வெறும் மனோஇச்சையைத் தீர்த்துக்கொள்ள பலதார மணம் செய்து கொள்ள நாடும் கணவன்மார்களை அவர்களது முதல் மனைவிகள் தடுக்க உரிமை உண்டா?
கேள்வி – பலதார மணம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றானாலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் செய்துக் காட்டப்பட்ட ஒன்றானாலும், தார்மீக அடிப்படையில் இது ஏற்றுக்கொள்ளக் கூடியதா? அதுவும் முதல் மனைவியின் அனுமதியின்றி செய்வது சரியான செயலா? காரணம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல மனைவிகளை மணந்தது பல்வேறு சூழ்நிலை மற்றும் தகுந்த காரணங்களின் அடிப்படையில்தான். ஆனால் தற்போது ஆண்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத் என்று கூறிக்கொண்டு பலதார மணம் செய்கின்றனர். இதற்கு வேறு எந்த தகுதியான காரணங்களும் இல்லை. பெண்ணாசை மட்டும்தான் இவர்களை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது என்பது வெளிப்படை.
திருமணத்தில் தாம்பத்யம் தவிர்க்க முடியாத முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் அதையும் தாண்டி அன்பு, பரிவு, புரிந்துணர்வு, பரஸ்பர சந்தோஷம் ஆகியவையும் முக்கியமானவை. இவைகளை உடலுறவின் வழியாகத்தான் பெருக்கிக் கொள்ள முடியும் என்றாலும் அதற்கு மட்டுமே முதலிடம் கொடுத்து விட முடியாது.
எனவே, என்னுடைய கேள்வி என்னவென்றால்: எவ்வித சரியான காரணமும் இல்லாமல் வெறும் மனோஇச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக பலதார மணம் செய்துக் கொள்ள நாடும் கணவன்மார்களை அவர்களது முதல் மனைவிகள் தடுக்க உரிமை உண்டா? அவ்வாறு செயல்படும் தனது கணவர் மீது ஷரிஅத் படி முதல் மனைவி வழக்குத் தொடர முடியுமா? விளக்கம் தேவை.
பதில்: அரபுகளும் சரி உலகின் இதர பகுதிகளில் வாழும் முஸ்லிம்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களும் சரி இவர்களெல்லாம் திருமணத்தின் மூலம் ஒரே நேரத்தில் 3 – 4 மனைவிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்கு காரணம் இறைத் தூதர் பலதாரமணம் புரிந்துள்ளார் என்பதனால் அல்ல மாறாக ஒரே நேரத்தில் நான்கு பெண்கள் வரை ஒருவனுக்கு மனைவியாக இருக்கலாம் என்ற இறைவனின் அனுமதிதான் இதற்கு காரணமாகும்.
‘….பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ – மும்மூன்றாகவே – நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கிடையில் நீதமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே போதுமாக்கிக் கொள்ளுங்கள்….’ (அல் குர்ஆன் 4:3)
அரபுகள் உட்பட முஸ்லிம்களில் வசதிவாய்ப்புள்ளோர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வதற்கு இந்த வசனம்தான் காரணமாகும்.
இந்த வசனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 52ம் வயதின் இறுதிப் பகுதியில் இறங்கியது என்று விளங்க முடிகிறது. இந்த வசனம் இறங்கும் போது இறைத் தூதர் அவர்களுக்கு மூன்று திருமணங்களே முடிந்திருந்தன. அதில் முதல் மனைவி இறந்துப் போக இரண்டு மனைவிகளே உயிரோடு இருந்தனர். இறைத்தூதர் இரண்டு மனைவிகளோடு இருக்கும் போதே முஸ்லிம்கள் அதிகப்பட்சமாக நான்கு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற அனுமதி இறைவன் புறத்திலிருந்து கிடைத்து விட்டது.
தார்மீக அடிப்படையில் இது ஏற்றுக் கொள்ளத் தக்க செயலா.. என்று கேட்கிறீர்கள். இறைவன் அனுமதித்த ஒரு காரியத்தில் (நமக்கு விளங்காவிட்டாலும்) தார்மீகக் காரணங்கள் நிச்சயம் இருக்கும் என்பதை நாம் முதலில் நம்ப வேண்டும். எந்த ஒரு சட்டத்தையும் போதிய நியாயமில்லாமல் இறைவன் இயற்றவில்லை.
