இஸ்லாத்தை கட்டாயமாக திணிக்கமுடியாது
இராக் மற்றும் மற்றும் சிரியா நாட்டைக் கைப்பற்றியுள்ள ISIS என்ற அமைப்பு முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்லிம்களாக மதம் மாறும்படி வற்புறுத்தி வருவதாகவும் அவ்வாறு மாறாதவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்று வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன என்பதை அறிவோம். இதைக் காணும் பொது மக்களில் பலரும் இஸ்லாமியர்களை வெறுப்புடன் காணும் சூழல் உண்டாகி வருகிறது. இது பற்றிய உண்மைதான் என்ன?
1. இஸ்லாம் என்பது ஒரு கொள்கை: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்தலே இஸ்லாம் என்ற அரபுமொழி சொல்லால் அறியப்படுகிறது.
இனம், நாடு, மொழி, நிறம் இவற்றின் வரம்புகளைக் கடந்து இதை யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம். அதன் படி தன்னை சீர்திருத்திக் கொண்டு வாழலாம். அவ்வாறு மனிதன் தன்னை இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி காணமுடியும் என்பதும் மறுமையில் அதற்குப் பரிசாக சொர்க்கம் என்ற நிரந்தர வாழ்விடம் கிடைக்கும் என்பதும் இஸ்லாம் முன்வைக்கும் தத்துவமாகும்.
நம்பிக்கை சார்ந்த விடயம் என்பதால் எப்படி நாத்திகத்தையோ அல்லது ஆத்திகத்தையோ யார்மீதும் திணிக்க முடியாதோ அதேபோல இஸ்லாத்தையும் யார்மீதும் திணிக்க முடியாது.
2. முஸ்லிம் என்பது பண்பை ஒட்டிய பெயர்- பிறப்பினால் வருவது அல்ல! யார் அவ்வாறு இறை கட்டளைகளுக்கு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்கிறாரோ அவரே ‘முஸ்லிம்’ (பொருள்- கட்டுப்பட்டவர்) என்று அறியப்படுகிறார். அவ்வாறு கட்டுப்பட்டு வாழும் வரைதான் அவர் முஸ்லிமாக இருப்பார். எப்போது அதை விட்டுவிட்டாரோ அப்போதே இஸ்லாமிய வட்டத்தில் இருந்து வெளியேறியும் விடுகிறார். எனவே ஒருவர் சுயவிருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே முஸ்லிமாக முடியும். யாரும் யாரையும் நிர்பந்தித்து முஸ்லிமாக்க முடியாது என்பது தெளிவு.
3. சடங்குகள் இல்லை: ஒருவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள விரும்பினால் இறைவனிடம் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டால் போதுமானது. அதாவது ‘வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி அவர்கள் இறைவனின் தூதர் ஆவார் என்றும் ஒப்புக்கொள்கிறேன், அதற்கு சாட்சியம் கூறுகிறேன்” என்று மனதார ஏற்று வாய்மொழியாகக் கூறுவதே அந்த உறுதிமொழி. அதற்கு எந்த சடங்குகளும் கிடையாது. யார் முன்னிலையிலோ அல்லது பள்ளிவாசலிலோ இதை கூறவேண்டும் என்பதும் கிடையாது. இஸ்லாத்தை ஏற்பது என்பது ஏற்பவருக்கும் இறைவனுக்கும் மத்தியிலான ஒரு உடன்படிக்கை. அதை எழுத்துமூலமாக்க வேண்டும் என்பதோ ஏதாவது நீதிமன்றத்திலோ அலுவலகத்திலோ தாக்கல் செய்யவேண்டும் என்பதோ கிடையாது.
4. இஸ்லாத்தில் கட்டாயம் என்பதும் கிடையாது: இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனில் யார் மீதும் மார்க்கத்தை திணிக்கக் கூடாது என்ற கட்டளை தெளிவாக உள்ளது.
o இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2 : 256)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
o “இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது” என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன் 18 : 29)
o (முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா? (அல்குர்ஆன் 10 : 99)
o எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர். புறக்கணித்து (ஏக இறைவனை) மறுப்பவன் தவிர. அவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான். அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது. அல்குர்ஆன் (88 : 21)
ஒருவேளை இங்கு இறைவனின் வசனங்கள் இஸ்லாத்தை ஏற்காதவர்களுக்கு மறுமையில் நேரகூடிய பாதிப்புகளைப் பற்றி எச்சரிப்பதால் இதுவும் ஒரு கட்டாயப் படுத்துதல் அல்லவா? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். இதற்குரிய விளக்கம் இதோ….
ஒரு நகரத்தில் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதற்காக அங்கு காவல் துறையினர் சில சட்டங்களை விதிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக வாகனங்கள் சாலையின் இடதுபுறமாகச் செல்லவேண்டும் என்பது, சிவப்பு விளக்கு எரியும்போது நிற்றல், பச்சைவிளக்கு எரியும்போது செல்ல அனுமதி போன்றவற்றை கூறலாம். அதேவேளையில் அவற்றை மீறுவோருக்கு தக்க தண்டனைகளையும் அபராதங்களையும் அவர்களே குறிப்பிடுவார்கள். அவை போன்றதே இறைவனின் வசனங்களும்! இவ்வுலகுக்கு சொந்தக்காரன் அவன். இம்மையும் மறுமையும் அவனுக்கே சொந்தம். அந்தவகையில் தான் விதித்த சட்டங்களையும் பரிந்துரைக்கும் வாழ்க்கை நெறியையும் ஏற்காதவர்கள் சந்திக்க இருக்கும் விளைவுகளை நமக்கு முன்கூட்டியே எச்சரிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டால் இந்த சந்தேகம் விலகும்.
source: http://quranmalar.blogspot.in/