மரணத்தைநோக்கி இத்தனை அவசரம் எதற்கு?
இன்றைய இளைஞர்களுக்கு வேகம் அதிகம்தான். அளவுக்கு மீறினால் அதுவும் ஆபத்துதான்.
மரணத்தைத்தேடி இத்தனை அவசரத்தைக் காட்டும் இளைஞர்களை நினைத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் காய்கறி மார்கெட்டில் இருப்பது போன்ற கூட்டம் மருத்துவமனையில் உள்ளது. ஒரு நாளில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைவிட விபத்தில்சிக்கி வருபவர்களே அதிகமாக உள்ளனர்.
நாளொன்றுக்கு தமிழ்நாடு முழுவதும் 70சதவீதம் பேர் விபத்திற்கு உள்ளாகிறார்கள். அன்றாடம் உணவு உண்பது மூன்றுவேளை எப்படி பழக்கமாகிவிட்டதோ அதுபோல விபத்துகளும் நடைமுறை வாழ்க்கையில் சாதாரண ஒரு செய்தியாகிவிட்டது. விபத்துபற்றிய செய்தி இல்லாத செய்தித்தாளை ஒருநாள்கூட பார்க்கமுடிவதில்லை. எனது உறவினர் விபத்தில் இறந்துவிட்டார் என்பது ஒரு வருத்தத்திற்குரிய செய்திமட்டுமே. காவல்நிலையங்களில் பதிவான பல வழக்குகள் விபத்துபற்றியதே. சுமார் 80சதவீத வழக்குகள் விபத்துப்பற்றியதாகத்தான் உள்ளது.
இதில் பாதிக்கப்படுபவர்கள் யார்? ஒரு குடிமகன் அளவுக்கதிகமான போதையில் வாகனம் ஓட்டிச்சென்று ஒரு பள்ளி மாணவி மீது ஏற்றி அந்தப்பெண் அந் தஇடத்திலேயே இறந்துவிடுகிறாள். அடுத்து நடப்பது இதுதான். அவன்மீது வழக்கு போடப்படும். பலவருடங்கள் நிலுவையிலிருந்து ஒருநாள் விசாரணை என்று நீதிமன்றத்திற்கு வரும். விபத்தை ஏற்படுத்தியவன் சாமர்த்தியவானாக இருக்கும் பட்சத்தில் அவன் விடுதலையாகிவிடுவான். இல்லையெனில், குறிப்பிட்ட தொகை பெண்ணை இழந்தவர்களுக்கு வழங்கப்படும். இதனால் யாருக்கு என்ன பயன்? விபத்துகளில் இறப்பவர்கள் பாதிக்குப்பாதி இளைஞர்களாகவே உள்ளனர்.
விபத்துகளுக்கு முதல்காரணம் மதுஅருந்துதல். எத்தனை விளம்பரங்கள் வந்தாலும் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மது நம்மாநிலத்தோடு இரண்டறக்கலந்துவிட்டது. அதை சரிசெய்ய யாராலும் முடியாது என்பது அறியப்பட்ட ஒ ன்று. ஆனாலும் மது அருந்திவிட்டு எங்காவது விழுந்துகிடக்காமல், ஏன் வாகனம் ஓட்டவேண்டும். மதுஅருந்துதல் என்பது இன்றைய இளைஞர்களிடமும் சரி, குடிப்பழக்கம் உள்ள அனைவரிடமும் சரி, அது ஒரு தவறான பழக்கமாக கருதப்படுவது இல்லை. குடித்து தங்கள் உயிரை சிறுக சிறுக அழித்துக்கொள்ளும் இவர்களுக்கு பிற உயிர்களை பறிக்கும் உரிமையில்லை என்பதை உணரவேண்டும்.
குடும்பத்தில் உள்ள பெண்கள்கூட இந்த விஷயத்தில் அலட்சியமாகத்தான் உள்ளார்கள். நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு முக்கியக்காரணம் பெண்கள்தான். இதை பெண்கள் கோபத்தோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தன்வீட்டில் உள்ள ஒருவரின்மீது குடித்துவிட்டு யாராவது விபத்தை ஏற்படுத்தினால் அவர்களின் செய்கை வேறாக உள்ளது. இதே தன்கணவன் யார்மீதாவது குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்தினால் அவரை மீட்கமட்டுமே போராடுகிறார்கள். ஓவ்வொரு ஆணும் நிச்சயமாக ஒருபெண்ணோடு உறவு(தாய், மனைவி, மகள், தங்கை, காதலி) கொண்டவராகத்தான் உள்ளார். இந்த விஷயத்தில் பெண்கள்தான் ஆண்களை வழிநடத்தவேண்டும். அவர்களை ஆதரிக்கக்கூடாது.
