக்கின்றது என்றால் மறுக்க முடியாது.

அத்தனை பிள்ளைகளும் ராணுவத்தில் பணியாற்றும், மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் குழந்தைகள். அந்த படுபாதக செயலுக்கு தீவிர வாதிகள் சொல்லும் காரணம், ‘ராணுவம் தீவிரவாத நிலைகள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி’ என்று கூறி இருக்கின்றார்கள். அந்தக்  கூற்றின் மூலம் அவர்களின் செயலினை நியாயப் படுத்தலாம், ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் அது போன்ற  எதிர் நடவடிக்கையினுக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா என்றால் இல்லை என்றே கூறலாம்.

`இஸ்லாமியர் போர்களில் தர்மம் காத்து, போர்நெறி தவறாது நடந்து கொண்டனர் என்பதினை பெருமானார் முகமது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்கள் காலத்தில் போர் தளபதிகளாக இருந்தவர்களும், நபி பெருமானார் அவர்களுக்குப் பின்பு வந்த  கலிபாக்களும், அலி ரளியல்லாஹு அன்ஹு, வாலித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், அதன் பின்பு சிலுவை யுத்தத்தில் இஸ்லாமிய படைகளை முன் நின்று நடத்திய தளபதி சலாவுதீன் அயுப் போன்றோரும் கண்ணியம் தவறாது போர்களை நடத்தினர் என்ற வரலாறு உள்ளது. பெருமானார் வேற்று நாடுகளுக்கு படையினை அனுப்பும்போது அதன் தளபதிகளுக்கு ‘போரின்போது பயிர்களை, உணவு தரும் கனி மரங்களை அழிக்கக் கூடாது, நீர்நிலைகளையோ, குடியிருக்கும் வீடுகளையோ சேதப் படுத்தக் கூடாது, முதியோர், பெண்கள், குழந்தைகள், புறமுதுகிட்டு ஓடுவோர்  ஆகியோரையும், வளர்ப்புப் பிராணிகளையும் கொல்லக்கூடாது’ என்று கடுமையான கட்டளைகளை’ விடுத்தார்கள்.  ஆனால் ஏக வல்ல நாயன் அல்லாஹ் அளித்தத் திருக்கொடையான உயிரினை அநியாயமாக பழிக்குப் பழி வாங்குகின்றோம் என்று துப்பாக்கி, கை எறிகுண்டு, மனித எறிகுண்டு கொண்டு அழிக்க யாருக்கும் அனுமதி வழங்க வில்லை என்பது தான் உண்மை.

உலகிலேயே இது போன்ற குழந்தைகள், இளைஞர்கள் கொடூர கொலை சம்பவம் நடக்கவில்லையா என்று உங்களுக்குக் கேட்கத் தோணலாம். அவற்றில் சில வற்றை உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என எண்ணுகிறேன்:

1) இப்போதெல்லாம் பிள்ளைகள் வீடியோ கேம்ஸ் முன்னாள் மணிக் கணிக்கில் அமர்ந்து அவர்கள் விருப்பப் படி பெற்றோர் எவ்வளவோ தடுத்தும் காட்சிகளைக் காண்கின்றனர். அதேபோன்று கனடா நாட்டில் 1989 ஆம் ஆண்டு மாட்ரிட் பல்கழை கழகத்தில் பயிலும் மாணவன்  போருக்கான வீடியோ கேம்ஸ் படங்களைப் பார்த்து அதுபோன்று தானும் துப்பாக்கி ஏந்தி எதாவது ஒரு இலக்கினை பதம் பார்க்க வேண்டும் என்று துப்பாக்கியோடு தன்னோடு படிக்கும் 14 மாணவிகளையே சுட்டுக் கொன்றான்.

2) 1996 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தன்பிலாக் நகரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் நுழைந்த ஒருவன் 16 பள்ளி சிறார்களையும், அதன் ஆசிரியரையும் சுட்டுக் கொன்றான்.

