பாலுறவை – மிகச் சிறப்பான அனுபவமாக ஆக்கிக் கொள்வது எப்படி?
“வ ஆஷிரூஹுன்ன பில் ம’-ரூஃப்!”
– இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறிய பகுதி தான்!
இதன் பொருள்:
“நன்மையான காரியங்கள் அனைத்திலும் அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்”
ஆங்கிலத்தில்:
“behave with them as intimate companions in all the good things that are allowed in Islam”
இப்போது கேள்வி என்னவென்றால் –
நெருக்கம் என்றால் என்ன? – என்பது தான்!
நெருக்கம் என்பது உடலளவில் மட்டும் தான் என்றால் – அது கணவன் மனைவி உறவையே கொச்சைப் படுத்துவது போல் ஆகி விடும்.
கணவன் – மனைவியர் தங்களின் இல்லற வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் நெருங்கி வாழ்வதைத் தான் நெருக்கம் என்ற சொல் பொதுவாகக் குறிக்கின்றது.
அறிவு பூர்வமான நெருக்கம்,
ஆன்மிக விஷயங்களில் உணர்வு பூர்வமான நெருக்கம்,
அன்பு, காதல், இரக்கம் போன்ற விஷயங்களில் இதய பூர்வமான நெருக்கம்,
கணவன் மனைவி – இருவரிடமும் சிறப்பாக அமைந்திருக்கின்ற நற்குணங்களினால் (unique positive qualities) ஏற்படுகின்ற நெருக்கம்,
இறுதியாக – இவை அனைத்தும் ஒன்று சேர்வதால் ஏற்படுகின்ற உடல் ரீதியான நெருக்கம்
– இவை அனைத்திலும் ஏற்படுகின்ற நெருக்கமே பரிபூரணமான நெருக்கம் ஆகும்!
இப்படிப்பட்ட பரிபூரணமான நெருக்கம் கணவனுக்கும் மனைவிக்கும் எவ்வாறு ஏற்படும்?
இப்படிப்பட்ட நெருக்கம் ஏற்பட கணவன்மார்கள் செய்திட வேண்டியது என்ன?
மனைவி என்பவள் ஒரு பொக்கிஷம்! ஒவ்வொரு பெண்ணும் ஒரு பொக்கிஷம் தான்! பல அற்புதங்களைத் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் புதையல் தான்!
எனவே கணவன்மார்கள் செய்திட வேண்டியதெல்லாம் – தன் மனைவியின் “சிறப்பியல்புகளைப்” பட்டியல் போடத் துவங்கி விட வேண்டும்!
உங்கள் மனைவியின் தனித்தன்மைகள் என்னென்ன?
அறிவு சார்ந்த விஷயங்களில் – உங்கள் மனைவியின் தனித்தன்மை என்ன?
அது போலவே ஆன்மிக விஷயங்களில் – உங்கள் மனைவியின் தனித்தன்மை என்னென்ன?
அன்பு செலுத்துதல், பாசம் காட்டுதல், இரக்கப்படுதல் போன்ற உணர்வு சார்ந்த விஷயங்களில் உங்கள் மனைவி எப்படி?
என்னென்ன நற்குணங்கள் உங்கள் மனைவியிடத்தில் குடி கொண்டிருக்கின்றன?
இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்றிருக்கின்ற ஒரு பெண்ணை – “எனக்கே எனக்காக!” – என்று வல்லோன் அல்லாஹு வழங்கியிருக்கின்றான் என்று எண்ணும்போது – இரண்டு விஷயங்கள் ஏற்படும்!
ஒன்று: அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் உணர்வு!
இரண்டு: உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் அற்புதமான நெருக்கம் ஒன்று ஏற்பட்டு விடும்! அதுவும் இயல்பாகவே!
இவ்வாறு உங்கள் மனைவியின் “சிறப்பியல்புகளை” அனு தினமும் உங்கள் பேச்சின் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவும் – கொண்டாடுங்கள்! கொண்டாடுங்கள்! கொண்டாடிக் கொண்டே இருங்கள்!
இந்தக் கொண்டாட்டத்துக்கு நடுவிலே இயல்பாக – ஏற்படுகின்ற உடல் ரீதியான நெருக்கம் இருக்கின்றதே – அது –கணவன் மனைவி பாலுறவை அற்புதமான அனுபவமாக ஆக்கிக் காட்டி விடும்!
ஆனால் அதற்கு நேர் மாற்றமாக – மனைவியின் – குறைகளையே பட்டியல் போட்டுக் கொண்டிருந்தால் – கணவன் மனைவி நெருங்கி வாழவே முடியாது! உடல் நெருக்கம் கூட – சடங்காகிப் போய்விடும்!
அது போலவே மனைவியர்களும் தங்கள் கணவன்மார்களின் சிறப்பியல்புகளைப் பட்டியல் போடுங்கள்! அவைகளை சொல்லாலும் செயலாலும் கொண்டாடிக் கொண்டே இருங்கள்! கணவனின் நெருக்கத்தை உணர்வு பூர்வமாக அனுபவிக்கத் தவறி விடாதீர்கள்!
நபியவர்களின் இல்லற வாழ்வை சற்று நோக்கினால் இது இன்னும் தெள்ளென விளங்கும்!
சான்றுக்கு ஒன்று:
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படிக் கொண்டாடினார்கள்?
”தரீத் என்னும் உணவு மற்ற உணவுகளை விட சிறப்பாக இருப்பது போன்று மற்ற பெண்களைவிட ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சிறப்பானவர்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் கூறினார்கள் ” (திர்மிதி)
எழுதியவர்: S A மன்சூர் அலி