MUST READ BY EVERY INDIAN CITIZEN
அலீ சகோதரர்களின் அழியாத தியாகங்கள்
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இன்றியமையாத வரலாற்றுப் பக்கங்களில் அலீ சகோதரர்கள் என்று அழைக்கப் படும் மெளலானா முஹம்மது அலீ மற்றும் ஷவ்கத் அலீ ஆகியோருக்கு நீக்கப்பட இயலாத பல பக்கங்கள் சொந்தமாகும்.
மகாத்மா காந்தி, இந்த சகோதர்களைப் பற்றி ஒரு முறை குறிப்பிடும்போது, “என் தோளின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளதைக் காணும் போது, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்த சகோதர்களின் பங்கு எந்த அளவுக்கு இருந்து இருக்குமென்று நாம் உணரலாம்.
இந்த சகோதரர்களின் வரலாற்றைக் காணும் முன்பு இவர்களை ஈன்றெடுத்த தாயார் ஹாஜியா ஆலாஜி பானு அவர்கள் பற்றிய ஒரு மறக்க முடியாத வரலாற்றுக் குறிப்பை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அலீ சகோதர்களின் வீட்டுக்கு வருகை தந்த காந்திஜிக்கு அவர்களின் தாயார் ஆலாஜி பானு என்கிற பீவிமா தான் தனது கையால் ராட்டையில் நெய்த ஒரு ஆடையைப் பரிசாக வழங்கி “காந்திஜி! இதைக் கதராக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.
கதர் என்றால் உருது மொழியில் “கவுரவம்” என்று பொருள். அன்று முதல் கதர் என்பது தனது கரங்களால் தானே நெய்து உடுத்தும் ஆடை – அன்னியக் கலப்பில்லாத ஆடை நாட்டின் மக்களுக்கு கவுரவத்தையும் சுய மரியாதையையும் வழங்கும் தன்மை உடையது என்கிற கோட்பாடு காந்தியால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
சுதந்திர இயக்கத்தின் அடையாளமாகக் கருதப் பட்ட கதருக்குப் பெயர் வழங்கியவர் – அதாவது அலீ சகோதரர்களின் அழியாத தியாகங்கள் சகோதரர்களின் தாயார் தனது கைகளால் நெய்த துணியை காந்திக்குப் பரிசாக அலீ சகோதரர்களின் தாய் வழங்கியதன் மூலம் அதன் காரணத்தால் அந்தத் துணிக்கு கதர் என்று பெயர் வந்தது.
அன்றும் இன்றும் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களின் ஆடை அடையாளமாக விளங்கும் கதருக்குப் பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய்தான் என்கிற வரலாறு எத்தனை காங்கிரஸ் காரர்களுக்குத் தெரிந்து இருக்குமென்று தெரியவில்லை.
இளம் வயதில் தந்தையை இழந்த இந்த சகோதரர்கள், தாயின் அரவணைப்பில் வளர்க்கப் பட்டார்கள். மெளலானா முஹம்மது அலீ அவர்கள் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நவீன கால வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்று நாடு திரும்பினார்.
பத்திரிகைத் துறையில் சாதிக்க நினைத்த மெளலானா முஹம்மது அலீ அவர்கள் தனது திறமைகளையும் தன்னிடமிருந்த சிறு அளவு செல்வத்தையும் ஒன்று திரட்டி “காம்ரேட்” (Cornrade) என்ற பத்திரிகையைத் முதலில் தொடங்கினார். இந்திய அரசியலில் இந்தப் பத்திரிகை ஒரு புயலாக அடித்தது. அதன் அடிநாத முழக்கமாக “Cornrade of all and partisan of none” என்ற முழக்கத்தை இலச்சினையாக வைத்தார்.
அதைத் தொடர்ந்து “ஹம்தர்ட் “ (Hamdard’) என்கிற பெயரில் டில்லியில் மற்றொரு பத்திரிகை தொடங்கி நடத்தினார். அத்துடன் லண்டனில் இருந்து ஆங்கிலத்தில் முஸ்லிம் அவுட்லுக் (“Muslim Outlook” ) என்றபெயரிலும் பாரிசில் இருந்து பிரெஞ்ச் மொழியில் ‘Echo de I’Islam’ என்ற பெயரிலும் பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார். இதனால் இந்திய முஸ்லிம்களின் நிலைகளையும் இந்திய சுதந்திரத்தின் போராட்ட அவசியங்களையும் உலகம் அறியத்தொடங்கியது.
He knew that in this venture he had to sacrifice all and to expect no material gain; he firmly closed his eyes to all temptations and left for Calcutta to start the ‘Comrade’ -“Cornrade of all and partisan of none” as he put it. The first issue came out on January 11, 1911. Born in abject poverty, the ‘Comrade’ took the journalistic world of India by storm. Later, he started the ‘Hamdard’ from Delhi and the “Muslim Outlook” from England and piloted ‘Echo de I’Islam’ in Paris. என்று வரலாறு குறிப்பிடுகிறது.