ஆண் தரப்பில் நின்று பார்த்து ‘பெண்ணாசையால் தான் இவர்கள் இரண்டாம் திருமணம் செய்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை வைக்கும் நாம், பெண்கள் தரப்பில் நின்று சிந்தித்து கூடுதலாக சில பெண்களுக்கு வாழ்க்கைக் கிடைத்துள்ளதையும் புரிந்துக் கொள்ளத்தான் வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக பலதாரமணம் நடப்பதால் சில – பல விதவைப் பெண்கள், தலாக் சொல்லப்பட்டப் பெண்கள், வறுமையின் பிடியில் சிக்கி வாழ்க்கைக்காக ஏங்கும் பெண்கள் இவர்களுக்கு வாழ்க்கைக் கிடைக்கின்றது.
உண்மையில் பெண்ணாசையில் – பெண்ணாசையில் மட்டும் – ஒருவன் இன்னொரு திருமணம் செய்தாலும் அப்போதும் அவனை குறைச்சொல்ல முடியாது. ஏனெனில் அனுமதிக்கப்பட்ட வழியிலேயே அவன் தனது தேவையை நிறைவேற்றியுள்ளான் என்ற நியாயமே அங்கு முன்னிலையில் நிற்கும்.
இன்னொன்றையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழகம் போன்ற இடங்களில் ஒருவன் இன்னொரு திருமணம் செய்ய நாடுகிறான் என்றால் முதல் மனைவியிடம் அவன் எதிர்பார்க்கும் விஷயத்தில் ஏதோ குறை இருக்க வேண்டும். அது இஸ்லாமியக் கல்விக் குறைப்பாடாகவோ அல்லது குழந்தைப் பெற்றுக் கொள்ளும் விஷயத்தில் ‘மாட்டேன்’ என்ற மறுப்புக் காரணமாகவோ அல்லது தாம்பத்ய உறவில் ஏற்படும் கோளாறுகளோ அல்லது கணவனுக்கு கட்டுப்படும் தன்மையின்மையில்லாத காரணத்தினாலோ.. இப்படி ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். நமக்குத் தெரிந்து இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டவர்களில் பலருக்கு நாம் இங்கு சுட்டிக்காட்டியுள்ள ஏதோ ஓர் இடற்பாடு இருக்கவே செய்தது.
குறைப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட மனிதர்கள் யாரும் இல்லை. கணவனிடம் உள்ள குறைப்பாடுகளை அலட்சியப்படுத்தி விட்டு அவர்களோடு வாழும் பெண்கள் இங்கு லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அந்த பண்பு கணவன்மார்களுக்கு இருக்கக் கூடாதா.. என்ற நியாயமான மறுப்பு இங்கு வரலாம்.
இந்த தரப்பிலும் அந்த பண்புள்ள ஆண்கள் லட்சக்கணக்கில் இருக்கத்தான் செய்கிறார்கள். வழித் தவறிப் போன மனைவிகளைக் கூட மன்னித்து, அரவணைத்து – ஆதரித்து வாழும் கணவர்களைக் கூட இங்கு காணலாம். மனைவியிடம் குறைப்பாடு தென்பட்டவுடன் அனைத்து ஆண்களும் உடனே இன்னொரு திருமணத்திற்கு தயாராகி விடுவதில்லை.
நீங்கள் குறிப்பிட்ட அன்பு – பண்பு – பாசம் – பரிவு – புரிந்துணர்வு இவை இல்வாழ்க்கைக்குத் தேவையான அரண்கள் தான் என்றாலும் இவைகளைக் கடந்துப் போன மனநிலையைப் பெற்றவர்களை என்ன செய்வது?
மார்க்கத்தில் இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்பதை பெண்கள் அறிந்து அதற்கு தன் கணவன் உட்பட்டு விடாதவாறு நடந்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த பட்சம் தன் கணவன் இன்னொரு கல்யாணத்திற்கு தயாராகிறான் என்ற அறிகுறிகள் தென்படும் போதாவது தன்னை உஷார் படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது தனது கனவருக்கு எதில் நாம் குறைபாடு வைத்துள்ளோம் என்பதை சிந்தித்துணர்ந்து அதை சரி செய்துக் கொண்டாலே போதுமானது.
