அன்பானவரின் பிரிவின் இடைவெளி! ஒரு இஸ்லாமிய பார்வை
[ மணமுடித்தலின் நோக்கம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் சட்ட ரீதியாக பரஸ்பரம் இல்லற சுகம் அடைவதும் அதன் மூலம் மழலைச் செல்வங்களைப் பெறுவதும் ஆகும்.
இல்லறத்தில் இணைந்த தம்பதியரிடையே தாம்பத்திய சுகத்தைப் பறிமாறிக் கொள்ள முடியவில்லையெனில் அவர்கள் மணமுடித்துக் கொண்டது அர்த்தமற்றதாகிவிடும்.
வாழ்க்கையில் இணைந்த தம்பதியர் இருவரும் தாம்பத்திய சுகத்தைப் பெறுவதில் பொதுவாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம். வெளியூர் செல்லும் கணவன், ஒரு குறிப்பிட்டக் காலத்திற்குள் திரும்புவதாகக் கூறி, மனைவியின் சம்மதத்துடன்தான் செல்கிறான்.
திருமண உறவை ஒப்பந்த உறவாக இஸ்லாம் அறிவித்திருப்பதால், கணவனிடமிருந்து பெறும் தாம்பத்திய சுகம் எப்போதெல்லாம் தனக்கு வேண்டும் என்பதையும் மனைவி தீர்மானிக்கலாம்.
நீண்ட காலம் கணவனைப் பிரியமுடியாது எனக் கருதும் மனைவி, கணவன் தன்னை நீண்ட நாள்கள் பிரிந்து செல்வதைத் தாராளமாகத் தடுத்து நிறுத்தலாம். இதற்கான உரிமை தம்பதியர் இருவருக்கும் உள்ளது.]
அன்பானவரின் பிரிவின் இடைவெளி! ஒரு இஸ்லாமிய பார்வை
வாழ்வாதாரத் தேவைகளைப் பெறுவதற்காக பொருளீட்டும் காலத்தில் கணவனும் மனைவியும் பிரிந்திருக்கும் சந்தர்ப்பத்தில், தம்பதியரில் ஒருவரிடமோ அல்லது இருவரிலுமோ தவறான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது’ என்பதை, “கற்பொழுக்கம் தவறி, சோரம் போய்விடுதல்” என்று வெளிப்படையாகவே எடுத்துக்கொள்வோம்! இவ்வாறு நிலைதடுமாறிவிடுவதையும் இஸ்லாம் விபச்சாரம் என்றே சொல்கிறது. விபச்சாரம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு:
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது (அல்குர்ஆன் 17:32).
ஸஅத் இப்னு உபாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்” என்று சொல்ல, இச்செய்தி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், “ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரைவிட அதிக ரோஷமுள்ளவன்; அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால்தான் அக-புற மானக்கேடான செயல்கள் (ஆபாசங்கள்) அனைத்தையும் தடைசெய்துவிட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புகிறவர் அல்லாஹ்வைவிட வேறெவரும் இல்லை. எனவேதான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பிவைத்தான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகிறவர் வேறெவருமில்லை. எனவேதான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: மூகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 7416, முஸ்லிம் 3001, அஹ்மத், தாரிமீ)
மணமுடித்திருந்தும் மனைவி கருத்தரிப்பதற்காக கணவனல்லாத மாற்றானுடன் உடலுறவு கொள்வதும், ஏக காலத்தில் ஒருத்திக்குப் பத்து கணவர்கள் என்றும் விபச்சாரம் என்பது திருமணம் என்ற பெயரிலேயே வெளிப்படையாக ஆங்கீகரிக்கப்பட்டிருந்த காலத்தில் (புகாரி 5127, அஹ்மத்) இஸ்லாத்தின் மீளெழுச்சி தொடங்கியது. ஏக காலத்தில் ஒருத்திக்கு ஒரு கணவன் என்கிற மஹர் கொடுத்து மணமுடிக்கும் திருமணத்தை ஆகுமாக்கி, மற்றவை வெளிப்படையான / மறைவான மானக் கேடாகும் என்று இஸ்லாம் தள்ளுபடி செய்துவிட்டது. பருவமடைந்த பின்னர் இஸ்லாத்தில் தம்னை இணைத்துக் கொள்வோர் விபச்சாரம் செய்வதில்லை என்கிற தார்மீக உறுதிமொழியையும் வழங்கிடவேண்டும்!
நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளைக் கொல்வதில்லை என்றும், கைகள்-கால்கள் (வைத்து) இடையில் அவர்கள் கற்பனை செய்கிற அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான(காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து (எனும் வாக்குறுதி) அளித்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன் (அல்குர்ஆன் 60:12).
ஒழுக்கம், பண்பாடு கற்பு நெறியுடன் வாழ்தல் அவசியம் என முழு மனித குலத்திற்கு அழுத்தமாக அறிவுரை வழங்கியுள்ளதன் மூலம் இஸ்லாம் என்பது முழு மனுக்குலத்தின் வாழும் வழி; வாழ்க்கை நெறி என்பதை உறுதி செய்கிறது. மணமுடிக்காத, மணமுடித்த ஆண் பெண்ணாக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் விபச்சாரத்தின் பக்கம் நெருங்கவேண்டாம். இதுவே இறைக் கட்டளையாகும்! இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவர் வெளிப்படையான, அந்தரங்கமான மானக் கேடான செயல்களிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் கட்டாயப்படுத்தியுள்ளது.
இனி, கேள்விக்கு வருவோம்…
மணம் செய்து கொண்ட ஆணாயினும் பெண்ணாயினும் பிறர் மனை நாடுவதற்கான அடிப்படையாக உள்ளவை:
தம்பதியரிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமல் போவது.
மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பும் மரியாதையும் கணவனிடமிருந்து கிடைக்க வேண்டிய கனிவும் அரவணைப்பும் குறைந்து காணப்படுவது.
இல்லற சுகத்தில் ஏமாற்றம்.
உடன் போக்குதலை ஊக்குவிக்கும் சின்னத்திரை சீரியல்களால் மனரீதியான மாற்றம்.
மஹ்ரமில்லாத ஆண்களோடு பெண்களும் மஹ்ரமில்லாத பெண்களோடு ஆண்களும் நெருங்கிப் பழகும் சூழல்.
இறையச்சக் குறைவு.
நீண்ட காலப் பிரிவு.
மேற்காணும் ஏழு காரணங்களுள் கேள்விக்குத் தொடர்பான “நீண்ட காலப் பிரிவு” என்பது இறுதியானதாக இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்வுகளுக்குத் தகுந்தாற்போல் வரிசை முன்/பின் ஆகலாம்.
கணவன் கொலை; கள்ளக் காதலனும் மனைவியும் கைது!
தம்பியோடு உறவு கொண்ட மனைவியைத் தட்டிக் கேட்ட கணவனுக்குக் கத்திக் குத்து!
கணவனை மீட்டுத் தருமாறு மனைவி நூதனப் போராட்டம்!
இரண்டு குழந்தைகளைத் தவிக்க விட்டு, தாய் தலைமறைவு; காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு!
புதுப் பெண் தலைமறைவு; திருமணம் ஆன ஒரு மாதத்தில் மாயம்!
கணவனின் துரோகம் காரணம்; மனைவி தற்கொலை முயற்சி!
திருமணம் ஆனதிலிருந்து பிரிந்துவிடாமல் ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்ந்தவர்களைப் பற்றி மேற்காணும் செய்திகளுள் ஏதேனும் ஒன்றை வாரந் தவறாமல் நாளிதழ்களில் நாம் வாசித்து வருகிறோம்.
மணமுடித்தலின் நோக்கம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் சட்ட ரீதியாக பரஸ்பரம் இல்லற சுகம் அடைவதும் அதன் மூலம் மழலைச் செல்வங்களைப் பெறுவதும் ஆகும். இல்லறத்தில் இணைந்த தம்பதியரிடையே தாம்பத்திய சுகத்தைப் பறிமாறிக் கொள்ள முடியவில்லையெனில் அவர்கள் மணமுடித்துக் கொண்டது அர்த்தமற்றதாகிவிடும்.
