“நீங்கள் உங்கள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும்”
Dr.செந்தில் வசந்த்
உலக ஆஸ்துமா தினம் ஆண்டுதோறும் மே 7-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆஸ்துமா தினத்தின் கருப்பொருள் “நீங்கள் உங்கள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும்’ என்பதாகும்.அந்த கருப் பொருளை செயல்படுத்த நாம் சில விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்!
நமது இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 3200 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆஸ்துமா குழந்தைகளிடையே ஒரு நீடித்த நோயாக உருப்பெற்றுள்ளது. நாட்டில் 10-ல் ஒரு குழந்தை இந்நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் இன்கேலர்களை பயன்படுத்துவதன் மூலம் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
நாட்டில் இன்கேலர்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக உள்ளது. மேலும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இன்கேலர்களை உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கை பாதியாக உள்ளது. நீரிழிவு, எய்ட்ஸ், ரத்த கொதிப்பு போன்ற நோய்களைப்போல் ஆஸ்துமாவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லை.
இந்த மூச்சிரைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் நோயைக் கண்டறியாமலோ அல்லது கட்டுக்குள் வைக்காமலோ இருக்கிறார்கள். இடைவிடாத இருமல், அதிகாலை இருமல், மூச்சிரைப்பு, மூச்சடைப்பு போன்ற அறிகுறிகளை, மருத்துவர் ஆலோசனையின்றி இருமல் மருந்துகளை மருந்துக் கடைகளில் வாங்கி உள்கொண்டு சரிசெய்ய முயல்கிறார்கள். உலகம் முழுவதும் ஆஸ்துமாவுக்கு மூச்சிழுப்புக் கருவிகளையே நாடும்போது, இந்தியாவில் 80 சதவிகித நோயாளிகள் வெறும் மாத்திரைகளையே நம்பியிருப்பது விமர்சனத்துக்கு உரியது.
சென்னையைப் பொறுத்தவரை 18 சதவீத குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோயின் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 5 சதவீத குழந்தைகளிடம் இந்நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது, என்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் வே.கனகசபை தெரிவித்துள்ளார்.
பலருக்கு. சாதாரண சளி, இருமலில் ஆரம்பிக்கும். அப்படியே தொண்டையில் ‘கீச்ஸ கீச்’ சத்தமும் சேர்ந்து கொள்ளும். அடுத்த கட்டமாக சுவாசிப்பதில் சிக்கல் உண்டாகி, மூச்சுத்திணறல் உண்டாகும். விசிலை விழுங்கியது போல, மூச்சு விடும் போதெல்லாம் விசில் சத்தம் சேர்ந்து ஒலிக்கும். தூக்கம் தொலையும். பசி மறக்கும். ‘எப்போ சரியாகும்’ என உடலும் மனதும் அழும். சுருக்கமாக சொல்லப் போனால், அந்த அனுபவம் நரக வேதனைஸ அதுதான் ஆஸ்துமா!
ஆஸ்துமா என்கிற அரக்கனுக்கு வயது வித்தியாசமோ, ஆண், பெண் பேதமோ கிடையாது. பிறந்த குழந்தை முதல், தளர்ந்த பாட்டி, தாத்தா வரை சகட்டுமேனிக்கு பாதிக்கும். மழை, குளிர் காலங்களில் அதன் கோர தாண்டவம் கொஞ்சம் அதிகமிருப்பதைப் பார்க்கலாம். ஆஸ்துமா என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? சிகிச்சை முறைகள், நிவாரணங்கள்ஸ இவை எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போமா?.
அதென்ன ஆஸ்துமா?
ஆஸ்துமா என்பது சுவாசக் குழல்களைப் பாதிக்கும் ஒரு நோய். சுவாசக்குழல்கள்தான் மூச்சுக்காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் குழாய்கள்.
இந்த சுவாசக் குழாய்களின் உள்பக்க சவ்வில் ஒருவித அழற்சி ஏற்படும். மூச்சுக்குழாய் மற்றும் அதன் கிளைகளின் சாதாரண விட்டம் குறைந்து, திடீரென சுருங்கும். சுவாசக் குழாயின் உள்சுவர் வீங்கி, ஒவ்வாமை உண்டாகும். இதன் விளைவாக சாதாரண அளவைவிட, மிகக்குறைந்த அளவு காற்றே, நுரையீரலின் காற்று பரிமாணம் நடக்கும் இடத்துக்குச் செல்லும். அதனால், உடல் திசுக்களுக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைவதால், மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். அதாவது மூச்சு விட முடியாமை, விசில் சத்தத்துடன் மூச்சு விடுதல், இருமல், மார்புப்பகுதி இறுக்கமாவது, அரிதாக சில வேளைகளில் நெஞ்சுவலி போன்றவற்றை உண்டாக்கும். ஆஸ்துமாவின் பாதிப்பு நள்ளிரவு 1 மணியிலிருந்து, அதிகாலை 4 மணிக்குள் சற்றே தீவிரமாக இருக்கும்.
