விவாகரத்து பெறும் பெற்றோர்களால் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் எதிர்காலம்
விவாகரத்து செய்துகொள்ளும் பெற்றோர்களால், அவர்கள் குழந்தைகளின் எதிர்காலமும் பாதுகாப்பும் கேள்விக் குறியாகிறது. இந்நிலை மாற இந்து திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
விவாகரத்து கோரி வழக்கு தொடரும் தம்பதிகளுக்கு குழந்தை இருந்தால் விவாகரத்து மூலம் அவர்கள் மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சினை எழுகிறது. அதனால் அவர்கள் சமூக விரோதியாகும் அபாயமும் இருக்கிறது. பெண் குழந்தைகள் வக்கிர குணம் கொண்டவர்களால் பாதிக்கப்படும் சூழ்நிலையும் உள்ளது.
விவாகரத்து கோரும் தம்பதியின் குழந்தைகளை யார் வைத்துக் கொள்வது என்பது பற்றி இந்து திருமண சட்டப்பிரிவு 26-ல் கூறப்பட்டுள்ளது. இதன்படி, குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விச் செலவு குறித்து இடைக்கால உத்தரவு மட்டுமே பிறப்பிக்க முடியும்.
அதாவது, குழந்தையைப் பார்க்கும் அனுமதி, குழந்தைக்கான செலவுத் தொகை போன்ற கோரிக்கைக்காக இடையீட்டு மனுதாக்கல் செய்யலாம். ஆனால், பிரதான விவாகரத்து வழக்கு முடியும்போது, இடையீட்டு வழக்கும் முடிவுக்கு வந்துவிடும். அதுபோன்ற நேரத்தில், குழந்தையின் பாதுகாப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.
“சிங்கப்பூரில் ஒரு தம்பதி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தால் அந்நாட்டு திருமண சட்டத்தின்படி, முதலில் குழந்தையின் நிலையை நிர்ணயிக்க உத்தரவிடப்படுகிறது. குழந்தைகளின் உடல்ரீதியான காப்பாளர், சட்டரீதியான காப்பாளர் யார் என்பது பற்றி சமரசமாகப் பேசி சட்டப்பூர்வமாக முடிவெடுத்த பிறகே விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படுகிறது. ஆனால், நம் சட்டத்தில் இதற்கான வழிவகை இல்லை” என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.கண்ணதாசன்.
இதற்கு, இந்து திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
18 ஆயிரம் வழக்குகள்
தமிழகத்தில் 11-க்கும் மேற்பட்ட குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன. சென்னை மாவட்டத்துக்கான 4 குடும்ப நல நீதிமன்றங்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்படுகிறது. விவா கரத்து கோரியும், சேர்ந்து வாழ உத்தரவிடக் கோரியும், திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரியும் இங்கு ஆண்டுதோறும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படு கின்றன. சென்னையில் உள்ள 4 குடும்ப நல நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 18 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
-டி.செல்வகுமார்