‘எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்!’
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
தனி நபர் சொத்து உரிமைகளில் பல்வேறு மதத்தினவர் சட்டப் படி உரிமை கொண்டாட வழிமுறைகள், பழக்க வழக்கங்கள் உண்டு. ஆனால் பொது நிறுவனத்திலோ அல்லது ஜனநாயக அரசிலமைப்பிலோ அதுபோன்ற வாரிசு உரிமைகள் இல்லை.
முற்காலத்தில் அரசர்களில்லை. அரசர்களில்லததால் போர்களில்லை. ஆனால் நாடுகளை ஆட்சி செய்ய அரசர்கள் வந்ததும் மன்னர்களின் மண்ணாசை ஆர்வத்தால் போர்கள் நடந்தன. ஐரோப்பிய நாடுகளில் மற்ற நாட்டு மக்களில்லா மகிழ்ச்சி போலந்து நாட்டு மக்களுக்கு இருந்ததாம். காரணம் அங்கே மன்னர்
ஆட்சி இல்லையாம். உலக ஆட்சி முறைகளுக்கு முன்னோடியான கிரேக்க நாட்டில் கடிவாளமில்லாத அதிகாரத்தினை சில ஆட்சியாளர்கள் கொண்டிருந்ததால் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன என்று வரலாறு கூறுகின்றது.
இரண்டாம் உலகப் போரில் மன்னர் ஆட்சியின் மகுடங்கள் சரிந்து மக்கள் ஆட்சி பல்வேறு நாடுகளில் மலர்ந்தது. மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுத்தப் பிரதிநிதிகள் மூலம் ஆட்சி செய்வது தான் ஜனநாயகம்.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட பல்வேறு தலைவர்கள் அகிலத்தில் உண்டு. அவர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை, உறவினர்களை வாரிசாக நியமனம் செய்ததில்லை. வாரிசுகள் அரசில் தலையீட்டால் பல்வேறு தலைவர்கள் பதவி இழக்கும் சம்பவங்களும் உண்டு. தலைமைப் பதவியினை ஏற்ற வாரிசுகள் சர்வாதிகாரிகளாக மாறி சிம்மாசனங்களை இழந்தவர்களும் உண்டு.
அவ்வாறு பதவி இழந்ததிற்கு முக்கிய காரணங்களாக அமைந்தது:
1) வாரிசுகள் மைனர்களாகவும், முன் அனுபவமில்லாது குழப்பமான அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
2) வாரிசில்லாத ஆட்சியாளர்கள் திறமைசாலிகளாகவும், மாட்சிமை அமைந்தவர்களாகவும் இருந்ததால் மக்கள் மற்றவர்களை தேர்ந்தடுத்தது.
வாரிசுகள் என்பது புகழுக்காகவோ, பதவி சுகத்திற்காகவோ , தங்களுக்குள்ளே இருக்கும் குரோதத்தினை பதவியால் பழி தீர்த்துக் கொள்வதிற்காகவோ அல்ல. மக்களை உண்மையான நேரான வழியில் நடத்திச் செல்லவே பயன் படும் என்றால் மிகையாகாது.
இறை வழி வந்த யூத, கிருத்துவத்திலோ அல்லது இஸ்லாமிய மார்க்கத்திலோ வாரிசு உரிமை இல்லை. எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூட தன் கடைசி வாழ்நாளில் என் வாரிசு இவர் தான் என்று சுட்டிக் காட்டவில்லை. அனைத்து மக்களையும் அனைத்துச் செல்லும் திறமை அவர்களிடம் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கி இருந்ததால் பெருமானார் அவர்கள் யாரையும் வாரிசு என்று சுட்டிக் காட்ட வில்லை. ஆனால் இன்று பல்வேறு இஸ்லாமியர் ஆளும் அராபிய, வளைகுடா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் அனுபவமில்லா வாரிசுகளை நியமித்ததால் உள்நாட்டுக்குள்ளே குழப்பம், வெளிநாட்டு மிரட்டல், அந்நிய நாடுகளின் ஆதிக்கம் ஆகியவைகளுக்கு வழிவிட நேருகிறது.
