அவன் அப்படித்தான்
Jazeela Banu
இருபது வருடங்களுக்கு முன் என் கணவர் கூறியது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்னுள். அன்று ஏற்பட்ட வலியும் வடுவும் இன்னும் இரணமாகத்தான் இருக்கிறது. கையாலாகாதவளாக அப்போது இருந்துவிட்டேன் இந்த முறை அப்படியாகாது. நான் எடுப்பதே முடிவாக இருக்கும். பல வருட மனவுளைச்சல் இத்தனைக் காலங்களுக்கு பின்பு தணிவது எனக்கு ஆத்ம திருப்தியைத்தான் தருகிறதே தவிர சமுதாயத்தில் எங்கள் எதிர்காலத்தின் கேள்விக்குறிகளைப் பற்றி துளியும் கவலைக் கொள்ளாதவளாக இருக்கத் துணிகிறேன்.
எனது முதல் கருவின் சிதைவே என்னை இன்றும் உறுத்தும் இரணம். எந்தப் பெண்ணுமே கருவுற்ற அந்த இன்பகரமான செய்தியை முதலில் பகிர நினைப்பது கணவரிடம்தான். அந்த இன்பத்தையும் நொடிப் பொழுதில் இழந்து தவித்த துர்பாக்கியசாலி நான். கருவிலிருப்பது பெண் சிசுவென்றவுடன் கருச்சிதைவு செய்தாக வேண்டுமென்ற கட்டளை என் மூச்சைத் திணறடித்தது.
அவருக்கு அப்படியொரு முகமிருப்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. படித்த, பகுத்தறிவுமிக்கவர்களுமா இப்படிப்பட்ட இழிசெயலில் ஈடுபடுவார்கள்? இதற்காக அவருடன் வாதம் ஏற்படும் போது, பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர் திடீரென கையையோங்கிக் கொண்டு “நிறுத்துடி தேவடியாமுண்ட. பெரிய புடுங்கி மாதிரி பேசிக்கிட்டே போற, இந்த மயிரெல்லாம் இங்க வேணாம். ‘அது’ வேணும்னா அப்படியே போயிடு” என்று ஒரே வரியில் வசைபாடி என் வாயை அடைத்துவிட்டார்.
பகுத்தறிவில்லாத கீழ்மட்டத்து ஆண்களில் சிலர் தெருவோரங்களில் போதையில் பெண்டாட்டியை அடித்து மிதிக்கும் போது இப்படிப்பட்ட கொடூர மொழிகளில் பேசுவதைக் கேட்டதுண்டு. அந்த வசைகளை நானே கேட்க வேண்டிய அவல நிலையில் தள்ளப்படுவேன் என்று நினைத்திருக்கவேயில்லை. இப்படிப்பட்ட அவச் சொற்களைக் கேட்டேயிராத எனக்கு என் நரம்புகள் சுண்டியிழுத்து சிசுவுடன் நானும் சேர்ந்து தற்கொலை செய்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் கூட எழுந்தது.
என் சந்தோஷத்தில் மகிழ்ச்சியுறும் என் பெற்றோர்களுக்கு இதைப் பற்றி செல்லாமலேயே இருந்துவிட்டேன். வேறு நெருங்கிய நட்புகளுடனும் ஆறுதலுக்காகக் கூட குறிப்பிடவில்லை. ‘நல்லவேள அம்மா கிட்ட உண்டானத சொல்லல’ என்று நினைத்துக் கொள்ள முடிந்ததே தவிர, சகலமும் கணவர் என்று இருக்கும் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பெண்களின் தலையெழுத்தே அப்படித்தான். என்னதான் படித்த பட்டதாரிகளாக இருந்தாலும் கணவன் வகுத்ததே வாய்க்காலென்று இருக்க வேண்டிய சூழ்நிலை. எங்களுக்கென்று என்றுமே தனி முகவரி வைத்துக் கொள்ள முடிவதில்லை.
ஆண்களைச் சார்ந்தே, அவர்களின் அடக்குமுறையில் அடங்கியே வாழ வேண்டிய கட்டாயம். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் அதை மீறி நடக்கும் போது ‘கெட்டவள்’, ‘திமிர் பிடித்தவள்’, ‘அகங்காரம் கொண்டவள்’ என்ற பெயர்களுடன் வாழ வேண்டியிருக்கும். எங்கள் நடத்தை மீதும் பலி வரும் அபாயமும் உண்டு. ஊரோடு ஒட்டி வாழ எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு வகையில் முகமூடியுடன் திரிய வேண்டியுள்ளது. கணவர் தவறான பாதையில் சென்றாலும் சரி, தவறான செயல் புரிந்தாலும் சகித்துக் கொண்டு வாழவே தலைப்படுகிறோம். நானும் அப்படித்தான் அவர் கட்டளைக்கு அடிபணிந்து அந்தக் கொடூர செயலுக்குத் துணை் போனேன்.
