தாய் மதம் இந்துவா? இஸ்லாமா?
மவ்லானா, முஹம்மத்கு ஃபாரூக் காஷிஃபி, காஞ்சிபுரம்
டிசம்பர் 8 அன்று ஆக்ராவின் புறநகர் மதுநகர் என்ற பகுதியில் கூலித் தொழில் செய்து வரும் 57 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 முஸ்லிம்களை ‘தரம் ஜாக்ரன் சமிதி’ போன்ற இந்து அமைப்புக்கள் சந்தித்து ஆதார் அட்டை, ரேஷன் கார்டு வாங்கித் தருவதாகவும், நிலபுலன்கள் தருவதாகவும் ஆசை காட்டி அழைத்துச் சென்று ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த யாகத்தில் வலுக்கட்டாயமாக மிரட்டி கலக்க வைத்தனர்.
அதை போட்டோ, வீடியோ எடுத்து இவர்கள் இஸ்லாத்தை விட்டு தாய் மதமான இந்து மதத்தை ஏற்றுக்கொண்டனர் என்ற செய்தியும் பரப்பினர். ஆனால், அது பொய்யான செய்தி. அந்த முஸ்லிம்கள் யாரும் மதம் மாறவில்லை.
“நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம், மிரட்டப்பட்டுள்ளோம். எங்களது உயிர் உள்ளவரை நாங்கள் இஸ்லாத்தைவிட்டு செல்ல மாட்டோம்” என்று அவர்கள் பேட்டியும் கொடுத்தனர்.
இதன் மூலம் இந்துத்துவ ஃபாஸிஸ்டுகளின் நோக்கம் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வருவதுதான் என்பதனை அறிவீர்கள்.
இந்த மதமாற்றத் தடைச்சட்டம் இந்திய ஜனநாயகத்திற்கு பொருந்துமா? பொருந்தாதா? என்பது ஒரு புறம் இருக்கட்டும், ஆனால் இதை ஒரு கருவியாக வைத்து மக்களிடையே திணிக்கப்படும் ”தாய் மதம்” என்ற கருத்துத் திணிப்பு தான் கவனிக்கத்தக்கது.
மத்தியில் ஆட்சிக்கட்டிலை எப்படியோ அடைந்து கொண்ட வகுப்புவாதிகள் இப்போது தாங்கள் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வரத் தயார், அது சம்பந்தமாக பிற கட்சியினர் தான் முன் வர வேண்டும் என்று கூறுவதும், இச்சட்டத்தின் மனமார்ந்த மதமாற்றத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாது என்றும் கூறுகின்றனர். அத்துடன் நிறுத்திக் கொண்டால் அது அவர்களின் கருத்து என்று நாம் விட்டு விடலாம்.. ஆனால் இக்கருத்துடன் பிற மதத்தில் இருந்து இந்துவாக மதம் மாறுவதை பெரும் வரவேற்புக்குறியது, தாயை விட்டு பிரிந்த சேய்கள், தாய் கழகத்தை விட்டுப் பிரிந்த சேவகர்கள் தாயின் பக்கமும், தாய் கழகத்தின் பக்கமும் திரும்புவது போன்றதுதான் என்று பாலில் விஷம் கலந்து புகட்டிக் கொண்டுள்ளனர். இந்திய குடிமக்கள் அனைவரின் தாய் மதமும் இந்து மதமே…! அதாவது பல தெய்வக்கொள்கையே என சொல்கின்றனர். இதை பத்திரிகைகள் பக்கம் பக்கமாக செய்தியாக போடுகின்றன.
இந்து மதம் -(பல தெய்வக் கொள்கை) தாய் மதமா?
இவர்கள் இந்து மதம் தாய் மதம் என்று கூறுவதற்கு இப்படி காரணம் கூறுகின்றனர்… கிறிஸ்தவ மத போதகர் ஏசு கிறிஸ்து பிறந்து 2014 ஆண்டுகள் தான் ஆகின்றன. இஸ்லாமிய மத தூதர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தோன்றி 14 நூற்றாண்டுகள் தான் ஆகின்றன. கிறிஸ்தவ மதம் ஆங்கிலேயர் மூலமும், இஸ்லாம் அரபியர் மூலமும் தான் இந்தியாவிற்கு வந்தன. எனவே அதற்கு முன் அனைவரும் இந்துக்களே! இந்து மதமே தாய் மதம் என்ற வகையில் தமது கருத்துத் திணிப்பு ஏற்கப்பட்டு விடும் என்று மனப்பால் குடிக்கின்றனர்.
கிறிஸ்தவம் ஆங்கிலேயர் மூலம், இஸ்லாம் அரபியர் மூலம் இந்தியாவிற்குள் வந்தன என்பது வரை சரி! ஆனால் அதற்கு முந்திய நிலை இந்துவாகத் தான் பல தெய்வ சிலை வழிபாடு செய்பவர்களாகத் தான் இருந்தார்கள், எனவே அதுவே தாய் மதம் என்று எடுத்துக் கொள்ளும் வாதம் மனித குல பூகோள வரலாற்று ரீதியாக முற்றிலும் தவறானதாகும்.
கிறிஸ்தவமும், இஸ்லாமும் இந்திய மண்ணில் பரவுவதற்கு முன்பு இந்துவாக – பல தெய்வ வணங்கிகளாக இருந்தவர்களும் கைபர் கணவாய் வழியாக வந்தவர்களின் தகிடு தத்தங்களாலேயே அக்கொள்கை கொண்டவர்களாக மாறினார்கள் என்பது இந்தியாவின் பழம்பெரும் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தும் வரலாற்று உண்மை! இதை ஏன் அவர்கள் மறைக்கிறார்கள்?
இந்தியா மட்டுமின்றி உலகின் எல்லா பகுதியிலும் நீக்கமற நிறைந்திருந்தது ஒரே தெய்வம் எனும் கொள்கைதான் என்பதும் சிறு தெய்வ விக்ரஹ வழிபாட்டு முறைகள் பிற்காலத்தில் தோன்றியவையே என்பதும் குர்ஆன் மட்டும் கூறும் கருத்தல்ல, உலகின் தலை சிறந்த பூகோள, மதம் மற்றும் மனித குல ஆராய்ச்சியாளர்கள் பறைசாற்றும் உண்மையாகும். உண்மை இவ்வாறிருக்க தாய் மதம் எனும் கருத்து உளுத்துப்போன வாதமாகும்.
இவர்கள்தான் வரலாற்றுப் புரட்டர்கள்; காந்தியைக் கொன்ற கோட்சேவைக்கூட தேச பக்தர் எனக் கூறும் பொய்யர்கள் என்றால் தமிழர் பண்பாடு, திராவிடர் பண்பாடு, திராவிடர் கொள்கை என மூச்சு முன்னூறு தரம் மொழிபவர்கள் கூட இந்த கருத்துத் திணிப்புக்கு பதில் சொல்லாமல் மெளனியாக இருப்பது ஏன் என்று புரியவில்லை. அதைவிட இந்த உண்மைகளை விளங்கிய நமது கொள்கை வாதிகள் எங்கே போய்விட்டனர்? என்பது புரியாத புதிராகவே உள்ளது. எனவே ஆதம் ஹவ்வா தம்பதியருக்கு பிறந்த அனைவரின் தாய் மதமும் ஓரிறை கொள்கையை வலுவாகக் கூறும் இஸ்லாம் தான் என்பதை தயக்கமின்றி உரத்துச் சொல்வோம்.
-மனாருல் ஹுதா, ஜனவரி 2015