வெறும் பத்திரிகையாளனாக இருந்து மட்டும் தனது சுதந்திர உணர்வுகளுக்குத் தீனி போட இயலாது என்பதை உணர்ந்த மெளலானா முகமது அலி, மிக வலுவான அரசியல் நிலைப் பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் துணிந்தார். அதனால் , அப்போது கிலாபத் இயக்கத்தில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது.
Politics was a passion, not a pastime, and journalism a ‘means’ not an ‘end’. His contributions to the various political movements in India from 1911 to 1931 are now a matter of history. என்பது அவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு.
கிலாபத் இயக்கம் என்பது (1919-1924) ஆகிய காலகட்டத்தில் ஆங்கில ஆட்சிக்குட்பட்ட இந்தியாவில் முஸ்லிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஓர் இயக்கமாகும். முதலாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு ஆதரவாகப் போரிட்ட உதுமானியக் கலீபகம், போரில் ஏற்பட்ட தோல்வியினால் அழியும் நிலைக்கு ஆளானது. வெற்றி பெற்ற நேச நாடுகள் உதுமானியக் கலீபகத்தைப் பிரிவினை செய்து கலீபாவின் அதிகாரத்தை அழிக்க முடிவு செய்தனர். கலீபாவினை தங்களின் இஸ்லாமிய சமய அதிகாரத்தின் சின்னமாகக் கருதிய உலக முஸ்லிம்களிடையே இது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. உலகெங்கும் கிலாபத் இயக்கம் தோன்றியது. கலீபகத்தைப் பாதுகாக்க அலி சகோதரர்களான மெளலானா முகமது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் 1919ம் ஆண்டு இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.
விரைவில் கிலாபத் இயக்கம் இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. உதுமானியக் கலீபகத்தைப் பாதுகாக்கும்படி ஆங்கில அரசை வலியுறுத்துவதே கிலாபத் இயக்கத்தின் நோக்கம். அதே நேரத்தில், காங்கிரஸ் அப்போது துவங்கியிருந்த ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு அங்கமாகவும் செயல்பட்டது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு இந்திய முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்ட மகாத்மா காந்தியும் காங்கிரசும் அலீ சகோதரர்களான மெளலானா முஹம்மது அலீ மற்றும் சௌகத் அலி ஆகியோர் தலைமை ஏற்று நடத்திய கிலாபத் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இவ்வியக்கம், இந்திய தேசியவாதத்துக்கு எதிராக பரந்த இஸ்லாமியத்தை பிரதிபலிக்கிறது என்று குற்றம் சாட்டிய இந்து மகாசபை ஆகிய அமைப்புகள் இதனை எதிர்த்தன.
ஒத்துழையாமை இயக்கம் (Non-cooperation movement) என்பது ஆங்கில ஆட்சிக்குட்பட்ட இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடுதழுவிய மக்கள் இயக்கமாகும். இது 1893ம் ஆண்டு ஜூன் 7ம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. ரவ்லட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்ததை வெளிக்காட்டிக் கொள்ளவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார்.
இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட இவ்வியக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பிப்ரவரி 1922 வரை தொடர்ந்தது.
இந்தியர்கள், ஆங்கில ஏகாதிபத்திய காலனிய அரசுடன் அனைத்து நடைமுறை மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளிலும் ஒத்துழைக்க மறுத்தனர். மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பது, அரசு அதிகாரிகள் பணிகளை செய்யாமல் புறக்கணிப்பது போன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அரசுப் போக்குவரத்து, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட துணி முதலான பொருட்கள் போன்றவையும் இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்கப்பட்டன. ஆங்கில அரசு அதிர்ந்தது. நிர்வாகம் ஸ்தம்பித்தது. இவ்வியக்கத்தை காங்கிரசின் பல மூத்த தலைவர்கள் குறிப்பாக இந்துத்வா எண்ணம் கொண்டோர் ஆதரிக்கவில்லை. எனினும் இளைய தலைமுறை தேசியவாதிகளிடையே இது பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். அலி சகோதரர்கள் காந்தியுடன் தோளோடு துணை நின்றனர்.
அகிம்சையின் அடிப்படையில் ஆரம்பிக்கப் பட்ட ஒத்துழையாமை இயக்கம் வெற்றியின் உச்சத்தில் இருந்த போதே காந்தியால் திடீரென்று திருப்பிப் பெறப்பெற்றது. காரணம், பிப்ரவரி 5, 1922 ல் உத்திரப் பிரதேசத்தில் சவுரி சாவ்ரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் வன்முறை மோதல்கள் ஏற்பட்டன.
