தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா?
[ ‘’இறந்தவர்கள் என்னுடைய குழந்தைகளைப் போல, ஆகவே இது என்னுடைய துயரம் போன்றது’’ என்கிறார் நவாஸ் ஷெரீப். அன்றாடம் குண்டுவெடிப்புகளால் குதறப்படும் பாகிஸ்தானின் துயரத்தை இத்தகைய ரெடிமேடான அறிக்கைகள் எந்த அளவு பகிரும்?
குழந்தைகளைக் கொன்றது கோழைத்தனமானது என்று சொன்னவர்களில் முக்கியமானவர் இந்திய பிரதமர் மோடி. சங்க பரிவாரங்களால் கொல்லப்பட்ட குழந்தைகளும் குதறப்பட்ட பெண்களும் அவர்களின் உறவினர்களும் இந்த ‘கோழைத்தனத்தை’ மோடியை விட நன்கு அறிவார்கள்.
வியட்நாமில் பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசிய அமெரிக்கா இன்று பாகிஸ்தானிய குழந்தைகளுக்கு கண்ணீர் வடிக்கிறது.
ஐநா செயலர் பான் கி மூன் இதனை எப்படியும் நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத் தடைகளால் பத்து இலட்சம் ஈராக் குழந்தைகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திய கடமை உணர்வின் பேச்சிது.
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்குகாக ‘அரசியல்’ பேசும் பார்ட் டைம் முற்போக்காளர்களை ஒதுக்கி வைத்து விட்டு இதன் உண்மை காரணத்தை அறிய வேண்டும்.]
தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா?
பாகிஸ்தானிலுள்ள வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்கவாவின் புகழ்பெற்ற பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் அமைந்திருக்கிறது ராணுவ பொதுப்பள்ளி ஒன்று. ஏறக்குறைய 800 மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி அது. அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
செவ்வாய்க்கிழமை (16-12-2014) காலை 10.30 மணிக்கு பள்ளியின் முதலாவது வாயிலில் துணை ராணுவப் படையினரைப் போல உடையணிந்த தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 6 தற்கொலைப் படையினர் நுழைந்தனர். அவர்கள் நடத்திய குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஏறக்குறைய 132 பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 160 பேர் இதுவரை இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மூன்று நாள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி என்றோ குழந்தைகள் என்றோ கூட பாராமல் இந்த பயங்கர படுபாதகச் செயலை செய்திருக்கின்றனர். ஒரு மனிதனுக்குள்ளே உள்ளார்ந்த இயல்பாய் இருக்கும் சக மனிதன் குறித்த நேசம் இங்கே துளியளவு கூட இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த பயங்கர நிகழ்வு. அதே நேரத்தில் உலகில் இது முதல்முறையாகவும் நடக்கவில்லை.
பாகிஸ்தானில் தூய இசுலாமிய கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என 2007-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இசுலாமிய தீவிரவாத இயக்கம் அவ்வப்போது சிறியதும் பெரியதுமான பல தாக்குதல்களை பொதுமக்கள் (முசுலீம்கள்) மீதும் ராணுவத்தின் மீதும் நடத்தியிருந்தாலும் இதுதான் இதுவரையிலான தாக்குதல்களில் பெரியது, கொடூரமானது. எட்டு மணி நேரம் வரை நீடித்த பயங்கரவாதத் தாக்குதல் இது. பாக் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து திருப்பி தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.
‘’கைபர் மற்றும் வடக்கு வஜிரிஸ்தானில் எங்களது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி வரும் பாக் அரசின் ஷர்ப் இ அஸ்ப் (Sharp and cutting straight) நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களுடைய மக்களின் வேதனையை புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தாக்குதல்’’ என்று அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது ஹொராசனி தெரிவித்துள்ளார். இந்த முட்டாள்களின் கோரிக்கை இதுதான் என்றால் இனி இவர்களை ஆதரிக்க கூடியோரும் கூட இவர்களின் வேதனையை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். முன்னிலும் அதிகமாய் இவர்களை அழிப்பதற்கே இந்த தாக்குதல் உதவி செய்யும் என்பது கூட இந்த முட்டாள் பயங்கரவாதிகளுக்கு தெரியவில்லை.
