மனிதர்களின் கண்களில் கண்ணீருக்கு பதிலாக ரத்தத்தை வரவழைத்த பெஷாவர் 132 குழந்தைகள் படுகொலை!
“தெஹ்ரிக் இ தாலிபான்” என்ற பயங்கரவாதி இயக்கத்தை சார்ந்தவர்கள் ரத்தவெறி பிடித்த கற்கால மனித இனத்தை சார்ந்த கொடிய மிருகங்கள் ஒன்று சேர்ந்து நடத்திய மிக கொடூரமான படுகொலை! மனித நேயமுள்ள ஒவ்வொரு மனிதனையும் உறைய வைத்த கோர சம்பவம்! இதனை அறிந்து பேச்சு வராமல் அதிர்ச்சியில் உறைந்து போன மனிதர்களில் நானும் ஒருவன். என்ன ஆறுதல்தான் அந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நம்மால் சொல்ல இயலும்?! என்பதை நினைக்கும் போது மனம் நொறுங்கி போகிறது!
நாடு, மதம், இனம், நிறம் பாராமால் கொலைவெறி பிடித்த காட்டுமிராண்டி மனித மிருகங்களை கூட்டோடு அழித்து ஒழிக்க ஆளும் மனித சமுதாயம் முறையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ஆனால் எடுக்கவில்லை. மட்டுமல்ல என்பதோடு தங்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களே தீவிரவாதிகளை உருவாக்கி ஆயதங்கள் வழங்கி நன்றாக வளர்த்து விட்டார்கள் என்பதுதானே நிதர்சனம். இதற்கு இது போன்ற காட்டு மிராண்டி தெஹ்ரிக்_இ_தாலிபான்”களும் விதி விலக்கு அல்ல.
இன்று கண்ணீர் வடிக்கும் பல நாடுகள் அவர்களே உலக நாடுகளில் பல பெயர்களில் அப்பாவி மனிதர்களை, குழந்தைகளை, நோயாளிகளை கூண்டோடு, கொத்து கொத்தாக அழித்துவிட்டு நகைப்புக்குரிய காரணங்களை ஏளனமாகவே சொனார்கள் என்பது உலகமறிந்த வெளிப்படையான ரகசியம்! எனவே இவர்களா இப்படிப்பட்ட ஈன செயலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்?
ஆனால் ஒரு விசயத்தை மட்டும் இவர்களும் நாத்திகர்ளும் வெற்றிகரமாகவே செய்து வருகிறார்கள் அதுதான் இஸ்லாம் மார்கத்தோடு இணைத்து பகிரப்படுத்துவது இஸ்லாத்திற்கும் இந்த மாபாதக கொலை வெறி செயலுக்கும் என்ன சம்மந்தம்? இஸ்லாமிய மார்கத்தை அல்லது மற்ற மதங்களை முறையாக விளங்கியவன், அதன்படி செயல்படுபவன் யாரால் இப்படி ஒரு மாபாதக கொலைவெறி செயலை செய்ய முடியும்? எல்லா மதங்களிலும் தீவிரவாதத்தை செய்யும் காட்டுமிராண்டிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் இதிலே இஸ்லாத்தை மட்டும் பழிப்பது என்பது மதவெறி, இனவெறியின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்! காரணம் இஸ்லாம் சொல்வதை பாருங்கள்.
“எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்”
“எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்”
இவைகள் சாதாரண மனிதரின் வாசகங்கள் அல்ல! மாறாக இது, மனித குலம் அனைத்தையும் படைத்த இறைவனான அல்லாஹ் மனிதர்கள் ஈடேற்றம் பெற அவன் இறக்கியருளிய அவனுடைய சத்திய திருவேதத்திலே “அநியாயமாக ஓர் உயிரைக் கொலைச் செய்வதைப்” பற்றி மனிதர்களுக்கு விடுத்த எச்சரிக்கைச் செய்தியாகும்.
இந்த சமயத்தில் நாத்திகர்களும் தங்கள் பங்குக்கு தருணம் பார்த்து கடவுளை குற்றம் சொல்லவும் தவறவில்லை என்பது அறிவீனம் மட்டுமல்ல அவர்களின் கடைந்தெடுத்த முட்டாள்தனத்தை காட்டுகிறது!
பெஷாவர் படுகொலை சம்பவத்தால் மனித நேயமிக்க கோடிக்கணக்கான மக்களின் மன கொதிப்புகளில், ஆதங்கங்களில், கோபங்களில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்! எல்லாம் வல்ல ரஹ்மான அல்லாஹ் அந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இதனை தாங்கி கொள்ளக் கூடிய ஆறுதலையும் ஆற்றலையும் தருவானாக! இக்குழந்தைகளை சொர்கத்தில் நுழைய செய்வானாக!. இக்குழந்தைகள் மூலம் பெற்றோர்களுக்கும் சொர்க்கத்தை கொடுப்பானாக! என மனமுருகி துஆ செய்கிறேன்
– தக்கலை கவுஸ் முஹம்மத்
தாலிபான்கள் என்னும் கூலிப்படைகள்!
பசுத்தோல் போர்த்திய
பயங்கரப் புலிகள்
இசுலாம் கூறிடா
இழிசெயற் கூலிகள்!
வேலையற்றோர் கூடாரம்
வீணர்களின் குழுவாகும்
மூளையற்றோர் இவராலே
முசுலிமுக்கு இழிவாகும்!
சொந்த தேசத்தின்
சொத்துகள் குழந்தைகளாம்
எந்த மூடர்கள்
இப்படி அழித்திடுவர்?
”மாணவர்கள்” பெயருடன்
மாண்புக்கு ஊனமன்றோ?
மாணவர்கள் உடலழித்து
மார்தட்டல் ஈனமன்றோ?
பின்னாளில் இப்படிப்
பிற்போக்காய் வருமென்று
முன்னோர்கள் எங்களை
முற்கூட்டித் தடுத்திட்டார்!
பிரிந்து என்பயன்?
பிணங்களே கூடின
வரிந்து வன்முறை
வலிகளே தேடின!
மார்க்கத்தின் துரோகி
மன்னிப் பெளிதா
மூர்க்கத்தில் கொலையா?
முட்டாள் மனிதா?
-குறிப்பு:”மாணவர்கள்” என்பது தாலிபான் என்ற சொல்லின் பொருளாகும்.
“கவியன்பன்” கலாம்,