காவல் துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதனால் கோபம் கொண்ட மற்றவர்கள் காவல் நிலையத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். வன்முறை இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது.
அறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதைக் கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதைத் தடுக்க, அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை நடத்தினார்.
இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்று போனது.
சவுரி சாவ்ரா நிகழ்வுக்குப் பின்னர் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டதை அலீ சகோதரர்கள் ஏற்கவில்லை. கிலாபத் இயக்கத்தைத் தனியே தொடர்ந்தனர். 1924ல் துருக்கியில் கமால் அத்தா துர்க் தலைமையில் ஏற்பட்ட புரட்சியால் உதுமானியக் கலீபகம் ஒழிக்கப்பட்டு மதச்சார்பற்ற குடியரசு உருவானதால் கிலாபத் இயக்கமும் பலனற்றுப் போனது.
கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழை யாமை இயக்கத்திலும் பங்கெடுத்த மௌலானா முகம்மது அலி மற்றும் ஷவ்கத் அலீ ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முகம்மது அலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஆலாஜி பானுவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே விடுதலைப் போருக்கு ரூ.30 லட்சத்தை நிதியாகத் தந்தனர். என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஆங்கிலேயர் களிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலை யானால், அவர்களது குரல்வளையை நானே நெறித்துக் கொள்வேன் என கர்ஜித்தார் அவரின் தாயார் பீபிமா.
அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வீரத்தோடு களமாடினார்கள். எப்படியென்றால் மெளலானா முஹம்மது அலீ அவர்கள் கைது செய்யப்பட நேரத்தில் தனது சகோதரரின் கைகளில் விலங்கு மாட்டப் படுவதைப் பார்த்த மெளலானா ஷவ்கத் அலீ அவர்கள் அழ ஆரம்பித்தார். அப்போது அவருக்குக் கிடைத்தது ஒரு பரிசு. அந்தப் பரிசு பளார் என்று கன்னத்தில் ஒரு அறை. தொடர்ந்து சகோதரரை நோக்கி ஒரு உறுமலுடன் கூடிய அதட்டல். ஏன் கண்ணீர் சிந்துகிறாய்? இந்த நாட்டுக்காக நமது சுதந்திரத்துக்காக இந்த ஒரு முறை அல்ல இன்னும் எத்தனை முறையானாலும் சிறை செல்லத் தயாராக நானும் இருக்கிறேன்! நீயும் இரு! என்று கர்ஜித்துவிட்டு ஜீப்பில் ஏறியது மெளலானா முகமது அலி என்ற அந்த சிங்கம்.
மெளலானா முஹம்மது அலீ அவர்கள் ஈரோட்டில் நடந்த உலமாக்கள் மாநாட்டுக்கு வருகை தந்து இருந்தார். அந்த மாநாட்டில் மெளலானா முகமது அலி அவர்களுக்கு தனது சார்பில் வரவேற்ற பலத்த கையொலிகளுக்கிடையே ஈ வெ ரா பெரியார் இப்படிச் சொன்னார். “ இந்த தேசம் காந்திடம் இருக்கிறது . ஆனால் அந்த காந்தியோ இதோ இந்த மெளலானா முஹம்மது அலீ அவர்களின் சட்டைப் பையில் இருக்கிறார்.” என்றார். அந்த அளவுக்கு இந்திய சுதந்திர வேள்வியில் தனது தாக்கத்தை ஏற்படுத்தியவர் மெளலானா முஹம்மது அலீ அவர்கள்.
1930- ஆம் ஆண்டு இந்திய சுதந்திரம் பற்றி கலந்து பேச லண்டனில் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் மகாத்மா காந்தியுடன் கை கோர்த்துக் கொண்டு செல்ல மெளலானா முஹம்மது அலீ அவர்களும் அழைக்கப்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கு உடல் நலம் குன்றி மிகவும் மோசமடைந்து இருந்தது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் லண்டன் கிளம்பத் தயாராகிக் கிளம்பினார்.
லண்டனில் வட்டமேசை மாநாடு. மெளலானா முஹம்மது அலீ அவர்கள் பேசும்படி அழைக்கப்பட்டார்கள். அவருக்குத் தரபப்ட்ட நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. ஆனால் ஆங்கில ஏகாதிபத்தியமே தனது மூக்கின் மேல் விரலை வைக்கும்படி தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் இரண்டு மணி நேரம் முழங்கினார். அரங்கு நிறைந்த கைதட்டல்கள் அவரது பேச்சை அங்கீகாரம் செய்தன. தனது பேச்சை முடிக்கும் முன்பு மெளலானா முஹம்மது அலீ அவர்கள் கீழ்க்கண்ட வார்த்தைகளைச் சொல்லி முடித்தார்கள். அவருடைய அந்த வார்த்தைகள், எல்லாம் வல்ல இறைவன் தனது நாட்டத்தை அவரது வார்த்தைகளிலேயே கொண்டுவந்தது போல அமைந்திருந்தன.