2013-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக நவாஸ் ஷெரீப் சொன்ன போதிலும், 2014 ஜூன் துவங்கி பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் இந்த நடவடிக்கையில் அப்பாவி மக்களையும் உள்ளிட்டு 1600 பேர் வரை இறந்துள்ளனர். கூடுதலாக ஆளில்லாத விமானங்கள் மூலம் அமெரிக்கப் படையும் இங்கே தாக்குதல் நடத்துவது வழக்கம். கொல்லப்படுவதற்கென்றே பிறந்தவர்களைக் கொண்ட நாடு போல பாகிஸ்தான் மாற்றப்பட்டுவிட்டது.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மலாலா யூசுப் சாயை சுட்டவர்களும் இதே தெஹ்ரிக் இ தாலிபான் கூட்டத்தினர்தான். மலாலா துவங்கி ஒபாமா, மோடி வரை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வரை இந்த பள்ளி தாக்குதலை கண்டித்திருக்கின்றனர்.
தாக்குதல் பற்றி குறிப்பிட்ட மலாலா இது கோழைத்தனமானது என்றும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் பாகிஸ்தான் ராணுவத்தை தான் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதே பாக் ராணுவம்தான் இந்தியாவில் இந்துமதவெறியர்களால் தூற்றப்படுகிறது. பெற்றோர்களின் மன வேதனையை பகிர்ந்து கொள்வதாக கூறுகிறார் ஒபாமா. ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்காவால் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் உண்டு.
‘’இறந்தவர்கள் என்னுடைய குழந்தைகளைப் போல, ஆகவே இது என்னுடைய துயரம் போன்றது’’ என்கிறார் நவாஸ் ஷெரீப். அன்றாடம் குண்டுவெடிப்புகளால் குதறப்படும் பாகிஸ்தானின் துயரத்தை இத்தகைய ரெடிமேடான அறிக்கைகள் எந்த அளவு பகிரும்? இம்ரான்கானும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஐநா செயலர் பான் கி மூன் இதனை எப்படியும் நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத் தடைகளால் பத்து இலட்சம் ஈராக் குழந்தைகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திய கடமை உணர்வின் பேச்சிது.
குழந்தைகளைக் கொன்றது கோழைத்தனமானது என்று சொன்னவர்களில் முக்கியமானவர் இந்திய பிரதமர் மோடி. சங்க பரிவாரங்களால் கொல்லப்பட்ட குழந்தைகளும் குதறப்பட்ட பெண்களும் அவர்களின் உறவினர்களும் இந்த ‘கோழைத்தனத்தை’ மோடியை விட நன்கு அறிவார்கள்.
“மாணவர்களில் பத்து வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டும் தான் தேடி கொல்லச் சொல்லியிருக்கிறோம். எங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிடில் இதுபோல செயல்படும் 146 ராணுவப் பள்ளிகளையும் தாக்குவோம்’’ என்று பாகிஸ்தான் தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அப்பாவிகள் எனும் போது பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் சாவதற்கு தகுதியானவர்கள் என்று ‘பெருந்தன்மையுடன்’ முடிவு செய்யுமளவுதான் இந்த காட்டுமிராண்டிகளின் சிந்தனை இருக்கிறது. இந்த சிந்தனையின் பயன் என்ன? இன்னும் அதிக அளவில் எல்லை மாகாண பழங்குடி மக்கள் அமெரிக்கா மற்றும் பாக் இராணுவத்தால் கொல்லப்படுவார்கள்.
ஆப்கானை ஒட்டிய பகுதியில் பழங்குடி மக்களிடையே செல்வாக்காக இருக்கும் இந்த இயக்கத்தின் முதல் தலைவரான பைதுல்லா மசூதுவை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் 2009-ல் சுட்டுக் கொன்றது. தற்போது தலைவராக இருப்பவர் ஹக்கிமுல்லா மசூத். இந்த பள்ளி தாக்குதலில் யாரையும் பிணையக் கைதிகளாக வைக்கும் நோக்குடன் தீவிரவாதிகள் வரவில்லை. முடிந்தவரை சுட்டுக் கொல்வது, தற்கொலைப் படையாக மாறுவது, ராணுவம் முன்னேறாதபடி கண்ணிவெடிகளைப் புதைப்பது என்ற பேரழிவு நோக்கத்துடனேயே அவர்கள் செயல்பட்டனர்.