இந்த விஷயத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதென்றாலும் அந்த பாதிப்பிலிருந்து மீளவே பல வருடங்களானது எனக்கு. இப்படிப்பட்டவரின் குழந்தைக்குத் தாயாக வேண்டுமா என்ற கேள்வி என்னை துரத்த கருவுறாமல் மிகப் பக்குவமாக சில ஆண்டுகளைக் கடத்தினேன். ஆனாலும் தாயாக வேண்டுமென்ற உந்துதல் ஒருபுறமிருக்க. உறவுகளின் நச்சரிப்பும் ‘மலடி’ என்ற பட்டமும் பயமுறுத்தவே மீண்டும் கருவுற்றேன்.
காலம் சென்று உண்டாகியிருந்தாலும் எந்தச் சலனமுமில்லாமல் மறுபடியும் கருத்தரித்த சிசு ஆணா- பெண்ணா என்ற பரிசோதனைக்கு உள்ளானேன். நல்லவேளையாக இந்த முறை ஆண் என்பதால் மற்றுமொரு பாவச் செயலிலிருந்து தப்பித்தேன். ஆனால் ஆண் கரு என்று தெரிந்ததும் என் கணவருக்குத் தலைகால் புரியவில்லை அவ்வளவு சந்தோஷம். எக்களிப்பில் எகிறிக் குதித்தார். சும்மா சொல்லக் கூடாது மனுஷர் என்னை அந்த ஒன்பது மாதங்கள் மிக நன்றாகக் கவனித்துக் கொண்டார். என்னைக் கொண்டாடினார் என்று சொன்னாலும் தகும். எல்லாம் சரியாக நடந்தாலும் ஓரத்தில் எனக்கு ஒரு ஆசை இருந்து் கொண்டே இருந்தது. அது ஒரு பலி வாங்கும் வெறியென்று் கூடச் சொல்லலாம். ‘கரு ஆண் என்று தெரிந்து அதனைச் சிதைக்காமல் வைத்துக் கொள்ள சம்மதித்து கொண்டாடுபவருக்கு பிறப்பது பெண்ணாக இருக்க வேண்டும், மருத்துவம், விஞ்ஞானமெல்லாம் பொய்யாக வேண்டும்’ என்று வெறியின் வெளிப்பாடாகத் தீவிரப் பிராத்தனையும் செய்து கொண்டேன்.
ஆனால் பரிசோதனையின் முடிவின்படியே ஆண் மகவைப் பெற்றெடுத்தேன். குழந்தையின் முகம் கண்டதும் சகலமும் மறந்தது. அவன் பிறப்பைக் கொண்டாடினோம், மகிழ்ந்தோம். அவன் எங்களின் ஒரே மகனானான். செல்லமகனுக்குப் பார்த்துப் பார்த்து அனைத்து தேவைகளையும் தந்தோம். அவன் எங்களுக்கு எல்லாமும் ஆனான். என் முந்தானையை பிடித்துக் கொண்டு சுற்றித் திரிந்த பொடியன் வளரத் தொடங்கிய பிறகு எங்களுடன் ஒட்டுவதே கிடையாது. தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்திய பிறகு அவனை யாரும் அணுகக் கூடாது என்று உத்தரவிட்டான். பதின்ம வயதென்றும் அப்பாவைப் போலவே மூர்க்க குணம் என்று விட்டதும் என் தவறுதான். ஒரு நாள் அவன் இல்லாத வேளையில் நான் அவன் அறையின் பூட்டைத் திருட்டு சாவிக் கொண்டு திறந்து பார்த்ததில் நான் கண்டவை எனக்கு ஒன்றுமே புரியாத வகையில் புதிராக இருந்தது. அந்தக் காட்சி கனவாக இருக்கக் கூடாதா என்று ஒரு கணம் நினைத்துக் கொண்டேன்.
பெண்களின் சாதனங்களாக அடுக்கியிருந்தது. ஆனால் யாருமே சுத்தம் செய்ய அனுமதிக்காத அவன் அறை தூசியும் தும்புமாக குப்பை நிறைந்திருக்கும் என்று எண்ணிய எனக்கு ஏமாற்றம். அவ்வளவு பிரகாசமாக சுத்தமாக இருந்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அறையின் ஒரு பகுதியில் புள்ளி வைத்த வண்ணக் கோலமும். அறை பளிச்சென்று இருந்தாலும் என் மனதினுள் ஏதோ இருட்டு பற்றிக் கொண்டதாக ஒரு பயம் எழுந்தது. இதனை இப்படியே விட்டுவிடக் கூடாது, நான் நினைப்பது நிகழ்ந்துவிடக் கூடாது என்று அவன் தந்தையிடம் முறையிட்டேன். அவர் அவருடைய உளவாளியை அழைத்து அவனைக் கண்காணிக்க ஏற்பாடு செய்துவிட்டு எனக்கு ஆறுதலாகவும் பேசினார்.
