ஆன்மாவும்(soul) உயிரும்(spirit) ஒன்றல்ல!
கேப்டன் அமீருத்தீன்
இங்கிலாந்தில் ஒரு மூத்த ஹிந்து குடிமகன் அந் நாட்டு நீதிமன்றத்தில் விசித்திரமான வழக்கொன்றை 2009-ல் மேல் முறையீடு (Appeal) செய்திருந்தார். அவர் பெயர் தேவேந்தர் காய் (Devender Ghai) 70 வயதான அவர் 1958-ல் கென்யா எனும் ஆப்ரிக்க நாட்டிலிருந்து அங்கு போய் குடியேறியவர். அவர் குடியிருந்து வரும் New Castle என்ற நகரின் மாநகராட்சி மன்றத்திற்கு (City Council) மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில் தாம் இறந்த பின் தம் உடலை ஹிந்து மத ஆச்சாரப்படி திறந்த வெளியில் (Open Air) எரியூட்டுவதற்கு அனுமதிக்கும்படிக் கேட்டிருந்தார். ஆனால் அவர் கோரிக்கையை அம்மன்றம் நிராகரித்து விட்டது. அதனால் அவர் லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அவர் அந்த வழக்கில் கீழ்வருமாறு வாதிட்டார். இறந்த பின் புனித வேள்வி நெருப்பில் தகனமாகும் உடலிலிருந்து எனது ஆன்மா விடுவிக்கப்படுவதுடன் மறுபிறப்பு எனும் உயர் நிலையை அடையும் என்று ஒரு ஹிந்து என்ற முறையில் நான் நம்புகிறேன். எப்படி (கிரேக்க) புராணக் கதையில் ஃபீனிக்ஸ் ((Phoenix-பறவை) எரிந்த பின் தீ நாக்குகளிலிருந்து (Flames) எழும்பி மறு படியும் உருப்பெற்று வந்ததோ அதுபோல் எனது இந்த முறையீடு மத உணர்வுகளைத் தூண்டக் கூடியது என்பதை நான் மறுக்கவில்லை.
அதுவும் குறிப்பாக இறப்பு என்பது நம்மோடு முடிந்து போய்விடுகிறது என்ற கருத் தோட்டத்தைப் பரவலாக நம்புகின்ற மக்கள் வாழும் ஒரு நாட்டில் இந்த வழக்கு இங்கிலாந்தில் ஒரு மாதிரி வழக்கு (A Test Case) என்று கருதப்பட்டது. மேலும் மரணித்த மனித உடலைப் போக்கி அழிக்கும்(Disposing off) வழி முறையைப் பற்றி சுவையான ஒரு விவாதத்தையும் எழுப்பியிருந்தது. (செய்தி : ஹிந்து நாளிதழ் 25.03.2009)
மரணித்த மனித உடலை அப்புறப்படுத்துவதற்கு ஆதிகாலம் தொட்டு மக்கள் பல்வேறு வழிகளைக் கடைபிடித்து வருகிறார்கள். பிணங்களை எரியூட்டுவதும் பூமியில் புதைப்பதும் பெரும்பான்மை மக்களால் இன்றளவும் கடைப்பிடிக்கப்படும் வழிகளாக இருக்கின்றன. இவை தவிர பிணங்களைக் கழுகுகளுக்கு இரையாக்கும் பழக்கமும் சிலரிடையே வழக்கத்தில் உள்ளது. ஜொராஸ்டிரர் மதமான பார்ஸி மதத்தைப் பின்பற்றும் மக்கள் இந்த வழக்கத்தை மேற்கொள்கின்றனர்.
2000 ஆண்டுகளுக்கு முன் யூதர்கள் இறந்த உடலை புதைக்காமலும், எரியூட்டாமலும் கல்லறையில் வைத்து அழுகவிட்டு, அழுகிய உடல் காய்ந்து உலர்ந்த பின் அதன் எலும்புகளைச் சேகரித்து கற்பெட்டியில் வைத்து இறந்தவரின் பெயரை, அதன் மேல் பொறித்து அதை பூமியில் புதைத்து வந்தார்கள். சிலுவையில் அறையப்பட்டதாக சொல்லப்படும் இயேசு(?)வின் உடலை அப்படிதான் ஜோஸப் என்னும் பெயருடைய அவரின் செல்வந்த சீடர், தமக்குரிய கல்லறையில் கொண்டு போய் வைத்தார் என்று பைபிள் புதிய ஏற்பாடு கூறுகிறது.
