கடவுளைப் புரிந்து கொள்ளாமையால் மனித இனம் சந்திக்கும் இழப்புகள்
பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் தனக்கு மீறிய சக்தி ஒன்று தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள இவ்வுலகையும் படைத்து பரிபாலித்து வருவதை உணருவார்கள். அந்த சக்தியைத்தான் ஆத்திகர்கள் கடவுள் அல்லது இறைவன் என்று போற்றி வணங்குகிறார்கள். அந்த கடவுளை சரிவர ஆராய்ந்து ஏற்றுக் கொள்பவர்களும் உள்ளனர். ஆராயாமல் முன்னோர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் நம்புவோரும் உள்ளனர். இரண்டாம் வகை நம்பிக்கை மிகவும் ஆபத்தானது. நாத்திகத்தைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
பாவங்களும் ஒழுக்கமின்மையும் வளர மூலகாரணம்:
மனிதன் நல்லவனாக, நல்லொழுக்கம் உடையவனாக வாழவேண்டுமானால் அவனுள் இறையச்சம் என்பது இருக்கவேண்டும். அதாவது என்னைப் படைத்த இறைவன் என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான், இவ்வாழ்க்கைக்குப் பிறகு அவனிடமே திரும்பவேண்டியது உள்ளது, அவன் என் நற்செயல்களுக்கு பரிசும் பாவங்களுக்கு தண்டனையும் வழங்க உள்ளான் – அதாவது அவனிடம் நான் எனது ஒவ்வொரு செயல்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும் – என்ற பொறுப்புணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும். இது இல்லாதபட்சம் எந்தப் பாவத்தையும் செய்வதற்கு மனிதன் சற்றும் தயங்க மாட்டான். இந்த இறையச்சம் மனிதர்களிடம் இல்லாமல் போவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் காணப்படுகின்றன.
= அறவே நிரூபிக்கப்படாத மனித ஊகங்களைக் கோர்வையாக்கி பரிணாமக் கொள்கை என்ற பெயரில் தவறான அறிவியலை மக்களுக்குக் கற்பித்து இறைவனை மறுக்கும் நாத்திகம் போதிக்கப்படுவது.
= இறைவனின் தூதர்கள் போதித்தபடி ‘படைத்த இறைவன்தான் வணங்குவதற்குத் தகுதியானவன்’ என்று மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு, குழந்தைப் பருவம் முதல் படைப்பினங்களின் உருவங்களையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி ‘இவையே உன் கடவுள்’ என்று போதிக்கப்படுவது.
இவ்வாறு இறையச்சம் இல்லாத தலைமுறைகள் உருவாகும்போது பாவம் செய்ய அஞ்சாத சமூகம் உருவெடுத்து அங்கு அமைதியின்மையும் கலவரங்களும் மேலோங்குகின்றன. இவை ஒருபுறம் நாட்டின் ஒழுக்க வீழ்ச்சிக்கு காரணமாகும்போது மறுபுறம் தவறான கடவுள் கொள்கை நாட்டில் மிகப்பெரும் இழப்புகளையும் விபரீதங்களையும் ஏற்படுத்துகிறது.
இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு கடவுளின் முக்கிய இலக்கணங்களை கூறுகிறது:
= 112: 1-4. நபியே நீர் சொல்வீராக: அல்லாஹ் ஒரே ஒருவனே. அல்லாஹ் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை
= 2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ”நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்”” என்று கூறுவீராக.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
அதாவது ஏகனாகிய இறைவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். ஒப்பில்லாதவன். அவனது படைப்பினங்களைப் போல் மற்றவர்களை சார்ந்து இராதவன். தாய் தந்தை, மனைவி, மக்கள் என எந்த உறவுகளும் இல்லாத தனித்தவன். தன்னிகரற்றவன். அவனை எந்த இடைத்தரகர்களும் இன்றி நேரடியாக வணங்கலாம். அவனிடம் நேரடியாக நம் தேவைகளைக் கேட்டு பிரார்த்திக்கலாம் என்ற கருத்துக்களைத் தாங்கி நிற்கின்றன மேற்படி வசனங்கள். இவையே நாம் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த இறைவனின் உண்மை இலக்கணங்கள் என்பதை சிந்திப்போர் அறியலாம். ஆனால் இவ்விலக்கணங்களை ஆராயாமல் இறைவன் அல்லாதவற்றையெல்லாம் கடவுள் என்று நம்பி வழிபடும்போது ஏற்படும் மற்ற விபரீதங்களில் சிலவற்றை கீழே காண்போம்…
= எளிமையான வழிபாடு வியாபாரமாக்கப் படுதல்
படைத்த இறைவனை வழிபடுவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை இல்லை. எந்த தரகர்களும் தேவை இல்லை. எந்த வித வீண் சடங்குகளுக்கும் அங்கு இடமில்லை. ஆனால் படைத்தவனை விட்டு விட்டு போலி தெய்வங்களை வணங்க முற்படும்போது இறைவழிபாடு என்பது கடினமாக்கபடுகிறது. வீண் சடங்குகளும் மூட நம்பிக்கைகளும் இடைத்தரகர்களும் இடையே நுழைந்து இது மாபெரும் வியாபாரமாக்கப் படுகிறது.
= இடைத்தரகர்கள் ஆதிக்கம்
கண்டதெல்லாம் கடவுள் என்று மக்கள் நம்பத் தலைப்படும் போது அதைச்சுற்றி இடைத்தரகர்கள் உருவாகிறார்கள். பின்னர் அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்றாகிறது. அவர்கள் தம் மனம் போனபடி மக்களை ஏய்த்து தம் வயிற்றை நிரப்பிக் கொள்ள பாவ பரிகாரம், தோஷ பரிகாரம் என்றெல்லாம் பெயர் சொல்லி பாமரர்களின் சம்பாத்தியங்களையும் செல்வங்களையும் கொள்ளை அடிக்கிறார்கள்.