சுற்றுப்புற மாசு, தூசு, பூக்களில் உள்ள மகரந்தத்துகள்கள், வானிலை மாற்றங்கள், மன அழுத்தம் போன்றவை ஆஸ்துமாவை தூண்டும் காரணிகள். இது பரம்பரையாகத் தொடரக்கூடிய ஒரு நோய். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என யாருக்காவது ஆஸ்துமா இருந்தால், அந்த வழியில் வரக்கூடிய குழந்தைகளுக்கும் ஆஸ்துமா தாக்க 25 சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு. பொதுவாக குழந்தையின் 5வது வயதுக்குள் ஆஸ்துமா ஆரம்பித்து விடும். அதில் 50 சதவிகிதக் குழந்தைகளுக்கு 3 வயதுக்குள்ளாகவும் தாக்கலாம்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
ரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, பி.எஃப்.டி மற்றும் இசிஜி என நோயின் தீவிரத்தைப் பொறுத்தது சோதனை முறை. தேவைப்பட்டால், சருமத்துக்கான சோதனையும் பரிந்துரைக்கப்படும். பி.எஃப்.டி. (Pulmonary Function Test) எனப் படுகிற சோதனை மிக முக்கியமானது. இதில் நுரையீரலின் விரிவடையும் தன்மை கண்டுபிடிக்கப்படும். இது ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் செய்யப்படுகிற சோதனை.
ஆஸ்துமாவை குணப்படுத்த முடியுமா?
சரியான மருத்துவம், வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். மற்ற நோய்களுக்கு மருத்துவம் செய்து முற்றிலும் சரியாக்கி விடுகிற மாதிரி இதில் வாய்ப்பில்லை. ஒரு முறை ஆஸ்துமாவுக்கு மருத்துவம் செய்து, சரியாகி விட்டால், அது மறுபடி வராது என நினைக்க வேண்டாம். வருடம் 2-3 முறை மருத்துவரைப் பார்த்து, மறுபடி ஆஸ்துமாவின் தீவிரம் எட்டிப்பார்க்காமல் இருக்க ஆலோசனை பெறுவது முக்கியம்.
என்ன சிகிச்சை?
ஆஸ்துமா தீவிரமாக இருக்கும்போது உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். நோயின் தீவிரம் மிக அதிகமாக இருக்கும் போது, மருத்துவர்கள் ‘நெபுலைசர்’ என்கிற கருவியின் மூலம் தீவிரத்தைக் குறைப்பார்கள். மருந்துடன் ஆக்சிஜனும் சேர்த்து, நீராவி வடிவத்தில் சுவாசிக்கும்படி நோயாளிக்கு செலுத்தப்படும்.
இதற்கும் கட்டுப்படாத ஆஸ்துமா என்றால், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, நரம்பு வழியே செலுத்தக்கூடிய மருந்துகளைக் கொடுக்கத் தொடங்க வேண்டும். இன்ஃபெக்ஷன் இருந்தால் அதற்கும் மருந்து கொடுக்கப்படும்.
ஆஸ்துமாவுக்கான சிறந்த சிகிச்சை முறை என்றால் அது இன்ஹேலர் மட்டுமே. வாய் வழியே வைத்து உறிஞ்சக்கூடிய குழல் வடிவிலான சிறிய கருவியான இதில் ஏற்கனவே மருந்து ஏற்றப்பட்டிருக்கும். உறிஞ்சிய உடனேயே நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு மருந்து சென்று, சுருங்கிய காற்றுக்குழாய்களின் தசைகளைத் தளர்த்தி, நிவாரணம் அளிக்கும். பக்க விளைவுகள் இல்லாதது. இன்ஹேலரை சரியாக உபயோகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வாயில் வைத்து உறிஞ்சிய உடனேயே வாயைக் கொப்பளித்துத் துப்ப வேண்டும்.