3) 1999 ஆம் ஆண்டு அமெரிக்கா கொலராடோ பள்ளியில் நுழைந்து துப்பாக்கியால் 13 மாணவர்களை சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

4) 2009 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் 17 வயது இளைஞன் துப்பாக்கியுடன் ஒரு பள்ளியில் நுழைந்து 9 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களை பலி கொண்டான்.

5) 2011 ஜூலை மாதம் நார்வே நாட்டில்  இளைஞர் முகாமில் காவல்த் துறை சீருடையுடன் நுழைந்த ஒருவன் துப்பாக்கியால் 80 இளைஞர்கள், மாணவர்கள் என்று கண்மூடித் தனமாக சுட்டுப் பொசுக்கினான்.

6) 2012 ஆம் ஆண்டு அமெரிக்கா நியூட்டன் நகரில் உள்ள ஹுக் ஆரம்பப் பள்ளியில் நுழைந்து 20 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

7) 2014-இல் மெக்சிகோ நாட்டில் போதைப் பொருள் கும்பல் ஆதிக்கப் போட்டியில்  கல்லூரி மாணவர் 43 கடத்தப்பட்டு, கொடூரமாக கொலை செய்து புதைக்கப் பாட்டும் மாண்டார்கள்.

இதுபோன்ற துப்பாக்கித் துறைத்தனத்திற்கு முக்கிய காரணமே மேலை நாடுகளில் காணுகின்ற துப்பாக்கிக் கலாச்சாரமும், ஆதிக்க உணர்வுகளும் தான் தூண்டுதல் என்றால் மிகையாகாது.

போர்களில் இரண்டு வகைகளாக பிரிக்கலாம்:

1) ‘கன்வேன்சனல்’ என்ற முறைப்படி அறிவித்து போர்

2)  ‘நான் கன்வென்சனல்’ என்ற அறிவிக்காத போர் முறையாகும்.

உதாரணத்திற்கு கிராமங்களில் இரண்டு ஊர்களுக்கிடையே தகராறு இருக்கின்றது என்றால் அந்தக் கிராமத்தினர் கத்தி, கம்பு, கல் கொண்டு தாக்கிக் கொள்வார்கள் என்பதினை நீங்கள் அறிவீர்கள் .அது அறிவிக்கப் பட்ட போராகும்.

அதனை விட்டுவிட்டு ஒரு கிராமத்தினர் வேண்டாத அடுத்தக் கிராமத்து மக்களுக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று குளங்கல், குடி தண்ணீர் தொட்டிகளில் விஷம் கலப்பது, மற்றும் வயலுக்கு செல்லும் கால்வாய், வரப்புகளை அழிப்பது போன்றவை தான் நான் ‘கன்வென்சனல்’ போர்முறையாகும்.

அதுபோன்ற ‘நான் கன்வென்சனல்’ போர் முறைகளை இரண்டாம் உலகப் போரில் மேலை நாடுகளின் கூட்டுப் படை  ஜப்பான் முக்கிய நகர்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றில் உயிர்கொல்லி ஆயதமான அணுகுண்டினை வீசி வயது வித்தியாசமில்லாது லக்சக் கணக்கில் அழித்தனர். அதன் தாக்கம் இன்னும் மறைய வில்லை என்பதினை ஆப்கானிஸ்தானில் தீவிர வாதிகளை ஒழிக்கின்றோம் என்று ஆளில்லா விமானம் மூலம் பள்ளத்தாக்கில் பழங்குடியினர் ஒரு திருமண நிகழ்ச்சியில் இரவு நேரத்தில் குழந்தைகள், முதியவர் ஆகியோர் தங்கள் மகிழ்ச்சியினைக் காட்ட ஆடிப் பாடிக் கொண்டிருக்கும் போது குண்டு வீசப் பட்டு 62 பேர்கள் மாண்டனர். அதற்கு கூட்டுப் படைத் தளபதியும் வருத்தம் தெரிவித்தார் என்பது கண் கெட்டதும் சூரிய நமஸ்காரம் போன்ற செயலாகாதா?

