மேற்குலகை ஆள்பவர்கள் தான் தீவிரவாதிகள், முஸ்லிம்கள் அப்பாவிகள் – பிரான்ஸ் தத்துவ மேதை மைக்கேல் ஆன்பரே
உண்மையாகவே முஸ்லிம்கள் அப்பாவிகள், மேற்குலகை ஆள்பவர்கள் தான் தீவிரவாதிகள் என பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையான மைக்கேல் ஆன்பரே கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் பிரான்ஸின் கேலிப் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ (Charlie hebdo) பத்திரிக்கை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறித்த பத்திரிக்கையின் ஆசிரியர்கள், காட்டூனிஸ்ட்டுகள், அலுவலக ஊழியர்கள் என சுமார் 13 பேர் கொல்லப்பட்டார்கள்.
இஸ்லாத்தின் இறுதித் தூதராகவும், உலக மக்களுக்குறிய உன்னத வழிகாட்டியாகவும் அனுப்பப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கேலிச் சித்திரமாக வரைந்து இழிவுபடுத்த முயன்றமையை காரணம் காட்டியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
குறித்த தாக்குதலைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறித்த போராட்டங்களுக்கு எதிராக இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாத தாக்குதல்களை ஒரு போதும் ஆதரிப்பதில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முஸ்லிம்களினாலும் பிரான்ஸ் முழுவதும் நடத்தப்பட்டன.
இந்நிலையில் தாக்குதலுக்குப் பின்னரான சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் அடுத்த பதிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. குறித்த பத்திரிக்கையில் முஹம்மது நபி என்று குறிப்பிட்டு தாடி வைத்து, தொப்பி அணிந்த நிலையிலமைந்த ஒரு கேலிச் சித்திரித்தை அட்டைப்படமாக பிரசுரம் செய்து இஸ்லாத்திற்கு எதிரான தனது இழிவான செயல்பாட்டை மீண்டும் நடத்தி முடித்தது சார்லி பத்திரிக்கை நிறுவனம்.
குறித்த பத்திரிக்கை மீண்டும் மீண்டும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் காரியத்தில் ஈடுபடுவதை கண்டிக்கும் விதமாகவே பிரான்சின் தத்துவ மேதை மேற்கண்ட கருத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தத்துவ மேதை “மைக்கேல் ஆன்பரே” தொடர்ந்து கருத்து வெளியிடுகளையில் இவ்வாறு தெரிவிக்கின்றார்.
மேற்குலகும், அமெரிக்காவும் இஸ்லாமிய நாடுகளின் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிட்டு ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களை கொன்று குவித்து வருகின்றன. முஸ்லிம்கள் பொறுக்கும் வரை பொறுத்து விட்டு தம்மை தற்காத்துக் கொள்வதற்காக தற்காப்புத் தாக்குதலில் இறங்கும் போது அவர்களுக்கு தீவிரவாதிகள் என்று மேற்குலகம் முத்திரை குத்துகின்றது.
உண்மையில் முஸ்லிம்கள் அப்பாவிகள் மேற்குலகை ஆளக்கூடியவர்கள் தான் தீவிரவாதிகள். மேற்குலகும் அமெரிக்காவும் நினைப்பது போல் முஸ்லிம்கள் ஏமாளிகள் அல்ல. இஸ்லாமிய நாடுகளில் நாம் அரங்கேற்றுகின்ற குழப்பங்கள் கொலையை விடவும் கொடியதாக உள்ளது. அதனை அவர்கள் பொறுக்க முடியாத நிலை தோன்றும் போது, சில தாக்குதல்களை தொடுக்கின்றார்கள். சார்லி ஹெப்டோ என்ற பத்திரிக்கையை கட்டுப்படுத்த முடியாத நமக்கு முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்ல என்ன தகுதியிருக்கின்றது?
முஸ்லிம்களையும் அவர்களின் உயிருக்கும் மேலான நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் கேலிச் சித்திரமாக சார்லி ஹெப்டோ வரைந்ததனால் தான் இந்த பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றது.
கண்டிக்கப்பட வேண்டியது சார்லி ஹெப்டோ பத்திரிக்கையே தவிர முஸ்லிம்கள் அல்ல.
முஸ்லிம்கள் செய்திருப்பது எதிர்வினையே என மைக்கேல் ஆன்பரே சுட்டிக்காட்டுகின்றார். கண்மூடித் தனமாக இஸ்லாத்தை விமர்சனம் செய்து, கருத்து வெளியிடும் பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்களுக்கு அப்பால் நடுநிலைக் கண்ணோட்டத்துடன் தத்துவ மேதை மைக்கேல் ஆன்பரே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பாராட்டத் தக்கவையாகும்.
– rasminmisc
source: http://rasminmisc.com/charlie-hebdo-mickel/#sthash.31Q3Y4m7.dpuf