செல்வமிருந்தும் சொந்தக் காலில் நிற்க முடியாமல் உதவிற்கு மேற்கத்திய நாடுகளை நாட வேண்டியிருப்பது கேவலமில்லையா? மக்கள் பணி மறந்து மயக்கத்தில் இருப்பதினால் இந்த பரிதாப நிலை இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது என்பதினை துபாய் போன்ற நாடுகளுக்கு சென்றவர்களுக்குத் தெரிந்திருக்கும் எப்படியெல்லாம் அவர்கள் மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளார்கள் என்று.
அமெரிக்க நாட்டில் கறுப்பின மக்களை தட்டி எழுப்பி, அவர்களுடைய உரிமைக்காக தன்னுயிர் கொடுத்த மார்டின் லூதர் கிங், சொந்த நாட்டில் வெள்ளை இன மக்களால் பல இன்னல்கள் பட்ட கறுப்பின மக்களுக்காக குரல் கொடுத்த தென் ஆப்ரிகா சிங்கம் நெல்சன் மண்டேலா, காலனி ஆதிக்கத்திலிருந்து அன்னியப் படைகளை விரட்டிய துருக்கி நாட்டினைச் சார்ந்த முஸ்தபா கமால் அட்டா துர்க், எகிப்தினைச் சார்ந்த கமால் அப்துல் நாசர், இந்தியா, பாக்கிஸ்தானைச் சார்ந்த மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா போன்றோர் தங்கள் வாரிசுகளாக யாரையும் சுட்டிக் காட்டவில்லை என்பது சரித்திரம் சொல்லும் உண்மை. ஆனால் அதன் பின்னால் வந்த ஆட்சியாளர்கள் தங்கள் வாரிசுகளை நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அடையாளம் காட்டியதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதன என்பது நாம் அறிவோம்.
இந்திய அரசியலில் மற்றவர்களுக்கு முடிசூட்டும் தலைவராக இருந்த காமராஜர்,தாழ்த்தப் பட்ட மக்கள் தலைவர் டாக்டர் அம்பேத்கார், சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருந்த கண்ணியமிகு காயிதே மில்லத், பகுத்தறிவு பகலவன் பேரறிஞர் அண்ணா போன்றோர் தங்களுடைய வாரிசு இன்னார்தான் என்று சுட்டிக் காட்டவில்லை. ஆனால் அந்தப் பெரியார்களின் பெயரில் கட்சி நடத்தும் சிலர் தாங்கள் தான் வாரிசு என்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். ஆனால் அந்தப் பெரியார்களின் கொள்கைகளை காற்றில் பறக்கச் செய்யும் பரிதாபம் நீங்கள் காணலாம். எங்கெல்லாம் அரசியல் வாரிசாக தன் குடும்பத்தினைச் சார்ந்தவர்களை அடையாளம் காட்டுகிறார்களோ அங்கெல்லாம் அரசியல் தோல்விகளை அன்றாட அரசியல் வானில் காணலாம்.
உதாரணத்திற்கு ஹரியாணா மாநிலத்தில்முன்னாள் துணை பிரதமர் தேவிலால் வாரிசு ஓம் பிரகாஸ் சௌட்டாலா, பீகார் முன்னால் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் முன்னால் முதல்வர் மனைவி ராபரி தேவி , முன்னால் துணை பிரதமர் சரண் சிங் மகன் அஜீத் சிங், கர்நாடகா முன்னாள் பிரதமர் தேவி கௌடா மகன் குமாரசாமி போன்றவைகர்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய கட்சியின் செல்வாக்குகளும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையானது அனைவருக்கும் தெரியும்.
