நலம் அளிப்பவன் யார்?
சிராஜுல் ஹஸன்
குழந்தைக்கு உடல் நலமில்லை என்றால், தாயுள்ளம் எப்படித் தவிக்கும் என்பதை நாம் அறிவோம்.
குழந்தை மீண்டும் உடல் நலம் பெறும் வரை அதன் அருகிலேயே அமர்ந்து கண்களில் நீர் மல்க, இதயம் உருக இறைவனை நினைத்து அந்தத் தாய் செய்யும் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும்ஸ அப்பப்பா! அதனால்தான் தாயன்புக்கு ஈடாகத் தரணியில் ஏதும் இல்லை என்று தாய்ப்பாசம் போற்றப்படுகிறது.
“ஒரு தாய் குழந்தை மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாளோ, அதைவிட எழுபது மடங்கு அதிகமாக இறைவன் தன் படைப்பினங்கள் மீது பாசம் வைத்துள்ளான்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நோயாளிகளைச் சென்று நலம் விசாரிப்பது, இஸ்லாத்தில் பெரிதும் வலியுறுத்தப்பட்ட பண்பாடு ஆகும்.
“ஒரு முஸ்லிமுக்கு, இன்னொரு முஸ்லிம் மீது ஆறு கடமைகள் இருக்கின்றன” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே, என்ன அந்த ஆறு கடமைகள்?” என்று வினவினார்கள். அதற்கு இறைத்தூதர் கூறினார்:
1. நீங்கள் முஸ்லிம் சகோதரரைச் சந்தித்தால், அவருக்கு ஸலாம் கூறுங்கள்.
2. உங்கள் சகோதரர் ஒருவர் விருந்திற்கு அழைத்தால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
3. உங்களிடம் ஒருவர் ஆலோசனை கேட்டால், அவருக்கு நலம் ஏற்படும் வகையில் நல்ல ஆலோசனை வழங்குங்கள்.
4. ஒருவர் தும்மிவிட்டு ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று கூறினால், அதற்குப் பதிலாக, ‘யர்ஹமுகல்லாஹ்’ (இறைவன் உனக்கு அருள்புரிவானாக) என்று கூறுங்கள்.
5. ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அவரை நலம் விசாரிக்கச் செல்லுங்கள்.
6. ஒருவர் இறந்து விட்டால், அவருடைய ஜனாஸா – இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளுங்கள்.
நோயாளியை நலம் விசாரிக்கச் செல்லும்போது அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அண்ணலார் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
நோயாளியின் தலைக்கு அருகில் அமர்ந்து, அவருடைய தலையையும், உடலையும் தடவிக் கொடுத்து அன்பான ஆறுதல் வார்த்தைகள் கூற வேண்டும். ‘நோய்த் துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, இறைவன் மகத்தான நற்கூலியை வழங்குவான்’ எனும் உண்மையை அவர்களுக்கு இதமாக உணர்த்த வேண்டும்.
ஜைத் இப்னு அர்கம் எனும் நபித்தோழர் கூறுகிறார். “ஒரு முறை கண் வலியால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை நலம் விசாரிப்பதற்காக வந்தார். என்னைப் பார்த்து, “ஜைதே, உங்களுடைய கண்ணில் இவ்வளவு வலி இருக்கிறதே, என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான், “வேதனையைத் தாங்கிக் கொள்கிறேன். பொறுமையை மேற்கொள்கிறேன்” என்று பதில் அளித்தேன். உடனே அண்ணல் நபி, “இந்த வலியைத் தாங்கிக்கொண்டு நீங்கள் பொறுமையாக இருப்பதால் அல்லாஹ் உங்களுக்கு சுவனத்தை அளிக்கிறான்” என்று கூறினார்கள்.
அதுமட்டுமல்ல, வலி அல்லது நோய்த்துன்பம் அதிகமாக இருக்கும் இடத்தில் தமது வலக்கையை வைத்துப் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்.
“இறைவா! இந்த வலியைப் போக்குவாயாக. மனிதர்களுடைய அதிபதியே! இவருக்கு உடல்நலத்தை வழங்குவாயாக. நீயே நலம் வழங்குபவனாக இருக்கிறாய்.
உன்னைத் தவிர வேறு எவரும் நலம் அளிப்பார்கள் எனும் நம்பிக்கை இல்லை. இவருக்கு நோயின் அறிகுறியே இல்லாது போகும் வகையில் நலம் அருள்வாயாக !”
