அய்யம்பேட்டை டாக்டர் கோட்டைச்சாமி எம் பி பி எஸ் விபத்தில் மரணம்
தஞ்சை அருகில் உள்ள அய்யம்பேட்டை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் சிறிய கிளினிக் தொடங்கி மருத்துவம் பார்த்துவந்த டாக்டர் கோட்டைச்சாமி அவர்கள் 26-11-2014 அன்று நடந்த விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார்.
டாக்டர் கோட்டைச்சாமி அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரிடமும் நற்பெயர் எடுத்தவர். அங்குள்ள முஸ்லிம் மக்களுடன் ஒன்றிப் பழகியவர். இரவு நேரமானாலும் பகல் நேரமானாலும் எத்தனை மணியாக இருந்தாலும் நோயாளிகள் அழைத்த குரலுக்கு பதிலளித்தவர்.எந்த சங்கடமும் இன்றி நோயாளிகளை கவனிப்பார்.
மருத்துவத்துறை என்றாலே பணம் கொட்டும் ஆனாலும் இவர் நியாயமாக கட்டணம் வாங்கியே மருத்துவம் பார்த்தார். தனது சொந்த ஊருக்குக் கூட போகாமல் அய்யம்பேட்டை முஸ்லிம் மக்களுடன் குடும்பத்தில் ஒருவர் போல் அனைவரிடமும் பழகியதால் அய்யம்பேட்டை யிலேயே சொந்த வீடு, சொந்தக் கிளினிக், நிலங்கள் வாங்கி அவ்வூரிலேயே செட்டில் ஆனார்.
இடையில் கொஞ்ச காலம் தவறான மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி சொத்துக்களை விற்று கஷ்டப்படும் நிலைக்கு சென்ற போது அங்குள்ள முஸ்லிம்கள் அவரை விடவில்லை. கடன்களை அடைத்து கிளினிக்கை மீண்டும் துவக்க உதவினர். இதில் நெகிழ்ந்த டாக்டர் கோட்டைச் சாமி அவர்கள் மதுப்பழக்கத்தை விட்டும் மீண்டார்.
மீண்டும் பழையபடி உற்சாகத்துடன் மருத்துவத்தை துவக்கியவருக்கு 2 முறை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. அப்போதும் அம்மக்கள் அவருக்கு உதவினர், உயிர் பிழைத்த டாக்டர் அம்மக்கள் தம்மீது வைத்திருந்த பாசத்தில் நெகிழ்ந்து போனார். எப்போதும் போல் மருத்துவத்தில் கவனம் செலுத்தி வந்தார்.
நேற்று முன்தினம் தனது காரில் ராமேஸ்வரம் சென்று திரும்பும் போது எதிர்பாரா விபத்து ஏற்பட்டு அவரும், அதே ஊரை சேர்ந்த ஓட்டுனர் முஸ்லிம் இளைஞரும் பலியானார்கள். செய்தி அறிந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
முஸ்லிம்களுடன் உறவினர் போல் சகோதரன் போல் இருந்த டாக்டர் கோட்டைச் சாமி இறப்பை அம்மக்கள் பேரிழப்பாக கருதுகிறார்கள். சாதிமத பேதமின்றி சொந்த சகோதரனைப் போல் அய்யம்பேட்டை மக்கள் மனதில் இருந்து மருத்துவப் பணி செய்த டாக்டர் கோட்டைச் சாமி அவர்களின் இறுதி சடங்கில் அவ்வூர் முஸ்லிம் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அரசியல்வாதிகளோ சினிமா நடிக நடிகையர்களோ இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லாத இக்காலக் கட்டத்தில் ஊடகங்கள் அவர்களை தேசபக்தர்கள் போலவும் அள்ளிக் கொடுக்கும் வள்ளல்கள் போலவும் சித்திரிப்பதால் சிலருக்கு அவர்கள் இறந்து போகையில் கூட்டம் கூடும். ஆனால், சாதி பேதம் இல்லாத அய்யம்பேட்டை இஸ்லாமியர்களின் தூய உள்ளத்துடன் இருந்த டாக்டர் கோட்டைச் சாமி அவர்களின் உடலை பார்வைக்கு வைக்கப்பட்ட இடத்தில் கூடிய கூட்டத்தை பார்ப்பவர்கள் மனம் உண்மையில் நெகிழவே செய்யும்.
– Mohamed Riyazudeen