= பெரும் மோசடி
கடவுளின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பதற்கான எளிமையான மார்க்கமாக இது மாறிவிடுகிறது. கீழ்கண்ட கேள்விகளுக்கு நாம் விடை தேடினாலே நமக்கு உண்மை தெரிந்து விடும்:
அ. இந்நாட்டில் எந்த வித உற்பத்தியோ சேவையோ மக்களுக்கு தராமல் மக்களின் பணத்தை மட்டும் கறந்து கொண்டிருக்கும் வியாபாரம் எது?
ஆ. மக்களின் குருட்டு நம்பிக்கைகளைத் தவிர வேறு எந்த வித முதலீடும் மூலதனமும் இல்லாமல் மூலைக்கு மூலை, நாளுக்கு நாள் பெருகி வரும் வியாபாரம் எது?
இ. நாட்டின் பொருளாதாரத்துக்கோ மக்களின் நலனுக்கோ எவ்வித பங்களிப்பும் செய்யாது பெரும் ஊதியங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் நபர்கள் யார்?
ஈ. நாட்டின் கறுப்புப் பண முதலைகளுக்கும் சுரண்டல்காரர்களுக்கும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் அலைகழித்துக் கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டாளிகள் யார்?
இவற்றுக்கும் இன்னும் இவை போன்ற கேள்விகளுக்கும் நாம் பெறும் ஒரே விடை – இறைவன் அல்லாதவற்றை கடவுளாக சித்தரித்து செய்யப்படும் மோசடி வியாபாரமும் அந்த வியாபாரிகளும் ஊழியர்களும்தான்.
= மனிதகுலத்துக்குள் பிரிவினைகளும் ஜாதிகளும் உருவாகுதல்
ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் வணங்கப்படும் நிலையில் ஒரே மனித குலம் பல ஜாதிகளாகவும் பிரிவுகளாகவும் கூறுபோடப்பட்டு மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இந்நிலை மாற ஒரே வழி ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் என்ற கொள்கையை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வது மூலமே சாத்தியம். இதைத்தான் இறைவனின் இறுதித் தூதர் மூலமாக மறு அறிமுகம் செய்யப்பட்ட இஸ்லாம் என்ற மார்க்கம் உலகெங்கும் செய்து வருகிறது.
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் உண்மை இறைவனை விட்டுவிட்டு அவன் அல்லாதவற்றை வணங்கும் போது ஏற்படும் விபரீதங்கள் சிலவற்றை மேலே கண்டோம். பாவங்கள் கட்டுக்கடங்காமல் பெருகுதல், ஒழுக்க வீழ்ச்சி, மூடநம்பிக்கைகள் பெருகுதல், கடவுளின் பெயரால் நாடு சுரண்டப்படுதல், மனிதகுலத்தில் பிளவுகள், கலகங்கள் என பலவற்றுக்கும் அது காரணமாகிறது. எனவேதான் இப்பாவம் இறைவனால் எல்லாக்காலங்களிலும் வன்மையாகக் கண்டிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை ஒவ்வொருகாலத்திலும் அனுப்பபட்ட இறைவேதங்களில் இடம்பெறும் ஆதாரங்களில் இருந்து காணலாம்:
= இந்து வேதங்களில்….
· யாருடைய அறிவு உலகாசையால் களவாடப்படுகிறதோ அவர்களே போலிதேய்வங்களை வணங்குகிறார்கள். (பகவத் கீதை)
· அந்தம் தமஹ பிரவிசந்தி யா அசம்பூதி முபாசதே – (பொருள்: யார் இயற்கை வஸ்த்துக்களைகாற்று நீர், நெருப்பு போன்றவை) வணங்குகிறார்களோ அவர்கள் அறியப்படாத இருளில் மூழ்குகின்றனர்.) – யஜுர்வேதம் Yajurveda, Chapter 40, Verse 9–
· “யார் மனிதர்களால் படைக்கப்பட்ட பொருட்களை (மேஜை,நாற்காலி, சிலைகள் போன்றவற்றை) வணங்குகிறார்களோ அவர்கள் இன்னும் ஆழமான இருளில் மூழ்குகின்றனர்” என்று தொடர்ந்து கூறுகிறது யஜூர் வேதம்.
= பழைய ஏற்பாட்டில்….
எகிப்து தேசம்! அடிமைத்தள வீடாகிய எகிப்து தேசத்தில் இருந்து உங்களை பிறப்படப் பண்ணிய கர்த்தராகிய நானே தேவன். என்னையல்லாது வேறு ரட்சகனில்லை. மேலே வானத்திலேயும், கீழே பூமியிலேயும், பூமியின் கீழ் தண்ணீரிலேயும் கர்த்தருக்கு இணையாக யாதொரு சொரூபத்தையும், யாதொரு விக்ரகத்தையும் நீர் எடுத்துக் கொள்ள வேண்டாம். கர்த்தர் அதை வெறுக்கிறார் என்று கூறுகிறது.
= புதிய ஏற்பாட்டில்…
அந்நாளில் (நீதி விசாரணை நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலேயே தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவாஸ? உமது நாமத்தினாலேயே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவாஸ? என்பார்கள். அப்போது நான் (ஏசு) ஒருக்காலும் உங்களை அறியவில்லைஸ அக்கிரமச் செய்கையாரே! என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன். (மத்தேயு 7:21)
= இஸ்லாத்தில்…..
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ்விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதிஇழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார். (அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு)
source: http://quranmalar.blogspot.in/2014/12/blog-post_19.html