மரணித்த மனித உடலைப் போக்கி அழிப்பதற்கு பூமியில் புதைப்பதையே ஆதி மனிதனுக்கு இறைவன் கற்றுக் கொடுத்தான் என குர்ஆன் இயம்புகிறது. ஹாபில்-காபில்(Abel and Cain) இருவருக்கும் இடையே நடந்த போராட்ட சம்பவத்தில் (5:27-31)இந்தச் செய்தி வருகிறது. பொறாமை காரணமாக ஹாபிலைக் கொன்றுவிட்ட காபில், தன் சகோதரனின் உடலை என்ன செய்வதென்று தெரியாது விழித்துக் கொண்டி ருந்த நேரத்தில் காகத்தின் மூலமாக அதனை கற்றுக் கொடுத்ததாக குர்ஆன் குறிப்பிடுகிறது.
இறந்து கிடந்த ஒரு காகத்தின் உடலைக் கண்ட மற்றொரு காகம் தனது கால்களினாலும், கூரிய மூக்கினாலும் மண்ணைத் தோண்டி அந்தக் குழியில் இறந்து போன தன் இனத்தைப் புதைத்ததிலிருந்து இறந்த உடலை பூமியில் புதைக்க வேண்டும் என்பதை அந்த ஆதி மனிதன் அறிந்து கொண்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
பைபிள் பழைய ஏற்பாட்டிலும் காணப்படாத காகத்தின் மூலம் இறைவன் கற்பித்த அந்த இயற்கை வழியை-எளிய முறையை மனிதன் ஏன் மாற்றினான்? எப்போது மாற்றினான்? என்பதற்கான வரலாற்றுத் தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. தன்னைப் படைத்த இறைவனையே மறந்து மாற்றுக் கடவுளர்களை வழி பட்ட மனிதன் இறைவன் கற்பித்த எளிய வழியை மாற்றிவிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தான்!
இறந்த உடலைப் புதைப்பதுதான் தமிழர் முறை என்றும் திராவிடப் பண்பாடு என்றும் சொல்லப்படு கிறது. அந்த முறையில்தான் தமிழக முன்னாள் முதல்வர்கள் இருவர் உடல்களும் மெரினா கடற்கரையில் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்பட்டன போலும்.
சிந்து சமவெளி நாகரிகத் தடயங்களும், எகிப்து மன்னர்களின் பிரமிட் கல்லறைகளும் இறந்தவர் உடல்களை அக்கால மக்கள் பூமியில் புதைத்தே வந்தார்கள் என்பதையே நமக்கு உணர்த்துகின்றன.
ஆரியர்களின் படயெடுப்புக்குப் பின்னரே இந் நாட்டில் வேள்விகள், யாகங்கள் என்னும் புதிய பழக்கங்கள் மக்களிடையே புகுத்தப்பட்டன என்ப தற்கு ஆதாரங்கள் உண்டு. அந்த அடிப்படையில்தான் பிணங்களை எரிக்கும் வழக்கமும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நாம் துணிந்து கூறலாம்.
உயிரும் ஆன்மாவும் பிரிந்துவிட்ட உடலையே நாம் பிணம் என்று கூறுகிறோம். ஆனால் வேள்வித் தீயில் உடல் எரியும் போது தான் ஆன்மா பிரிவதாக வழக்கில் சொல்லப்பட்டிருக்கும் வாதம் முரண்பாடுடையது. மேலும் கிரேக்கப் புராணங்களில் வரும் ஃபீனிக்ஸ் பறவை பற்றிய மாயாஜால வித்தைகளை மேற்கோள் காட்டி ஒரு கருத்தை நிரூபிக்க எடுத்துக் கொண்ட முயற்சி மடமையிலும் மடமையன்றோ!
உடலில் உறவாடும் உயிருக்கும் ((Life) அந்த உயிருக்குச் செறிவூட்டி செம்மைப்படுத்தும் ஆன்மா(Soul) வுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை திருகுர்ஆன் அழகுற எடுத்துக் காட்டுகிறது. அல்லாஹ் ஆன்மாக்களை அவை மரணிக்கிற நேரத்திலும் இன்னும் தூக்கத்தில் அவை மரணிக்காத நிலையிலும் கைப்பற்றுகிறான். (39:42) எனக் குர்ஆன் கூறுகிறது.
