ஏகத்துவம் உருவாக்கிய சகோதரத்துவம்!
இந்த இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபடக் கூடாது; ஒருமைபாட்டுடனும், ஒத்த கருத்துடனும் இருந்து விடக் கூடாது என்பதற்காக உலக முழுவதும் படாதபாடுபட்டு கொண்டிருக்கின்றாரகள். அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம்களாகிய நாமும் அறிந்தும் அறியாமலும் துணை போய்க் கொண்டிருக்கின்றோம். இன்றை இஸ்லாமிய சமுதாயம் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, தனித்தனி ஜமாஅத்ஆகளாக, கட்சிகளாக, கழகங்களாக சிதறிக்கிடக்கின்றன.
“உங்கள் சமுதாயம் ஒரே சமுதாயமே இதில் பிரிவுகளே இல்லை” என்ற அல்குர்ஆனின் வேத வரிகளுக்கு மாற்றமாக சமுதாயம் பிரிந்து உள்ளது. கட்சிகளும், இயக்கங்களும், கழகங்களும் எப்பொழுது முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டன? நீங்கள் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.
ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டில் இருந்தனவா?
ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் இருந்தனவா? அல்லது ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்தனவா? ஷைகுல் இஸ்லாம் என்று போற்றப்படுகின்ற இமாம் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வாழ்ந்த ஹிஜ்ரி 8-ஆம் நூற்றாண்டிலாவது இவ்வியக்கங்கள் இருந்தனவா? இமாம் ஸுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வாழ்ந்த காலத்தில் இவ்வியக்கங்கள் இருந்தனவா?
எப்போது இந்த ஜமாஅத்துகள், கட்சிகள் வந்தன? யார் இவற்றை உண்டாக்கியது? இன்று இஸ்லாம் ஏசப்படுவதற்கும், பேசப்படுவதற்கும் இவைகளெல்லாம் கருவிகளாப் பயன்படுகின்றன.
இந்த இஸ்லாமிய உம்மத்தில் ஜமாஅத்துகளென்றும் இயக்கங்களென்றும் இருநூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததென்று யாரும் சொல்ல முடியாது.
இமாமுல் அஃழம் அபூஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அன்று ஈராக்கில் மிகப் பெரிய மார்க்க அறிஞராக விளங்கினார்கள். ஹதீது கலையில் சிறப்பான தேர்ச்சியும் நாவன்மையும் கொண்டு விளங்கினார்கள். இமாம் அபூஹனீஃபா(ரஹ்) அவர்கள் விரும்பியிருந்தால் ஈராக்கில் மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.
இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி:
இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு முதல் சட்ட நூலை தந்த இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் தன் சொந்தக் கருத்துக்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. உங்கள் கருத்து என்ன? என்று கேட்கப்பட்டால் என் சொந்தக் கருத்துக்கு இங்கு வேலை இல்லை. இறைவனுக்கும் இறை தூதருக்கும் மாறாக நான் எதையும் சொல்ல முடியாது. தன் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை கேட்டு நடக்கும்படி இறைவன் வற்புறுத்தியுள்ளான்.
“அவனுடைய ஏவலுக்கு மாறுபட்டு நடப்பவர்கள் தமக்கு கடுமையான சோதனையும் மிகப்பொரும் வேதனையும் உண்டு என்பதைப் பயந்து நடந்து கொள்ளட்டும்” (அல்குர்ஆன் 24:63) என்பதாக கண்டனமும் தெரிவித்துள்ளான். எனவே என் கருத்து எதையும் முன் வைக்க விரும்பவில்லை என்று கூறிவிடுகிறார்கள்.
கலீஃபா மன்ஸூர் அவர்கள் இமாம் அவர்களின் நூலான “முஅத்தா” வை அரசாங்க ஹதீஸ் நூலாக அறிவித்து விட விரும்பிய பொழுது, இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். அன்று விரும்பியிருந்தால் இஸ்லாத்தின் பேரால் மாபெரும் இயக்கத்தை ஜமாஅத்தை ஏற்படுத்தியிருக்காலம். ஆனால் அவர்கள் செய்யவில்லை.
இமாம் ஷாஃபியீ ரஹ்மதுல்லாஹி அலைஹி:
இமாம் ஷாஃபியீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பாக்தாத்தில் இருந்தபொழுது ஏமன் கவர்னர் அங்கு வந்தார். அவரிடம் சொல்லப்பட்டது இமாம் அவர்கள் சிறந்த மார்க்க அறிஞர். சிறந்த பேச்சாளர், எழுத்தாற்றல் நிரம்பியவர் என்று எனவே ஏமன் கவர்னர் தமது கத்தீபாக (பிரச்சாரகர்) இமாம் ஷாஃபியீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை ஏமனுக்கு அழைத்துச் சென்றார்.
