கஷ்மீரில் மாயா ஜாலம்!
[ முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற தலைவர் பற்றி நான்கு நல்ல வார்த்தைகளைச் சொன்னதற்காக மூத்த தலைவர்களைத் தூக்கி எறிந்த பிஜேபிதான் கஷ்மீர் மாநிலச் சடடப் பேரவைத் தேர்தலில் 32 இடங்களில் முஸ்லிம்களை நிறுத்தியுள்ளது – இது ஓர் ஏமாற்றும் தந்திரமே என்பதற்கு ஆய்வுகள் தேவைப்படாது. பல்வேறு இனங்கள் மொழிப் பண்பாடுகள் மதங்கள், மத நம்பிக்கையற்றவர்கள் 125 கோடி பேர் வாழும் இந்தியத் துணைக் கண்டத்தினை பிஜேபி ஆளும் தகுதி உடையது தானா?]
திடீரென்று இந்தியப் பிரதமர் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் எல்லாரும் நாட்டுப் பற்று மிக்கவர்கள் என்றாரே பார்க்கலாம். முஸ்லீம்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து இந்தியாவுக்காகவே உயிர் கொடுப்பவர்கள் என்று சி.என்.என். தொலைக்காட்சிக்கும் பேட்டியளித்தார் (20.9.2014)
அந்தச் செய்தியைப் படித்தவர்கள் எல்லாரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள். என்னாயிற்று மோடிக்கு? முஸ்லிம்களை அந்நிய நாட்டவர் போல் பிரச்சாரம் செய்துவந்த கூட்டத்தைச்சேர்ந்த ஒருவர் இப்படிச் சொல்லும்போது…. எந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து இந்த ஞானோதயம் பெற்றார் என்ற பல தளங்களிலும் பேசப்பட்டது.
இப்பொழுது என்னடா என்றால் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் 32 சட்டமன்ற இடங்களில் முஸ்லீம்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் – அதாவது மாயா ஜாலம் காட்டப்பட்டுள்ளது.
ஜம்மு கஷ்மீர் மாநிலத்துக்கான மொத்த இடங்கள் 87. இதில் 70 இடங்களில் பி.ஜே.பி. போட்டியிடுகிறது. இந்த 70 இல் 32 பேர் முஸ்லீம்கள் (கஷ்மீர்ப் பகுதியில் 25, ஜம்மு பகுதியில் 6 லடாக்கில் – 1). ஏனிந்த நிலைப்பாடு? ஜம்மு- காஷ்மீர் மாநிலம் என்பது முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. இந்தத் தகவலைத் தெரிந்து கொண்டால்தான் இம்மாநிலத்தில் பிஜேபி இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் முசுலிம்களை வேட்பாளராக நிறுத்தியதன் மர்ம முடிச்சு உடையும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவைக்கு பாஜக சார்பில் 482 வேட் பாளர்களில் 7 முஸ்லீம்கள் நிறுத்தப்பட்டாலும் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. ஆக மக்களவையில் பாஜக சார்பில் முசுலீம் பிரதிநிதிகள் எவரும் இல்லை.
1990ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவந்தவரான ஷாநவாஸ் உசேன் பகல்பூர் தொகுதியில் 3 இலட்சத்து 58 ஆயிரம் வாக்குகளைப்பெற்று கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
இப்போதுதான் முதல்முறையாக மக்கள வையில் ஆளும் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக முஸ்லீம்களே இல்லாத நிலையாக உள்ளது. பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் 482 பேரில் 1.45 விழுக் காட்டளவில் முசுலீம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 17.16 கோடி வாக்காளர்களில் (31விழுக்காடு) தேசிய அளவில் பாஜகவுக்கு கிடைத்த வாக்குகளில் முசுலீம் வேட்பாளர்களுக்கு 5இலட்சத்து 55 ஆயிரம் வாக்குகள் சென்றுள்ளன.
பிகார் மாநிலத்தில் ஷாநவாஸ் உசேன் போலவே, மேற்கு வங்கத்தில் தம்லுக் தொகுதியில் 86,265 வாக்குகளைப்பெற்ற பாட்ஷா ஆலம் என்பவரும், கத்தால் தொகுதியில் 94,842 வாக்குகளைப்பெற்ற மொஹம்மத் ஆலம் என்பவரும் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் ஆவார்கள்.
ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், முஸ்லீம்கள் நிறுத்தப்பட்ட 3 தொகுதிகளில் மோசமாகவே வாக்குகளைப் பெற்று தோல்வியை சந்தித்தது. பாரமுல்லாவில் முகம்மது மீர் 6,568 வாக்குகளைபெற்றார். சிறீநகரில் ஃபாய்யஸ் அகமத் பட் 4,467 வாக்குகளைப்பெற்றார். ஆனந்த்நக் தொகுதியில் முஷ்டாக் அகமத் மாலிக் 4,720 வாக்குகளைப் பெற்றார்.
அதேபோல், இலட்சத்தீவில் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தவரான சையத் மொகம்மத் கோயா வெறும் 187 வாக்குகளில் தோல்வி அடைந்தார். பாஜக சார்பில் உத்தரப்பிரதேசத்தில் 2004ஆம் ஆண்டில் 10 முஸ்லீம்களும், 2009ஆம் ஆண்டில் 6 முசுலீம்களும் மக்களவையில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
மக்களவையில் பிற கட்சிகளில் முஸ்லீம்கள்
மக்களவையின் உறுப்பினர்களில் 543 இல் 4 விழுக்காட்டளவில் 23 முஸ்லீம்களே உள்ளனர். 1962 முதல் இன்று வரை உள்ள முஸ்லீம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இது மிகக் குறைந்த அளவாகும்.
குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய பாஜக ஆளும மாநிலங்களிலிருந்தும் ஒரு முஸ்லீம்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.
திரிணமுல் காங்கிரசில் 4 முசுலீம்களும், காங்கிரசில் 3 முஸ்லீம்களும் மக்களவையில் உறுப்பினர்களாக உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் அதிக எண்ணிக் கையாக 7 முசுலீம்கள் மக்களவைக்கு சென்றுள்ளனர். உலுபெரியா தொகுதியிலிருந்து சுல்தான் அகமத், பாசிர்கட் தொகுதியிலிருந்து இட்ரிஸ் அலி, அரம்பாக் தொகுதியிலிருந்து அபரூபா பட்டாரகா அஃப்ரின் மற்றும் பர்த்வான் துர்காப்பூர் தொகுதியிலிருந்து மம்தாஸ் சங்கமிதா ஆகியோர் திரிணமுல் காங்கிரசின் மக்களவைக்கு தேர்வான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர். காங்கிரசிலிருந்து மவ்சாம் நூர் மற்றும் அபு ஹசன் கான் சவுத்ரி மல்லதா உத்தர் மற்றும் தக்ஷின் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராய்காஞ்ச் தொகுதியிலிருந்து மொகம்மத் செலிம் முர்ஷிதாபாத் தொகுதியிலிருந்து பதருட்டாசா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிகார் மாநிலத்தில் 4 முசுலீம்கள் மக்களவை உறுப்பினராக உள்ளனர். காங்கிரசு சார்பில் கிஷன் காஞ்ச் தொகுதியிலிருந்து அசாருல் ஹக், ராஷ்டிரிய ஜனதாதளத்தின் சார்பில் தஸ்லீமுத்தீன், தேசியவாத காங்கிரசு சார்பில் தாரிக் அன்வர், லோக் ஜனசக்தி சார்பில் மெஹ்பூப் அலி கைசர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாஜக கூட்டணியில் லோக் ஜனசக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரே அக்கூட்டணியின் ஒரே முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
கேரளாவில் முஸ்லீம் லீக் சார்பில் ஈ.அகமத், ஈபஷீர் ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ.என்.ஷாம்சீர், ஜம்முகாஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் 3 பேரும், அசாமிலிருந்து அய்க்கிய ஜனநாயக முன்னணி சார்பில் பத்ருத்தீன், சிராஜ்ஜுதீன் அஜ்மல், ஆந்திரப்பிரதேசத்தி லிருந்து ஒரே முசுலீம் உறுப்பினராக எம்.அய்.எம். கட்சியிலிருந்து அசாத்துதீன் ஓவைசி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து அதிமுக சார்பில் அன்வர் ராஜா, இலட்சத்தீவிலிருந்து தேசியவாத காங்கிரசு சார்பில் மொஹம்மத் பைசல் ஆகியோர் மக்களவைக்கு தேர்ந் தெடுக்கப்பட்ட முசுலீம் உறுப்பினர்களாக உள்ளனர்.