முன் தினம் நடந்ததை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. பூட்டிய அறையில் அப்பாவும் மகனும். கண்ணாடி சன்னல் வழியாக அவர்கள் முக பாவங்களை கவனிக்க முடிந்ததே தவிர என்னவென்று யூகிக்க முடியவில்லை. என்றுமில்லாத திருநாளாக அவர் மகனைக் கையோங்கிவிட்டார். ஆனால் அடிக்க மனமில்லாமல் குலுங்கி அவன் கால் அருகே விழுந்து அழுததைக் கண்டு ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிக வீராப்புக் கொண்ட, யாருக்கும் அடி படியாத மனிதர் இவன் காலில் விழுவதைக் கண்டு அஞ்சிக் கதவைத் தட்டும் முன், கோபமாகக் கதவு திறக்கப்பட்டு மகன் வெளியேறிவிட்டான். குழந்தையாக சுருண்டு் கிடந்தவரை நடுவீட்டில் கிடத்தி “என்னங்க? சொல்லுங்க, என்ன ஆச்சு? ஏன் இப்படி. இந்தப் பாதகத்திக்கு ஒண்ணுமே புரியலையே. உங்கள நான் இப்படிப் பார்த்ததேயில்லையே, நான் உங்கள என்னான்னு சமாதானம் செய்வேன்” என்று விசும்பத் தொடங்கினேன். அவர் அவரையே கட்டுப்படுத்திக் கொண்டவராக ‘வீட்டு வேலையாட்கள் முன்பு எதுவும் வேண்டாம்’ என்ற வகையில் சைகை செய்து உள்ளறைக்குச் செல்ல நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.
உள்ளறையில் கதவைத் தாளிட்ட பிறகு அவர் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் கன்னங்களை மடமடவென்று கழுவிய அவர் முகத்தை நோக்கி நான் “என்னான்னு சொல்லுங்க” என்று பதற்றத்துடன் கேட்டேன்.
“என்னத்தடி சொல்லுவேன்… மகன் மகன்னு மார்தட்டிக்கிட்டு இருந்த பய என்னை மார்லயே குத்திப்புட்டான். ஆண் வாரிசு வேணும்னு ஆசப்பட்டேன் இப்ப அவன் நான் ஆணே இல்லன்னு சொல்றானே நான் என்ன செய்வேன்” என்று குரல் எழுப்பி அழுதவாறு அவனுக்கு ஏற்பட்டிருக்கும் நோயைப் பற்றி விளக்கினார்.
சில உயிரியல் மாறுபாட்டினால் எதிர்பாலினமாக அவன் உணர்கிறானாம். இந்தக் கொடுமையை நான் என்னவென்று வெளிப்படுத்த? சின்னக் குழந்தையில் பெண் குழந்தையில்லாத குறையை தீர்க்கும் விதமாக இவனுக்குப் பட்டுப்பாவாடை உடுத்தி பொட்டு வைத்து மகிழ்ந்திருக்கிறேன். அதையே இப்பவும் வேண்டுமென்றால் நான் என்ன செய்வது? பல உளவியல் சிக்கல்களைக் கடப்பதால் பித்துபிடித்தாற் போல் திரிவதை அறிந்து அவனைத் தொடர்ந்து சென்று என் கணவர் வினவவே, ஒப்புக் கொண்டவனாக, அதனை தொடர்ந்துதான் அவன் வாழ்க்கை முறையும் அமையும் என்று தீர்க்கமாக சொன்னவன் மறு பாலினமாக மாற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்குக் காசு வேண்டும் என்று கேட்டிருக்கிறான். இவரோ ‘கட்டுப்படுத்தி இப்படியே வாழ பழகிக் கொள் இல்லையேல் குடும்பத்திற்கு பெருத்த அவமானம்’ என்று சமாதானம் செய்தும் “முடியாது என் பிரச்சனை உங்களுக்கு புரியாது. இனி உங்களுடன் தங்கவும் என்னால் முடியாது நான் என் இனத்தவர்களுடன் போகிறேன்” என்று கூறிய மகனின் காலிலேயே விழுந்து கெஞ்சியிருக்கிறார். ஒன்றும் செய்வதறியாமல் அவன் வெளியில் போய்விட்டான்.