உறங்கும்போது நமக்கு கிளினிகல் மரணம் (Clinical Death) என்ற சம்பவம் நடப்பதில்லை. உயிர் மட்டும் உடலில் தங்கி இருக்கிறது. ஆனால் ஆன்மா இறைவனிடம் சென்று விடுகிறது. அதாவது உடலை விட்டு அது பிரிந்து விடுகிறது. உயிர் உடலை விட்டுப் பிரியும்போது கிளினிகல் மரணம் (Clinical Death) நிகழ்கிறது. அதாவது உயிரோட்டம் நின்று, உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலை (Clinical Death) சம்பவிக்கிறது. அப்போதும் ஆன்மா இறைவன் வசமாகிறது.
ஆகவே, நாம் உறங்கும்போது உடலில் உயிர் இருக்கிறது. ஆனால் ஆன்மா இல்லை. உயிர் பிரியும் போது உடலில் இரண்டும் இல்லை. எனவே, மர ணித்த உடலை எரியூட்டும்போது ஆன்மா உடலை விட்டுப் பிரிகிறது என்ற வாதம் குர்ஆனின் கருத்துப் படியும் தவறாகும்.
குர்ஆனின் இந்தக் கருத்து 10 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டானிய உளவியல் பேராசிரியர் ஒருவரின் கவனத்தை ஈர்த்தது. அவர் அந் நாட்டு, உளவியல் வல்லு நர்கள் சங்கத்தின் (British Psychologists Society) தலைவர். அவர் பெயர் டாக்டர் ஆர்தர் ஆலிசன் (Dr.Arthur Alison) அவர் தூக்கம், மரணம், கனவு போன்ற அதீத மனோ தத்துவ செயல்பாடுகள் (Para Psychology) குறித்து ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். அவரின் ஆய்வு முடிவுகள் (Datas) அன்றைய உளவியல் வல்லுநர்களின் கருத்துகளுக்கு முரண்பட்டிருப்பதைக் கண்டார். அம்முடிவுகளை அக்கருத்துகளைக் கொண்டு அவரால் விளக்க முடியவில்லை. அதனால் பல்வேறு மத நூல்களைப் படிக்கத் தொடங்கினார். அவற்றில் ஏதேனும் விடை கிடைக்குமா? என்று அலசினார். அந்தத் தேடுதல் வேட்டையில் அவர் கண்டதுதான் மேற்கண்ட 39:42 குர்ஆன் வசனம். குர்ஆனின் கருத்து மின்னணு (Electronic) கருவிகள் மூலம் அவர் கண்ட ஆராய்ச்சி முடிவுகளை அப்படியே கொஞ்சமும் பிசகாமல் விளக்கியது. பரவசமடைந்த பேராசிரியர் திருகுர்ஆனின் விளக்கத்தில் மெய் சிலிர்த்துப் போனார். அந்த வசனம் இப்படி முடிகிறது. நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற மக்களுக்கு உறுதியான பல சான்றுகள் இருக்கின்றன.
குர்ஆனின் அறிவொளியில் முழுதும் நனைந்த டாக்டர், ரியாத்தில் நடந்த அறிவியல் கருத்தரங்கில் (Scientific Conference) இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். தம் பெயரை அப்துல்லாஹ் ஆலிசன் என்றும் அறிவித்தார். ஆகவே, மரணமடைந்த மனித உடலில் உயிரும் இல்லை. ஆன்மாவும் இல்லை என்னும் திருகுர்ஆனின் கருத்து அறிவியல் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே, மரணித்த மனித உடலில் ஆன்மா உறங்குகிறது என்பதற்கும் வேள்வித் தீயில் அது வேகும்போது ஆன்மா விடுபட்டு எழுகிறது என்பதற்கும் ஆதாரம் ஏதுமில்லை. அது ஒரு தவறான நம்பிக்கையே!
