சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் அதிரவைக்கும் ஆயுதக் குவியல்!!
[ ஆசிரமத்தில், 24 குளு குளு அறைகள் உள்ளன. அவை நட்சத்திர ஓட்டல் அறைகளைப் போன்று உள்ளன. அனைத்திலும் குளியலறை இணைப்பு உள்ளது. ஓர் அறையில் ‘மசாஜ்’ படுக்கை உள்ளது. மற்றொரு அறையில் ‘ட்ரெட்மில்’ வசதி உள்ளது.
4 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில், குளு குளு வசதியுடன் கூடிய ஒரு பிரமாண்ட நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்தில் பிரமாண்ட சமையல் அறை உள்ளது. அதில், ஒரு லட்சம் பேருக்கு ஒரு மாதத்துக்கு சமைத்துப்போட தேவையான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அங்கு ரொட்டி சுடும் எலெக்ட்ரானிக் எந்திரம் உள்ளது. அதில், ஒரே நேரத்தில் ஆயிரம் ரொட்டிகள் தயார் செய்யலாம். இதுதவிர நவீன மருத்துவமனையும் உள்ளது. 10-க்கும் மேற்பட்ட பஸ் மற்றும் வாகனங்களும் உள்ளன. மேலும் 315 பிஸ்டல்கள், 2 டபுள் பேரல் துப்பாக்கிகள், 3 ரிவால்வர்கள், 19 ஆசிட் நிரப்பப்பட்ட ஏர்கன்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
அத்துடன் ஏராளமான தோட்டாக்களும் கையெறி குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுத அறை சாமியார் ராம்பால் அமர்ந்து போதனை செய்யும் உயர்ந்த மாடத்துக்கு கீழே இருப்பதால் யாருக்கும் சந்தேகம் எழாத வகையில் உள்ளது. மேலும் 800 லிட்டர் பெட்ரோலை பதுக்கி வைத்திருந்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.]
ஹரியானா சாமியார்……
ஹிசார்: ஹரியானா சாமியார் ராம்பால் அதிரடியாக இரு தினங்களுக்கு முன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் இருந்து 15 ஆயிரம் பேரை வெளியேற்றிய பிறகு, சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
ஹரியானா மாநில அரசில் என்ஜீனியராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் ஆன்மிகத்தில் இறங்கி பிரபலம் ஆனவர் சாமியார் ராம்பால் (வயது 63). அங்கு பர்வாலா என்ற இடத்தில் அமைந்துள்ள அவரது ஆசிரமம், ஒரு அரசாங்கம் போலவே இயங்கி வந்தது.
சர்ச்சைகளில் சிக்கிய அவர், ஒரு கொலை வழக்கில் சிக்கினார். ஜாமீனில் வெளிவந்துள்ள, அவர் மீது பஞ்சாப், ஹரியானா நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தாக்கலானது. அதில் அவர் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்டு பிறப்பித்து,
21ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என ஹரியானா போலீசுக்கு ஹைகோர்ட்டு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஆசிரமத்தை சுற்றி வளைத்து சாமியாரை கைது செய்வதற்கு செவ்வாய்கிழமையன்று போலீஸ் படை அங்கு விரைந்தது.
போலீசார் மீது ஆசிரமத்திற்குள் இருந்து சாமியார் ஆதரவாளர்கள், அவரது ஆர்.எஸ்.எஸ்.எஸ். படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், பெட்ரோல் குண்டுகளை வீசினர். சரமாரியாக கற்களும் வீசப்பட்டன. 200க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஆசிரமத்தில் அடைபட்டிருந்த நிலையில், 5 பெண்கள், ஒரு குழந்தை என 6 பேர் உயிரிழந்தது பதற்றத்தை ஏற்படுத்தியது. அவர்கள் உயிரிழந்தது எப்படி என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சாமியார் ராம்பால், ஆசிரம செய்தி தொடர்பாளர் ராஜ்கபூர், முக்கிய நிர்வாகி புருஷோத்தம் தாஸ், அவரது ஆதரவாளர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே ஆசிரமத்தின் ஒருபகுதியை இடித்து உள்ளே நுழைந்த போலீசார் நள்ளிரவு வரை ராம்பாலை தேடினர். ராம்பால் ஆசிரமத்தில் இருந்து மொத்தம் 15ஆயிரம் பேரை போலீசார் வெளியேற்றினர்
சாமியாரின் ஆதரவாளர்கள் 275 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டதாக புருஷோத்தம் தாஸ், சாமியார் ராம்பாலின் மகன் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். ஆசிரம பகுதியில் தொடர்ந்து பதற்றமும் நிலவிய நிலையில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அங்கு துணை ராணுவத்தினர் 500 பேரை அனுப்பி வைத்தது.