அதன்பின் நான் இவருக்கு ஆறுதல் சொல்ல, அவர் எனக்கு ஆறுதல் சொல்லவென்று அந்த இரவு கழிந்தது. நேற்று விடியற்காலையில் தான் வீடு திரும்பினான். நான் ஏதேனும் கேட்டுவிடுவேனோ என்று பயந்தானோ அல்லது என்னை எப்படி நேருக்கு நேர் சந்திப்பது என்ற கூச்சமோ தெரியவில்லை தலையைக் குனிந்தவாறு அவன் அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டான். அவன் மனது எனக்குப் புரியாமலில்லை. ஒரு தாயாக அவன் சொல்லாமலேயே அவன் விஷயங்கள் எனக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியிருக்க கூடாது என்று எண்ணியவளுக்கு புலப்பட்டும் பொருட்படுத்தவில்லை என்றே வைத்துக் கொள்வோம்.
நேற்று முழுக்க நான் பலவாறு யோசித்தேன், எத்தனையோ பெற்றோர்களுக்கு மனநிலை குன்றியக் குழந்தைகள் இருந்தும், பிறவி ஊனமிருந்தும் அதனுடனே அன்பாகவே காலம் தள்ளும் போது இந்த உயிரியல் மாறுபாடு பெரிய விஷயமல்லவே?! எல்லோரும் இவர்களை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? சமுதாயக் கட்டமைப்பை நிர்ணயிப்பதும் நாம்தானே? சமுதாயத்திற்காக நாம் என்று வாழ்ந்தது போதும். சமுதாயம் எங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டுமே. இதனை ஒரு நோயாக பாவித்து அன்பை மருந்தாக்கி தருவோம். இவர் இப்படியாக அவர்கள் எப்படி காரணமாக முடியும்? அவர்களை ஒதுக்குவது எந்த விதத்தில் நியாயம்? இத்தனை நாள் வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பிரச்சனையை இப்போது வீட்டுக்குளிருக்கும் போது சமாளிப்பதுதானே புத்திசாலித்தனம்? இப்படி உளவியல் சிக்கலிருப்பவனை வெளியில் அனுப்ப எனக்கு விருப்பமில்லை. அது ஒரு தவறான பாதைக்கு நாங்களே வழிவகை செய்வதல்லவா?
வீதிக்குப் போய் ஒரு அலப்பறையாவது மட்டும் கவுரமா? அவன் விருப்பப்படியே தேவையான அறுவை சிகிச்சை செய்து கொள்ளட்டும். அவனை முழுக்க மகளாக மாற்றி அவன் உளவியல் பிரச்சனைகள் தீர அவனைப் போலவே இருக்கும் மற்றொருவரை தேடிப் பிடித்து துணையாக்கித் தருகிறேன். இல்லையேல் அவன் தனியாகவே வாழ முற்பட்டாலும் என் உயிருள்ள வரை துணை நிற்கப் போகிறேன். இதில் என்ன பிரச்சனை இருக்க போகிறது?
ஒரு தாயாக அவன் பக்கம் நின்று அவனுக்காக வாதாடி அவன் தந்தையையும் மாற்ற முடியுமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உறவினர்களைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? நாங்கள் சிரித்தாலும் அழுதாலும் எட்டியிருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கும் உறவினர்கள் இதையும் பார்த்துவிட்டு போகட்டுமே. என் மனதை தெளிவாக்கிய பிறகு எனக்கு எதுவுமே தடையாகத் தெரியவில்லை. இது அவன் பிரச்சனை மட்டுமல்ல எங்கள் பிரச்சனையும் தானே? அப்படியிருக்க அவனை தனியாகத் தவிக்க அனுப்ப முடியுமா எங்களால்? எங்கள் முற்பகல் பாவம் பிற்பகலில் விடிந்திருக்கிறது. அதற்கு பாவம் அவனை பலிகடாவாக்க எனக்கு விருப்பமில்லை. கண்டிப்பாக என் கணவரும் இதனை உணர்ந்தேயிருப்பார்.
எங்கள் மகன் எங்களுக்கு புது மகளாவான். ஒருநாள் இந்தச் சமுதாயமும் எங்களுடன் கைகோர்க்கத்தான் போகிறது. அதில் எனக்குச் சந்தேமேயில்லை. முடிவுமெடுத்துவிட்டேன் அந்த முடிவிலிருந்து நாங்கள் மாறுபடப் போவதில்லை. எல்லா பின்விளைவுகளையும் யோசித்த பிறகு நிம்மதியான உறக்கத்திற்குச் சென்றேன்.
விடிந்தது, இன்றைய நாள் எனக்கு இன்னும் பிரகாசமாக.