Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இஸ்லாமின் பார்வையில் சிறுபான்மைச் சமுதாயம்!

Posted on November 28, 2014 by admin

இஸ்லாமின் பார்வையில் சிறுபான்மைச் சமுதாயம்!

  ஜெ. ஹாஜா கனி  

ஓரு நாட்டின் நனிசிறந்த நாகரிகம், அது தனது சிறுபான்மை மக்களை எப்படி நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது. சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளுக்கு அரணாக நிற்கும் கூறுகளைத் தன் இயல்பிலேயே கொண்டிருக்கும் இந்திய அரசியல் சாசனம், விடுதலைப் போரின் விதையாய், விருட்சமாய், விழுதுகளாய் நின்ற, மகத்தான தியாகிகளின் விருப்பங்களுக்குக்கேற்ப வடிவமைக்கப்பட்டு, உலகின் மிகச்சிறந்த அரசியல் சாசனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது என்றால் மிகையில்லை.

அதேநேரம், சுதந்திரம் பெற்று அறுபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகும், சிறுபான்மை இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நிலை, சகோதர தலித் சமுதாயத்தின் நிலையைவிடவும் மோசமாக உள்ளது என்கிறது நீதிபதி ராஜேந்திர சச்சாரின் அறிக்கை. முஸ்லிம்களின் இத்தகைய அவலமான சூழலுக்குக் காரணம் முஸ்லிம்களை வாக்குவங்கியாக மட்டுமே பயன்படுத்திக்கொண்ட அரசியல் சூதாடிகள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அதேநேரம், பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் சிறுபான்மைச் சமுதாயமாக உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாகவும், அங்குள்ள அரசுகள் இதற்கு அமைதியாக இருந்து ஆதரவு தெரிவிப்பதாகவும், பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக, இந்து இளம் பெண்களைக் கடத்திக் சென்று கட்டாயத் திருமணம் செய்வது, கட்டாய மதமாற்றம் செய்வது ஆகிய செய்திகள் மனதைக் கொதிக்கவைக்கின்றன. பாகிஸ்தான் அரசு மேற்படிக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

அண்மையில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் குறித்து வரைவுக் குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் அறிகிறோம். நடுநிலையான சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மூலம் பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் சிறுபான்மைச் சமுதாயத்தினரின் வாழ்நிலை குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அங்குள்ள சிறுபான்மையினரின் நியாயமான உரிமைகள் சட்டப்படி நிலைநாட்ட சர்வதேச அழுத்தம் கொடுப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். இந்தியாவிற்கு இந்தக் கடமை அதிகமுள்ளது.

அதேநேரம், “இஸ்லாமிய பயங்கரவாதம்’, “முஸ்லிம் பயங்கரவாதி’ போன்ற அவச்சொற்கள் நம் நாட்டின் மையநீரோட்ட முதன்மை ஊடகங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதால், இஸ்லாம் என்பதில் பயங்கரவாதக் கூறுகளும், அதன் அடிப்படைகளை அடியொற்றிப் பின்பற்றும் அடிப்படைவாதியான முஸ்லிமிடம், பயங்கரவாத ஆதரவு மனப்பான்மையும் இருக்கலாம் என பொதுமக்கள் நம்பும் வகையில் பொதுப்புத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடு என்று தன்னைப் பதிவு செய்தும், பறைசாற்றியும் கொள்ளக்கூடிய நாடுகளில் நடக்கிற தீமைகளுக்கு இஸ்லாத்தைப் பொறுப்பாக்கும் வேலையைப் பல பொறுப்புள்ள ஊடகங்கள்கூட செய்துவருகின்றன. அமைதி என்ற பொருளை உடைய இஸ்லாத்தை அரசாங்க மார்க்கமாய் ஏற்றுள்ள நாடுகள் அம்மார்க்கத்தின் விழுமியங்களை நூறு விழுக்காடு பின்பற்றுகின்றனவா என்பது கேள்விக்குறியே.

இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாத சிறுபான்மைச் சமுதாயம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும், அவர்களைத் தொடர்ந்து இஸ்லாமியப் பேரரசின் குடியரசுத் தலைவர்களாய் இருந்த கலீபாக்களும் சான்றுகளையும், முன் மாதிரிகளையும் தந்து சென்றுள்ளனர்.

