“அஸ்ஸிராத்துல் முஸ்தகீம்”
“இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம்” (அல்குர்ஆன் 1:5). தம் தொழுகையின்போது ஒவ்வொரு அடியானும், ஒவ்வொரு ரக்அத்திலும் அல்லாஹ்விடம் இப்படித்தான் பிரார்த்திக்கிறான்.
தம்மை படைத்து பாதுகாத்து வளர்க்கும் ரப்புல் ஆலமீனிடம், “நேரிய பாதையை எங்களுக்கு அருள்வாயாக”, என்று மனமுருகி கேட்கும் அடியான் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையிலேயே அல்லாஹ்வுடைய நேரிய பாதையின் வழிகாட்டலில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பதை திட்டவட்டமாக அறிந்து கொள்ள கடமைப்பட்டவனாக இருக்கிறான்.
இக்கால கட்டத்தில் உலகளாவிய அளவில் பல இஸ்லாமிய சகோதரர்கள் அல்லாஹ் காட்டிய ஸிராத்துல் முஸ்தகீம் என்ற நேரிய பாதையை விட்டும் மாறி தடம் புரண்டு வெறும் மனித யூகங்களால் உண்டாக்கப்பட்ட அபிப்பிராயங்களையே தம்முடைய மார்க்கமாகவும், தமது வாழ்க்கைப் பாதையாகவும் கருதி தடுமாறி நிற்கின்றனர். இதன் காரணம் என்ன? என்று ஆராயும்போது பல திடுக்கிடும் உண்மைகள் நமக்கு தெரியவருகிறது.
இஸ்லாத்தின் பரம விரோதிகளும், முனாபிக்கீன்களும் (நயவஞ்சகர்களும்) சேர்ந்து திட்டமிட்டு அல்லாஹ்வின் நேரிய பாதையை பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்கு தெரியப்படுத்தாமல், இருட்டடிப்பு செய்த சூழ்ச்சி, தந்திரங்கள் இப்போது நமக்கு தெரியவருகின்றன. உண்மை இஸ்லாத்தை மறைத்து போலிச்சடங்குகளையும், சம்பிரதாய வழக்கங்களையும் புகுத்தி முஸ்லிம்களை ஆண்டாண்டு காலமாக வழிகெடுத்தவர்களை அல்லாஹுத்தஆலா அடையாளம் காட்டி இவர்களது சுயரூபத்தை நமக்கு பகிரங்கப்படுத்திவிட்டான். (அல்ஹம்துலில்லாஹ்).
இஸ்லாம் என்ற பெயரில் மார்க்கத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத எத்தனையோ வழிகேடுகளையும், முரணான கொள்கைகளையும் பின்பற்றி வரும் எத்தனையோ சகோதரர்கள் நாடு முழுவதும் பரவலாக காணப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே, ”நாங்கள் அல்லாஹ் அருளிய நேரான பாதையிலேயே இருப்பதாக”, கூறிக் கொள்கின்றனர். இது அவர்களது வீண் கற்பனையே!
அல்லாஹ் அருளிய ஸிராத்துல் முஸ்தகீம் என்ற நேரிய பாதைக்கும், மனித அபிப்பிராயங்களால் ஏற்பட்ட “பாதை”க்கும் உள்ள வேற்றுமைகளையும், வித்தியாசங்களையும் நாம் சற்று ஆராய்வோம்.
வேடதாரிகளின் மாய வலையில் சிக்கி, இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கைகளை, இஸ்லாத்தின் பெயராலேயே கடைபிடித்து வரும் அப்பாவி சகோதர முஸ்லிம்கள் மூன்று பேரும் பிரிவுகளாக பிரிந்து காணப்படுகிறார்கள்.
முதல் பிரிவினர்:
இமாம்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவோர். வாசக அன்பர்கள் தயவுசெய்து மேற்கண்ட தலைப்பு வாசகங்களை மீண்டும் ஒருமுறை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். காரணம் “இமாம்களை பின்பற்றக்கூடாது” என்று நாங்கள் சொல்வதாக பொய்ப் பிரச்சாரம் செய்யும் போலி முல்லாக்கள் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.
குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் பார்க்காமல் இமாம்கள் சொல்லிவிட்டார்கள் என்ற ஒரே ஆதாரத்தின் அடிப்படையில் பின்பற்றுவதைத்தான் “கண்மூடி பின்பற்றுதல்”, அதாவது “தக்லீத் செய்தல்” என்று கூறி வருகிறோம்.
இவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒரு வகையினர் அலி ரளியல்லாஹு அன்ஹு வழிவந்த சந்ததியில் பன்னிருவர்களையும், இன்றைய ஆயத்துல்லா கொமைனியையும் இமாம்களாக்கி கியாமநாள் வரை பின்பற்றுவதாக உறுதிகொண்டு “ஷியா”க்கள் என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை, வழிகேடர்கள் என்று பறைசாற்றி உண்மையில் நாங்கள் தாம் ஸிராத்துல் முஸ்தகீம் எனும் நேரிய பாதையில் நடைபோடும் உண்மை முஸ்லிம்கள் என கூறிக்கொண்ட இன்னொரு சாரார் தம்மை “ஷுன்னி முஸ்லிம்கள்” என்று பறைசாற்றி கொண்டனர்.
இவர்கள் “ஷியா”-பிரிவினர்போல இமாம்களுடைய வழி வழி சந்ததிகளை பின்பற்றவில்லை. எனினும், கியாம நாள் வரை 4 இமாம்களில் யாராவது ஒருவரை பின்பற்றியாகவேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் இருந்து வருகின்றனர்.
“ஷியா – ஷுன்னி” – எனப்படும் இந்த இரு சாரார்களும் இமாம்களை பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மேலாக இமாம்களை கண்ணியப்படுத்தி, இமாம்களை வரம்புமீறி புகழ்ந்து, இமாம்களையே தமது பாதுகாவலர்ளாகவும், வழிகாட்டிகளாகவும் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே இமாம், ஒரே வழிகாட்டி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்பதை இவர்கள் உணர தவறிவிட்டனர். ‘”ஷியா”- பிரிவினரைவிட “ஷுன்னி” பிரிவினர்தாம் நாம் வாழும் இந்திய நாட்டில் பரவலாக பெருகி காணப்படுகின்றனர்.
ஹனபி, ஷாபி, ஹம்பவி, மாலிகி என்ற நான்கு பிரிவுகளின் பெயரில் உண்மையில் அந்த 4 இமாம்களும் சொல்லாததை அவர்கள் பெயரிலேயே இட்டு கட்டி, தமது முன்னோர்கள் எழுதிய “பிக்ஹ் கிதாபுகளை” கண்மூடித்தனமாக பின்பற்றி, ஒரு இமாமுக்கும் மற்றொரு இமாமுக்கும் பற்பலவிதமான முரண்பட்ட கொள்கைகளை வகுத்துக்கொண்டு 4 பிரிவுகளாக (மத்ஹபுகளாக) பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
ஒரே அல்லாஹ், ஒரே ரசூல், ஒரே மார்க்கம், ஒரே வேதம் என இப்படி இருக்கும்போது மார்க்கத்தை நான்காகப் பிரித்து நாலுவிதமான தொழுகை முறைகளை கற்பித்து, நாலுவிதமான சடங்கு சம்பிரதாயங்களை இஸ்லாத்தில் புகுத்தியுள்ள இவர்களுக்கும் – ஸிராத்துல் முஸ்தகீம் என்ற பாதைக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசங்கள் இருப்பதை நாம் உணரலாம்.
இரண்டாவது பிரிவினர்:
இறந்துபோனவர்களிடம் ஆதரவு வைப்பவர்கள்: இறந்துபோன சில நல்லடியார்களின் பெயரால் “தஸவ்வுஃப்” என்று அமைத்துக்கொண்டு தமது ஷெய்குமார்கள் மீதும், பீர்கள் மீதும் கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்து இவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருபவர்கள். தரீக்காக்களிள் பெயரால் ஷிர்க்கையும், பித்அத்தையும் செய்துகொண்டு, இறந்துபோனவர்களை தவறான முறையில் (அளவுக்கு மீறி) புகழ்ந்தும், கண்ணியப்படுத்தியும் வருகின்றனர்.
