மண்புழு விஞ்ஞானி டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில்
புதுக்கல்லூரியின் பயோடெக்னாலஜி துறையின் முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயிலின் நாற்பது ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பணியினை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மையத்தின் சார்பாக, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் இம்மாதம் 24ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட்டது.
உயிரி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், இயற்கை விவசாயிகளின் அன்பான ஆலோசகர் என்று பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருபவரான இஸ்மாயில், விவசாயிகளால் மண்புழு விஞ்ஞானி என சிறப்பிக்கப்படுபவர். விவசாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக விகடன் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர்.
‘சுற்று சூழல்’ பற்றிய ஒருநாள் பயிற்சி பட்டறையும் இணைத்து நடத்தப்பட்ட இவ்விழாவில் ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ பேராசிரியர் ஹக்கீம் சையத் கலீப்துல்லா கலந்து கொண்டார். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய நிர்வாக இயக்குநர் டாக்டர் அய்யம்பெருமாள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பிர்லா கோளரங்க இணை இயக்குநர் டாக்டர் எஸ். சௌந்தரராஜபெருமாள் பேசும்போது, “தமிழகத்தின் குக்கிராமங்களிலிருந்து அயல்நாடுகள் வரை தன் மண் சார்ந்த ஆராய்ச்சிகளை மக்களுக்கு எடுத்துச் சென்றவர் டாக்டர் இஸ்மாயில். பாமர மக்களுக்கும் அறிவியலின் கருத்துக்கள் செல்ல வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருப்பவர். தான் கற்ற அறிவியல் விஷயங்களை மக்களின் வாழ்வோடு செலுத்தி பார்க்கும் ஆராய்ச்சியாளர். அது மட்டுமல்லாது தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் இவருடைய மண்புழு ஆராய்ச்சிகள் மாணவர்களுக்கு பாடத்திட்டமாகவும் உள்ளது” என்றார்.
“எங்கள் கிராமத்த மேப்பிலேயே கண்டுபிடிக்க முடியாது. ஆனால், அங்க வந்து எங்களுக்கு இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட எல்லா பயிற்சிகளையும் தந்தார். இயற்கை விவசாயத்தையும், எங்களையும் இன்றைக்கு பலபேருக்கு தெரிய வெச்சிருக்காரு.
எங்க கிராமம் மாதிரி நிறைய கிராமங்களை மாத்திட்டு இருக்காரு. அவர் சொன்ன தொழில்நுட்பங்கள வெச்சு எந்தவித ரசாயன உரமும் போடாம எங்க மண்ணில் வௌஞ்ச வெண்டைகாய்களை கொண்டு வந்துருக்கேன்” என்று நெகிழ்ச்சியோடு பேசினார் பாகல்மேடு இயற்கை விவசாயி கோகிலா ஹரிகிருஷ்ணன்.
பிறகு பேசத் தொடங்கினார் டாக்டர் இஸ்மாயில். “ஒரு குழந்தைக்கு சரியாக கையெழுத்து வரவில்லை, மறதி, மந்தமாக இருக்கிறான், மதிப்பெண்கள் சரியாக எடுக்கவில்லை என்று பல குறைபாடுகளை தெரியவந்தால், அதற்குக் காரணம் பெற்றோர்களும், ஆசிரியர்களும்தான். இந்தப் பிரச்னைகள் குழந்தைகள் தவழத் தொடங்குவதிலிருந்தே ஆரம்பமாகின்றன. மதிப்பெண்கள் மட்டும் மாணவனது திறமைகளை நிர்ணயிக்கப் போவதில்லை. ஆகவே ஆசிரியர்கள் புத்தகங்களைத் தாண்டி மாணவர்களிடத்தில் பழக வேண்டும். ஆசிரியர்களும் தங்களை அப்டேட் செய்துக்கொண்டே இருக்க வேண்டும்.
வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் எல்லாமே இன்று சிறுவர், சிறுமிகளுக்கு வரத்தொடங்கி விட்டது. ஆஸ்துமா, கண்பார்வை கோளாறு என பல நோய்கள் புதிது புதிதாய் பிறந்துகொண்டே இருக்கின்றன. இன்று நாம் சாப்பிட பயன்படுத்தும் அனைத்திலுமே நச்சுத் தன்மை கலந்துவிட்டது. மண்வாசனை வர மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள்தான் காரணம். ஆனால் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி மண்ணையும் கொன்று, நம்மை நாமே அழித்து வருகிறோம்.
