வேலைக்குள்ளே வாழ்வின் பொருள்
[ வாழ்க்கைத் தேவைக்குப் பொருள் தேடி அலைபவர்கள் பலர்.
வாழ்க்கையின் பொருள் தேடி அலைபவர்கள் சிலர்.
பொருளாதார வசதி நிறைய உள்ள பணிகளில் தான் உளவியல் வெறுமை அதிகம் உண்டாகிறது என்பது உண்மை தான்.
நம் வாழ்க்கையின் குறிக்கோளுக்கு நெருக்கமான ஒன்று நாம் செய்யும் வேலையிலேயே கிடைத்து விட்டால் வெளியே தேடி அலைய வேண்டாம். அல்லது அப்படிப்பட்ட வேலையை முதலிலேயே தேடிக்கொள்வது புத்திசாலித்தனம்.]
வேலைக்குள்ளே வாழ்வின் பொருள்
“நான் கூகுளிலிருந்து ஏன் வெளியேறினேன்?” என்ற ஒரு குறும்படத்தை யூடியூபில் பார்க்க நேர்ந்தது.
கூகுள் ஒரு கனவு நிறுவனம். ஒரு பணியாளரால் நினைத்துப் பார்க்க முடியாத அத்தனை சவுகரியங்களையும் கொண்ட அலுவலக வளாகம் அவர்களுடையது. ஒரு உல்லாசக்கூடத்தில்கூட கிடைக்காத கேளிக்கைகள் அங்கு உள்ளன. உடற்பயிற்சி செய்யலாம். படிக்கலாம். பீர் குடிக்கலாம். சைக்கிள் ஓட்டலாம். படுத்துத் தூங்கலாம். வேலைகூட செய்யலாமாம்!
சொர்க்கத்தின் நிர்பந்தம்
மக்களைக் கவர்வது இந்த வசதிகள் தரும் கவர்ச்சிகள் அல்ல. அதன் அடிநாதமாய் உள்ள சுதந்திர உணர்வு. பரிபூரண சுதந்திர உணர்வை அனுபவித்தவர்கள் அதைத் துறப்பது மிகவும் கடினம். அந்தக் குறும்படத்தில் ‘இது போல இன்னொரு இடம் வாய்க்காது. இருந்தும் இதைத் துறந்து புது அனுபவத்தை தேடிப் போகிறேன்’ என்று செல்கிறார் அந்த இளைஞர். மற்றவர் பொறாமைப்படும் பணியிடத்தை வேண்டாம் என்று உதற எப்படி மனம் வந்தது?
சொர்க்கம் என்னை நிர்பந்தம் செய்வதாய் உணர்ந்தால் அதிலிருந்து சுவர் ஏறிக் குதித்து நான் நரகத்துக்குப் போகத் தயங்க மாட்டேன் என்று ஒரு கவிஞர் எழுதியது நினைவுக்கு வந்தது. இந்த இளைஞர் கூகுளில் எந்தப் பிரச்சினையுமில்லை என்று அதன் அத்தனை வசதிகளையும் படம் பிடித்துக் காட்டி “கூகுளுக்கு நன்றி” என்றுதான் கிளம்புகிறார்.
ஆனால் ஒரு புதுக் கிளர்ச்சியைத் தேடி அவர் போவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த உச்ச அனுபவமும் தரை தொடும். நெருக்கடிகளைத் தரும் புது அனுபவங்களைத் தேடிப்போகும் இளைஞர்கள் பெருகிவிட்டார்கள் எனத் தோன்றுகிறது.
வெற்றியின் அலுப்பு
மிக நல்ல நிறுவனங்களிலிருந்தும் பெரிய காரணம் எதுவுமின்றி விலகுவோர் ஒரு உளவியல் தேவைக்காகத்தான் வெளியேறுகின்றனர்.
ஐ.டி. கம்பெனி வாலிபர் விவசாயம் செய்ய முயலுகிறார். கார்ப்பரேட் மானேஜர் ஒருவர் வேலையைத் துறந்துவிட்டு கிராமத்தில் பள்ளிக்கூடம் நடத்துகிறார். இன்னொரு கார்ப்பரேட் நண்பர் பக்தி மார்க்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு பெரிய வேலையைத் துறந்துள்ளார். மனித வளம் படித்த என் மாணவி தற்போது தன் சொந்தப் பணத்தில் பிராணிகள் காப்பகம் நடத்துகிறார்.