இரண்டாம் – மூன்றாம் திருமணங்கள் நடந்து முடிந்தவுடன் சண்டைப் போடுவதாலோ – கணவன் மீது எரிந்து விழுவதாலோ ஆகப்போவது ஒன்றுமில்லை. ஷரிஆ கோர்ட்டில் இந்த திருமணம் செல்லாது என்று வழக்குத் தொடரவும் முடியாது. ஏனெனில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கான ‘தனியார் சட்டம்’ பலதாரமணத்தை அனுமதித்துள்ளது.
source: http://tamilmuslimway.blogspot.in/2011/05/23.html
கேள்வி: நாம் (ஜம்மு) தொழுகையை நம் வசதிக்கேற்ப எளிதாக்கிக்கொள்ள சேர்த்து தொழலாமா? ஸஹிஹ் ஹதீஸ் தங்கள் பார்வைக்கு…
நூல் மாலிக்… முவத்தா வால்யும் vol 1, பக்கம் 161, இப்னு அப்பாஸ் கூறியதாவது… நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹர், அஸர் சேர்த்து தொழுதுள்ளார்கள். மற்றும் மக்ரிப், இஷா சேர்த்து தொழுதுள்ளார்கள் எந்த காரணமும் இல்லாமல்.
ஸஹிஹ் முஸ்லிமில் கூட்டுத்தொழுகை என்ற தலைப்பின்கீழ்…இப்னு அப்பாஸ் அறிவிப்பதாவது… எந்த கூட்டதாருடைய (எதிரி) பயமும் இல்லாத நேரத்திலும், பிரயாணம் இல்லாத நேரத்திலும் லுஹர், அஸர் சேர்த்து தொழுதுள்ளார்கள். மற்றும் மக்ரிப், இஷா சேர்த்து தொழுதுள்ளார்கள். (சஹிஹ் முஸ்லிமில் (ஆங்கில மொழியாக்கம்) பாகம் CCL, Tradition #1515. இதைப்பற்றி விளக்கம் தேவை.
நீங்கள் குறிப்பிட்டுள்ளதுப் போன்று ஆதாரப்பூர்வமான செய்திகள் பல நூல்களில் அறிவிக்கப்பட்டுள்ளது உண்மைதான். (மேலும் நூல்கள் அஹ்மத் 3152 திர்மிதி 172 அபுதாவூத் 1025)
جمع رسول الله صلى الله عليه وسلم بين الظهر والعصر والمغرب والعشاء في المدينة من غير خوف ولا مطر
நம்முடைய அனைத்துத் தொழுகைகளையும் தீர்மானிப்பதற்கு இந்த ஒரு கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலாகாலத்துக்கும் இப்படி சேர்த்து (ஜம்வு) தொழுதுக் கொண்டிருக்கவில்லை.
பயமோ மழையோ இல்லாத நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வாறு செய்துக் காட்டியுள்ளார்கள் என்பதிலிருந்து சில அவசரங்களுக்கு அவ்வாறு செய்துக்கொள்ளலாம் என்றுதான் விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக இந்த ஒரு செய்தியை மட்டும் ஆதாரமாகக் கொண்டு எப்போதும் அவ்வாறு செய்துக் கொள்ளலாம் எனறு முடிவெடுத்தால்,
إنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (அல்குர்ஆன் 4:103)
இந்த வசனத்துக்கு விளக்கமாக இநைத்தூதவர்கள் தம்முடைய வாழ்நாள் முழுவதும் தொழுகையின் நேரங்களை விளக்கி அதற்குரிய நேரங்களில் தொழுதுக் காட்டியுள்ளார்கள்.
எனவே உள்ளுரில் இருக்கக் கூடியவர்கள் தொழுகையை அதற்குரிய நேரங்களில் தான் தொழ வேண்டும். தவிர்க்க முடியாத சில நேரங்களில் சேர்த்து தொழுதால் அதை கூடாதென்று சொல்ல முடியாது. ஏனெனில் அதற்கும் நபியிடம் வழிகாட்டல் இருக்கின்றது.
பிரயாணிகளாக இருந்தால் அவர்கள் எப்பொழுதும் சேர்த்து குறைத்துத் தொழுதுக் கொள்ளலாம்.
source:http://tamilmuslimway.blogspot.in/2011/03/36.html