நோயாளியை நலம் விசாரிப்பதாகச் சொல்லிக் கொண்டு ‘வளவள’ வென பேசிக் கொண்டிருப்பதையோ, அவருடைய ஓய்வுக்கும், அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்துவதையோ அண்ணலார் தடுத்துள்ளார்கள்.
“நோயாளியிடம் அதிக நேரம் அமராமல் இருப்பது, சத்தமும், கூச்சலும் போடாமல் இருப்பது நபி வழியாகும்” என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுஎனும் நபித்தோழர் கூறுகிறார்.
முஸ்லிம் அல்லாத ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவரையும் சென்று சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பது இஸ்லாம் கற்றுத்தரும் உயர் பண்பாடாகும்.
யூதச் சிறுவன் ஒருவன் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பணி புரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் நோய்வாய்ப்பட்டு விட்டான். ‘வேலைக்காரச்சிறுவன் தானே’ என்று அண்ணலார் அலட்சியப்படுத்தவில்லை. அந்த சிறுவனின் வீடு தேடிச் சென்று, அவனை நலம் விசாரித்து, அவனுடைய பெற்றோருக்கும் ஆறுதல் மொழி கூறிவிட்டு வந்தார்கள். இறைத்தூதரின் இந்த உயர்பண்பு கண்டு யூதக் குடும்பம் மனம் நெகிழ்ந்து போனது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இறைவன் கூறியதாக ஒரு படிப்பினை ஊட்டும் நிகழ்வை நமக்கு அறிவித்துத் தந்துள்ளார்கள்.
“ஆதத்துடைய மகனே, நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை வந்து நலம் விசாரிக்கவில்லையே” என்று இறைவன் மறுமையில் கூறுவான்.
அப்போது அடியான், “இறைவா, நீயே அனைத்துப் படைப்பினங்களின் அதிபதி. உன்னை எப்படி நான் நலம் விசாரிக்க முடியும்” என்று கேட்பான்.
அதற்கு இறைவன், “நான் படைத்த இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தான். நீ அங்கு சென்று அவனை நலம் விசாரித்திருந்தால், என்னை அங்கு கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
பார்த்தீர்களா…! ஒரு நோயாளியை நலம் விசாரித்தல் என்பது இறைவனையே நலம் விசாரிப்பது போலாகும் என்கிறது இஸ்லாம். என்னே உயர் பண்பாடு !
ஒரு முறை என் அலுவலக மேலாளர் நோய்வாய்ப்பட்டிருந்தார். நானும், உடன் பணியாற்றும் இன்னொரு நண்பரும் அவரை நலம் விசாரிப்பதற்காக மேலாளரின் வீட்டிற்குச் சென்றோம். உடன் வந்த நண்பர் மேலாளரை நலம் விசாரிப்பதற்குப் பதிலாக, வீட்டிலுள்ள பொருள்களை எல்லாம் நோட்டம் விட்டுக் கொண்டும், ‘இந்தத் தொலைக்காட்சிப் பெட்டியை எப்ப வாங்கினீங்க? நான் போன முறை வந்தபோது உங்கள் அறையில் ஏர்கண்டிஷன் இல்லையே, எப்போ ஏசி போட்டீங்க?’ என்றெல்லாம் தொணதொணக்கத் தொடங்கி விட்டார். இத்தகைய நடத்தையை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹுஎனும் நபித்தோழர் நோய்வாய்ப்பட்டிருந்த ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றார். அப்போது தம்முடன் சிலரை அழைத்துச் சென்றார். அங்கு ஒரு பெண் இருந்தார். நபித்தோழருடன் வந்தவர்களில் ஒருவர் அந்தப் பெண்ணை உற்று நோக்குவதை அறிந்தபோது, “நீர் அவளைப் பார்ப்பதைவிட உன் கண்களைப் பிடுங்கிக் கொள்வது நல்லது” என்று எச்சரித்தார்.
நோயாளிக்கு ஆறுதல் கூறுவதுடன், அவர் வசதியற்றவராக இருந்தால், அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்வதும் நலம் விசாரித்தலில் அடங்கும். அவருடைய நோயின் காரணமாகக் குடும்பம் வறுமையில் இருக்குமேயானால், அவருடைய குடும்பத்தினருக்கும் உதவும்படி இஸ்லாம் அறிவுறுத்துகிறது. நோயாளிக்கு எல்லா வகையிலும் ஒத்தாசையாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாம் கற்றுத்தரும் இனிய பண்பாடாகும்.
நன்றி : நர்கிஸ் – டிசம்பர் 2014