“என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன். அவ்வாறு என் தேசத்திற்கு நான் திரும்புவது, எனது தேசத்துக்கான உத்தரவை நீங்கள் எங்களின் கைகளில் கொடுத்தால் மட்டுமே முடியும். ஏனென்றால் ஒரு அடிமைத்தளையில் சிக்கி இருக்கும் நாட்டுக்கு நான் ஒரு அடிமையாகத் திரும்பிப் போவதை விரும்பவில்லை. அந்நிய மண்ணாணாலும் இதில் நான் மரணிக்கவே விரும்புகிறேன். ஏனென்றால் இது சுதந்திர மண். எனக்கும் மரணிப்பதற்கு ஒரு சுதந்திர மண் வேண்டும். ஆகவே எனது நாட்டுக்கு சுதந்திரம் கொடுங்கள். அல்லது உங்கள் மண்ணில் அடக்கமாக எனக்கு ஒரு கல்லறைக்கு இடம் கொடுங்கள்” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார்.
“I want to go back to country” he said in a loud voice. “If I can go back with the substance of Freedom in my hand. Otherwise I will not go back to a slave country. I will even prefer to die in a foreign country so long as it is a free country, and if you do not give us freedom in India, you will have to give me a grave here.“ (Shan Mohamed, Freedom Movement in India – The Role of Ali Brothers, page 231.)
சுதந்திரம் தரப் படவில்லை. ஆனால் இறைவன் அவரது நாட்டத்தை நிறைவேற்றினான். லண்டன் வட்டமேசை மாநாட்டில் உடல்நலக் குறைவோடு முழங்கிக் கேட்டுக் கொண்டபடி 04- 01- 1931 –ல் லண்டன் மாநகரிலே அவரை இறைவன் தன்னோடு அழைத்துக் கொண்டான். இன்னாலில்லாஹி வ இலைஹி ராஜிஊன்.
மெளலானா முஹம்மது அலீ அவர்களின் இறுதி ஆசைப்படி ஒரு சுதந்திர மண்ணில் அவர்களது மரணம் நிகழ்ந்தாலும் அவர்களது ஜனாஸாவை ஆங்கில ஏகாதிபத்திய மண்ணில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை. கிலாபத் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த 22 நாடுகள் அந்தப் புனித மகனின் உடலைத் தங்களது மண்ணில் அடக்கம் செய்ய வேண்டுமென்று கோரி வரிசையில் நின்றன. இறுதியில் தூய்மையான வீடு என்று அழைக்கப் படும் – சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு கட்டப் பட்ட – பல நபிமார்களின் அடக்கஸ்தலமாக விளங்கி- ஆலம் வாழுகின்ற தீனோர் யாவர்க்கும் ஆரம்பக் கிப்லா அதுதான் என்ற புகழ்பெற்ற இன்றைய ஜெருசலத்தின் பைத்துல் முகத்தஸ் பள்ளியில் உள்ள புனித மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் அருகே உலகோர் திரள நல்லடக்கம் செய்யப்பட்டது.
மெளலானா முஹம்மது அலீ அவர்கள் புனித ஹஜ்ஜுக்கு சென்ற போது இறைவனிடம் முக்கியமான இரண்டு துஆக்களைக் கேட்டார்கள். இறைவா எனது தாய் நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தா! அங்கிருக்கும் முஸ்லிம்களுக்கு அமைதியான நல் வாழ்வைத்தா ! என்பதுதான் அந்த மனிதப் புனிதன் இறைவனிடம் உள்ளம உருகிக் கேட்ட துஆக்கள். அவர்கள் கேட்ட இந்திய சுதந்திரம், அவர் மறைந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு மலர்ந்தது.
ஆனால் இந்திய முஸ்லிம்களுக்கான அமைதியான வாழ்வுக்கு இன்னமும் நாம் துஆச் செய்யவேண்டிய நிலையில்தான் இருந்து கொண்டு இருக்கிறோம். தங்களின் இன்னுயிரை துச்சமென நினைத்து இந்த நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய முஸ்லிம்களை வரலாற்றில் இருந்து பிரித்து எடுத்து அன்னியமாக்கும் சக்திகள் தொடர்ந்து வேலை செய்துகொண்டு இருக்கின்றன. மெளலானா முகமது அலி அவர்களின் மறுமையின் செழிப்புக்கும் அவர்கள் இறைவனிடம் கோரிய இந்திய முஸ்லிம்களின் நல் வாழ்வுக்கும் இன்னும் துஆச் செய்வோம்.
source: http://adirainirubar.blogspot.in/2015/01/blog-post_26.html