அம்மா நினைவுகள்!
அம்மா நினைவுகள்
அற்றுப்போன ஆள் உண்டா -அவள்
அன்பில் நனையாமல்
விட்டுப்போன ஆண் உண்டா
எல்லா பிறப்பிற்கும்
அஸ்த்திவாரம் அம்மா
நல்லா வளர்த்தெடுத்து
ஆளாக்கும் அம்மா
கால்மடக்கி உதைத்த உதை-நான்
கருவறையில் வதைத்த வதை
பொறுப்பதிலே பூமி அவள்
வயிற்றைவிட்டு வந்த பின்னர் -அம்மா
தோள்களில் தொற்றிக்கொண்டேன்
எட்டெடுத்து வைக்கு முன்னர் -அம்மா
இடுப்பினிலே இடம் பிடித்தேன்
எது நடக்க மறந்தாலும்
எனக்காகத் தான்நடந்தாள்
கண்கண்ட காட்சிக்கெல்லாம்
கதைசொல்லித் தான்தந்தாள்
தட்டெடுத்துத் தந்த சோற்றில்
தாயன்பைப் பிசைந்துவைத்து
ஊட்டிவிடும் விரல்களில் -தாயின்
ஒட்டுமொத்த உயிரிருக்கும்
நான் உண்ண மறுக்கயிலே
மீந்துபோன பருக்கைகளே
தாய் உண்ண உணவாகும்
தாய் அன்பே உயர்வாகும்
உடன் அனைத்து உறங்க வைக்கும்
அம்மா அரவனைப்பில்
கருவறையின் கதகதப்பாய்க்
கணக்கிலடங்கா அருளிருக்கும்
நுங்குக் கோந்தை வண்டி ஓட்டி
எங்கு சுற்றி வந்தாலும்
தங்குமிடம் தாய்மடியே
தாய்மடியில் தலைசாய்க்க
நோய்நொடிகள் பலமிழக்கும்
உச்சிமோந்த முத்தத்திலே
பச்சிலையின் குணமிருக்கும்
கனிந்த முகம் மாறாமல்
கிழிந்த சட்டை தைத்துத்தரும்
புதுப் புடைவை விற்றேனும்
புத்தகங்கள் வாங்கித்தரும்
அம்மா அடித்துவிட்டால்
அற்பநேரம் வலியிருக்கும்-அதில்
ஆன்மாவை மேம்படுத்த
ஆயிரம் வழியிருக்கும்
அம்மா சொல்லித்தந்த
எல்லா ஒழுக்கத்திற்கும் தலை
அல்லாஹ் பெரியவன் என்னும்
ஆன்மீக வழிகாட்டல்!
படைத்தவன் அருட்கொடையில்
பிடித்தது என் அம்மா – என்னுடன்
இருப்பதனால் தானே -வாழ்வில்
விருப்பமும் என்பேன் நான்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
source: http://adirainirubar.blogspot.in/2014/10/blog-post.html