இந்த அமைதி மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்பது திருமறை குர்ஆனின் வசனமாகும். ஒருவரின் விருப்பத்திற்கு எதிராக இஸ்லாமை அவர்மீது பலவந்தமாகத் திணிக்கக் கூடாது. அவ்வாறு பலவந்தப்படுத்துவது, இஸ்லாமிய அடிப்படைக்கு முற்றிலும் முரணானது. எடுத்துரைப்பது மட்டுமே இறைத்தூதரின் கடமை. ஒருவனுக்கு நேர்வழி தருவது இறைவனின் உரிமை என்பதே இஸ்லாமின் நிலைப்பாடு.

நபிகள் நாயகம் இவ்வுலகில் மிக அதிகமாக நேசித்த, மழலைப் பருவத்திலிருந்தே அவரை வளர்த்து ஆளாக்கிய, அவரது பெரிய தந்தையார் அபுதாலிப் மீது கூட இம்மார்க்கத்தை நிர்பந்தம் செய்யவில்லை. எனவே இஸ்லாத்தின் பெயரால் கட்டாய மதமாற்றத்தை யார் செய்தாலும், செய்பவர் முதலில் இஸ்லாமிய அடிப்படையை மீறுகிறார் என்பதே உண்மை.

இஸ்லாமிய நாட்டின் அமைச்சராகவும், முக்கியப் பிரமுகராகவும் முஸ்லிமல்லாதவர் இருக்க முடியும். அதற்காகக் கூட மதம் மாறத் தேவையில்லை (இராக்கில் சதாம் ஆட்சியில், 2-வது இடத்தில் இருந்த தாரிக் அஜீஸ் கிறிஸ்தவர்)

இனவெறியின் பால் மக்களை அழைப்பவர் என்னைச் சேர்ந்தவரில்லை என்பது நபிகள் நாயகத்தின் எச்சரிக்கையாகும். தனது இனத்தை நேசிப்பது இனவெறியாகுமா என்று ஒரு தோழர் கேட்கிறார்; அதற்கு நபிகள் நாயகம், “தன் இனத்தை நேசிப்பது இயற்கையானது. அதேநேரம் தன் இனம் என்பதற்காக அது செய்யும் தவறுகளை நியாயப்படுத்துவதே இனவெறி ஆகும்’ என்றார்கள்.

அவர்கள் அழைத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் ஏசாதீர்கள் என்பது திருக்குர்ஆனின் கட்டளை. பிற மதத்தவர்களின் வழிபாட்டுக்குரியதை ஏசுவதும், இழிவு செய்வதும் ஒரு முஸ்லிமுக்குத் தடுக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகத்துடன் விவாதிப்பதற்காக மஸ்ஜிதுந்நபவி எனப்படும் மதீனாவின் புனிதப் பள்ளிவாசலுக்கு கிறிஸ்தவப் பாதிரியார்கள் வந்திருந்தனர். அவர்களின் வழிபாட்டு நேரம் வந்ததும் புறப்பட்டனர். உடனே நபிகள் நாயகம், “நீங்கள் விரும்பினால் இதே பள்ளிவாசலில் நீங்கள் வழிபாடு செய்யலாம்’ என அனுமதி அளித்தார்கள்.

கலீபா உமர் காலத்தில் பாலஸ்தீனம் வெற்றிக்கொள்ளப்படுகிறது. வேதக்குறிப்புகளின்படி ஜெருசலேமின் சாவியை கலிபா உமரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி, அவரை மதீனாவிலிருந்து ஜெருசலேமுக்கு வரவழைத்தப் பாதிரியார்கள் தொழுகை நேரத்தில் உயிர்த்தெழல் தேவாலயத்தில் உமரைத் தொழுமாறு கூறினர். “நான் இங்கு தொழுதால் எனக்குப் பின் வரும் தலைமுறையினர் எங்கள் தலைவர் தொழுத இடம் என உரிமை கோரலாம்’ என்று கூறி அங்கே தொழுவதைத் தவிர்த்தார்கள்.

ஒரு யூதரின் சடலம், இறுதி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டபோது, நபிகள் நாயகமும் தோழர்களும் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள். “அது ஒரு யூதரின் சடலம்தானே?’ என ஒரு தோழர் கூற, “அதுவும் இறைவன் படைத்த ஆன்மாதான்’ என்று நபிகள் நாயகம் பதிலுரைத்தார்கள்.

