ஆண் என்ன? பெண் என்ன? அறிவியல் சொல்வதென்ன?
உலகம் முழுவதும் ஒரே ஆண் (Man) ஆக அல்லது பெண் மயமாக இருந்தால் உலகம் என்னவாகும்?
ஈர்ப்பு இன்றி, உலகமே பொறுக்க இயலாத அறுவை (Boring) ஆக இருந்திருக்குமே!
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! பெண்களே இல்லாமல் உலகம் இருக்குமேயானால் அப்படிப்பட்ட வாழ்வும் ஒரு வாழ்வா?
இல்வாழ்க்கையா? சுவை இல்(லாத) வாழ்க்கையா?
ஆண்களே இன்றி உலகம் இருந்தால் அது வாழ்க்கையா? வாழத்தான் முடியுமா? திருவள்ளுவர் கூறியபடி, அன்பும் அறனும் உடைத்தாயிருந்தாலும் பண்பும் பயனும் கொண்ட இல்வாழ்க்கை இருக்க முடியுமா? இல்வாழ்க்கை இல்(லாத) வாழ்க்கையாகவல்லவா இருக்கும்.
என்ன பார்வை உந்தன் பார்வை?
அவளுக்கென்ன அழகிய முகம்! _ ஒன்று பெண்கள் மட்டுமே உள்ள உலகில் ஒரு பெண் வியந்து பாடுவாளா? பாடத்தான் முடியுமா? என்ன பார்வை உந்தன் பார்வை? என பாடல் இசைக்க முடியுமா?
அவனுக்கென்ன இளகிய மனம்? _ என ஓர் ஆணை மற்றோர் ஆண் புகழ்ந்துதான் பாடமுடியுமா? உனைக் காணாத கண்ணும் கண்ணல்ல! என்று ஓர் ஆணை மற்றவன் மயங்கிப் பாடமுடியுமா?
இப்படிப்பட்ட வாழ்க்கையில் உறவு தழைக்குமா? அன்பு செழிக்குமா?
இரு எதிர் துருவம்
எதிர் துருவங்கள்தானே ஈர்க்கும்? ஒத்த துருவங்கள் விலகி விடாதா? (Like poles repel; opposite poles attract) இந்த உண்மை ஆண்_பெண் பாலியல் வேற்றுமைக்கும் பொருந்தாதா?
இந்தப் பாலியல் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள இந்துமதம் பெண் இனத்தைத் தாழ்வுபடுத்தியது; ஆணினத்தை உயர்த்திப் பிடிக்கிறது.
அவள் என்ன ‘அடிமைப் பெண்’ணா?
ஆணுக்குப் பெண் அடிமைதான்! _ என்கின்றன இந்து மத வேத, புராண இதிகாசங்கள். இதனை வன்மையாக மறுத்த நம் பெண்ணுரிமைக் காவலர் எவ்வகையிலும் ஆணுக்குப் பெண் தாழ்ந்தவளோ அடிமையோ இல்லை என்று கூறி பெண் ஏன் அடிமையானாள்? _ என்ற குறு நூலினையே வெளியிட்டுள்ளார். இதுதான் சமூக இயலின் நிலவரம்!
மனதில் வையடா!
ஆனால், எதனையும் அறிவியல் கண்கொண்டு நாம் ஆண் – பெண்பற்றிய உடலியல் இயலின்படி அறிவியல் அடிப்படையில் என்ன கூறுகிறது என்று பார்க்க இருக்கிறோம்.
இதில் கூறப்படும் ஒற்றுமை_வேற்றுமை வெறும் உடலியல் நிலையில் மட்டும்தான்; சமூக பொருளியல், அரசியல் கல்வியியல் முதலான வாழ்வியல் துறைகளுக்குப் பொருந்தாது; பொருந்தாது; பொருந்தவே பொருந்தாது என்பதை சற்றும் மனதில் வைக்க வேண்டும். மறத்தல் கூடாது.
ஆராய்ந்து கண்ட அறிவியல் உண்மைகள்
இனி, ஆண் பெண் பற்றிய உடலளவில் உள்ள ஆய்ந்து ஆய்ந்து அலசி, தெரிந்து கண்ட அறிவியல் உண்மையைப் பார்ப்போம்.
அளவு கூடினால் அறிவு கூடுமா?
(1) சராசரியாக, ஆண் களில் 24.7 சதவிகிதத்தினர் எடை கூடுதலாக உள்ளனர். பெண்கள் 27 சதவிகிதத்தினர் கூடுதல் எடையுள்ளவர்களாக இருக்கின்றனர்.
(2) ஆணின் மூளை 87.4 கியூபிக் அங்குலம் அளவுடையது. பெண்ணின் மூளை 76.8 கியூபிக் அளவுடையது. மூளையின் அளவிற்கும் ஆற்றலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
சிந்தனை செய்வதில் சிறிதும் வேறுபாடில்லை
(3) பொதுவாக, மனிதனின் மூளை நரம்புயிரணுக்கள் (Nervous Cells) இது நரம்பியலில் (Neurology) நியூரான்கள் (Neurons) எனப்படும். இவை பொதுவாக மாந்தனிடம் சராசரி 1400 கோடி நியூரான்கள் உள்ளன.
ஆனால், பெண்ணிடம் இவை சற்றுக் குறைவாகவே உள்ளன. இதனால் சிந்தனையிலோ அறிவிலோ குறைவு இல்லை.
வழுக்கை விழுவதில்லை
(4) ஆண்களுக்கு 25 வயது முதற்கொண்டே வழுக்கை ஏற்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், பெண்களுக்கு சாதாரணமாக 70 வயதுவரை வழுக்கைக்கான அறிகுறிகள் தென்படுவதில்லை.