ஆப்கானில் தாலிபான் அரசை தாக்கி ஒழித்த அமெரிக்காவிற்கு எதிராக தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த தெஹ்ரி இ தாலிபான் இயக்கம். இதன் போக்கில் இந்த தாலிபான்களை எதிர்க்கும் அமெரிக்க அரசுக்கு உதவியாக பாகிஸ்தான் அரசு மாறிய பிறகு இவர்கள் பாக் அரசையும் கடுமையாக எதிர்க்கின்றனர். கூடவே கடுமையான ஷரியத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும், பாகிஸ்தானை அதி தீவிர இசுலாமிய மதவாத நாடாக மாற்ற வேண்டும் என்பதும் இவர்களது நோக்கம்.
இத்தகைய மத பயங்கரவாதிகளை நாம் கண்டிக்கிறோம். இவர்களெல்லாம் இசுலாமிய மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு உலா வரும் கயமைத்தனத்தையும் நாம் முறியடிக்க வேண்டும். ஏழ்மையிலும் பயங்கரவாதத்திலும் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு இவர்களும் முக்கியமான எதிரிகள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த படுகொலையை கேள்விப்பட்ட மாத்திரத்தில் யாரும் கடும் அதிர்ச்சியடைவதும், இந்த கொலைபாதகத்தை செய்தவர்களை கண்டிப்பதும் இயல்பானதே. ஆனால் ஒரு பிரச்சினையை அதன் கொடூரமான காட்சிப்படிமங்களை வைத்து மட்டும் முடிவு செய்வதாக அது சுருங்கி விடக்கூடாது. ஏனெனில் அரசு ரீதியான அதிகாரப்பூர்வமான பயங்கரவாதிகளும், அவர்களின் ஊடகங்களும் கூட இந்த துயர நிகழ்வை வைத்து குளிர்காய்கின்றனர்.
வியட்நாமில் பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசிய அமெரிக்கா இன்று பாகிஸ்தானிய குழந்தைகளுக்கு கண்ணீர் வடிக்கிறது.
ஏனெனில் இந்தியாவில் இந்துமதவெறியர்கள், உலக அளவில் அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள் அனைவரும் இதை வைத்து இசுலாமிய மக்களை தனிமைப்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்துகின்றனர். இன்னொரு புறம் நெஞ்சினுள்ளே பார்ப்பனியத்தையும் தோற்றத்தில் முற்போக்கையும் கொண்டிருக்கும் பார்ட் டைம் முற்போக்காளர்கள் பலரும் இந்த சம்பவத்தை வைத்து எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை நொட்டம் சொல்லாதீர்கள் என்று அவதாரத்தை கலைத்துவிட்டு உறுமுகின்றனர்.
உலகில் எந்த மதமும் தனது மதக் கொள்கையின் கீழ் முழு உலகையும் கொண்டு வருவதற்கான ஆசையைக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அது துளியளவு கூட சாத்தியமில்லை. முதலாளித்துவ உற்பத்தி ஆரம்பித்து, வளர்ந்து ஏகாதிபத்தியமாகி மேல்நிலை வல்லரசாகி விட்ட இந்த காலத்தில் முழு உலகையும் கட்டுப்படுத்துவது பொருளியல் உலகின் எஜமானர்களான ஏகாதிபத்தியங்களே அன்றி பண்டார பரதேசிகளோ, பாதிரியார்களோ, முல்லாக்களோ இல்லை. ஒருவேளை இந்த முட்டாள்கள் அப்படிக் கூறிக் கொண்டாலும் அது பவர் ஸ்டார் என்று தன்னை காசு கொடுத்து அழைக்க வைக்கும் ஜந்துவின் அற்பத்தனமாக மட்டுமே இருக்கும். இத்தகைய மதக் கனவுகளுக்கு உலகமெங்கும் உள்ள ஆளும் வர்க்கங்கள் எப்போதும் புரவலராக நடந்து கொண்டு பயன்படுத்தி வருகின்றன.