2) துப்பாக்கி கலாச்சாரத்தின் தாக்கம் தப்பித்தக் குழந்தைகளுக்கு எவ்வாறு இருக்கின்றது என்பதினை சமீபத்தில் பெஷாவார் ராணுவ பள்ளி துப்பாக்கி சூட்டில் காயத்துடன்  தப்பித்த ஒரு மாணவன் கூறும்போது குண்டு அடிபட்டு வகுப்பறையின் கீழே விழுந்தபோது தீவிர வாதிகள் நடந்து வந்த கருப்பு நிற ஷூ சத்தம் இன்னும் தன்னை பயமுறுத்துவதாக கூறியிருக்கின்றான் என்றால் எவ்வளவு தூரத்திற்கு பிஞ்சு மனது வன்முறையால் பாதிக்கும் என்று நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். அவர்கள் அந்தப் பயத் தாக்கத்தினை விட்டு அகல நீண்ட நாட்களாகுமல்லவா?

3) மேலை நாடுகளில் தனி நபர் துப்பாக்கி வைத்துக் கொள்வது அவனது உரிமை. ஆனால் ஆசிய நாடுகளில் துப்பாக்கி உரிமம் வாங்குவது அவ்வளவு எளிதல்ல.

4) ஆசிய, அராபிய, ஆப்ரிக்கா   நாடுகளின் தீவிர வாத கும்பலுக்கு நவீன ஆயுதம் எங்கிருந்து கிடைக்கின்றது என்றால் மேலைநாடுகளில் ஆயுதங்கள் தயாரிப்பதிற்கென்றே பல தனியார் கம்பனிகள் உள்ளன. அவைகள் அந்த அரசின் ஆதரவு மூலம் அவர்களுக்கு விநியோகம் செய்கின்றனர் என்பது தான் உண்மை நிலை. பிள்ளையினை கிள்ளிவிட்டு அந்தக் குழந்தை அழுவதினை வேடிக்கைப் பார்க்கும் நிலைக்குத் தான் மேலை நாடுகள் உள்ளன.

5) இளைஞர்களை மயக்கி மூளைச் சலவை செய்யும் தீவிர வாதக் கும்பல் மன நோய்களாலும், உலச்ச்சல்களாலும் நிம்மதி இல்லாமல் இருக்கின்றார்கள் என்பதினைத் தான் பெஷாவர் பள்ளி துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் அறிவுறுத்துகின்றன என்றால் மிகையாகாது.

சிறுமி மலாலா துப்பாக்கிச் சூடு, பெஷாவர் பள்ளி துப்பாக்கிச் சூடு போன்றவை முஸ்லிம்கள் கல்விக்கு எதிரானவர்கள் போன்ற ஒரு தோற்றத்தினை உலக மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது என்பது யாரும் மறைக்க முடியாது.

இவ்வளவிற்கும் அந்தக் காலத்தில் அராபியாவிலிருந்து சீனம் வெகு தூரத்திலிருந்தாலும் கல்வி கற்க அங்கே சென்று கல்வி கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னது இஸ்லாமிய மார்க்கம்.

உலகிலேயே மிக சிறந்த நூலகம் அமைத்து உயர் கல்வியினைக் கொடுத்தது அலெக்சாண்ட்ரியா பல்கலைக் கழகம் இஸ்லாமியரினைச் சார்ந்தது. அப்படி இருக்கும் பொது எப்படி இஸ்லாமியர் கல்விக்கு எதிரானவர் என்பதினை ஏற்றுக் கொள்ள முடியும்?