இமாம் அவர்களின் அறிவுத் திறன் மார்க்க விளக்கங்களைக் கண்ட ஏமன் ஆலிம்கள் அவருக்கு கீழ்ப்படியவேண்டி வந்தது. உடனே ஏமன் ஆலிம்கள் பார்த்தார்கள். இந்த இத்ரீஸால் எங்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது நாங்கள் ஸஹீஹ் என்று நம்பி கொண்டிருந்த ஹதீஸ்களை ளயீப் மவ்ளூ என்கிறார். எனவே இவரை விட்டு வைக்கக் கூடாது ன்று ஏமனிலிருந்து துரத்துவதற்கு ஒரு வழி கண்டார்கள்.
எப்படி என்றால், இன்று ஆதாரப்பூர்வமான குர்ஆனு, ஹதீஸை மக்கள் முன் வைக்கும் பொழுது, எங்கே தங்கள் புரோகித பிழைப்பிற்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து “குழப்பவாதிகள்”, “நஜாத்திகள்”, “வஹாபிகள்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்யும் ஆலிம்களைப் போல அன்று ஒருவரை பிடிக்கவில்லை என்றால் “அலவீ” என்று குற்றம் சாட்டி அரசரிடம் கொண்டு போவார்கள். “அலவீ” என்றால் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியில் அமர்த்துவதற்காக பாடுபடுபவர் என்று பொருள்.
இமாம் ஷாஃபியீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களையும் அலவீ என்று பொய் சுமத்தி ஏமன் ஆட்சியாளர்களால் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். காரணம் இங்கு நாம்தான் பெரிய ரப்பு எமக்கு போட்டியாக இன்னொருவர் இருக்கக் கூடாது என்று ஏமன் ஆலிம்ள் நினைத்ததுதான்.
இமாம் அவர்கள் அன்று விரும்பியிருந்தால், ஏமனில் ஒரு சிறப்பான ஜமாஅத்தை, இயக்கத்தை இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.
இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி:
“முஸனத் அஹ்மத்” எனும் புகழ் பெற்ற ஹதீஸ் நூலை இஸ்லாமிய உலகிற்கு வழங்கிய இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், “கல்குல்குர்ஆன்” பிரச்சனையில், ஆட்சியளார்களின் கருத்துக்கு மாற்றமாக, குர்ஆன் புதிதாக உண்டாக்கப்பட்டதல்ல, அது அல்லாஹ் விடம் பூவ்வீகமாகவே இருந்ததுதான் என்று கூறினார்கள். இதற்காக அன்றைய அரசு இமாம் ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை சிறையில் தள்ளி சித்ரவதை செய்தது. இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் விரும்பியிருந்தால் ஒரு சிறப்பான ஜமாஅத்தை அன்று உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
இமாம் அபூதாவூத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள். “இமாம் அஹ்மது இப்ன ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நடத்திய மஜ்லிஸ்கள் அனைத்தும் மறுமையை நினைவூட்டுவதாகவே இருந்தன.
“நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுவதெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தாம்” (அல்குர்ஆன் 35:28) அல்லாஹ்கூறிய அருள்மறைவாக்கு. அல்லாஹ்வைப் பற்றி அறிவு, ஞானம் இறையச்சம் இருந்ததினால், பார்போற்றும் இமாம்கள் தங்களின் அறிவாற்றலால் சமுதாயத்தைக் கூறு போடவில்லை. மாறாக குர்ஆன், ஹதீஸை எடுக்க வேண்டியது; எங்கள் சொல்லைத் தள்ளி விட வேண்டும் என்று உறுதியாகக் கூறினார்கள்.
இயக்கம் ஏன்? எதற்கு?
இன்று இமாம்களின் பெயரால் பின்பு வந்தவர்கள் ஏற்படுத்திய மத்ஹபுகளைக் கூடாது என்று கூறும் தவ்ஹீது ஆலிம்கள் புதிய மதஹபுகளாக புதுப்புது இயக்கங்களை ஆரம்பித்து வருகின்றனர். இயக்கம் ஏன் என்ற கேள்விக்கு “முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளனர். ஒழுக்க சீரழிவில் உள்ளனர். பெரும்பான்மையினர் வாழும் நாட்டில் சிறுபான்மையினராக துன்பப்படுகின்றனர். ஆகவே இயக்கம் தேவை” என்று நியாயம் கற்பிக்கின்றனர்.
