நினைக்க, நினைக்க.. இனிக்க, இனிக்க… !
இறைவன் நாட்டத்தில் மனிதனாய் பிறந்த அனைவரும் தான் உலகில் அடியெடுத்து வைத்த நாள் முதல் இந்த நாள் வரை வாழ்வில் பல நல்ல நிகழ்வுகளும், மறக்க முடியா சம்பவங்களும் சம்பவித்திருக்கும். அவை யாவும் நாம் வேதனையில் வாடும் பொழுதோ அல்லது தனியே இருக்கும் பொழுதோ ஒவ்வொன்றாக அசை போட்டால் அது உள்ளத்திற்கு ஆனந்தமளிக்கும். அப்படிப்பட்ட நினைவுகள் பல அவற்றில் சில இங்கே உங்களுக்காக அசைப்போட்டுள்ளேன்.
1. ஆரம்பப்பள்ளிக்கு வாப்பா, உம்மாவிடம் அடம் பிடித்துச்சென்று வந்தது.
2. கரும் சிலேட்டு பலகையில் கல்லுக்குச்சியை நாம் பிடிக்க நம் கையை ஆசிரியை பிடிக்க அ, ஆ, இ, ஈ என்று எழுதப்பழகியது.
3. 1, 2, 3, 4 எழுத ஆரம்பிக்கும் பொழுது 8 போட சிரமப்பட்டு இரு சிறு வட்டங்களை (00) அருகருகில் போட்டு அதை ஒன்றோடொன்று ஒட்ட வைத்து பெருமிதம் அடைந்தது.
4. நம்மை விட மூத்த மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில், பேனா, லப்பர், ஸ்கேல் என ஒரே பெட்டியில் வரும் ஜாமின்ட்ரி பாக்ஸை பயன் படுத்த ஆசை கொள்வது.
5. பள்ளியில் நோட்டு புத்தகம் போல் இருக்கும் எசனல் குர்’ஆன் ஓதிக்கொண்டிருந்த நாம் ரைஹான் பலகை வைத்து ஓதும் முப்பது ஜுஸ்வு குர்’ஆன் ஓத ஆசையுடன் காத்திருந்தது.
6. பாடப்புத்தகத்தில் மயிலிறகை மறைத்து வைத்து அது குட்டி போடும் என நம்பி அடுத்த நாளுக்காக காத்திருப்பது.
7. வரைகிறோமோ அல்லது கிறுக்குகிறோமோ? ஆனால் வண்ண, வண்ண கலர் பென்சில்களை ஆவலுடன் சேர்த்து வைப்பது.
8. பள்ளிக்கு எடுத்துச்சென்ற மிட்டாயை மறைத்து வைத்து திண்பது.
9. பள்ளி முடிந்து எப்படா வீடு வரும் என காத்திருந்து வீடு வந்ததும் தெரு சிறுவர்களுடன் விளையாட சிட்டாய் பறந்து சென்றது.
10. சரிவர கவனமின்மையால் காலில் உடைந்த கிளாஸ் (வீதல்ரோடு), முட்கள் குத்தி ரத்தம் கசிவதும் அதை பொருட்படுத்தாமல் விளையாடுவதும் பிறகு அதில் மண்புகுந்து சீழ் வைத்து காய்ச்சல் வருவதும் ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசி போட்டு வருவதும். புண் ஆறியதும் மீண்டும் தன் கவனக்குறைவை தொடர்வதும், விளையாடி மகிழ்வதும்.
11. உள்ளூர் ஜனாதிபதிகளை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தலும், அதற்காக தயாராகும் வாக்குச்சீட்டுகளும், அக்கம்பக்கத்து வாக்காளர்களை அழைத்து வந்து வாக்களிக்க பயன்படுத்தப்பட்ட கயிறு ரயில் வண்டிகளும்.
12. நீடித்த பகையை உண்டாக்காத அடிக்கடி வரும் சண்டைகளும் (காயா? பழமா?), பிறகு உறவாடி ஒருவருக்கொருவர் மகிழ்வதும்.
13. கட்சிக்கொடிகளை வண்ணப்பட்டங்களாய் செய்து அதை நைலான் கயிறுகள் மூலம் வானில் உயர பறக்கச்செய்து அதற்கு காகித தந்தி மூலம் தன் வாழ்த்துக்களை நூலில் அனுப்பி மகிழ்ந்தது. (பிறகு அந்த கட்சிகளெல்லாம் நமக்கு ஆப்படித்தது வேறு கதை).
