பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான 132 குழந்தைகளின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்
ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி
தீவிரவாத தாக்குதலில் பலியான 132 குழந்தைகளின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில், நேற்று முன்தினம் தீவிரவாதிகள் ராணுவ பள்ளிக்கூடத்தில் புகுந்து நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் கொல்லப்பட்டதால், அந்த நகரமே சோகத்தில் மூழ்கியது. பிரதமர் நவாஸ் ஷெரீப் அங்கு முகாமிட்டுள்ளார். அங்கு அவர் அனைத்து கட்சி மாநாட்டை கூட்டி, மரண தண்டனை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை நேற்று அகற்றினார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப், அவசர பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றார். தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்குவது குறித்து அந்த நாட்டு ராணுவத்துடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
இதற்கிடையே தாக்குதலில் பலியான பள்ளிக்கூட குழந்தைகளின் உடல்கள், அங்குள்ள கம்பைன்ட் ராணுவ மருத்துவமனை, லேடி ரீடிங் மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
குழந்தைகளை பாசத்துடன் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விட்ட பெற்றோர்கள், வீட்டில் இருந்து பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பி வைத்த பெற்றோர்கள், தங்கள் செல்லக்குழந்தைகள் உயிரற்ற உடல்களாக வந்த துயரத்தை கண்டு நொறுங்கிப் போயினர். ஓலமிட்டு அழுதனர்.
ஒரே இடத்தில் அடக்கம்
பிரேத பரிசோதனைக்குப் பின்னர் ஒப்படைக்கப்பட்ட 132 குழந்தைகளின் உடல் களை அவர்களது பெற்றோர், குடும்பத்தினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதனால் நகரெங்கும் இறுதி ஊர்வலங்களை காண முடிந்தது.
இறுதியில் ஒரே இடத்தில் 132 குழந்தைகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. அப்போது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனால் பெஷாவர் நகரமே நேற்று சோகத்தில் மூழ்கியது.
132 குழந்தைகளின் உடல் அடக்கத்தையொட்டி, பெஷாவர் நகரில் மட்டுமல்லாது, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி உள்பட பல்வேறு நகரங்களிலும், குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பலியான குழந்தைகளுக்காக அவர்கள் மனமுருக பிரார்த்தனையும் செய்தனர். இது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது. கைபர்பக்துங்வா மாகாணத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களும் நேற்று மூடப்பட்டிருந்தன. பிற இடங்களில் பள்ளிக்கூடங்கள் திறந்திருந்தன. காலையில் அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் கூடுகையின்போது, தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான குழந்தைகளுக்காக மவுன அஞ்சலி செலுத்தினர்.
பாலைவனமாய் மாறியபள்ளிக்கூடம்
தாக்குதல் நடந்த பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடம், பாலைவனம் போல காட்சி அளித்தது. ராணுவ வாகனங்களும், ராணுவ வீரர்களும் பள்ளிக்கூட பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய கலையரங்கம், வகுப்பறைகள், சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்தக்கறை படிந்து காணப்பட்டன.
மூளையாக செயல்பட்ட தீவிரவாதி
தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகள் காலை 10.30 மணிக்கு ஒரு வேனில் வந்து, பள்ளியின் பின்புறமாக அதை நிறுத்தி தீ வைத்து கொளுத்தி, பாதையை அடைத்து விட்டு, 1-ம் எண் நுழைவாயிலில் நின்ற வீரர், வாயிற்காவலர் மற்றும் தோட்டக்காரர் ஆகியோரை சுட்டுக் கொன்று விட்டுத்தான், பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியதாக பள்ளிக்கூட பஸ் டிரைவர் இஸ்சாம் உதீன் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது தலைமையின் உத்தரவைப் பெற்றுத்தான் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாகவும், பெஷாவர் தாக்குதலின் பின்னணியில் தலீபான் தளபதி உமர் நரே மூளையாக இருந்து செயல்பட்டதாகவும், ஒரு தகவலை மேற்கோள்காட்டி, பாகிஸ்தான் இணைய தளம் ஒன்று கூறி உள்ளது.
தலையில் சுட்டனர்
பள்ளிக்கூடத்தின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவரில் ஏறிக்குதித்து தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கியதாக இன்னொரு தகவல் கூறுகிறது.
சம்பவத்தின்போது மாணவர்களை கைக்கு எட்டும் தூரத்தில் நிறுத்தி, அவர்களின் தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கம்பைன்ட் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 17 உடல்களில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்ததை தான் கண்டதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ராணுவ பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் முகமது சீஷான் உறுதி செய்துள்ளார்.