சாமியாரைப் பற்றிய சுருக்கமான ஃப்லாஷ்பேக்
கடந்த 200ம் ஆண்டு ஹரியானா அரசின் நீர்பாசன துரையில் ஜூனியர் என்ஜினியராக இருந்த ராம்பால் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் ஆன்மீக பாதையில் சென்று சர்குரு ராம்பால் ஜி மகராஜ் ஆனார். அவர் தலைமை வகிக்கும் பிரிவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.100 கோடி ஆகும். 63 வயதாகும் ராம்பலின் ஆசிரம் ஹரியானா மாநிலம் பர்வாலாவில் 12 ஏக்கரில் அமைந்துள்ளது. அவருக்கு சொந்தமாக பி.எம்.டபுள்.யூக்கள், மெர்சிடீஸ் பென்ஸ்கள் உள்ளிட்ட பல சொகுசு கார்கள் உள்ளன.
ஆசிரமத்தின் சுற்றுச்சுவர் 30 அடி உயரமானது. ஆசிரமத்தில் ராம்பாலின் முக்கிய பக்தர்களுக்கு என்று ஏ.சி. அறைகள் உள்ளன. அவர் உரையாற்றும் அறையில் எல்.இ.டி. திரைகள் உள்ளன. ராம்பால் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தை நேற்று மட்டும் 2 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். அவரது உரைகளை பிறர் பார்க்க யூடியூப் சேனல் வைத்துள்ளார்.
ராம்பாலுக்கு ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லியில் 25 லட்சம் பக்தர்கள் உள்ளார்களாம். கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ராம்பால் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு அவர் ஹரியானா மாநிலம் ரோதக்கில் இருந்த தனது தலைமை ஆசிரமத்தை பர்வாலாவுக்கு மாற்றினார். பர்வாலாவில் மேலும் ஒரு ஆசிரமத்தை கட்டி வருகிறார்.
அவருக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் சொத்துக்கள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் அவர் 43 முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத அவரை போலீசார் பலகட்ட பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று இரவு கைது செய்தனர். ஹரியானா மாநிலம் சோனேபட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்த ராம்பால் தாஸ் என்ஜினியரிங் டிப்ளமோ முடித்தார். 48 வயது வரை ஜூனியர் என்ஜினியராக இருந்த அவர் கவனக்குறைவு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர ஹோட்டல் கட்டமைப்புடன் ராம்பால் ஆசிரமம்! நிலவறையில் இருந்து அதிரவைக்கும் ஆயுதக் குவியல்!!
ஹிசார்: சர்ச்சை சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் இருந்து அதிரவைக்கும் அளவுக்கு ஆயுதக் குவியல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் போலீசார் கைது செய்ய வந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தியும் வெடிகுண்டுகளை வீசியும் ராம்பாலின் ஆதரவாளர்கள் ‘போர்’ தொடுத்தனர். இதனால் ராம்பால் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்தது.
பின்னர் கடுமையான எச்சரிக்கைகளைத் தொடர்ந்து ராம்பால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார். இந்த நிலையில் ராம்பாலின் பிரம்மாண்ட கோட்டை ஆசிரமத்தில் ஹரியானா சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் நேற்று சோதனை நடத்தினர்.
அவரிடம் பி.எம்.டபுள்.யூக்கள், மெர்சிடீஸ் பென்ஸ்கள் உள்ளிட்ட பல சொகுசு கார்கள் உள்ளன.