பொருளாதாரப் புரட்சி
நமது அருமை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்று நினைத்திருந்தால், மக்கமாநகரில் பொருளாதார திட்டங்களை மக்கள் முன் வைத்து மாபெரும் பொருளாதார புரட்சி ஏற்படுத்தியிருக்கலாம். பொருளாதாரத்தின் பெயரால் மக்களை ஒன்று படுத்தியிருக்கலாம். அதற்கான சூழ்நிலை அங்கு ஏராளமாக இருந்தது. காரணம் குரைஷி தலைவர்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மை மக்கள் ஏழ்மை நிலையிலேயே இருந்தனர். அடிமை வணிகம் பிரபலமாக இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட இளமையில் ஒரு சில “கீராத்” பணத்துக்கு ஆடு மேய்த்துள்ளார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருளாதார பிரச்சினையை முன் வைத்து மக்களை ஒன்றுபடுத்தவில்லை.
சிறுபான்மை சமுதாயம் பாதிக்கப்படுதல்
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஆரம்ப கால முஸ்லிம்கள் அனைவரும் ஏழை எளியவர்களே. பலர் அடிமைகளாக எந்த ஒரு சலுகையும் இல்லாமல் குரைஷி தலைவர்களிடம் அடி பணிந்து வாழ்ந்தவர்கள். பிலால் ரளியல்லாஹு அன்ஹு, அம்மார் ரளியல்லாஹு அன்ஹு, கப்பாப் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம்கள் அனைவருமே பெரும்பான்மை குரைஷிகளிடம் துன்பப்படடனர். “எங்கள் துன்பத்தை நீக்குங்கள்” என்று அம்மார் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கோரியபொழுதெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது.
“யாசிருடைய குடும்பத்தினரே பொறுங்கள்! சுவர்க்கம் உங்களுக்குக் கிடைக்கும் என்பது தான்”.
இந்த உலகில் கிடைக்கும் வெற்றியை எதிர்பார்த்து பெரும்பான்மை குரைஷிகளை உடனுக்குடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிர்க்க வில்லை. இறுதிநாளில் கிடைக்கும் வெற்றியை இலக்காய் கொண்டே ஏகத்துவத்தை மட்டும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள்.
சமுதாயத்தில் ஒழுக்க சீரழிவு
இன்றைய இஸ்லாமிய மக்களிடமும் நாட்டிலும் ஒழுக்கக் கேடுகள் உச்சகட்டத்தில் உள்ளன. ஆகவே இச்சீர்கேடுகளைக் களைய இயக்கம் அவசியமானது என்றும் சிலர் கூறலாம்.
ஆனால் அருமை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த மக்கமாநகர் ஒழுக்கக் கேட்டின் உச்சயில் அன்று இருந்தது.” கஃபாவை நிர்வாணமாக தவாஃபு செய்யும் பெண்கள், இன்றைய சிவப்பு விளக்குப் பகுதி என்று கூறுகிறார்களே, அது அன்றே நடைமுறையில் இருந்து வந்தது. அன்றைய அரபு நாட்டின் விபச்சாரிகள் தங்கள் வீடுகளில் சிவப்புக் கொடியை ஏற்றி, நாங்கள் விலைமகள்கள் என்று விளம்படுத்துவார்கள்.
ஒருவனுக்கு பல மனைவியர் இருப்பார்கள். இந்நிலையில் தன் தந்தை இறந்து விட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், அவனது புதல்வர்கள் வீட்டிற்கு ஓடுவார்கள். தன்னைப் பெற்ற தாயைத் தவிர்த்து மற்ற தன் தந்தையின் மனைவிகளில் தனக்குப் பிடித்தமான பெண்ணின் ஆடையை தங்களின் தோள்களில் போட்டுக் கொள்வார்கள். யார்யாருக்கு, யாருடைய ஆடை கிடைத்ததோ அப்பெண் அவன் மனைவி. தாயை தாரமாக ஏற்றக் கொள்ளக் கூடிய கேடு கெட்ட சமுதாயமாக அன்றைய சமுதாயம் நிலவியது.