14. வீட்டிலிருந்து கள்ளத்தனமாய் வேட்டியில் ஒளித்து எடுத்துச்சென்ற அரிசிக்கு தெரு ஆச்சியிடம் வாங்கித்திண்ட மாங்காய் ஊறுகாயும், மரவள்ளிக்கிழங்கும், நாகப்பழமும், எலந்தைப்பழமும், பனங்கிழங்கும், வெள்ளரிப்பழமும் இன்னும் பிற திண்பண்டங்களுடன் “ஆனந்தம் கொட்டிக்கிடக்குது ஆச்சியின் கூடையிலே” என சொல்ல வைக்கும்.
15. குளங்களில் குளித்து கும்மாளமிடுவதும் ஆழத்திற்கு சென்று தரையில் மண்ணை எடுத்து வந்து செவ்வாய்க்கிரக மண்ணை எடுத்து வந்தது போல் பரவசமடைவதும், இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திச்சென்று வாழ்க்கையில் ஒட்டு மொத்த இடர்களையும் தாண்டி வந்தது போல் பெருமிதம் கொள்வதும்.
16. மழைக்காலங்களில் வெளியில் விளையாட வழியின்றி வீட்டின் வாசலில் ஓடிய சிறு ஓடையில் விடப்பட்ட காகித கத்திக்கப்பல் சிறிது தூரம் ஓடி தண்ணீரில் ஊறி மூழ்கடிக்கப்பட்டதால் ஒவ்வொரு வீட்டின் வாசலும் அந்தந்த வீட்டு சிறுவர்களின் வாழ்வில் டைட்டானிக் கப்பல்கள் மூழ்கிய இடங்களே.
17. விரும்பிய வண்ணத்தில், டிசைனில் துணி எடுத்து தைத்து போட்ட சட்டைகளும், பெல்ஸ், பேரலல் பேக்கி பேண்ட்களும் வருடங்கள் பல உருண்டோடி விட்டாலும் அது நினைவலைகளில் இன்னும் புத்தம்புதிதாகவே மினுமினுத்து காற்றில் அசைந்தாடிக்கொண்டிருக்கிறது.
18. நண்பர்களின் உதவியில் தட்டுத்தடுமாறி ஓட்டிய சைக்கிள்களும் பின்னொரு நாள் அந்த சைக்கிளுக்கே உரிமையாளர் ஆனதும் மிதிவண்டியை மிதித்து காற்றில் தன் சட்டையும், பனியனும் சந்தோசத்தில் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ள வேகமாய் பறந்ததும்.
19. அதுவும் ஒரு நாள் நம் வாழ்வில் நடந்தேறும் என்றறியாமல் உறவினர்களின் சுன்னத், கலியாண வைபவங்களில் குதூகலமாய் கலந்து கொண்டு பந்தலுக்கு கொடி கட்டி பரவசமடைந்ததும், வண்ணக்காகிதத்தில் பூவந்தி உருண்டை உருட்டி மகிழ்ந்ததும்.
20. புனித ரமழான் நோன்பு காலங்களில் ஒரு புறம் செய்து முடித்த சேட்டைகளும், மறுபுறம் தொழுது வணங்கிய வணக்க வழிபாடுகளும் ஒவ்வொன்றாக சொல்லிமாளாது இங்கு எழுதி தீராது.
21. அன்று தரையில் அமர்ந்து கண்டுகளித்த கட்டணக்கால்பந்தாட்ட போட்டிகள் இன்று உள்ளத்தின் அரியணையில் அமர்ந்து எமக்கு நினைவலைகளில் உலகக்கோப்பை போல் உற்சாகமூட்டிக்கொண்டிருக்கின்றன.
22. தெருவில் ஓடிய அம்பாசிடர் கார்களில் ஆபத்தறியாமல் பின்புறம் தொங்கிக்கொண்டு சிறிது தூரம் சென்று விட்டு வந்ததை பெரும் சாகசமாய் நண்பர்களுடன் சொல்லி மகிழ்ந்ததும்.
23. அட்டபில்லில் அடிபட்டக்குருவிகளின் வருத்தம் உணராமல் அன்று ஆனந்தமடைந்தது இன்று வேதனையடையச்செய்கிறது.