மாநிலங்களவை பாஜக உறுப்பினர்கள்
மாநிலங்களவையில் பாஜக சார்பில் 43 பேரில் நஜ்மா ஹெப்துல்லா, முக்தார் அப்பாஸ் நக்வி இருவர் மட்டுமே முசுலீம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவர்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் சத்தீஸ்கர், குஜராத், கோவா, அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பிஜேபி பெரும் பான்மைப் பலத்துடன் ஆட்சி செய்கிறது. ஆந்திரா, பஞசாப் மாநிலங்களில் கூட்டணி – இந்த ஒன்பது மாநிலங்களில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 151.
151 அமைச்சர்களுள் முஸ்லிம் ஒரே ஒருவர் மட்டும்தான் (ராஜஸ்தானின் -பொதுப் பணித்துறை அமைச்சர் யூனூஸ்கான்) என்பது எத்தகைய கொடுமை!
மொத்தம் 1359 சட்டமன்ற உறுப் பினர்களுள் முஸ்லிம்கள் 22 பேர் மட்டுமே! பிஜேபியைச் சேர்ந்த யோகி ஆதித்யா என்ற மக்களவை உறுப்பினர் சொல்லுகிறார். ஒரு இடத்தில் சிறுபான்மையினர் 10 சதவீதம் இருந்தால், அங்கு ஒரு வன்முறை வெடிக்கும் (தி இந்து (தமிழ்) 31.8.2014 பக்கம் 11) என்று கூறினார்.
இந்த நேரத்தில் பிஜேபியில் நிகழ்ந்த இரு நிகழ்வுகளை நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.
ஜின்னா விவகாரமும் பாஜக தலைவர் பதவியில் இருந்து அத்வானி ராஜினாமாவும் பாகிஸ்தான் மதச்சார்பற்ற நாடாக விளங்க வேண்டும் என்ற தன் ஆவலை முஹம்மது அலி ஜின்னா தெரிவித்தார் என்றும் இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ்தானின் பிரஜைகள். எனவே, அவர்களுக்குள் எவ்விதப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்றும் ஜின்னா குறிப்பிட்டதாக அத்வானி கூறியிருந்தார். அது மட்டுமின்றி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் வருத்தமானது என்றும் அத்வானி பாகிஸ்தான் பயணத்தின் போது கூறினார்
அத்வானி தமது பேச்சை வாபஸ் பெற வேண்டும் என்றும், அவருக்குக் கண்டனம் தெரிவித்தும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் கூறியிருந்தன. இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து திரும்பிய அத்வானி தமது கருத்தில் மாற்றமில்லை என்று கூறினார்.இவரது கருத்தை வாஜ்பாய் வரவேற்றிருந்தார். இந்நிலையில் பாரதீய ஜனதா தலைவர் பதவியிலிருந்து திடீரென ராஜினாமா செய்தார் (7.6.2005). அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் பொது செயலாளருக்கு அனுப்பினார்.
பாகிஸ்தானில் ஜின்னா குறித்து அத்வானி கூறிய கருத்துக்கு, ஆர். எஸ். எஸ் மற்றும் சங் பரிவாரின் எதிர்ப்பே இந்த ராஜினாமாவுக்குக் காரணம் என்பதற்கு ஆய்வுகள் தேவைப்படாது.