வேகம். இன்றைய இளைஞர்களுக்குத்தான் எத்தனை அதிவேகம். நல்ல விஷயமாக இருக்கும் பட்சத்தில் பெருமைதான். மரணத்தைநோக்கி இத்தனை வேகம் அவசியம்தானா? பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என்று எத்தனை இளைஞர்களை நாம் விபத்திற்கு பலிகொடுக்க வேண்டியுள்ளது? இவ்வகை விபத்துகளுக்கு மிகமுக்கியக்காரணம் இருசக்கர வாகனங்கள் அதிகமானதுதான். இதை தவறென்னு கூறினாலும் தேவைகள் அதிகமானதன் காரணமாக வாகனங்கள் அதிகமானதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வாகனங்கள் அதிகமான அளவிற்கு சாலைகள் ஏற்புடையனவாக உள்ளனவா? என்பதையும் சிந்திக்கத்தான் வேண்டும். சாலைகள் சீரமைக்கப்படாமலும் முக்கிய இடங்களில் வேகத்தடைகள் இல்லாமல் இருப்பதும் விபத்திற்கு முக்கியக்காரணங்களே.
இவை அனைத்திற்கும் மேலான ஒன்று உண்டு. அதுதான் கவனக்குறைவு. சாலையில் மட்டுமல்ல, இது எங்குமே மனிதனின் அத்தனை முன்னேற்றங்களையும் தடைசெய்யக்கூடிய திறமைகொண்டது. ஒரு மனிதன் தன்வாழ்க்கையில் நீக்கவேண்டிய முதன்மை குணம். சாலையில் ஒருவன் கவனக்குறைவாக இருப்பதால் என்னென்ன இழக்க நேரிடுகிறது. மிகப்பெரிய இழப்பு ஒரு உயிர். பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் இது ஒரு செய்திமட்டுமே. இழந்த குடும்பத்திற்கு அது எத்தனை பெரிய இழப்பு என்பதை யார் எண்ணிப்பார்க்கிறார்கள்?
விபத்தை ஏற்படுத்தியவனும் சரி, சமூகஆர்வலர்களும் சரி அல்லது மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் நாமும் சரி, யார் இவற்றை எண்ணிப்பார்ப்பது. குறிப்பிட்ட அளவு பணத்தினால் ஒரு உயிரை ஈடுகட்ட முடியுமானால் யார் யாரை வேண்டுமானாலும் கொன்றுவிட்டு பணத்தைக் கொடுத்து சரிகட்டலாமே. கைப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவது, அளவுக்கு அதிகமான சுமையை வைத்துக்கொண்டு ஓட்டுவது, பலசிந்தனையில் சாலையில் பயணம் செய்வது என இவையனைத்தும் கவனக்குறைவே.
இப்படி மனிதன், மது, சூழல், அரசு, கவனக்குறைவு என்று விபத்திற்கான காரணம் சங்கிலிபோல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. ஓன்றை மட்டும் ஒவ்வொருவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் திரும்பப்பெற முடியாதது இரண்டே விஷயம்தான். ஒன்று காலம், மற்றொன்று உயிர். காலத்தின் மதிப்பினை அறிந்தவன் அதை வீணடிக்கமாட்டான். உயிரின் மதிப்பை தெரியாதவன் நிச்சயமாக மனிதஇனத்தைச் சேர்ந்தவனாகவே இருக்கமுடியாது.
நம் கவனக்குறைவு நம்மைமட்டுமின்றி முகம்தெரியாத ஒருவரை பாதிக்கின்றது. முகம்தெரியாத ஒருவரின் கவனக்குறைவால் நம்குடும்பத்தில் ஒரு உயிரையும் இழக்க நேரிடும். சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவருக்குமான எச்சரிக்கை இது. மரணமென்பது அனைவருக்கும் நிச்சயிக்கப்பட்ட ஒன்று, அதை இயற்கையாக வரும்போது ஏற்றுக்கொள்ளலாம். சாலையில் ஏன் மரணத்தைத்தேடிப் போகவேண்டும்? மரணத்தை நோக்கி இத்தனை அவசரம் எதற்கு?
செ.அம்பிகாபதி பி.எச்.டி, சேலம்-11
source: http://www.inneram.com/i-articles/readers-articles/2902-why-hurry-to-death.html