ஆட்சித் தலைவர், ஆன்மிகத் தலைவர் என்ற இருபெரும் தலைமை அவர்களிடம் இருந்தபோதும், நாடாளுமன்றம், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் போன்ற அமைப்புகள் இல்லாதிருந்தபோதும், நபிகள் நாயகத்தை இறைத்தூதராக ஏற்காமல், தங்களின் மதக்கொள்கைப்படி வாழ்ந்த சிறுபான்மை மக்களுக்கு நபிகள் நாயகம் கண்ணியமும், பாதுகாப்பும் அளித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் மரணித்தபோது, அவர்களது கவச ஆடை, ஒரு யூதரிடம் சில மரக்கால் கோதுமைக்கு, அடமானமாக இருந்தது. அடகுப் பொருள்களை வாங்கிக்கொண்டு, ஆட்சித் தலைவருக்குக் கடன் கொடுக்கும் அளவுக்கு யூதச் சிறுபான்மையினர் இஸ்லாமிய ஆட்சியில் ஏற்றமுடன் வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையினரின் உரிமை என்பது வெறும் வார்த்தையாகவோ அல்லது வெறும் நடவடிக்கையாகவோ இல்லாமல் அவை இஸ்லாமிய அரசில் உறுதிமிகு உடன்படிக்கையாகவே பதிவு செய்யப்பட்டன.

நஜ்ரான்வாசிகளின் வேண்டுகோளுக்கிணங்க நபிகள் நாயகம் செய்துள்ள பின்வரும் ஒப்பந்தம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நஜ்ரான் பகுதியின் கிறிஸ்தவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தோருக்கும் (யூதர்கள்) அல்லாஹ்வின் அபயமும், முஹம்மதுவின் பொறுப்பும் உள்ளது; (இப்பொறுப்பு) அவர்களுடைய உயிர், மதம், நிலபுலன்கள், சொத்துகள், உடைமைகள் அவர்களில் வந்தோர் – வராதோர், அவர்களுடைய ஒட்டகங்கள், அவர்களுடைய தூதர்கள், மதச் சின்னங்கள் (சிலுவை மற்றும் சித்திரங்கள்) அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இப்போது எந்நிலையில் அவர்கள் உள்ளனரோ அதுவே தொடரும். அவர்களுடைய உரிமைகளிலோ, மத அடையாளங்களிலோ எவ்வித மாற்றமும் ஏற்படாது.

அவர்களில் எந்தப் பேராயரையும் ஆயத் தன்மையிலிருந்தும், எந்தப் பாதிரியையும் மடலாயத்திலிருந்தும், எந்தத் திருச்சபை ஊழியரையும் அவரது தொண்டூழியத்திலிருந்தும் அகற்றப்பட மாட்டாது. அவருடைய கட்டுப்பாட்டின் கீழுள்ளவை அதிகமாக இருப்பினும், குறைவாக இருப்பினும் சரியே (நிலப்பரப்புகளின் பாதுகாப்பை இது குறிக்கிறது).

அறியாமைக் காலத்தில் நடந்தவற்றிற்கான பழி தீர்ப்போ, வாக்குறுதி பொறுப்போ எதுவுமே அவர்கள் மீது இல்லை. ராணுவச் சேவை புரியவோ, அதற்கென பத்திலொரு பாகத்தை வழங்கவோ நிர்பந்திக்கப்பட மாட்டார்கள். அவர்களுடைய நிலபுலன்களை ராணுவமும் நாசப்படுத்தாது. அவர்களுக்கு எதிராக யாரேனும் உரிமை கோரி முறையிட்டால், இரு தரப்பாரிடையேயும் நீதி வழங்கப்படும்.

நஜ்ரான்வாசிகள் அநீதி இழைப்பவர்களாகவும், அநீதி இழைக்கப்பட்டவர்களாகவும் இருக்க மாட்டார்கள் இவ்வொப்பந்தத்தில் உள்ளனவற்றிற்கு அல்லாஹ்வின் உத்தரவாதமும், முஹம்மதுவின் பொறுப்பும் உள்ளது.