சண்டிகர்-ஹிசார் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 12 ஏக்கர் பரப்பளவில் ராம்பாலின் ‘சத்லோக்’ ஆசிரமம் அமைந்துள்ளது. அதன் நுழைவாயிலில் பக்தர்களை பரிசோதிக்க ‘மெட்டல் டிடெக்டர்’ வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரமம், கோட்டை போன்று கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் உயர்ந்த காம்பவுண்டு சுவர்கள் உள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சாமியாருக்கு தனியார் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். அவர்கள் தங்குவதற்கு சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்தின் மையப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரமாண்ட பிரார்த்தனை அரங்கம் கட்டப்பட்டது. அது, 50 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது. அரங்கத்தின் நடுவில், உயரமான மேடை போன்ற அமைப்பு உள்ளது. அங்கு குண்டு துளைக்காத கூண்டு பொருத்தப்பட்டுள்ளது. அதனுள் அமர்ந்துதான் சாமியார் ஆன்மிக போதனைகளை நிகழ்த்துவார்.
பிரார்த்தனை அரங்கத்தை சுற்றிலும் உறுதியான கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு புறம் ஆண்களுக்கும், மறுபுறம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சாமியாரின் போதனைகளை திரையில் காண்பிக்க 3டி புரொஜக்டர் வசதியும் உள்ளது.
ஆசிரமத்தில், 24 குளு குளு அறைகள் உள்ளன. அவை நட்சத்திர ஓட்டல் அறைகளைப் போன்று உள்ளன. அனைத்திலும் குளியலறை இணைப்பு உள்ளது. ஓர் அறையில் ‘மசாஜ்’ படுக்கை உள்ளது. மற்றொரு அறையில் ‘ட்ரெட்மில்’ வசதி உள்ளது.
4 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில், குளு குளு வசதியுடன் கூடிய ஒரு பிரமாண்ட நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்தில் பிரமாண்ட சமையல் அறை உள்ளது. அதில், ஒரு லட்சம் பேருக்கு ஒரு மாதத்துக்கு சமைத்துப்போட தேவையான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அங்கு ரொட்டி சுடும் எலெக்ட்ரானிக் எந்திரம் உள்ளது. அதில், ஒரே நேரத்தில் ஆயிரம் ரொட்டிகள் தயார் செய்யலாம். இதுதவிர நவீன மருத்துவமனையும் உள்ளது. 10-க்கும் மேற்பட்ட பஸ் மற்றும் வாகனங்களும் உள்ளன. மேலும் 315 பிஸ்டல்கள், 2 டபுள் பேரல் துப்பாக்கிகள், 3 ரிவால்வர்கள், 19 ஆசிட் நிரப்பப்பட்ட ஏர்கன்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
அத்துடன் ஏராளமான தோட்டாக்களும் கையெறி குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுத அறை சாமியார் ராம்பால் அமர்ந்து போதனை செய்யும் உயர்ந்த மாடத்துக்கு கீழே இருப்பதால் யாருக்கும் சந்தேகம் எழாத வகையில் உள்ளது. மேலும் 800 லிட்டர் பெட்ரோலை பதுக்கி வைத்திருந்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வளவு ஆயுதங்களை ராம்பால் பதுக்கி வைத்தது ஏன் என்பது குறித்து ஹரியானா போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை ராம்பால் ஆசிரமத்தில் பதுங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 865 ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகத் தலைவருக்கு ஏன் ஆயுதப்படை?
எது ஆன்மிகம், எது மோசடி என்று தெரியாதவர்களைத் தொண்டர்களாகப் பெற்ற இன்னொரு சாமியார் அகப்பட்டிருக்கிறார். கபீர்தாசரின் மறு அவதாரம் என்று தன்னைக் கூறிக்கொண்ட சந்த் ராம்பால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்
ஹரியாணாவின் பர்வாலா நகரில் கடந்த 12 நாட்களாக நடந்த நாடகம் புதன்கிழமை இரவு 11 மணிக்கு முடிவுக்கு வந்தது. 12 ஏக்கர் பரப்பளவுள்ள சத்யலோகம் ஆசிரமத்தில் துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள், அமில குண்டுகளுடன் திரண்டு நின்று 15,000 பக்தர்களைப் பிணையாக வைத்துக்கொண்டு போலீஸார் மீது தாக்குதல் நடத்திய அவருடய ‘சீடர்கள்’ சுமார் 460 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹரியாணா மாநிலத்தின் தனானா கிராமத்தைச் சேர்ந்த ராம்பால் சிங் ஜதின், மாநிலப் பாசனத் துறையில் இளநிலைப் பொறியாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். கடமை தவறியதற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர். இந்து தெய்வங்களையும் சடங்குகளையும் கடுமையாக விமர்சித்து மக்களிடையே பிரபலமான அவர், கபீர்தாசரின் புது அவதாரம் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டார். தன்னை விசுவாசிக்கிறவர்களுக்கு மோட்சம் நிச்சயம் என்று பிரச்சாரம் செய்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான ‘சீடர்கள்’ அளிக்கும் காணிக்கையில் சொகுசான ஆசிரமத்தை அமைத்தார். ஆசிரமம் எந்த அளவுக்கு ஆடம்பரமானது என்பதை, அவருடைய மெய்க்காவல் படையில் கறுப்பு உடை அணிந்த 400 பேர் எப்போதும் துப்பாக்கிகளுடன் ஆசிரமத்தைக் காவல் காத்தனர் எனும் தகவலால் அறியலாம்.
ஒரு கொலை வழக்கு அவர் மீது பதிவாகியிருந்தது. அந்த வழக்கில் ஆஜராகுமாறு அவருக்கு 43 முறை நோட்டீஸ் அளித்தும் ஆஜராக மறுத்தபோது, பிணையில் எளிதில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் அவருக்கு நோட்டீஸ் தரப்பட்டது. அப்போதும் வர மறுத்தபோது, பஞ்சாப் – ஹரியாணா உயர் நீதிமன்றமே தலையிட்டது. அதன் பின்னர் நீடிக்கப்பட்ட வாய்ப்புகளையும் நிராகரித்த அவர், ஜகத்குருவான தான் எந்த நீதிமன்றத்துக்கும் கட்டுப்பட்டவரல்ல என்று அறிவித்தார்.
இதையடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்ற ஆசிரமத்துக்குள் காவல் துறையினர் நுழைந்தபோதுதான் இவ்வளவு கலாட்டாக்களும் அரங்கேறியிருக்கின்றன. போலீஸார் தடியடி நடத்தியதில் 83 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். ஆசிரமத்து குண்டர்கள் தாக்கியதில் 105 போலீஸார் காயம் அடைந்திருக்கின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டைக்கு இடையே 5 பெண்களும் 1 குழந்தையும் ஆசிரமத்தில் இறந்துவிட்டனர். உள்ளே மனிதக் கேடயமாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக் கணக்கானோரை மீட்டு அனுப்பிவருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் பாபா ராம்தேவுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளித்து, மத்திய அரசு உத்தரவிட்டதுடன் பொருத்திப் பார்க்க வேண்டிய சம்பவம் இது. பண்டைக் காலத்தில் சாமியார்களுக்கான இலக்கணம் துறவறம்; நவீன காலத்தில், எல்லாச் சட்டங்களுக்கும் அப்பாற்பட்ட பிரம்மாண்ட சாம்ராஜ்ஜியமே இலக்கணம் ஆகிவருகிறது. சாமியார்களின் எல்லாக் கொட்டங்களையும் வேடிக்கை பார்ப்பதோடு மட்டும் அல்லாமல், பல வகைகளிலும் அவர்களுக்கு உடந்தையாகவும் இருக்கும் அரசு அமைப்புகள், பின்னாளில் இந்தக் குற்றங்களில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாததுபோலக் காட்டிக்கொள்வது வெட்கக்கேடு!
source: thatstamil and Tamil Hindu