திருக்குர்ஆன் வசனங்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து ஒன்று லாஹிர்(வெளிரங்கம்), மற்றொன்று பாத்தின் (அந்தரங்கம்) என்று இரு வேறு கருத்துக்களை சொல்லும் வியப்புக்குரிய விஷ(ய)தாரிகள். தாம் கொண்ட கொள்கையை 4 பிரிவுகளாக (ஷரீஅத், தரீகத், ஹகீகத் மக்ரிபத்) பிரித்து கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கும் கதாநாயகர்கள்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இஸ்லாத்தை (லாஹிர் பாத்தின்) இரு கூறுகளாக பிரித்து, லாஹிர் வாழ்க்கையில் 4 இமாம்களில் யாராவது ஒருவரை பின்பற்றுவதையும், பாத்தின் எனும் அந்தரங்க வாழ்க்கையில் 4 வலியுல்லாஹ்களில் (காதிரி, ஷிஸ்தி, நக்ஸபந்தி, சுஹரவர்தி) ஒருவரை பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் நீங்காக கடமையாகும் என்றும் பிதற்றி வருகின்றனர்.
ஆக, வாழ்க்கையின் சகல நிலைகளிலும் இமாம்களுக்கும், வலியுல்லாஹ்களுக்கு மட்டும்தான் இடம் கொடுத்தனரேயல்லாமல் இமாம்களில் பெரிய இமாமும் வலியுல்லாஹ்களில் தலை சிறந்தவர்களுமான நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இவர்கள் முக்கியத்துவமே கொடுப்பது இல்லையென்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.
மூன்றாவது பிரிவினர் :
(இயக்கங்கள் என்ற மாயவலையில் சிக்கியவர்கள்) பற்பல இயக்கங்கள் மேற்கண்ட இரு பிரிவினர்களையும் பின்பற்றாமல் தக்லீத் தஸவ்வுஃப் முதலிய வழிகேடுகளை கண்டித்து, புதிய பரிணாமத்தில் இஸ்லாத்தை மக்களிடத்தில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
தாம் சார்ந்திருக்கும் இயக்கங்களின் அடிப்படையிலேயே குறுகிய வட்டத்திற்குள் தமது கொள்கையை வகுத்துக்கொண்டு இதுதான் அல்லாஹ் காட்டிய நேரான பாதை” – என்பதாகக் கூறிக் கொள்கின்றனர்.
உண்மையில், இந்த இயக்கப் பிரிவினர்கள் நாம் மேலே பார்த்த தக்லீத், தரீக்கா பிரிவினர்களை விட சற்று மார்க்க விளக்கமுள்ளவர்களாய் காணப்பட்டாலும், தாம் சார்ந்துள்ள இயக்கங்களின் கொள்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தில் ஒரு கொள்கையோ அல்லது சட்டத்தையோ நாம் எடுத்து விளக்கும்போது அதனை ஒப்புக் கொள்வதற்கு மாறாக தாம் சார்ந்த இயக்கங்களின் கொள்கைக்கு அது முரணாக இருக்கும் பட்சத்தில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தை ஏற்க மறுக்கின்றனர். தமது இயக்க கொள்கைக்கே முதலிடமும், முக்கியத்துவமும் கொடுக்கின்றனர்.
இவர்களது தலையாய நோக்கம் இஸ்லாம் வளர வேண்டுமென்பதைவிட தாம் சார்ந்திருக்கும் இயக்கம் வளர வேண்டும், புகழ் பெறவேண்டும் என்பதுதான். இவர்கள் தவறு செய்ய ஆரம்பிக்கும் இடம் இங்குதான்.
ஆக, நாட்டில் பரவலாக காணப்படும் இதுபோன்ற பிரிவினைவாதிகள் அனைவரும் தத்தமது மத்ஹபு கொள்கையிலும், தரீக்கா கொள்கையிலும், இயக்கங்களின் கொள்கையிலும், பிடிவாதமாகவும் மன முரண்பாடாகவும் இருந்து வருவது மட்டுமின்றி, இவர்கள் ஒவ்வொருவரும், “”தாங்கள் தாம் உண்மையான ஸிராத்துல் முஸ்தகீம் என்ற நேரிய பாதையில் இருப்பதாக கூறிக் கொள்கின்றனர். இது எவ்வளவு பெரிய ஏமாற்றம்!
“முஸ்லிம்கள்” என்ற பெயரில் இஸ்லாத்திற்கு மாற்றமான, முரணான கொள்கையில் சிலர் வாழ்ந்து வருவதைப் போன்று, “ஸிராத்துல் முஸ்தகீம்” என்ற நேரிய பாதையின் பெயரில் வழிகெட்ட பாதையில் மேற்கண்ட மூன்று பிரிவினர்களும் போய்க்கொண்டிருக்கின்றனர். காரணம் ஷைத்தான் இவர்களுக்கு இவர்களுடைய செயலை மிக அழகாக காண்பித்து வழிகெடுத்துவிட்டான்.