பிள்ளைகள் கேட்டு அடம் பிடிக்கின்றார்களே என்று தந்தைமார்கள் தின்பதிற்காக பஞ்சு மிட்டாய், பாப்கார்ன்,விளையாட பலூன், பார்பி பொம்மை அல்லது ஐ.பேட் போன்றவை தந்தைமார்கள் வாங்கிக் கொடுக்கலாம். அதற்காக பிள்ளைகள் கேட்கின்றதே என்று படுக்க இலவம் பஞ்சு மெத்தை, ஏ.சி. மெசின் பெட் ரூம், கொப்பளிக்க பன்னீர், குளிக்க கழுதைப் பால், குடிக்க ஒட்டகப்பால், பயணம் செய்ய ஆடி.கார் போன்றவை சாதாரணக் குடிமகன் வாங்கிக் கொடுக்க முடியுமா? முடியாதல்லவா ? ஆகவே தந்தையார் உயர் பதவியில் இருந்தால் அவர் மகன் தந்தைபோன்று உழைத்து முன்னுக்கு வர ஆசைப் படவேண்டுமே தவிர தந்தையின் சிம்மாசனமே ஆசைப்பட்டதும் வேண்டும் என்று கூறுவது பேராசையில்லையா?
அதேபோன்று ஒரு இமாம் திருக்குரானை, ஹதிஸ்களை அதிகமாக தெரிந்தவர், சிறப்பாக பாயான் செய்பவர் தான். ஆனால் அதனைப் பயன் படுத்தி பத்வா கொடுக்கும் அளவிற்கு உயர்ந்தவரோ, அல்லது தேர்தல் நேரத்தில் முஸ்லிம்கள் ஆதரவு உங்களுக்குத்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு முஸ்லிம்களை அடகு வைக்கும் அளவிற்கு அவர் உயர்ந்தவரா என்று சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு மேலாக பள்ளிவாசல்களில் தொழ வைக்க இரண்டு இமாம்கள் என்ற வசதியினைப் பயன்படுத்திக் கொண்டு தனது ஓய்வு நேரங்களில் மூட நம்பிக்கைக்கு புகழிடமான பேய், பிசாசு, காற்று, கருப்பு ஒழிக்கின்றேன் என்று கிளம்பி வசூல் வேட்டையில் ஈடுபடலாமா?
அதுபோன்ற சிர்க்கான காரியங்களை விட்டுவிட்டு இன்று படித்த, விஞ்ஞான அறிவு பெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் மனதில் எழும் சந்தேகங்களை தீர்க்கும்படியான கதீசுகளை, திருகுரானில் புதைந்து கிடக்கும் இன்னும் அறியமுடியா தகவல்களை பயான்களில் சொன்னால் முஸ்லிம் இளைஞர்கள் 19 குழுபோன்ற நஜ்ஜாஜ் என்று சொல்கிற குழுக்கள் பக்கம் செல்வதினை தடுக்க உதவுமல்லவா? 6.12.2014 ந் தேதி கர்நாடக மந்திரி சதிஸ் ஜார்கிஹோலி என்பவர் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களிடையே நிலவும் காற்று, கருப்பு, பேய், பிசாசு என்ற மூட நம்பிக்கையினை ஒழிக்க காலையிலிருந்து மறுநாள் காலைவரை தனிமையில் பெலகாவில் உள்ள சதாசிவ நகர் சுடுகாட்டில் தங்கி, உணவருந்தி, படுத்து தூங்கி எழுந்தாராம். அவரை எந்தப் பேயும், பிசாசும் அண்டவில்லை.
இதுபோன்ற முற்போக்கான நடவடிக்கையில் இறங்கி முஸ்லிம்கள் சிலரின் மூட நம்பிக்கை ஒழிக்கப் பாடுபடுவதினை விட்டுவிட்டு, சிர்க்கான காரியங்களான பேய்,பிசாசு விரட்டுகிறேன் என்று பண அறுவடை செய்வது தகுமா? இன்று படித்த, விஞ்ஞான அறிவு பெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் மனதில் எழும் சந்தேகங்களை தீர்க்கும்படியான கதீசுகளை, திருகுரானில் புதைந்து கிடக்கும் இன்னும் அறியமுடியா அற்புதங்களை, கணினி உபயோகித்து, பத்திரிக்கை ஆதாரத்துடன் பயான்களில் சொன்னால் முஸ்லிம் இளைஞர்கள் 19 குழுபோன்ற நஜ்ஜாஜ் என்று சொல்கிற குழுக்கள் பக்கம் செல்வதினை தடுக்க உதவுமல்லவா? அதனை விட்டு விட்டு தொழவதிற்கு நியமிக்கப் பட்ட இமாம் பள்ளிவாசலுக்கு நானே எஜமான், எனக்குப் பின்பு என் சிறுவயது மகனே வாரிசு என்று ‘உழுதவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற அடிப்படையில் சொந்தம் கொண்டாடுவது எந்தவிதத்தில் நியாயம்?