பொறியில் மாட்டியதுபோல பொறியியலில் மாட்டிய மாணவர்கள் பலர் டிஜிட்டல் காமராவை தூக்கிக் கொண்டு படம் எடுக்க ஏற்கனவே வந்து விட்டார்கள். அதே போல படிக்கும் படிப்பை கடைசி வருடத்தில் விட்டு விட்டு வேறு துறைப் படிப்பைத் தேடி ஓடும் போக்கும் அதிகரித்து வருகிறது.
இவர்களின் தேவை என்ன?
வெற்றி கூட அலுப்பைத் தரும். சவுகரியத்தில் கூட சுவாரஸ்யம் குறையும். மனம் ஒரு புரியாத இடத்தைத் தேடி ஓடும். எங்கு செல்வது என்று தெரியாவிட்டாலும் இருக்கும் இடம் தனதல்ல என்று தெளிவாகத் தெரியும்.
ஒரு மனித வள மேலாளருக்கும் வேலையை ராஜிநாமா செய்த ஒரு மேலாளருக்கும் நடந்த உரையாடல் இது:
“நீங்கள் வேலையை விட்டுப் போகும் காரணம் சொல்லுங்கள்?”
“நான் இங்கு வேலையில் இருப்பதற்கான காரணமே எனக்குத் தெரியவில்லையே!”
சம்பளம் போதவில்லை. பதவி உயர்வு கிடைக்கவில்லை. வசதிகள் போதவில்லை. இப்படிக் காரணங்கள் இருந்தால் பரவாயில்லை. “எனக்கு என்ன வேண்டும் என எனக்குத் தெரியவில்லை?” என்றால் என்ன செய்வது?
ஆன்மிகத் தேடல்
“படித்து நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்கள்தான் சாமியார் மடங்களிலும் சேர்கிறார்கள். தீவிரவாத அமைப்பிலும் சேர்கிறார்கள்.” என்றார் ஒரு பேராசிரியர். அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை.
இன்றைய பணிச்சூழல் ஒரு உள் மன நெருக்கடியை ஏற்படுத்தி ஒரு ஆன்மிகத் தேடலை தோற்றுவிக்கிறது என்று தோன்றுகிறது. ஆன்மிகம் என்றால் கடவுள் அல்லது மதம் சம்பந்தமானதாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. “ஏன்” என்ற கேள்வி மட்டும் போதும். நாம் செய்யும் பணியின் நோக்கம் பற்றி யோசிக்கையில் ஒரு வெறுமை பிறந்தால் இந்தத் தேடல் தீவிரப்படும்.
அந்த நேரத்தில் மனதுக்கு நெருக்கமாகப்படும் மதமோ, கொள்கையோ, செயல்பாடோ ஒரு புதிய பரிமாணத்துடன் காணப்படும். அதை நோக்கி மனம் பயணிக்கையில் அவர்களின் வாழ்க்கை திசை மாறிப் போகின்றது.
“எங்க காலத்தில் வேலை கிடைச்சாலே பெரிய விஷயம். அதுவும் நல்ல வேலை என்றால் எந்த வலி வந்தாலும் பொறுத்துக் கொள்ளக் காரணம் அவ்வளவு குடும்பப் பொறுப்புகள் இருக்கும். எல்லாரையும் கரையேற்றி தனக்காக ஒரு வீடு கட்டி உட்கார்ந்தாலே முக்கால் வாழ்க்கை முடிந்துவிடும். அதனால் இந்த மாதிரி பாதியில் போகும் எண்ணமும் வராது. தைரியமும் இருக்காது. இன்னிக்கு ஒரு சின்னக் குடும்பத்துக்கே பெரிய சம்பளம் வருகிறது. வேற குடும்பப் பொறுப்புகள் கிடையாது. அப்புறம் மனம் இப்படித் தறி கெட்டுத் தானே போகும்?” என்றார் ஒரு முதியவர்.
வாழ்வின் பொருள்
வாழ்க்கைத் தேவைக்குப் பொருள் தேடி அலைபவர்கள் பலர். வாழ்க்கையின் பொருள் தேடி அலைபவர்கள் சிலர். பொருளாதார வசதி நிறைய உள்ள பணிகளில் தான் உளவியல் வெறுமை அதிகம் உண்டாகிறது என்பது உண்மை தான். நம் வாழ்க்கையின் குறிக்கோளுக்கு நெருக்கமான ஒன்று நாம் செய்யும் வேலையிலேயே கிடைத்து விட்டால் வெளியே தேடி அலைய வேண்டாம். அல்லது அப்படிப்பட்ட வேலையை முதலிலேயே தேடிக்கொள்வது புத்திசாலித்தனம்.
– டாக்டர். ஆர். கார்த்திகேயன்
source: http://tamil.thehindu.com/general/education/