ஷைத்தானின் இந்த சதியை மிக அழகாக அல்லாஹ்(ஜல்) தனது திருமறையில் கூறுகிறான்.“”நீ என்னைப் பங்கப்படுத்தியதால், (ஆதமுடைய சந்ததிகளாகிய) அவர்கள் உன்னுடைய நேரான வழியில் (ஸிராத்துல் முஸ்தகீம்) செல்லாது. (தடை செய்ய வழிமறித்து அதில்) உட்கார்ந்து கொள்வேன்” (அல்குர்ஆன் 7:16) என்று அல்லாஹுத ஆலாவிடம் சபதம் செய்தவன் தான் ஷைத்தான்.
நமது ஆதி பிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றிய இப்லீஸ் ஆதமின் சந்ததிகளை சுவனம் செல்வதற்கு நிச்சயமாக பொறுத்துக் கொள்ளவேமாட்டான். “ஸிராத்துல் முஸ்தகீம்” எது என்பதை நாம் ஒவ்வொருவரும் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
அல்லாஹ் அருளிய நேரான பாதை என்பது நிச்சயமாக இப்போது காணப்படுவதைப்போல மனித யூகங்களின் அடிப்படையில் எழுந்த அபிப்பிராயங்களாக இருக்கவே முடியாது.
ஏனெனில், மனிதன் பலஹீனமானவன் (அல்குர்ஆன் 4:28) அறியாமை நிறைந்தவன் (அல்குர்ஆன் 33:72) என்பதை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.
அறியாமையும், பலஹீனம் நிறைந்த மனிதனால் சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்வின் நேரான பாதையை காட்டுவது எப்படி சாத்தியமாகும்? இதனடிப்படையில், நேரான பாதையை காண்பித்து தரும் ஒரே தகுதி அல்லாஹ்விற்கே உரியது என்பதை நாம் அனைவரும் சந்தேகமற தெரிந்து கொள்ளவேண்டும்.
திருக்குர்ஆனும், அந்த “நேரான பாதையை நீயே அருள்வாயாக” என அல்லாஹ்விடமே கேட்குமாறு கட்டளையிடுகிறது. ஆக, நேரான பாதை எது என்பதை அல்லாஹ் அறிவித்தாலன்றி நாம் அறிந்துகொள்ள முடியாது. அல்லாஹ்வின் அந்த நேரான பாதையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக அழகிய முறையில் நமக்கு அறிவித்து தருகின்றனர்.
“எனக்குப் பிறகு நீங்கள் இரண்டை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். திருக்குர்ஆனையும், எனது வழிமுறைகளையும் நீங்கள் பின்பற்றும் வரை (நேரிய பாதையிலிருந்து) வழி தவறவே மாட்டீர்கள” என்ற கருத்துப்பட வந்த ஹதீது நமக்கு மிகத் தெளிவாக “ஸிராத்துல் முஸ்தகீம்” எது என்பதை அறிவித்து கொடுக்கிறது.
அல்லாஹ் அறிவித்த அந்த நேரிய பாதையான திருக்குர்ஆனும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயல்முறையின் வழி(சுன்னத்) வாழும் ஒரு முஸ்லிம் தான் “நேரிய பாதையில்” இருந்து வருகிறார் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை. அல்லாஹ்வின் வேத வசனத்திற்கும், அவனது தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைக்கும் மாற்றமாக, முரணான ஆயிரமாயிரம் பாதைகளை அழகழகான விதத்தில் யார் காண்பித்து தந்தாலும் அது வழி தவறிய பாதை என்பதை உண்மை மூஃமீன்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
ஆகவே, அன்புச் சதோதரர்களே நாம் அனைவரும் அல்லாஹ்வும், அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காண்பித்து தந்த ஸிராத்துல் முஸ்தகீம் என்ற நேரான பாதையில் சென்று உண்மை மூஃமீனாக வாழ்ந்து ஈருலக வாழ்விலும் வெற்றி பெற வல்ல நாயன் நமக்கு அருள்புரிவானாக. (நபியே!) நீர் கூறும். “நிச்சயமாக அல்லாஹ்வின் வழிதான் நேரான வழி” (அல்குர்ஆன் 3:73).
-அபூதஸ்னீம்