ஒரு வாரத்தில் செயல்திட்டம்: பாக். பிரதமர் நவாஸ் செரீப்
தீவிரவாதிகளின் மிருகவெறி தாக்குதல்களை அடுத்து பெஷாவர் நகரில் அனைத்து கட்சி மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு பின்னர் பிரதமர் நவாஸ் செரீப் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த கொடிய சம்பவம், வரலாறு காணாத காட்டுமிராண்டித்தனத்துக்கு உதாரணமாக அமைந்து விட்டது. தலீபான் தீவிரவாதிகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது என்பதை நாங்கள் சொல்லிக்கொள்கிறோம். பாகிஸ்தானில் கடைசி தீவிரவாதியை வீழ்த்துகிறவரையில், தீவிரவாதிகளுக்கு எதிரான போர் தொடரும். தீவிரவாதிகளுக்கு எதிரான போர், நமது போராகும். இதற்கான வரைவுத்திட்டம் தேவைப்படுகிறது.
இதற்காக உள்துறை மந்திரி சவுத்திரி நிசார் தலைமையில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அங்கம் வகிக்கிற ஒரு குழுவை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த குழு, ஒரு செயல்திட்டத்தை தேசிய தலைமையிடம் ஒரு வாரத்தில் அளிக்கும். தீவிரவாதிகள் மீதான வழக்குகளை விரைவுபடுத்த தீர்மானித்துள்ளோம். தீவிரவாதிகளை தண்டிக்காவிட்டால், யாரைத்தான் தண்டிப்பது? என்று கூறினார்.
பாக். சம்பவம் காட்டுமிராண்டித்தனம்: நாடாளுமன்றத்தில் கண்டனம்
பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் உயிரிழந்த 138 மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மாநிலங்களவையில் புதன்கிழமை மெளன அஞ்சலி செலுத்தும் உறுப்பினர்கள்.
பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் உயிரிழந்த 138 மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மாநிலங்களவையில் புதன்கிழமை மெளன அஞ்சலி செலுத்தும் உறுப்பினர்கள்.
பாகிஸ்தானில் பள்ளி மாணவர்களை பயங்கரவாதிகள் படுகொலை செய்தது காட்டுமிராண்டித்தனமானது என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்தினர் நடத்தும் பள்ளியில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 132 மாணவர்கள் உள்பட 141 பேர் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியா தரப்பில் கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்த பிரதமர் மோடி, நாடு முழுவதும், பள்ளிகளில் புதன்கிழமை காலை 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் தீர்மானம்: இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில், அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கொண்டு வந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
குழந்தைகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாவி மக்களையும், குழந்தைகளையும் குறிவைத்து நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்க வேண்டும்.
பாகிஸ்தான் அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பயங்கரவாதத்தை வேரறுக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், மாநிலங்களவையில், அவைத் தலைவர் ஹமீது அன்சாரி கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தில், “இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் வேதனையை ஏற்படுத்துகின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக அதிக உறுதியுடன் நாம் போராட வேண்டும் என்பதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.
இணைந்து போராடுவோம்: இதனிடையே, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்தச் சம்பவம் தொடர்பாக மக்களவையில் பேசியதாவது:
கடந்த இரு நாள்களில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல். மனிதத்தன்மை மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இதற்கு எதிராக இணைந்து செயல்பட வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளில் பங்கேற்க இந்தியா தயாராக உள்ளது என்றார் அவர்.
மாநிலங்களில் துக்கம் கடைப்பிடிப்பு: பாகிஸ்தானில் நடைபெற்ற சம்பவத்துக்கு, கேரளம், மத்தியப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், இதுபோன்ற சம்பவம் இனி உலகில் எங்கும் நிகழக் கூடாது என்றார். கடவுளுக்கு இணையான குழந்தைகளைக் கொன்று குவிப்பது படுபாதகச் செயல் என்று தெரிவித்த அவர், உயிரிழந்த குழந்தைகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல், கேரள சட்டப்பேரவையிலும் புதன்கிழமை மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஐ.நா. சபையில்…
குழந்தைகளைக் குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர துணைப் பிரதிநிதி பகவந்த் பிஷ்னோய் கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்தச் சம்பவம் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுடைய குடும்பத்தினரின் வேதனையை எங்களால் உணர முடிகிறது.
காண்டுமிராண்டித்தனமான இந்தச் சம்பவத்துக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
முன்னதாக, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் பேசிய போது, “பாதுகாப்பில்லாத அப்பாவிக் குழந்தைகள் மீது தொடுக்கப்பட்ட ரத்த வெறித் தாக்குதல், பயங்கரவாதிகளின் கோழைத்தனத்தைக் காட்டுகிறது’ என்று தெரிவித்தார்.
– செய்தித்தாள்களின் தொகுப்பு