மாமியாருக்குத் துணை தேடும் மருமகள்கள்
[ …மருமகள்களில் ஒருவர், ‘ஆண் துணை தேவை என்பதை எங்கள் மாமியாருக்கு நன்றாக புரியவைப்போம். அதற்கு அவர் விரும்பாவிட்டால், நான் இந்தியாவிற்கு வந்துவிடுகிறேன். அவர்களது இறுதிக் காலம் வரை என்னோடு வைத்து பார்த்துக்கொள்கிறேன்’ என்றபோது இன்னொரு மருமகள் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது. இப்படிப்பட்ட மருமகள்கள் சமூகத்தில் பெருக வேண்டும்.]
இருவரும் இளம் பெண்கள். நேர்த்தியான உடை அலங்காரத்தோடு ‘ஸ்மார்ட்’டாக காணப்பட்டார்கள். ‘எங்கள் மாமியார் விஷயமாக பேச வந்திருக்கிறோம்’ என்றார்கள்.
‘மாமியார்களுக்கும், இளம் மருமகள்களுக்கும் சரியாக ஒத்துப்போவதில்லை என்பது வழக்கமான குற்றச்சாட்டு. அதனால் தொந்தரவு செய்யும் மாமியாரை எப்படி சமாளிப்பது?’ என்று ஆலோசனை கேட்கவே பெரும்பாலான பெண்கள் வருவார்கள். ஆனால் இவர்கள் எடுத்த எடுப்பிலே மாமியாரை புகழத் தொடங்கினார்கள்.
“எங்கள் மாமியாருக்கு இரண்டு மகன்கள். நாங்கள் இருவரும் அவரது மருமகள்கள். எங்கள் கணவர்களுக்கு வெளிநாட்டில் வேலை. அவர்களுடன் நாங்கள் வசிக்கிறோம். எங்களுக்கு திருமணமாகும்போது, ‘எப்படி எல்லாம் இந்த மாமியாரோடு மல்லுக்கட்ட வேண்டியதிருக்கிறதோ’ என்ற பயத்துடன்தான் இருந்தோம். ஆனால் அவர் அவ்வளவு பக்குவமானவராக இருக்கிறார்.
நாங்கள் குடும்பத்தோடு இந்தியாவிற்கு வந்துவிட்டால், எங்களை மகாராணி போல் கவனித்துக்கொள்வார். எங்கள் அம்மாகூட அந்த அளவுக்கு எங்களை தூக்கி வைத்து கொண்டாடமாட்டார்கள். அதனால் இங்கு வந்துவிட்டால், திரும்பி வெளிநாட்டிற்கு போகக்கூட மனம் இருக்காது. அந்த அளவுக்கு எங்கள் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்துவார்..” என்று மாமியார் மீது பாராட்டு மழை பொழிந்துகொண்டிருந்த அவர்களிடம், ‘மாமனார் பற்றி நீங்கள் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே!’ என்றேன்.
அப்போதுதான் அவர்கள் அந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை சொன்னார்கள்.
“எங்கள் மாமியாருக்கு 19 வயதில் திருமணமாகியிருக்கிறது. 21 வயதில் முதலில் தாய்மையடைந்திருக்கிறார். அடுத்த வருடமே மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார். அந்த குழந்தையை பிரசவிப்பதற்குள் கணவர் இறந்துள்ளார். அதன் பிறகு எந்த சலனத்திற்கும் ஆளாகாமல், மறுமணத்தை பற்றியும் யோசிக்காமல் குழந்தைகளை வளர்ப்பதை மட்டுமே தனது கடமையாக செய்து வந்திருக்கிறார்.
பொதுவாக இளம் வயதிலே கணவரை இழந்த பெண்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் திருப்தி அடைந்திருக்க மாட்டார்கள் என்றும்– அதனால் மருமகள்கள் ஜோடியுடன் சிரித்து மகிழ்ந்து குடும்பம் நடத்துவது அவர்களுக்கு பிடிக்காது என்றும் எங்கள் தோழிகள் சொன்னார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. நாங்கள் முழு மகிழ்ச்சியோடு வாழ எல்லா வகையிலும் மாமியார் துணைபுரிகிறார்..” என்றார்கள்.
‘சரி.. அந்த நல்ல மாமியாருக்கு இப்போது என்ன பிரச்சினை?’ என்று கேட்டேன்.