அது போல இசுலாமிய சர்வதேசியம் என்பதும் அமெரிக்கா காசு கொடுத்து கற்றுக் கொடுத்து பரப்பச் செய்த ஒரு புரட்டே அன்றி வேறல்ல. ஈராக்கில் சதாமை வளர்த்து விட்டு, அதே போல ஆப்கானில் தாலிபான்களை உருவாக்கி ஆளச் செய்து பின்னர் வேலைக்காகாது என்று அவர்களை அழிக்க நினைத்தது அமெரிக்கா. ஆதரித்ததற்கும், அழிப்பதற்கும் அமெரிக்க நலனே காரணமே அன்றி வேறல்ல. ராம்போ பட வரிசையில் ஆப்கான் முசுலீம்களை அற்புதமான பழங்குடி போராளிகளாக காண்பித்த ஹாலிவுட், பின்னர் அவர்களை கொடூரமான காட்டுமிராண்டிகளாகக் காட்டி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக அமெரிக்க தலைமையிலான ஒற்றைத் துருவ வல்லரசு ஆதிக்கத்தை கேள்வி கேட்கக் கூட இங்கே உலகில் ஒரு சோசலிச முகாம் இல்லை. அதனால் அமெரிக்க ஆதிக்கத்தினால் பாதிக்கப்படும் நாடுகளின் போராட்டம் இத்தகைய மதத் தீவிரவாதிகளால் சில நாடுகளில் கையிலெடுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட மதத்தீவிரவாதிகள் தன்னை எதிர்ப்பதை அமெரிக்காவும் விரும்பிகிறது. இவர்களை வில்லன் போல காட்டிக் கொண்டு தனது ஆதிக்கத்தை தொடருவதற்கு அமெரிக்காவிற்கு சதாம் உசேனும், பின்லேடனும், தாலிபான்களும் எப்போதும் தேவைப்படுகிறார்கள்.
இந்த உலகில் இசுலாமிய நாடுகளில் இயல்பாக ஜனநாயகமும், கம்யூனிசமும் துளிர்விட ஆரம்பித்த காலத்தில் தன்னுடைய கேடான நோக்கத்திற்காக்க அவற்றை ஒழித்து மத பிற்போக்குவாதிகளை ஆட்சியில் அமர்த்தி இன்று வரை பாதுகாத்து வருவதும் இதே அமெரிக்காதான். அன்று அதை ஆர்ப்பரித்து மகிழ்ச்சியடைந்த சோசலிச முகாமின் எதிரிகள் இன்று பாக் குழந்தைகளுக்கு கண்ணீர் விடுவதில் முதல் ஆளாய் நிற்கிறார்கள்.
அமெரிக்கத் தாக்குதலுக்கு அஞ்சி ஓடும் ஈராக்கிய குடும்பங்கள். ( அருகில் உள்ள புகைப்படம் )
இந்த ஏகாதிபத்திய சதுரங்க ஆட்டத்தில் சிக்கியதனால்தான் பொதுவில் இசுலாமிய மதம் இருக்கும் நாடுகளில் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் வளருவதற்கே பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. வளைகுடா நாடுகளில் அது சுத்தமாக இல்லை. துருக்கி, துனிஷியா போன்ற நாடுகளில் அது வென்றிருக்கிறது. வங்கதேசம், மலேசியா போன்ற நாடுகளில் அது இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறது.
இசுலாமிய மக்கள் மற்ற மத மக்களைப் போல வர்க்கங்களால் பிரிந்திருக்கிறார்களே அன்றி மதத்தினால் ஒன்றுபட்டிருக்கவில்லை. அப்படி ஒரு மத ஒற்றுமை இருப்பதாகக் காட்டுவதுதான் அமெரிக்கா மற்றும் அதன் அடிவருடிகளான சவுதி ஷேக்குகளின் ஆதிக்கத்திற்கு பாதுகாப்பு. மதம் என்பது ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட உரிமையே அன்றி சமூக, அரசியல், பொருளாதார வாழ்வில் அதை அனுமதிக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை.