அருமை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பியிருந்தால் ஆரம்பத்திலேயே ஒழுக்கப் புரட்சி ஒன்றை அங்கு கொண்டு வந்திருக்கலாம். நிச்சயமாக அது வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
மனிதர்களை ஒன்றுபடுத்தும் ஏகத்துவம்
ஆனால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களை ஒன்றுபடுத்த கட்சி உண்டாக்குவதற்கும், ஜமாஅத் உண்டாக்குவதற்கும், இயக்கம் உண்டாக்குவதற்குமுரிய எல்ல வழிகளையும் விட்டுவிட்டு, அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தனது வழியில் வளர்த்தெடுக்கின்றான். நபியே! சொல்லுங்கள்,” நான் ஒரு நபி”; அல்லாஹ்வுடைய தூதர் என்று சொல்லுங்கள் என்று கட்டளையிடுகின்றான்.
இந்த மனித சமுதாயம் ஒன்றுபட வேண்டும். பிறகு எதன் காரணமாகவும் அது வேறுபடக் கூடாது என்பதற்காக ஏகத்துவக் கொள்கையை இதயத்தில் ஏந்திய முதல் சமுதாயத்தை உருவாக்கினார்கள். இப்படி ஒன்றுபடுத்தப்பட்ட சமதாயத்தில் ஸல்மான் ரளியல்லாஹு அன்ஹு, ஸுகைபு ரளியல்லாஹு அன்ஹு, பிலால் ரளியல்லாஹு அன்ஹு போன்றோர் இருந்தார்கள். அவர்கள் யாரும் உணரவில்லை. நான் பாரசீகத்தை சேர்ந்தவனென்றும், ரோம் நாட்டைச் சேர்ந்தவனென்றும்; ஹபஸ் நாட்டை சேர்ந்தவனென்றும். அவர்கள் அல்லாஹ்வின் அருளால் ஒன்றுபட்ட சகோதரர்களாக ஆகிப் போனார்கள்.
இந்த ஏகத்துவ அடிப்படையில் ஒன்றுபட்ட சமுதாயத்தின் காலடியில் மாபெரும் பேரரசுகள் மண்டியிட்டன. அந்நாட்டு மக்களை வறுமையின் பிடியிலிருந்து பொருளாதார தளைகளிலிருந்தும் விடுவித்து ஒழுக்கச் சீலர்களாக மாற்றிக் காட்டினார்கள். சகோதரத்துவத்தை நிலை நாட்டினார்கள்.
இஸ்லாம் அவர்களை சகோதரர்களாக்கிய பிறகு எந்த ஆலிமும், எந்த இமாமும், எந்த அறிஞனும் முஸ்லிம்களைப் பிரிப்பதற்கு, அவர்களை துண்டாடுவதற்கு அவர்களைத் தன்பால் அழைப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.
ஆதாரம் உண்டா?
நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்த்து எடுத்துச் சொல்லுங்கள். ஒரு இமாம், ஒர் அறிஞர் ஒரு முஜாஹித் ஒருவரையாவது எடுத்துக் காட்டுங்கள்? எங்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய ஒருவராவது, அவர் தன்னுடைய பெயரால் அல்லது தான் வைத்த பெயரால், தன்னுடைய லட்சியத்தால், தான் வளர்தத் கொள்கையால ஜமாஅத் என்றும், இயக்கம் என்றும், கழகம் என்றும் உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் யாரும் சுட்டிக் காட்ட முடியாது.
இன்று பெரும்பான்மையான இயக்கங்கள் இஸ்லாத்தை நிலைநிறுத்துவதற்கும், முஸ்லிம்களுக்காகப் போராடுவதற்கும் குர்ஆன், ஹதீஸ் வழிமுறையைக் கைவிட்டு, இஸ்லாம் தூக்கியெறிந்த ஜனநாயக சட்டங்களைத் தூக்கிப் பிடிக்கின்றன. அதனால் இவ்வுலகில் சில நன்மைகளை இவர்கள் பெறக்கூடும்.
ஆனால் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என உளமார ஏற்றுக் கொண்டவர்கள், இறுதி நாளில் கிடைக்கும் வெற்றியை மட்டுமே கவனத்தில் கொள்வர்.ன்இந்த உலகில் அல்லாஹ் இவர்களைக் கொண்டே தன் வாழ்க்கை நெறியை நிலை நாட்டலாம்; அல்லது இவர்கள் ஊட்டும் உணர்வில், காட்டும் தியாகத்தில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறையைக் கொண்டும் நிலைநாட்டலாம். அல்லது அவர்கள் தயாரிக்கும் அடுத்த தலை முறையைக் கொண்டும் நிலை நாட்டலாம்.
அனைததும் ஏகன் அல்லாஹ்வின் நாட்டம் குர்ஆன், ஹதீஸ் வழியில் செல்வதும், பிரச்சாரம் செய்வதும் மட்டுமே நமது பணி! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
Dr.U.M.M.Nubar Mohamed Farook, SriLanka