இல்லறம் பற்றிய இறைமறை, இறைநபி நிறைமொழிகள்
இல்லறம் பற்றிய இறைமறை (குர்ஆன்) நிறைமொழிகள்
1 உங்களில் யாருக்காவது வாழ்க்கைத் துணை இல்லாவிடில் அவர்கள் திருமணம் செய்து விடுங்கள் (24 : 32)
2. நீங்கள் (திருமணம்) செய்து கொள்ளும் பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை (மணக் கட்டணம்) கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள் (4 :4)
3. நம்பிக்கையாளர்களே ! பெண்களை பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல (4 : 19)
4. அவர்கள் (மனைவியர்) உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் அமைகின்றீர்கள். (2 :187)
5. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் எனவே விருப்பபடி உங்கள் விளைநிலங்களுக்கு செல்லுங்கள். (2 :223)
6. உங்களிருந்தே உங்களுக்காக மனைவியரை இறைவன் படைத்திருக்கிறான். உங்கள் மனைவியிலிருந்து சந்ததிகளையும் (அவர்களிலிருந்து) பேரன் பேத்தியரையும் உற்பத்தி செய்து உங்களுக்கு நல்ல உணவுகளையும் புகட்டுகிறான். (16 : 72)
7. அவர்களிடம் (மனைவியர்) கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். (4 : 19)
8. நல்லொழுக்கமுள்ள பெண்கள் பணிந்து நடப்பார்கள். (4 : 34)
9. எவர்கள் நம்பிக்கையாளரான கற்புடைய அப்பாவிப் பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் உறுதியாக இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்படுவார்கள். இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு. (24 : 23)
10. (மனிதர்களாகிய) அவர்கள் தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். இறைவனாகிய நாம் அதை அவர்களுக்கு விதிக்க வில்லை. (57 : 27)
இல்லறம் பற்றிய இறைநபி )இன்மொழிகள்
1. திருமணம் செய்தல் என் வாழ்க்கை வழிமுறையாகும் (சுன்னத்) எவர் இந்த வழியினை பின்பற்றவில்லையோ அவர் எனது வழிமுறை தவறியவர் ஆவார்.
2. திருமணம் செய்து கொண்டவர் மதத்தில் ஒரு பகுதியைப் பெற்று விட்டார். மறுபகுதியை அவர் இறையச்சத்தில் பெற வேண்டும்.
3. பணக்காரியைவிட, குலச்சிறப்புடையவளைவிட, அழகுள்ளவளைவிட மதமார்க்கப் பக்தியுள்ள பெண்ணை தேடித்திருமணம் செய்து கொள்ளுங்கள்.
4. உங்களை மிகவும் நேசிக்கும் பெண்ணை, பிள்ளைகளைப் பெறும் தகுதிபெற்ற பெண்ணை அறிந்து மணந்து கொள்ளுங்கள்.
5. நீங்கள் மணமுடிக்கப் பேசிச் செல்லும் பெண்ணை பார்க்க இயலுமானால் பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்களிடையே இணக்கத்தையும், அன்பையும் ஏற்படுத்தக் கூடும்.
6. ஒருவர் திருமணத்திற்காக பெண் பேசும் வீட்டாரிடம், அவர் கை விடாத வரையில் மற்றவர் பெண்பேச முயல வேண்டாம்.
7. தம் பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
8. பெண்களிடம் ஒப்புதல் பெற்று அவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
9. மஹர் (மணக்கட்டணம்) சிறிதே ஆயினும் திருமண வேளையில் கொடுக்கப்பட வேண்டும்.
10. விலை மதிக்கக்கூடிய ஒரு பொருளையோ அதன் விலையையோ மஹராகக் கொடுக்கலாம்.
11. எவரது நல்லொழுக்கம் பற்றி உங்களுக்கு திருப்தி உள்ளதோ அவர் பெண்கேட்டு வந்தால் திருமணம் செய்து வையுங்கள்.
12. நல்லொழுக்கமுள்ள நங்கையை மணமுடிப்பவர் வாழ்வில் வெற்றி பெறுகிறார்.
13. உங்கள் திருமணத்தை பலர் அறிய வெளிப்படையாகச் செய்யுங்கள். இறையில்லங்களில் (மஸ்ஜிதுகள்) நடத்துங்கள்.
14. திருமணங்களில் இறையருள் நிறைந்தவை எளிமையான திருமணங்களே.
15. இறைப் புகழுரைக்கும் குத்பா பேருரைக்குப் பின் திருமணத்தை நடத்துங்கள்.
16. இருவருக்கிடையே அன்பை வளர்க்க திருமணத்திற்கு ஈடாக வேறு எதையும் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.
17. திருமணம் செய்து கொள்பவரின் நன்மை வேண்டியும் அபிவிருத்திக்காகவும் தீங்கை விட்டு பாதுகாவல் தேடியும் இறைஞ்சுங்கள்.
