முஸ்லிம்களே! வார்த்தைகள் மட்டும் தேசத்தை வடிவமைக்காது!
ஏ.ஜெ.நாகூர் மீரான்
[ இஸ்லாம் அல்லாதவர்கள் தங்களுடைய மதத்தை கற்கின்றனர். உலக அறிவை உள்வாங்குகின்றனர். தம் நாட்டைத் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். முஸ்லிம்கள் மதத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை கற்க மறுக்கின்றனர். எண் கற்க வேண்டும் என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.
நாட்டிற்கு எங்களது முன்னோர்கள் பங்களித்துள்ளனர் என்று முன்னோர்களின் பெருமைகளைக் கூறுவதில் மட்டும் காலம் கழித்தல் இருப்பது சிறுமையின் வீழ்ச்சிக்கு தள்ளிக்கொண்டிருக்கிறது.
முன்னோர் பங்களிப்பு செய்துள்ளனர், எங்களுக்கு உரிமையுள்ளது என்பன போன்ற கோரிக்கையை விடவும், நம்மிடமிருந்து எந்த உழைப்பை நாட்டுக்கு தந்திருக்கிறோம், முன் நிற்கிறோம், அறிவுப்பாதைக்கு நாட்டுமக்களைக் கொண்டு செலுத்தவிருக்கீறோம்… சுய ஆய்வுகள் எதிர்கால மீளுதலுக்கு உதவும். விதண்டா வாதங்கள் வெற்றிடத்தை உருவாக்கும். தனிமைப்படுத்தும்.]
தன் நாடு குறித்தும், நாட்டின் ஏற்ற இறக்கங்கள், பொருளாதாரம் குறித்தும் தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம், அத்தியாவசியம். வளர்ச்சிக்கான பங்களிப்புக்கு முக்கியத் தேவை.
நாட்டின் பொருளாதாரம் அறிவதில், கற்பதில், ஆலோசனை கூறுமளவிற்கு தம்மை வளர்த்தி உயர்த்திக் கொள்வதில் முஸ்லிம் சமூகம் கவனம், அக்கரை செலுத்துவதில்லை. தமிழக முஸ்லிம்கள் தின, மாத, வார இதழ்களில் பொருளாதாரம் குறித்த அலசல் ஆய்வுக் கட்டுரைகளைக் காணுதல் அரிது.
ஒட்டு மொத்த மக்களும் ஒன்றினைவதே ஒரு நாடு. குறிப்பிட்டவர்கள் மட்டும் நாட்டின் பொருளாதாரம், தேச உயர்வு, தாழ்வு மீதான சிந்தனை பதிக்கட்டும், ஆலோசனை அளிக்கட்டும், அது அவர்களுக்கான கடமை. நமக்கு அதனைக் குறித்த சிந்தனை, ஆராய்ச்சி, பகுப்பாய்வு, உரையாடல் தேவையற்றதெனக் கருதி விலகி நிற்பது கவலைப்படவேண்டிய விஷயம். சமூக அந்தஸ்தை அழிக்கும் போக்காகும்.
நாட்டில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு ஒரு ஆன்மீகவாதியுடைய கருத்தை விடவும், பொருளாதார ஆய்வாளர்கள், நிபுணர்களின் கருத்து ஏற்கப்பட்டு செயல்படுத்தப்படும் நிலையிருக்கிறது.
மதத்தை பூரணமாகக் கற்றவர்கள் பொருளாதார ஆய்வாளர்களாக, நிபுணர்களாக மாறும்போதுதான் பிரச்சினைகளுக்கு கூர்மையான, நிலையான, சரியான தீர்வுகளை முன்வைக்க முடியும்.
ஒரு சாரர் சிந்தனை, தனித்த சிந்தனை, குறுகிய சிந்தனை, வெற்றுச் சிந்தனை, கட்டுக்கதைச் சிந்தனைகள் மூலம் துளியளவும் தீர்வு கிடைக்காது.
மொழி, இனம் தாண்டிய சிந்தனைகள், ஆழமான ஆராய்வுகள் மூலம் வெளிக்கொண்டு வரப்படும் தீர்வுகள் 50 சதமாவது நன்மை தருவதாக அமையும்.
நாங்கள் “Peace – Harmony- Solidarity” எனக் கூறிக்கொண்டு நாட்டின் அமைதிக்குப் பங்களிப்பு செய்கிறோம், பாடுபடுகிறோம் என்பன போன்றவை எந்த வகையிலும் உதவாது. பிரச்சினைகளுக்கு ஆழமான தீர்வளிக்காது. தீர்க்கமான தீர்வுகள் முன் வைத்தளே வெற்றிக்கு அழைத்துச் செல்லும். தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் நாட்டின் பொருளாதாரத்தை மட்டும் பிரதானமாக வைத்து பேசக்கூடிய முஸ்லிம்கள் தமிழகத்தில் எத்தனை பேர் உள்ளனர்? விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலாவது தேறுவார்களா?
இஸ்லாம் அல்லாதவர்கள் தங்களுடைய மதத்தை கற்கின்றனர். உலக அறிவை உள்வாங்குகின்றனர். தம் நாட்டைத் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். முஸ்லிம்கள் மதத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை கற்க மறுக்கின்றனர். எண் கற்க வேண்டும் என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.
நாட்டிற்கு எங்களது முன்னோர்கள் பங்களித்துள்ளனர் என்று முன்னோர்களின் பெருமைகளைக் கூறுவதில் மட்டும் காலம் கழித்தல் இருப்பது சிறுமையின் வீழ்ச்சிக்கு தள்ளிக்கொண்டிருக்கிறது. முன்னோர் பங்களிப்பு செய்துள்ளனர், எங்களுக்கு உரிமையுள்ளது என்பன போன்ற கோரிக்கையை விடவும், நம்மிடமிருந்து எந்த உழைப்பை நாட்டுக்கு தந்திருக்கிறோம், முன் நிற்கிறோம், அறிவுப்பாதைக்கு நாட்டுமக்களைக் கொண்டு செலுத்தவிருக்கீறோம்… சுய ஆய்வுகள் எதிர்கால மீளுதலுக்கு உதவும். விதண்டா வாதங்கள் வெற்றிடத்தை உருவாக்கும். தனிமைப்படுத்தும்.
நமது மாநிலத்துக்கு நம்மால் இயன்ற ஆக்கப்பூர்வ, அறிவுப்பூர்வ உழைப்பைத் தருவோம். நாட்டுப்பற்றை எண்ணத்துக்குள் ஏற்றுவோம். பொருளாதாரம் குறித்து அறிவோம். அறிவை நாம் தேடுவோம். அறிவு நம்மைத் தேடி வரும் வகையில் ஆளுமையாளர்களாக வளர்வோம். வளர்ச்சி நம்மைத் துரத்தி வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
( முஸ்லிம் முரசு டிசம்பர் 2014 )