உயிர் என்பது இறைவன் கொடுக்கும் அற்புத வரம். அதனை மனிதன் எடுப்பதிற்கு எந்த உரிமையும் இல்லை என்பது இஸ்லாம் போதிக்கும் நல்லுறையாகும். அதனை நிரூபிப்பது போன்று தற்கொலையினை இஸ்லாம் ஆதரிக்க வில்லை என்பது தான் உண்மை. அப்படி இருக்கும் போது இளந்தலிர்களான பள்ளி மாணவர்களைக் கொன்ற  தற்கொலைப் படை போன்ற  படுபாதகர்கள் எப்படி முஸ்லிம்களாக ஏற்கப் படுவார்கள்.

அந்த இளம் மொட்டுக்கள் மலர்ந்து உலகெங்கும் மனம் பரப்ப முடியாமல் செய்தது மாபாதகமாக செயலாகாதா?

இந்தத் தருணத்தில் ஒரு உண்மைச் சம்பவத்தினைச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.

கஸ்தூரி ராஜா என்ற ஒரு சினிமா டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் உங்களுக்குத் தெரிந்திருக்கும். மிகவும் ஆவலோடு சில படங்கள் எடுத்து அவைகள் வெற்றி அடையவில்லை. சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் சிரமம் படுவதினை விட சொந்த ஊரான வேலூர் மாவட்டம் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து மனைவி, இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோருடன் அங்கே சென்றாராம். அங்கே சென்றும் சரியான வேலைக் கிடைக்காததால் ஒட்டு மொத்தக் குடும்பமே வறுமையில் வாடியதாம். ஒருநாள் தன் மனைவியிடம் சாப்பாட்டுக்கே சிரமப் படுவதினை விட தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து விஷ  மருந்து வாங்கி வந்து விட்டாராம். அதனை இரவு மனைவியிடம் கொடுத்து கிடைத்த கொஞ்சம் சோற்றிலும் விசத்தினை கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு நாமும் சாப்பிடலாம் என்றாராம். அப்போது பெற்றக் குழந்தைகளை சாகடிக்க மனசில்லாத பாசமுள்ள அவருடைய மனைவி, ‘ஏங்க, நமக்கு இறைவன் இரண்டு ஆண்  குழந்தைகளைக் கொடுத்துள்ளான். அவர்கள் நிச்சயமாக பெரியவர்களாகி, நம்மையும் காப்பாற்றி மகளுக்கும் திருமணம் செய்து வைப்பார்கள் என்று உறுதியாக நம்பி நாம் மறுபடியும் சென்னை சென்று பிழைப்போம்’ என்று உறுதியான நம்பிக்கையினை அந்த மகராசி கணவனுக்குக் கொடுத்தாராம்.

அந்த அம்மணி சொன்ன வாக்கினை நம்பி சென்னை வந்து மறுபடியும் சினிமா  உலகில் பிழைப்பினைத் தொடங்கினாராம். அவருடைய மகன்களான சினிமா டைரக்டர் மற்றும் நடிகர் செல்வராகவன், தனுஸ் தலையெடுத்து இன்று அவர்கள் வாழ்க்கை ஓஹோ என்று இருக்கின்றதாம். இதனை ஒரு பேட்டியில் கஸ்தூரி ராஜாவே சொல்லியுள்ளார்.

இது எதனைக் காட்டுகின்றது என்றால் பிள்ளைகள் மொட்டுக்கள் போன்றவர்கள் அவர்கள் வளர்ந்து, மலர்ந்து பெரியவர்களாகி, தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும்,உலகிற்கும் நல்ல பல சாதனைகளை செய்ய மணக்கும் முன்னே பறித்து விடலாமா. ஆகவே தான் சில பூங்காக்களில் பூத்துக் குழுங்கும் மலர்களை பறிக்காதீர்கள் என்று விளம்பரப் பலகை வைத்துள்ளார்கள். அதேபோன்று குழந்தைகளையும் இனியும் அழிக்காமல் வாழ விடுங்கள் என்று உரக்க கோசம் எழுப்பலாமா?

source: http://mdaliips.blogspot.in/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 25 = 34

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb