நபிகளாரின் வழிகாட்டுதலைக் கண்டு பிரமிக்கின்றேன்: ஊடகவியலாளர் மதன்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலத்தின் சார்பாக டிசம்பர் 25 முதல் 28 வரை சென்னை புரசைவாக்கத்தில் வாழ்வியல் கண்காட்சி நடைபெறுகிறது. அமைதியை நோக்கி எனும் மையக்கருத்தில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமது அவர்களின் தலைமையில் ஊடகவியலாளர் மதன் திறந்து வைத்து உரையாற்றினார்.
அமைதியை நோக்கி எனும் வாழ்வியல் கண்காட்சியை முழுமையாக பார்வையிட்டேன். காட்சி அமைப்புகளும், சிறுவர்களின் விளக்கமும் எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகின்றது. ஏனென்றால் இன்றைய சமுதாயம் வாசிப்பைத் தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். அவர்கள் நிறைய படிக்க வேண்டும்.
குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்கள் தங்களது மார்க்கம் குறித்து இன்னும் பல கோணங்களில் படித்தறிய வேண்டும். ஏனென்றால் இஸ்லாம் ஒரு அற்புதமான வாழ்க்கை நெறி. கால ஓட்டத்திற்கும், நவீன வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து விருட்சமாய் இஸ்லாம் ஓங்கி நிற்கிறது என்பதை இக்கண்காட்சியின் மூலம் அறியலாம் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் நபிகளாரின் வழிகாட்டுதலைக் கண்டு பிரமித்து போகின்றேன். ஓர் அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றாது என்ற சொல்லுக்கு ஈடான சொல்லில்லை. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையை தடுப்பீராக என்கிற மிக அற்புதமான வழிகாட்டுதலை குர்ஆன் வழங்குகிறது.
இத்தகைய வழிகாட்டுதலை தாங்கி நிற்கும் இக்கண்காட்சியை திறந்து வைப்பதிலும், கலந்து பேசுவதிலும் பெருமகிழ்வும், மனநிறைவும் அடைகின்றேன் என்றார்.
2014 டிசம்பர் 25, 26, 27, 28
ஆகிய நான்கு நாள்கள்
சென்னை புரசைவாக்கத்தில்
புவனேஸ்வரி பேருந்து நிறுத்தம் அருகில்
பெரம்பூர் பேரக்ஸ் சாலையில்
லட்சுமி ஹால் குளுகுளு அரங்கில்
இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகின்றது.