அரசியல் போன்றே மதத்தலைவர்களும் தங்கள் வாரிசுகளை நியமனம் செய்வதால் மக்கள் மனதில் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் ஏற்பட்டிருப்பதினை இரண்டு உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம் என நினைக்கின்றேன்.
1) முகலாய பாரம்பரிய சின்னமாக தலைநகர் டெல்லியில் உள்ளது ஜும்மா மஸ்ஜித் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். நானும் முதல் முறையாக 1979 ஆம் ஆண்டு பார்த்துப் பரவசப் பட்டிருக்கின்றேன். அங்குள்ள இமாம் புஹாரி தனது 19 வயது மகனை தனது வாரிசாக நியமித்துள்ளார். அது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானதல்லவா? அந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வரை சென்றது மக்களின் புருவத்தினை உயர்த்த வைத்தது.
2) பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் ஆசிரமம் அமைத்து ஆட்சிமை நடத்திய திவ்ய ஜோதி சுவாமி அவர்கள் சென்ற நவம்பரில் மரணம் அடைந்து விட்டார். அந்த ஆசிரமத்தினைச் சார்ந்த பலகோடி மதிப்புள்ள சொத்தினை சொந்தம் கொண்டாட அவருடைய மகன்களிடையே வாரிசு போட்டி ஏற்பட்டதால் இறந்த சாமியின் உடலினை ‘ப்ரீசர் பெட்டியில்’ வைத்து பாதுகாத்து வருகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சாமியார் மீண்டும் உயுர் பெற்று மக்களுக்கு பூஜைகள் நடத்த யார் வாரிசு என்று அடையாம் காட்டுவாராம்.. இந்த வழக்கும் பஞ்சாப் உயர் நீதிமன்ற வரை சென்று உயர் நீதிமன்றமும் சென்ற நவம்பர் மாதத்திற்குள் அவருடைய உடலை அப்புறப் படுத்தி தகனம் செய்யவும் என்று ஆணைப் பிரபித்தும் இன்னும் அந்த பிரேதம் பாதுகாக்கப் பட்டு வருவதாக பத்திரிக்கை செய்திகள் படம் பிடித்துக் காட்டுகின்றன என்பது என்னே வேடிக்கையான செயல்.
தமிழக முஸ்லிம் கட்சிகளில் சிலர் கண்ணியமிகு காயிதே மில்லத், அதற்குப் பின்பு வந்த சிராஜுல் மில்லத் ஆகியோருடைய உண்மையான வாரிசு நாங்கள் தான் என்று பெயரளவில் லெட்டெர் பேடு வைத்து அரசியல் நடத்தி தேர்தல் நேரத்தில் பத்தோடு பதினொன்றாக இருப்பது எந்த விதத்திலும் இதுவரை பலனளிக்கவில்லை என்பது தான் உண்மை. அந்தத் தலைவர்களின் குடும்பச் சொத்துக்கு அவர்கள் வாரிசாக இருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்த சமூதாயத்திற்கும் யாரும் உரிமை கொண்டாட முடியுமா?
அதேபோன்று தான் இமாம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் பணியாளர் ஆவார்கள். அவர்கள் பணிபுரியும் பள்ளிக்கே எஜமானவர்களாக ஒருபோதும் ஆக முடியுமா?
ஆகவே தனிப் பட்ட குடும்ப மற்றும் சொத்து பங்கீடு செய்வதில் வாரிசுகள் செல்லுபடியாகுமே தவிர அரசியல் வானிலோ, மத சம்பிராய சடங்குகளிலோ அதுபோன்ற செயல் போணியாகாது என்றால் சரிதானே!
AP,Mohamed Ali