ஜின்னாவைப் பாராட்டிய ஜஸ்வந்த் சிங் பதவி பறிப்பு
பாஜக தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் அத்வானியின் கருத்தை ஆதாரமாகக் கொண்டு ஜின்னா, இந்திய-பாகிஸ்தான் பிரிவினை என்ற நூலை எழுதினார். இந்த நூலில் ஜின்னாவின் மதச்சார்பின்மை குறித்து பாராட்டு தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டது. இந் நிலையில தான் எழுதிய யிவீஸீஸீணீலீ-மிஸீபீவீணீ, றிணீக்ஷீவீவீஷீஸீ, மிஸீபீமீஜீமீஸீபீமீஸீநீமீ என்ற ஜின் னாவின் வரலாற்றுப் புத்தகத்தை வெளியிட்டார் ஜஸ்வந்த் சிங். அதில், நாடு பிளவுபட ஜின்னா காரணமல்ல, அன்றைய அரசியல் சூழல்களும் சில தலைவர்களின் செயல்பாடு களும் தான் அவரை தனி நாடு கோர வைத்தன. அவர் மிகச் சிறந்த தலைவர் மட்டுமல்ல, தன்னலமல்லாத ஒரு நபர். இதனால் தான் அவர் பால் நான் ஈர்க்கப்பட்டேன்.
அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்காமல், அதைப் பரவலாக்க வேண்டும் என்றுதான் ஜின்னா சொன்னார். அதை அப்போதைய தலைவர்கள் ஏற்கவில்லை. இதனால் அப்படிப் பட்ட ஆட்சியில் தனது சமூக மக்களுக்கு நியாயம் கிடைக்காது என்று கருதித் தான் தனி நாடு கோரிக்கையை அவர் முன் வைத்தார் என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.
பாஜக ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக, பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங் முன்னாள் ராணுவ அதிகாரியாவார். வெளியுறவு விவகாரங்களில் இந்தியாவின் மிகச் சிறந்த மூளைகளில் ஒருவர் என்று கருதப்பட்டவர்.
அந் நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவை கட்சியின் நாடாளுமன்றக் குழு எடுத்ததாக ராஜ்நாத் சிங் கூறினார். இதன்மூலம் இந்தக் குழுவில் இல்லாத மூத்த தலைவர்களுடன் ஜஸ்வந்த் சிங்கின் நீக்கம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஜஸ்வந்த்சிங் நீக்கப்பட்டதற்கு யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சிம்லாவில் நடைபெற்ற (19.8.2009) கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தை இந்த இரு தலைவர் களும் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அருண் ஷோரி கூறுகையில், ஜின்னா குறித்து அத்வானியின் நிலை என்ன?. முதலில் அவர் அதை விளக்கட்டும் என்றார். அதே பேல ஜஸ்வந்த்சிங் நீக்கத்தை யஷ்வந்த் சின்ஹாவும் எதிர்த்துள்ளார்.
பாஜக-சங் பரிவார் இயக்கங்களுக்கு இடையே பாலமாக செயல்படும் மூத்த தலைவரான சேஷாத்ரி சாரி கூறுகையில், ஜஸ்வந்த் சிங்குக்கு விளக்கம் அளிக்க போதிய அவகாசம் அளித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அவரை நீக்கியுள்ளனர் என்றார். இதற்கிடையே, சிம்லாவில் தொடங்கிய தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தோல்விக்கான உண்மையான காரணங்களை மூடி மறைத்து, தோல்விக்குக் காரணமானவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே ஜஸவந்த் சிங்கை நீக்கி அதை பெரிய செய்தியாக்கி மக்களை திசை திருப்ப முயன்றுள்ளனர் என்று கூறியுள்ளார் அவுட்-லுக் ஆசிரியர் வினோத் மேத்தா.
முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற தலைவர் பற்றி நான்கு நல்ல வார்த்தைகளைச் சொன்னதற்காக மூத்த தலைவர்களைத் தூக்கி எறிந்த பிஜேபிதான் காஷ்மீர் மாநிலச் சடடப் பேரவைத் தேர்தலில் 32 இடங்களில் முஸ்லிம்களை நிறுத்தியுள்ளது – இது ஓர் ஏமாற்றும் தந்திரமே என்பதற்கு ஆய்வுகள் தேவைப்படாது. பல்வேறு இனங்கள் மொழிப் பண்பாடுகள் மதங்கள், மத நம்பிக்கையற்றவர்கள் 125 கோடி பேர் வாழும் இந்தியத் துணைக் கண்டத்தினை பிஜேபி ஆளும் தகுதி உடையது தானா? சிந்திக்கவும்.
– மின்சாரம்
source: http://viduthalai.in/page-1/91585.html#ixzz3K0Pj5J8m