முதல் கலீபாவான அபுபக்ரு ரளியல்லாஹு அன்ஹு காலத்தில் ஹய்ரா மற்றும் பைத்துல் முகத்தஸ் வாசிகளுடன் (ஜெருசலேம்) செய்துகொண்ட ஒப்பந்தமும், டமாஸ்கஸ் வாசிகளோடு செய்து கொண்ட ஒப்பந்தமும், அஆனாத், பலபக், வபீல், அஜர்பைஜான் ஆகிய பகுதிகளில் வசித்துவந்த சிறுபான்மை மக்களுடன் இஸ்லாமிய அரசாங்கம் செய்துள்ள உடன்படிக்கைகளும், மேற்கண்ட நிபந்தனைகளை உடையதாகவும், சிறுபான்மையினரின் உயிர், உடைமை, மானம், வழிபாட்டுரிமை ஆகியவற்றிற்கு உத்தரவாதம் அளிப்பனவாகவும் இருந்துள்ளன. (ஆதாரம் – ஜிஹாத் ஓர் இஸ்லாமியப் பார்வை, ஆசிரியர் – அபுல் அலாமெற்தூதி, தமிழில் – அப்துர்ரஹ்மான் உமரி, பக் – 262-266 )

கலீபா உமரின் ஆட்சியில், இராக் நாட்டில் இருந்த ஏசுநாதர் சிலையின் மூக்கு சிதைக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் கலீபாவிடம் முறையிட்டனர். ஒருவார காலத்தில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாவிடில், பொது இடத்தில் வைத்து நீங்களே என் மூக்கைச் சிதைக்கலாம் என்றார். குறித்த காலக்கெடுவுக்குள் குற்றவாளியைப் பிடிக்க முடியவில்லை. கலிபா உமர் தன் மூக்கை சிதைத்திடுமாறு, கிறித்தவ மக்கள் முன்பு வந்து நின்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கூட்டத்திலிருந்த ஒரு கிறித்தவ இளைஞன், ஏசுவின் சிலையை தானே சிதைத்ததாகவும், இஸ்லாமிய ஆட்சியில் கிறிஸ்தவர்களின் உரிமை மதிக்கப்படுகின்றதா என்பதைச் சோதிக்கவே அவ்வாறு செய்ததாகவும் ஒப்புக் கொண்டான்.

கலீபா அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவரது கவச ஆடை காணாமல் போனது. பிறகு, அது கூபா நகரைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவரிடம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தனது கவசத்தை மீட்டுத்தருமாறு குடியரசின் தலைவர், நீதிமன்றத்தில் முறையிட்டார். (ராணுவத்தையோ, காவல்துறையையோ, அடியாட்களையோ பயன்படுத்தவில்லை) வழக்கை விசாரித்த நீதிபதி ஷரஹ்பின் ஹாரிஸ், கவசம், அலி (ரலி) உடையதுதான் என்பதற்கு ஆதாரம் கோரினார். அது அலியுடையது என்பதற்கு அவரது மகன் ஹசன் சாட்சி கூறினார்.

தந்தைக்காக மகன் கூறும் சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது எனக்கூறி, கலீபா அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வழக்கை இஸ்லாமிய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பால் மனம் நெகிழ்ந்துபோன கிறிஸ்தவர், உண்மையை ஒப்புக்கொணடு, கவச ஆடையை அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமே ஒப்படைத்தார்.

இஸ்லாமிய நாடு என்றால், இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு சட்டவடிவம் கொடுத்துள்ள நாடாக இருக்க வேண்டும். பாகிஸ்தானுக்குத் தன்னை இஸ்லாமிய நாடு என அழைத்துக்கொள்ளும் அருகதை உண்டா என்பது கேள்விக்குறியே.

இஸ்லாமிய விழுமியங்கள் அரசாங்கத்தால் ஏற்கப்பட்ட நாடு என்றால், அங்கு வாழும் சிறுபான்மையினர் மீது கடுகளவும் அநீதி இழைக்கப்படக்கூடாது.

சிறுபான்மையினருக்கு மட்டும் சீரழிவுகள் நடக்கிறது எனில் அதை இஸ்லாமிய நாடு என்று அழைக்கக் கூடாது. சிறுபான்மையினரின் அவல நிலையை மாற்றுவதற்கு அனைத்துவகை முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும், உலகளாவிய அழுத்தமும் தரப்பட வேண்டும்.

இஸ்லாமிய நாடு எனில் அதில் மனித உரிமைகளும் சிறுபான்மையினரின் உரிமைகளும் மதிக்கப்படாது என்கின்ற மனப்பான்மையும் அத்தகைய மனப்பான்மையை வளர்க்கும் ஊடகங்களும் மாற வேண்டும்.

source: http://www.dinamani.com/editorial_articles/article1263759.ece

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 9 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb