உம்மி நபியை மாமேதையாக்கியது எது?
ஃபாத்திமா ஷஹானா
”அல்லாஹ்வையும் அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும் அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்.” (அல்குர்ஆன் 7:158)
இந்த அல்குர்ஆன் வசனத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர் அதாவது உம்மி நபி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜாஹிலியாக் காலத்திலேயே பிறந்தார்கள்.
ஜாஹிலியாக் காலம் என்பது அறியாமைக் காலம். மக்கள் படிப்பறிவில்லாமல் நாகரீகமற்று மூட நம்பிக்கையால் மூழ்கியிருந்த காலம். பெண் பிள்ளைகளை உயிருடன் குழி தோண்டிப் புதைத்த காலம். இப்படிப் பட்ட கொடூர குணம் கொண்ட மக்கா நகர அரபிகள் மத்தியில் தான் நபியவாகளின் இளமைக் காலம் இருந்த்து.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
அரபுகளின் அறியாமையை அறிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமென்றால் ‘அல் அன்ஆம்’ (என்னும் 6-வது) அத்தியாயத்தில் நூற்றி முப்பதாவது வசனத்திற்கு மேல் ஓதுங்கள். அந்த வசனம் இதுதான்: அறியாமையினாலும் மூடத்தனத்தினாலும் தம் குழந்தைகளை கொன்றுவிட்டு அல்லாஹ்வின் மீது பழி சுமத்தி தங்களுக்கு வழங்கியிருந்தவற்றைத் தாங்களாகவே தடை செய்தவர்கள் நிச்சயமாகப் பேரிழப்புக்கு ஆளாகியும்விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வழிதவறிப் போய்விட்டார்கள். அவர்கள் நேர்வழி பெற்றவர்களாய் இல்லை. (திருக்குர்ஆன் 06:140) (புஹாரி 3524)
இவர்களிடத்தில் அல்லாஹ்விற்கு இணை வைக்கும் சிலை வணக்கம் உட்பட விபச்சாரம், மது அருந்துதல், கொலை, கொள்ளை, சூதாட்டம், வட்டி இன்னும் பல பாவச் செயல்கள் குடிகொண்டிருந்தன. மனிதர்கள் மாக்களாக உலா வந்து கொண்டிருந்த காலம். அரேபியா முழுவதும் அறியாமை எனும் இருள் சூழ்ந்த காலம்.
இக்காலகட்டத்திலேயே முஹம்மதென்னும் ஒளி அரபு தேசத்தில் உண்டாயிற்று பிறக்கும் முன் தன் தந்தையையும்இ பிறந்து ஆறு வருடத்தில் தன் தாயையும் இழந்த நிலையில் வளர்த்தெடுக்கப்பட்டார்கள்.
இயற்கையிலேயே ஒரு மனிதனது சூழல் அவனது வாழ்க்கையின் அனைத்து ஏற்றத் தாழ்வுகளுக்கு முன்னோடியாக இருக்கின்றது. சமூகவியலாளர்களின் ஆய்வுகளின் படிஇ ஒரு மனிதனது வாழ்க்கை அவனது பெற்றோர்இ குடும்பம்இ சுற்றுப்புறச்சூழல்இ வருமானம் ஆகிய நிலைகளைக் கொண்டு வெவ்வேறு வடிவங்களில் அவனது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வகையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறு பிராயத்தை எடுத்துக் கொண்டால் பெற்றோரின் அரவணைப்பு அவர்களுக்கு மிகக் குறைவாகவே கிடைத்திருக்கும். தந்தையின் அரவணைப்பு அறவே கிடைக்கவில்லை.
”உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?” (அல்குர்ஆன் 93:6)
அவர்களது சுற்றுப்புறச்சூழல் கூட பெரிதாக மதிக்கத்தக்க அளவில் இருந்ததில்லை. குடும்ப சூழ்நிலையும் பெரும்பாலாக அல்லாஹ்விற்கு இணை வைக்கும் நபர்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. இவ்வனைத்து மோசமான நிகழ்வுகளுக்கு மத்தியில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறு பிராயத்திலிருந்து நல்ல பண்புகளோடுஇ சிறந்த ஒழுக்க விழுமியங்களோடு நம்பிக்கையும்இ நாணயமும் உடையவராக காணப்பட்டனர்.
“நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.” (அல்குர்ஆன் 68:4)
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் அவர்களது சுற்றுப்புறச் சூழல் அவர்களது நடத்தையில் எந்தவித கெட்ட பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தவில்லை. இதற்கான காரணத்தை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகின்றான்.
”(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவ ராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.” (அல்குர்ஆன் 3:159)
அல்லாஹ்வின் பேரருள் அவர்களுக்கு இருந்தமையினால் அவர்கள் ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்டார்கள்.
”(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும் அன்பும் உம் மீது இல்லாதிருந் தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழி கெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழி கெடுத்துக் கொள்கின்றனர். அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உமக்கு வேதத்தையும் ஞானத்தையும் அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது”. (அல்குர்ஆன் 4:113)
”இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்த வராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர் வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.” (அல்குர்ஆன் 42:52)
”உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழி காட்டினான்.” (அல்குர்ஆன் 93:7)
மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ்வே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிற்கு அனைத்து கல்வி ஞானங்களையும் கற்று தந்ததாகவும்இ வழிகெட்ட அந்த ஜாஹிலிய மக்களின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பதாகவும்இ நேர்வழி காட்டியதாகவும் குறிப்பிடுகின்றான்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வின் வஹீ ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களினூடாக அறிவிக்கப்படுவதன் மூலம் அல்லாஹ் ஒரு மனிதனது சீரான வாழ்க்கைக்கான அனைத்து வழிமுறைகளையும்இ சட்டதிட்டங்களையும் அறிவித்தான்.
வஹீயின் மூலமோ திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன் ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 42:51)
எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அருளால்இ வழிகாட்டுதலால் அவன் வழங்கிய கல்வி ஞானத்தால் ஒரு பேரரசையே நிர்வகிககும் அளவிற்கு ஆளானார்கள்.
ஜாஹிலிய மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர அயராது முயற்சி செய்தார்கள். அல்லாஹ்வே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் முன்மாதிரி உள்ளதாகக் கூறுகின்றான்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
எழுதப் படிக்கத் தெரியாத ஒரு மனிதர் பிற்காலத்தில் உலகையே ஆளும் ஒரு மிகப் பெரும் ஆட்சியாளராக மாறியதற்கும் இன்று வரை உலகில் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் அவரைப் பின்பற்றுவதற்கும் உரிய காரணம் என்ன தொடராக ஆராய்வோம்.
முதலில் உம்மி என்பதன் பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். உம்மி என்றால் தாய் என்பது பொருள். அதாவது தாயை சார்ந்திருப்பவன். கைக்குழந்தைகளே தாயை சார்ந்திருப்பார்கள். எனவே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதுகின்ற, படிக்கின்ற விஷயங்களில் தாயை சார்ந்திருப்பவராக அதாவது உம்மி நபியாக இருந்தார்கள்.
சிலர் இவ்விஷயத்தில் முரண்படுகின்றனர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று சொல்வதை விரும்புவதில்லை. ஏனெனில் இது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்துவதாகக் கருதுகின்றனர். எனவே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியும் என்று இட்டுக் கட்டிக் கூறுகின்றனர். இப்படிக் கூறுபவர்கள் உண்மைக்குப் புறம்பாகவே கூறுகின்றனர்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மி நபியாக இருந்தது அவர்களுக்கு ஒருபோதும் தரக் குறைவை ஏற்படுத்தவில்லை. மாறாக அவர்களுக்கு மேன்மையையே ஏற்படுத்தியது.
அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆன் உயர்ந்த இலக்கியத் தரமுடையது. இதுபோன்ற ஒன்றை யாராலும் இயற்ற முடியாது என்று அல்குர்ஆனிலே அல்லாஹ் சவால் விடுகின்றான
நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்); நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!
உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே இது தயாரிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:23,24)
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்திருந்தால் அல்லாஹ் அருளிய குர்ஆனை மக்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே இட்டுக்கட்டி உள்ளனர் என நினைப்பர். அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என அறிந்திருந்தும் அக்கால மக்கள் நபியவர்கள் மீது குர்ஆனை அவரே இட்டுக் கட்டியுள்ளார் என வீணாகக் கதையளந்தனர்.
“இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 10:38)
அதுமட்டுமில்லாது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எழுதத் தெரியாது என்பதை அந்த மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்த காரணத்தினால் நபியவர்கள் வேறொருவரின் துணையுடன் அல்குர்ஆனை எழுதினார்கள் எனக் கூறத் தொடங்கினர்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பதை அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றது. அவற்றுள் சில,
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இன்ஞீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர்ஸஸஸ (அல்குர்ஆன் 7:157)
(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 29:48)
எழுதப் படிக்கத் தெரியாது என்பது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்தை அதிகரிக்கும் காரணியாகவே அமைந்திருக்கின்றது. அவர்கள் உம்மி நபியாக இருந்து அத்தனை சாதனைகளையும் நிறைவேற்றியது என்பது சாதாரண விஷயமல்ல. அல்லாஹ்வின் வசனங்களே இவ்வனைத்திற்கும் காரணமாக அமைந்தன.
குர்ஆன் எனும் கடலில் ஒருவன் மூழ்குவானேயானால் முத்திலும் பார்க்க விலைமதிப்பற்றவைகளை தமது வாழ்வில் பெற்றுக் கொள்வான். குர்ஆனைப் படிக்கப் படிக்க மனிதன் வாழ்வின் யதார்த்த நிலையை உணர்வான். குர்ஆன் உலகிலுள்ள எந்த புத்தகத்திற்கும் ஒப்பாகாது. அதன் உரை நடையும் ஏனையவற்றிலிருந்து வித்தியாசப்படும். அதைப் மீண்டும் படிக்கப் படிக்க ஒருபோதும் சளிப்பு எற்படுவதில்லை. அல்குர்ஆனை ஓதும்போது அல்லாஹ் ஒவ்வொரு எழுத்திற்கும் 10 நன்மையைத் தருகின்றான். அப்படியாயின் அல்குர்ஆன் காட்டித் தந்த வழியைக் கடைப்பிடிப்போமேயானால் அல்லாஹ் எவ்வளவோ நன்மைகளை எமக்கு அருளுவான்.
அநேகமானோரின் வீடுகளில் குர்ஆன் காட்சிப் பொருளாகவே இருக்கின்றது. தூசி துடைத்து வைப்பார்களே ஒழிய திறந்து பார்ப்பது கூட இல்லை. குர்ஆன் வீட்டில் இருந்தால் சரி. அதன் போதனைகளை அறிய ஒரு துளியளவேனும் ஆர்வம் இல்லை. முதலில் குர்ஆன் எதற்காக அருளப்பட்டது என்பது கூட தெரியாத முஸ்லிம்களாக நம்மில் பெரும்பாலானோர் இருக்கின்றனர். இது வேதனைப்பட வேண்டிய விஷயம்.
அல்குர்ஆன் மக்களை சிந்திக்கத் தூண்டுகிறது பல ஆராய்ச்சிகளுக்கு வழி வகுக்கின்றது. நல்வழிப்படுத்துகின்றது நன்மை தீமைகளை பிரித்தறிவிக்கின்றது. ஒட்டு மொத்தமாக மனிதனின் சீரான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றது.
இப்படிப் பட்ட திருமறையை தினமும் படித்து நல்வழியை அடைவோமாக.
– ஃபாத்திமா ஷஹானா கொழும்பு.
source: http://rasminmisc.blogspot.in/2010/07/02.html