வாழ்க்கையில் இணைந்த தம்பதியர் இருவரும் தாம்பத்திய சுகத்தைப் பெறுவதில் பொதுவாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம். வெளியூர் செல்லும் கணவன், ஒரு குறிப்பிட்டக் காலத்திற்குள் திரும்புவதாகக் கூறி, மனைவியின் சம்மதத்துடன்தான் செல்கிறான். திருமண உறவை ஒப்பந்த உறவாக இஸ்லாம் அறிவித்திருப்பதால், கணவனிடமிருந்து பெறும் தாம்பத்திய சுகம் எப்போதெல்லாம் தனக்கு வேண்டும் என்பதையும் மனைவி தீர்மானிக்கலாம். நீண்ட காலம் கணவனைப் பிரியமுடியாது எனக் கருதும் மனைவி, கணவன் தன்னை நீண்ட நாள்கள் பிரிந்து செல்வதைத் தாராளமாகத் தடுத்து நிறுத்தலாம். இதற்கான உரிமை தம்பதியர் இருவருக்கும் உள்ளது!
ஒரு வாரம், ஒரு மாதம், ஓராண்டு அல்லது இதைவிட அதிகமான காலம் கணவன் மனைவி பிரிந்திருக்க நேரிடும் என்ற நிலை ஏற்படின் இதைத் தெரிந்து தம்பதியர் இருவரும் சம்மதித்தப் பின்னரே ஒருவரையொருவர் பிரிகின்றனர்.
இன்னும் சொல்வதென்றால், கவுரவத்துக்காகவும் ஆடம்பரச் செலவுகளுக்காகவும் தன் கணவன், தன்னைப் பிரிந்து சென்று வெளிநாட்டில் பொருளீட்டுவதை விரும்பும் மனைவிகளே நம் சமுதாயத்தில் அதிகம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. (விதிவிலக்காக, வெகு சொற்பமான கணவர்கள் தங்கள் மனைவியரைத் தாங்கள் பொருளீட்டும் வெளிநாடுகளுக்கு வரவழைத்துக் குடும்பத்துடன் வாழ்கின்றனர்).
“திரைகடலோடியும் திரவியம் தேடு” எனும் முதுமொழி நம் சமுதாயத்துக்கென்றே ஆகிப்போனதுபோல், “கட்ட வெளக்கமாறா இருந்தாலும் கப்ப வெளக்கமாறா இருக்கணும்” (குப்பை அள்ளினாலும் மாப்பிள்ளை வெளிநாட்டில் அள்ளுபவராக இருக்க வேண்டும்) எனும் புதுமொழி நம் சமுதாயப் பெண்மணிகளால் உருவாக்கப்பட்டது.
இவ்வாறு, கணவனைக் கழுத்தைப் பிடித்து வெளிநாட்டுக்குத் தள்ளிவிட்டு, தெரிந்தே பிரிந்த பின்னர் உணர்வுக்குப் பலியாகி விபச்சாரத்தை நாடுவது ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் துரோகச் செயல்!
நவீன காலத்தில் வீட்டிலும் வெளியிலும் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள் தாரளமாக உள்ளன. வீட்டில் தொலைக்காட்சியாகவும், வெளியில் நேரிலும், விளம்பரக் காட்சியாகவும் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை!
இந்நிலையில் இறையச்சத்தை மேன்மைப்படுத்தி மற்றவற்றைத் முற்றாகத் தவிர்த்துக்கொள்வது மட்டுமே மேற்காணும் கேள்விக்கு இஸ்லாம் கூறும் தீர்வாக அமையும்.
அனைவரும் அல்லாஹ்வின் மார்க்கத்தை அழகாகப் பின்பற்றிட அருள் புரிவானாக!
(இறைவன் மிக்க அறிந்தவன்)
source: -ajmal – mahdee .blogspot.com