18. உங்கள் மனைவிக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் அளிக்கவேண்டியது உங்களது கட்டாயக் கடமையாகும்.
19. உங்களுக்கு மனைவி மீது சில கடமைகள் உண்டு. அவருக்கும் உங்கள் மேல் சில கடமைகள் உண்டு.
20. எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் உங்களின் மனைவி உங்களுக்கு மணமுடித்து வைக்கப்பட்டாரோ அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியது உங்களின் முக்கியக் கடமையாகும்.
21. ஒரு பெண் தன் கணவனுடைய இல்லத்தில் அரசியாவார்.
22. இளையோரே ! உங்களில் ஆற்றலுடைய ஒவ்வொருவரும் திருமணம் செய்துகொள்க. ஏனெனின் இது (தீய) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பை பாதுகாக்கும்.
23. உங்கள் மனைவியிடம் நீதியாகவும் நேர்மையாகவும் நல்லவிதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.
24. உங்களில் எவர் தமது மனைவிக்கு நல்லவரோ அவரே உலகில் மேலானவர்.
25. தன் மனைவியை எவரும் வெறுக்கலாகாது. அவளுடைய ஒரு குணம் பிடிக்க வில்லையானால் மற்றொரு நல்ல குணத்திற்காக நேசிப்பீர்களாக !
26. உலகம் என்பது பெருஞ்செல்வம்; நல்ல பெண்ணே அதில் சிறந்த பொருள்.
27. இவ்வுலக இன்பங்களில் மிகவும் மேலானது நற்பண்புடைய பெண்ணே.
28. ஒருவர் மற்றொருவருக்கு சிரம் பணிய அனுமதிக்கப்பட்டிருந்தால் மனைவி தன் கணவனுக்கு சிரம் பணிய கட்டளை இட்டிருப்பேன்.
29. கணவன் திருப்தியுற்ற நிலையில் இறக்கும் பெண் சுவனபதி செல்வது உறுதி.
30. தம் கணவர் காண முகம் மலர்பவளும், அவனது கட்டளையை பின்பற்றி நடப்பவளும், உடலாலும் பொருளாலும் மாறுபட்டு அவரின் அதிருப்தியை அடையாதவளுமாகிய பெண்ணே பெண்களில் மிகச் சிறந்தவளாவாள்.
31. ஒரு பெண் தக்க காரணமின்றி தன் கணவனை விட்டு விலகிச் சென்று படுப்பாளாயின் அவளை வானவர்கள் (மலக்குகள்) சபித்துக்கொண்டேயிருப்பர்.
32. பெண்கள் ஆதாமின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் அது உடைந்து விடக்கூடும். ஆதலின் நல்லவற்றை மென்மையாக எடுத்துரைத்து திருந்திட முயலுங்கள்.
33. நாணமில்லாத பெண் உப்பில்லாத பண்டம் போன்றவன்.
34. பெண்களின் முகத்தில் அடிக்காதீர். அவர்களை ஏளனம் செய்யாதீர். தனியாக வேறிடங்களில் தங்கவும் அனுமதியாதீர்.
35. பருவம் அடையும்வரை இரு சிறுமிகளை போற்றிப் பேணுபவர் சொர்க்கத்தில் என்னோடு நெருங்கி இருப்பர்.
36. பருவப் பெண்ணை இவ்வுலகில் பாதுகாக்கும் செயல் மறுமையில் நரகத் தீயிலிருந்து பாதுகாக்கும் நல்ல திரையாகும்.
37. தகுந்த காரணமின்றி ஒரு ஆணோ பெண்ணோ விவாகரத்து கோரினால் அவர்கள் சுவனத்தின் நறுமணத்தை நுகர முடியாது.
திருநபியின் திருமண வாழ்த்து இறைஞ்சுதல் ( துஆ )
”பார(க்)கல்லாஹு லக வபார(க்)க அலைக்க வஜமஅ
பைன(க்)குமா ஃபீ கைர்“
பொருள்:
“இறைவன் உமக்கு அருள் செய்வானாக மேலும் உம்மீது அபிவிருத்தியை சொரிவானாக ! உங்கள் இருவரையும் நலனில் ஒன்றிணைப்பானாக !”
தொகுப்பாசிரியர்: பேராசிரியர் முனைவர் திருமலர். எம்.எம். மீரான் பிள்ளை,
முன்னாள் துணை முதல்வர் & தமிழ்த் துறைத் தலைவர், முதனிலை ஆராய்ச்சியாளர், யு.ஜி.சி. முதுநிலை ஆய்வுத் திட்டம், பல்கலைக் கழகக் கல்லூரி, திருவனந்தபுரம், செல் : 94950 11317
source: http://mudukulathur.com/?p=16596