இன்ஹேலரிலேயே இரண்டு வகை உண்டு. ப்ரிவென்ட்டர் என்பதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஆஸ்துமா இருந்தாலும்,இல்லாவிட்டாலும் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். ரிலீவர் என்பதை, பிரச்னை தீவிரமாக இருக்கும்போது மட்டும் உபயோகிக்கலாம். பலருக்கும் இந்த வித்தியாசம் தெரியாமல், வருடக்கணக்கில் ரிலீவரை மட்டுமே உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிப்பது இதய நோயை வரவழைக்கலாம். ஜாக்கிரதை!
இன்ஹேலர் உபயோகிக்கத் தெரியாதவர்களுக்கு மருத்துவர்கள் ‘ஸ்பேசர்’ என்கிற கருவியைப் பரிந்துரைப்பார்கள். பக்க விளைவுகள் இல்லாத இன்ஹேலர் உபயோகித்து, கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே பாதுகாப்பானது. அளவின்றி, அடிக்கடி ஊசி, மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு, நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், ஆஸ்டியோ பொரோசிஸ், பருமன் போன்ற பிரச்னைகள் வரலாம்.
ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்!
ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்க, நமது இருப்பிடம், உணவு, வாழ்க்கை முறை என எல்லாவற்றிலும் கவனம் தேவை. முதல் விஷயம் சுற்றுச்சூழல் சுத்தம். தூசி, மாசு இல்லாமல் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள் போன்றவை வாரம் ஒரு முறை சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
குளியலறையும் கழிவறையும் பாசியோ, ஈர நைப்போ இல்லாமல் உலர்ந்ததாக, சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். பூக்களின் மகரந்தத்தூள், மேசை, நாற்காலி போன்றவற்றில் இருந்து கிளம்பும் தூசு, பெயின்ட், பெர்ஃப்யூம், ரூம் ஸ்பிரே, ஆசிட், வார்னிஷ், பஞ்சு, கொசுவர்த்திச் சுருள், வளர்ப்புப்பிராணிகள், சமையலறைப் புகை போன்றவை ஆஸ்துமாவை தூண்டக் கூடியவை என்பதால் இவற்றிடமிருந்து விலகி இருக்க வேண்டியது முக்கியம். புகைப்பிடிப்பவர்களிடம் இருந்தும் விலகியிருக்க வேண்டும். எந்த விஷயம் ஆஸ்துமாவை தூண்டுகிறது, தீவிரப்படுத்துகிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அதைத் தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமா தொற்று நோயா?
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நிச்சயம் தொற்றாது. ஆனால், மரபு வழியே குடும்பத்தில் தலைமுறைகள் தாண்டியும் வரலாம்.
கர்ப்பிணிகள் கவனத்துக்கு
கர்ப்ப காலத்தில் 2 – 3 சதவிகிதப் பெண்களுக்கு ஆஸ்துமாவின் தீவிரம் பாதிக்கலாம். சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சையளிக்காவிட்டால், எடை குறைவான குழந்தையோ, குறைப்பிரசவக் குழந்தையோ பிறக்கலாம்.
குழந்தைகளைக் கவனியுங்கள்
குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருப்பதைப் பல பெற்றோரும் தாமதமாகவே கண்டு பிடிக்கிறார்கள். நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது, குழந்தையின் பேச்சுத் திறமை பாதிக்கலாம். அதாவது வாக்கியங்களாகப் பேசிக் கொண்டிருந்த குழந்தைகளின் பேச்சு, நோயின் பாதிப்பால், வார்த்தைகளாகக் குறையும். கோபமும் பதற்றமும் அதிகரித்து, ஒருவித எரிச்சல் மனநிலையிலேயே இருப்பார்கள். சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம், ‘ஆஸ்துமா வரும் போது எப்படி ஃபீல் பண்றே’ எனக் கேட்டிருக்கிறார் மருத்துவர். வார்த்தைகளால் பதில் சொல்ல முடியாத அந்தக் குழந்தை, தன் அவஸ்தையை படமாக வரைந்து காட்டியதாம். அந்தப் படம் எப்படியிருந்தது தெரியுமா? அந்தக் குழந்தை படுத்திருக்க, அதன் நெஞ்சின் மேல் ஒரு யானை ஏறி உட்கார்ந்திருக்கிறது. அப்படியென்றால், அந்தக் குழந்தையின் வேதனையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
தகவலில் உதவி: Dr. லோகமூர்த்தி
-aanthaireporter