ஐயம்: ஒரு முஸ்லிமிற்கு வியாபார நிமித்தமாக 10 லட்சம் ரூபாய் வட்டிக் கடன் இருக்கிறது. இவர் ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டவரா?
தெளிவு: வட்டிக் கடன் வாங்கி வியாபாரம் செய்யும் மேற்படி தோழர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். பேராசை வேண்டாம். இவர் வட்டிக் கடன் வாங்குவது மூலம் இஸ்லாம் அனுமதிக்காத பெரும் குற்றத்தை செய்கிறார். அக்கடனைக் காட்டி அல்லாஹுவின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஜகாத்திலிருந்து தப்பிக்க முயல்கிறார். கடன் இருப்பவர்கள் மற்றவர்களிடமிருந்து ஜகாத் பெற உரிமையுள்ளவர்கள் என்பதை அல்குர்ஆன் 2:177 கூறுகிறது.
அதனைக் காட்டி இவரும் தப்பிக்க முயற்சிக்கிறாரோ என்னவோ?
பத்து லட்சம் ரூபாய் வட்டிக் கடன் வாங்கத் தகுதியுள்ளவர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருப்பார் என்பதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.
அவரது சொந்த முதலீடு + அவருக்கு மற்றவர்களிடமிருந்து வரவேண்டிய தொகை இரண்டையும் கூட்டி அதற்கு 40ல் 1 வீதம் ஜகாத் கொடுப்பது கடமையாகும். கடனாகப் பெற்றுள்ள 10 லட்சம் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை.
பத்து லட்ச ரூபாய்க்கு குறைந்த வட்டியான 12% என வைத்தாலும் வருடத்திற்கு வட்டியாக ரூ.1,20,000/- கொடுக்கத் தயாராக உள்ளவர், தனது முதலீட்டுக்கு அல்லாஹ்வின் ஆணைப்படி 2,5% ஜகாத் கொடுக்க முடியாதா? ரூ.1,20,000/-வட்டி கொடுக்க தயாராக உள்ளவர் தனது முதலீட்டுக்கு ஜகாத் கொடுக்கத் தயங்குவது ஏன்?
வட்டி கொடுக்காவிட்டால் ஜப்தி வரும். வக்கீல் நோட்டீஸ் வரும். வில்லங்கங்கள் உருவாகும் என்ற பயம். எனவே ரூ.1,20,000/- வட்டி கொடுக்கத் தயார். ஜகாத் கொடுக்காவிட்டால் உடனே எந்த பாதிப்பும் இவ்வுலகில் ஏற்படாது என குருட்டு நம்பிக்கையில் இருக்கலாம். இதனை ஒரு வாதத்திற்காக எடுத்து வைத்தோம்.
வட்டிக் கடன் வாங்கியதற்காக அவர் கட்டாயம் அல்லாஹ்வின் சந்நிதியில் “”ஷைத்தான் பிடித்துப் பித்துக் கொண்டவர்கள் போல மறுமையில் எழப் போவது உண்மை”. இது எமது தீர்ப்பல்ல. அல்லாஹ் தனது குர்ஆன் 2:275 வசனத்தில் கூறுகின்றான். எரியும் நெருப்பில் கெரசின் ஊற்றுவது போல கடனைக் காட்டி ஜகாத் கொடுப்பதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது கொடுமையிலும் கொடுமை.
முதலில் வட்டிக் கடனை நிறுத்தச் சொல்லுங்கள். தன்னிடமுள்ள சொந்த முதலைக் கொண்டு ஹலாலான முறையில் வியாபாரம் செய்ய அறிவுரைப் பகருங்கள். அதற்குரிய ஜகாத்தை வருடா வருடம் சரியாகக் கணக்கிட்டுக் கொடுக்கச் சொல்லுங்கள். அல்லாஹ் அவரது வாழ்வில் செழிப்பை உருவாக்கு வதைக் காணலாம். அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.
ஐயம் : அல்லாஹ்வுக்குத் திருநாமங்கள் 99 இருப்பது போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் 99 திருநாமங்கள் உள்ளதா?
தெளிவு: அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன என்பது ஹதீஃத்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. அதேபோல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 99 திருநாமங்கள் இருப்பதாக எந்த ஹதீஃதும் இல்லை.
பழம்பெரும் ஹதீஸ் நூலான முஅத்தா மாலிகியில் கடைசி ஹதீஃதாக இடம் பெற்றுள்ள நபி மொழி :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
எனக்கு ஐந்து பெயர்கள் உண்டு:
1. நான் முஹம்மது
2. நான் அஹ்மத்
3. நான் மாஹி (குப்ரை அழிப்பவர்) அல்லாஹ் என் மூலம் அவனுக்கு இணைவைத்தலை (குப்ரை) அழிக்கின்றான்.
4. நான் ஹாஒர்: மக்கள் என் வழி நடக்க அல்லாஹ் அருள் பாளிக்கின்றான்.
5. நான் ஆகீப் (நபிகளின் முடிவு) (அறிவிப்பு: முஹம்மது இப்னு ஜுபைர் பின் மத்அல் ரளியல்லாஹு அன்ஹு)
மற்றும் சில ஹதீஸ் நூல்களில் 7 பெயர்கள் 9 பெயர்கள் என மேலே குறிப்பிட்டது போல சில காரணப் பெயர்கள் இருந்ததாக அறிய முடிகிறது. தாங்கள் கேட்டிருப்பது போல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு திருநாமங்களிருந்ததற்கு ஆதாரபூர்வமான நபிமொழிகள் இல்லை என்பது மட்டும் திண்ணம்.
அல்லாஹுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. அது போல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் 99 திருநாமங்கள் உள்ளன. அதுபோல முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜைலானி அவர்களுக்கும் 99 திருநாமங்கள் உள்ளன என்ற 99 பற்றிய கூற்றுக்கள் ஓர் உண்மையின் (அல்லாஹ்வின் 99 திருநாமங்களின்) பெயரில் இட்டுக்கட்டப்பட்ட கூற்றுகளாகும். இதனை நிரூபிப்பவர்கள் சரியான ஸனது தரட்டும் பார்க்கலாம்.