ஆனால் இசுலாமிய மதவாதிகள் இதற்கு எதிராக வர்க்கம் கடந்த மதம் என்று தூய இசுலாத்தை பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களை உருவாக்கியது அமெரிக்காதான் என்றாலும் இந்த மதவாதிகளை இசுலாமிய மக்கள் புறந்தள்ள வேண்டும். முசுலீமாக இருந்து கொண்டு நாத்திகராய் இருப்பதும், கம்யூனிஸ்டாய் வேலை செய்வதும் பல்வேறு முசுலீம் நாடுகளில் உண்டு. இவற்றையெல்லாம் ஒழித்து விட்டு வெறும் மத மனிதராய் இசுலாமியர்களை மாற்ற வேண்டும் என்பதே இசுலாமிய மதவாதிகளின் இலக்கு.
இதன் அதி பயங்கர வெளிப்பாடுதான் பாகிஸ்தான் தாலிபான்கள் போன்றவர்களின் பள்ளி தாக்குதல்கள். ஆகவே மதத்தை மதத்தின் இடத்தில் மட்டும் வைத்து விட்டு தங்களது சமூக பொருளாதார கோரிக்கைகளுக்கு வர்க்க ரீதியாக அணிதிரளுவதே இசுலாமிய மக்களின் சொந்த பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது. இதை பிறப்பால் முசுலீம்களாய் வாழும் நண்பர்கள் பரிசீலிக்க வேண்டுமாய் கோருகிறோம்.
அதே நேரம் இந்த மதவாதம் இசுலாத்திற்கு மட்டும உரிய பிரச்சினை அல்ல. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் ஆட்சியில் வாழும் நாம் இதை அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மதங்களை தனது கேடான நோக்கத்துக்கு பயன்படுத்தி ஆதாயம் அடையும் அமெரிக்காதான் தற்போது சி.ஐ.ஏ. பயங்கரவாத சித்ரவதைகளை வெளியிட்டுள்ளது. பயங்கரம் என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ். மட்டுமல்ல அது அவர்களின் ஆசானான சி.ஐ.ஏ. மூலம்தான் என்ற புரிதல் அவசியம்.
மேலதிகமாக இந்த பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்படுவது இசுலாமிய மக்கள்தான். பாகிஸ்தானில் இவர்களால் கொல்லப்படுவது அப்பாவி முசுலீம் மக்கள்தான். ஷியாக்களின் மசூதிகளில் வெடித்த குண்டுகளின் இரைச்சல் நித்தம் கேட்கிறது. ஈராக்கின் மனித ஓலத்திற்கு என்றுமே ஓய்வு கிடையாது.
ஆகவே பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்குகாக ‘அரசியல்’ பேசும் பார்ட் டைம் முற்போக்காளர்களை ஒதுக்கி வைத்து விட்டு இதன் உண்மை காரணத்தை அறிய வேண்டும்.
எங்களது குடும்பத்தினரை கொன்ற பாக் இராணுவத்திற்கு அதன் வலியை உணர வைக்கவே இப்படி செய்தோம் என்று தாலிபான்கள் கூறியிருப்பது வேறு யாரையும் விட பாக் இராணுவத்தின் சிப்பாய்களுக்கு புரியும். இந்த சிப்பாய்களோ இல்லை அவர்கள் போரிடும் தாலிபான்களோ இருவரும் சாதாரண மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான்.
இவர்களை மோதவிட்டு ஆதாயம் பார்க்கும் அமெக்காவும், பாகிஸ்தான் ஆளும் வர்க்கமும், கண்டன அறிக்கையையும், குண்டுகளையும் எப்போதும் கைவசம் வைத்திருக்கிறார்கள்.
source: http://www.vinavu.com/2014/12/17/pakistan-taliban-peshawar-school-massacre/