‘‘நாங்கள் திகட்ட திகட்ட தாம்பத்ய வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இதே பருவத்தில் அவர் கணவரை இழந்திருக்கிறார். அதோடு அவரது தாம்பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. நாங்கள் வெளிநாட்டில் இருந்து வருடத்திற்கு இருமுறைதான் இங்கு வந்துசெல்கிறோம். மற்ற காலங்களில் அவர் தனிமையில்தான் வாடிக்கொண்டிருக்கிறார். பணம் இருக்கிறது. வாய்ப்பு, வசதி எல்லாம் இருக்கிறது. ஆனால் வாழ்க்கைத்துணை மட்டும் இல்லை. அவரது வயதுக்கும், கடமைகளுக்கும் ஏற்ற ஆண் துணை ஒன்றை அமைத்துக்கொடுக்கலாம் என்று நினைக்கிறோம். வெளிநாடுகளில் அதற்கென்றே தனி அமைப்புகள் இருக்கின்றன. மனம் ஒத்தவர்கள் வாழ்க்கையோடு எந்த வயதிலும் இணைந்துகொள்ளலாம். இங்கு அந்த பேச்சை எடுத்தாலே நம்மை ஒருமாதிரியாக பார்க்கிறார்கள். கணவரை இழந்தால், வயதாகிவிட்டால், வாழ்க்கை அவ்வளவுதானா?’’ என்று குரலை உயர்த்தி கேட்டார்கள்.
‘உங்கள் மாமியாருக்கு எத்தனை வயது?’
‘‘52..’’
‘உங்கள் நோக்கம் பற்றி உங்கள் கணவர்களிடம் பேசினீர்களா? அவர்கள் என்ன சொன்னார்கள்?’
‘‘அம்மா இங்கு தனிமையில் வாடுகிறார். அம்மா மகிழ்ச்சியாக வாழ என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் இதுபற்றி நீங்களே அம்மாவிடம் பேசுங்கள், என்று கூறி அந்த பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள். நாங்கள் அவர்களிடம் இந்த பேச்சை எப்படி ஆரம்பிக்கவேண்டும் என்று கூறுங்கள்..’’ என்றார்.
‘மாமியாரின் தனிமையை போக்க நீங்கள் இந்த அளவுக்கு முயற்சிப்பது பாராட்ட தகுந்த விஷயம். முதுமையில் இணைந்து வாழ்வதென்பது நீங்கள் குறிப்பிடும் வெளிநாடுகளில் சகஜமானது. இங்கு இப்போதுதான் அதுபற்றிய சிந்தனையே வந்திருக்கிறது. அதே நேரத்தில் மகிழ்ச்சி என்பது எதில் இருந்து கிடைக்கும் என்பது பெண்ணுக்கு பெண் மாறுபடும். அவர்களது தனிமையை எது விரட்டும் என்பதும் பெண்ணுக்கு பெண் மாறுபடும். அதனால் உங்கள் மாமியாரின் மனதறிந்து அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்யுங்கள்.
முதலில் நீங்கள் இருவரும் சேர்ந்து அவர் பார்க்க விரும்பும் ஏதாவது ஒரு சுற்றுலா பகுதிக்கு அவரை அழைத்துசெல்லுங்கள். அங்கு ஜாலியான மனநிலையில் அவர் இருக்கும்போது தனிமை பற்றியும், பிற்காலத்திற்கு தேவையான துணை பற்றியும் வெளிநாடுகளில் இருப்பதை சொல்லுங்கள். இங்கும் அத்தகைய மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்த்துங்கள். அவர் ஆர்வம் காட்டினால் தொடர்ந்து பேசுங்கள். இல்லாவிட்டால் அவர் என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவர் விருப்பத்திற்கு ஏற்றபடி செயல்படுங்கள்..’ என்றேன்.
நான் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த மருமகள்களில் ஒருவர், ‘ஆண் துணை தேவை என்பதை எங்கள் மாமியாருக்கு நன்றாக புரியவைப்போம். அதற்கு அவர் விரும்பாவிட்டால், நான் இந்தியாவிற்கு வந்துவிடுகிறேன். அவர்களது இறுதிக் காலம் வரை என்னோடு வைத்து பார்த்துக்கொள்கிறேன்’ என்றபோது இன்னொரு மருமகள் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது.
இப்படிப்பட்ட மருமகள்கள் சமூகத்தில் பெருக வேண்டும்.
–விஜயலட்சுமி பந்தையன்.
source: http://www.dailythanthi.com/