உலகளவில் அதிக அளவு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த மண்ணை சாணமே போடமுடியாத டிராக்டர்களால் உழுது மண்புழுக்களையும், மண் ஜீவராசிகளையும் கொன்று வருகிறோம். வருடத்திற்கு 50 லட்சம் மதிப்பிலான லாபம் தரும் மரங்களை சாலை விரிவாக்கப் பணி என்ற பெயரால் வெட்டி விற்றுக்கொண்டிருக்கிறோம். நம்முடைய பாரம்பரிய விதை நெல்களை மறந்து பன்னாட்டு நிறுவனங்களின் விதை நெல்களை பயிரிடும் நிலையில்தான் நம் விவசாயிகள் இருக்கிறார்கள்.
இப்படி நாம் அன்றாடும் பயன்படுத்தும் பற்பசைகளிலிருந்து, பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் சுற்றுச்சூழலிற்கு கேடான பல விஷயங்கள் இருக்கின்றன. விளம்பரங்களைப் பார்த்து பார்த்து ஏமாந்துகொண்டிருக்கிறோம்.
மாவிலைத் தோரணங்கள் கட்டுவது, வாசலில் மாக்கோலமிடுவது, மஞ்சள் தெளிப்பது என்று பல விஷயங்களை அறிவியல், மருத்துவ ரீதியாக பார்ப்பதை மறந்தேவிட்டோம். இளநீரையும், இயற்கை உணவுகளை மறந்தும், குளிர்பானங்கள் துரித உணவுகளை விரும்பியும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். துணி துவைக்கும் நீரை மறுசுழற்சி செய்து தாவரங்களுக்கு பயன்படுத்துதல், தொட்டிகளில் மண்புழு வளர்த்து உரமாக்குதல், சாணம் குப்பைகளை இயற்கை உரமாக்குதல், பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த பெரிய பெரிய பயிற்சிகள் தேவையில்லை. முயற்சிகள் மட்டும் இருந்தால் போதும்” என்று நீண்ட உரை நிகழ்த்தினார் சுல்தான் அகமது இஸ்மாயில்.
காட்சி பதிவுகள் மூலம் பயிற்சி பட்டறையை முடித்த இஸ்மாயிலிடம் மண்புழுஉரம் ஆராய்ச்சி பற்றி கேட்டபோது, “சோதனைக் கூடத்தில் முதன் முதலில் நான் ஆய்வில் ஈடுபடும்பொழுது உயிருள்ள பொருளை வைத்து ஆய்வு செய்ய நினைத்தேன். அப்படி வந்ததுதான் ‘மண்புழு’. மண்ணில் விழக்கூடிய தேவையற்ற கழிவுகள், இலைகள், குப்பைகளை உரமாக மாற்றக்கூடிய வித்தையை எனக்கு கற்றுக் கொடுத்தது மண்புழுக்கள்தான். ஆனால், பலர் வெளிநாட்டு ஆராய்ச்சிகளைத்தான் பெருமையாகப் பேசி வருகின்றனர்.
அந்த ஆராய்ச்சிகளும் நடக்கட்டும் தவறில்லை. எந்த ஆராய்ச்சியிலும் சம்பாதிக்கும் நோக்கம் இருந்துவிடவேக் கூடாது. நம் மண், நம் விவசாயிகளுக்கு ஏற்ற ஆராய்ச்சிகள் இங்கு நடத்தப்படவேண்டும்.
அந்த ஆராய்ச்சியின் அறிவியல் கருத்துகள் எளிய மக்களிடம் சென்றடைய வேண்டும்.
இந்த மாதிரியான ஆராய்ச்சிகள் நடத்த பெரும் பொருள் செலவுகள் ஆகப்போவதில்லை. பூந்தொட்டி களி லிருந்து கூட மண்புழு உரங்களை தயார் செய்யலாம். இன்றைய இளைஞர்கள் நம் மண் நலம், விவசாய நலம், சிறுதானியங்கள் குறித்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இயற்கை விவசாயத்தை பெருக்கிட வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.
விழாவில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்பாக இஸ்மாயிலின் வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சி குறிப்புகள் பற்றிய ‘மண்புழுக்களுடன் எனது பயணம்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதோடு அவரது அஞ்சல்தலையும் வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
-கு. முத்துராஜா
source: http://news.vikatan.com/