மறுபிறப்புக் கொள்கை வேதப் பண்டிதர்களின் இடைக்கால விளக்கம் என்றும் ஹிந்து வேதங்களில் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் வேதப் பண்டிதரும், விவிலிய வித்தகரும், திருகுர்ஆன் விற் பன்னருமான டாக்டர் ஜாகிர் நாயக் கூறுகிறார். அவ ரது வாதத்தையும் ஹிந்து வேதங்களிலிருந்து அவர் எடுத்தாளும் விளக்கத்தையும் எடுத்துக்காட்டுகளை யும் இன்றளவும் யாரும் மறுக்கவில்லை. மாறாக வாழும் கலை (Art of Living) இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீரவி சங்கர் அதனை உண்மை என்றே ஒப்புக் கொள்கிறார். இந்நிலையில் மறு பிறப்பு ஒரு மாயை (Illution) என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. மேலும், மரணித்த உடலிலிருந்து ஆன்மா (Soul) முன்ன தாகவே விடுபட்டு விட்டதால் வேள்வித் தீயில் உடம்பு வேகும்போது ஆன்மா எழும்பி மறுபிறவி என்ற நிலையை அடைவதற்கு வாய்ப்பில்லை என்ப தையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. “ஆன்மா’ ஒன்றுதான் மனிதனை மற்ற உயிரினங் களிலிருந்து பிரித்து ஒரு மேன்மை மிக்கப் படைப்பாக வும் “தனித்துவம்’ (Unique) கொண்ட ஜீவனாகவும் காட்டுகிறது. அதுதான் மனிதனுக்கு “ஆளுமைத்திறன்’ (Personality) “தனித்தன்மை'(Individuality) போன்ற பண்பு களை வழங்குகிறது.
அல்லாஹ்வின் கூற்றே அல்குர்ஆன்.
நீதியரசர் பு.அப்துல் ஹாதி
“குர்ஆனில் மருத்துவ விந்தைகள்’ (Medical Miracles in the Quraan) என்னும் தலைப்பில் கெய்ரோவில் நடந்த மாநாட்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி டாக்டர். ஆர்தர் ஜே.ஆலிசன் என்பார் ஓர் ஆய்வு அறிக்கையை வாசித்தார் (பார்க்க : “அல்கலம்’ ஜூன் 1986 இதழ். பக்கம் 15). அவ்வறிக்கையில் அவர் எடுத்துக்காட்டியுள்ள படி, மற்றொரு அறிவியல் உண்மையை உள்ளடக்கிய அல்குர்ஆன் வசனம் (39:42) வருமாறு:
ஆன்மாக்களை அவற்றின் மரணத்தின் போதும், தம் உறக்கத்திலும் (மரிக்காமலுள்ளதை) அல்லாஹ்வே கைப்பற்றுகி றான். பிறகு எவற்றின் மீது மரணத்தை விதியாக்கி னானோ அவற்றைத் தன்னிடமே தடுத்து நிறுத்திக் கொள்கிறான். மற்றவற்றைக் குறிப்பிட்ட தவணை வரை வாழ்வதற்கு அனுப்பி விடுகின்றான். (39:42)
டாக்டர். ஆர்தர் ஜே.ஆலிசன் தம் அறிக்கையில் ஆணோ, பெண்ணோ தூங்கும்போது “ஏதோ ஒன்று’ மனித உடலை விட்டு வெளியே செல்கிறது. பின்னர் திரும்பி வந்து அவனை எழுப்பி விடுகிறது என்றும் இறப்பில் அந்த “ஏதோ ஒன்று’ திரும்பி வருவதில்லை என்றும் இதை அவருடைய சோதனைகள் நிரூபித்துள்ளன என்றும் இதைத்தான் குர்ஆனின் மேற் குறித்த வசனம் மிகத் தெளிவான சொற்களில் தெரிவிக்கிறது என்றும் கூறுகிறார். புறவெளி உளவியல் ஆராய்ச்சியும் (Para Psychological Research) குர்ஆன் ஒளியில் அவர் செய்துவந்த ஆன்மீகச் சிகிச்சையும் அவருக்குக் குர்ஆன் வசனங்களில் அடங்கியுள்ள அறிவியல் உண்மைகள் மீது உறுதிப்பாடான நம்பிக்கையை ஏற்படுத்தவே அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அவர் பிரிட்டீஷ் பல்கலைக் கழக மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவராக இருந்தார். பிரிட்டீஷ் உளவியல் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
அல்லாஹ்வின் கூற்றே அல்குர்ஆன் by நீதியரசர் பு.அப்துல் ஹஜ். பக்கம் 113, 39:42 வசனத்தில் “அன்ஃபுஸ்’கும் என்பதை “உயிர்கள்’ என்று தவறாக மொழி பெயர்த்துள்ளதை “ஆன்மாக்கள்’ என்று திருத்தம் செய்துள்ளேன்.