24. தென்கிழக்கில் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டால் அதனால் வர இருக்கும் பள்ளி விடுமுறையை எண்ணி சந்தோசமடைந்ததும்.
25. நீண்ட நாட்களுக்குப்பின் அரபுநாட்டிலிருந்து வந்திறங்கிய சொந்தபந்தங்கள் அன்பளிப்பாய் தந்த அலிலப்பரும், ஹீரோ பேனாவும், வாயில் மெல்ல தந்த சிவிங்கமும் இன்றும் எம்மை மெல்ல, மெல்ல அசை போட வைத்து விட்டன.
26. கம்பனில் குதூகலமாய் சென்னை சென்று வந்ததும் வரும் வழியில் தூக்க கலக்கத்தில் திருவாரூரில் எழுப்பப்பட்டு நடு இரவில் எதற்கென்றே தெரியாமல் பால் வாங்கி தந்ததும்.
27. இறைவன் நாட்டத்தில் நாமும் மெல்ல, மெல்ல பெரியவனாகி பாஸ்போட்டுக்கும் விண்ணப்பித்து அதுவும் முறையே கையில் கிடைத்து வீட்டுப்பெரியவர்களின் (அப்பா, பெரியம்மா,…..) வாழ்த்துக்களுடனும் து’ஆவுடனும் எப்பொழுது திரும்புவோம் என அறியாமல் விமானம் ஏறி அரபு நாடு வந்திறங்கியதும் சில வருடங்கள் இங்கு செலவு செய்து ஊர் திரும்பியதும் நம்மை வாழ்த்தி து’ஆச்செய்து வழியனுப்பிய அந்த பெரியவர்களை காணாது கண் கலங்கியதும் என் உள்ளக்கிடங்கில் நங்கூரமிட்டு பல சுனாமிகள் வந்து சென்றும் நகராமல் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது.
28. கட்டுக்கம்பி போல் இருந்த தலை முடியை கட்டுக்குள் கொண்டு வர சுருள் வடிவ சீப்பு கொண்டு சீவி தலையை செம்மைப்படுத்தியதும் (அதில் டிஸ்க்கோ, பங்க், நடுவாங்கு, ஹிப்பி, கிராப்பு, மாப்ளை கட்டிங்க் என பீத்திக்கொண்டதும்)
29. உள்ளாடை தெரிய அணிந்த மெல்லிய காட்டன் (மார்ட்டின்) சட்டைகளும் அந்த நேரம் பயன்படுத்தாமல் தவித்து வந்த பாக்கெட்டின் பத்து ரூபாய் சலவை நோட்டும், கரகர வென சப்தம் செய்து செக்கிழுத்த செம்மலாய் எம்மை நினைக்க வைக்கும் சோலப்புரி செருப்பும்.
30. மூத்த தெரு சகோதரிகள் சிறுவனாய் இருந்த எம்மை சினுங்காமல் இருக்க அவர்கள் உப்புக்கு சப்பானியாய் எம்மை சேர்த்துக்கொண்டு விளையாடிய விளையாட்டுக்களும் (கொலை, கொலையா மந்திரிக்கா, தொட்டு விளையாட்டு, கண்டு விளையாட்டு…. அந்த விளையாட்டுக்களெல்லாம் இன்று ஒய் திஸ் கொலவெறி? என பரிணாமம் பெற்று விட்டது)
31. கால்பந்தை ஒன்பது இடத்தில் தையல் போட்டு அதன் டீயூபில் இரும்புக்குண்டை (பால்ரஸ்) அடைத்து மாதக்கணக்கில் அதை உதைத்து விளையாடி மகிழ்ந்த நினைவுகளும்….
32. அன்று ஒவ்வொருவரின் தலையில் கவிழ்க்கப்பட்ட வெல்வெட் துணியிலான கருப்பு/ஊதா தொப்பி நினைவலைகளில் அது இன்றும் நேராகத்தான் பயணித்துக்கொண்டிருக்கிறது.
இன்னும் எத்தனை, எத்தனை, நினைக்க, நினைக்க, இனிக்க, இனிக்க, உள்ளம் பறக்க, பறக்க………
-மு.செ.மு. நெய்னா முஹம்மது
source: http://adirainirubar.blogspot.in/2013/12/blog-post_17.html