குறைவிலாக் கொழுப்பு
(5) ஆணின் எடையில் 15 முதல் 18 சதவீதம் கொழுப்பு அடங்கியுள்ளது. ஆனால், பெண்ணின் எடையில் 25 முதல் 28 சதவீதம் கொழுப்பு காணப்படுகிறது.
எடை எப்படி?
(6) ஆணின் மூளையின் எடை பொதுவாக 1400 கிராம். பெண்ணின் மூளையின் எடை கொஞ்சம் குறைவாகவே உள்ளது.
வியர்வை சுரப்பதிலும் வேறுபாடு
(7)ஆணின் மூச்சுப் பை, சற்றுப் பெரியது; பெண்ணினுடையது கொஞ்சம் குறைவு.
(8)ஆணுக்கு வியர்வை அதிகம் சுரக்காது; ஆனால் பெண்ணுக்குக் கூடுதலாகச் சுரக்கும்.
கரகர குரல்
(9)பிறப்புறுப்புகளின் வளர்ச்சி இரு பாலருக்கும் பொது. அமைப்பு வேறுபாடு டையது. ஆண்ட்ரஜன் (Androgen) என்னும் நாளமில் சுரப்பு இயக்கு நீர் (Duetless gland – Endoerine) ஆண்களிடம் உண்டு.
இது, தாடி, மார்பு, பரந்த மார்பு கரகரப்பான குரல்களுக்குக் காரணமாக அமைகிறது.
கொஞ்சும் குரலினிமை
பெண்களுக்கோ, ஈஸ்ட்ரஜன் (Estrozen) இயக்கு நீர் சுரப்பி அமைந்து உடலின் மென்மை, மெருகு, குரலினிமை போன்றவற்றிற்குக் காரணமாக அமைகிறது.
அவனுக்கும் அவளுக்கும்
(10) ஆண்களுக்கு, எலும்பு முறிவு, காயம், நாட்பட்டு ஆறாத புண்கள் போன்றவை பெண்களைக் காட்டிலும் அடிக்கடி ஏற்படுகின்றன.
பெண்களுக்கு அதிக தீவிரம் அற்ற நோய்களான சளிப்பிடிப்பு, தலைவலி, எலும்பு மற்றும் உணவுக்குழல் தொடர்புடைய நோய்கள் அடிக்கடி வருகின்றன.
(11) ஆண்களுடைய இடுப்பெலும்பு (Pelvis) 13 செ.மீ அகலமே உடையது; பெண்களின் இடுப் பெலும்பு (Pelvis) 13.4 செ.மீ அகலம் உள்ளது.
வண்ணக் குருடு வருவது
(12) ஆண்களில், 4 சதவீதத்தினர் நிறக்குருடர்கள் (Colour Blind) ஆக உள்ளனர். பெண்களில் 1 சதவீதத்தில் 5 பகுதியினர் மட்டுமே நிறக் குருடர்களாக உள்ளனர்.
எத்தனை தடவை இதயத்துடிப்பு?
(13) ஆண்களின் இதயம் 1 மணித்துளியில் (Minitue) 72 தடவை துடிக்கிறது. பெண்களுக்கு 78 தடவைகள் இதயம் துடிக்கிறது.
குருதி அடர்த்தி நிலை
(14) ஆணின் குருதி அடர்த்தி அதிகம். இதில் இரும்புச்சத்து (Haemoglobin) குறைவு. பெண்ணின் குருதி அடர்த்தி குறைவு.
நிலைமாறும் சுண்ணாம்புச் சத்து
(15) ஆணின் உடலில் சுண்ணாம்புச் சத்து (Calcium) நிலையாக _ சீராக இருக்கும். பெண் உடலில் சுண்ணாம்புச் சத்து ஒரே மாதிரி இருப்பதில்லை. மாத விடாயின்போதும் கருக்கொண்டுள்ள காலத்தும், சுண்ணாம்புச் சத்தை இழக்கிறாள். பிள்ளைப்பேறு அவளை நலிவடையச் செய்கிறது. பெண்களுக்குப் பிள்ளைப்பேறு கூடாது என்பார் தந்தை பெரியார்.
மாறுபட்ட மதிப்பு
(16) ஆணின், மதிப்பு 5 கோடி; பெண்ணின் பெறுமானமோ 7 கோடி. ஏன் இப்படி? ஆணுக்கு இல்லா பாலூட்டும் மார்பகங்கள் இரண்டு கூடுதலாக இருப்பதால் 2 கோடி அதிகம். இந்த, சில சமூக-_உயிரியல் (Socio biology).
உணரவேண்டிய பெண்ணின் உடலியல்
வேறுபாடுகளை நாம் உணர்ந்தோமானால் பெண்ணை உடலியல் அளவில் புரிந்துகொண்டு பெண்மையைப் போற்ற முடியும். போற்ற வேண்டும்.
இருபாலாரிடமும் அமைந்த இயல்பான கொழுப்பு
(17) ஆணிடம் நடுக்கம் அதிகமாகவே உள்ளது. பெண்ணிடம் அதிக நடுக்கம் ஏற்படுவதில்லை. குளிராலோ பிற காரணங்களாலோ;
(18) ஆணின் உடல் தோலின் கீழே உள்ளது கொழுப்பு அடுக்கு (Fat layer).இதனைவிட பெண்ணின் மேனியின் அடியில் கொழுப்பு அடர்ந்துள்ளது.
அறிய வேண்டிய அடிப்படை
மேலே நாம் குறிப்பிட்ட அறிவியல் உண்மைகள் ஆண் பெண் வேறுபாடு சமூக இயலில் எந்த விளைவையும் உண்டாக்கவில்லை; உண்டாக்காது.
மதம், வேதம், புராண, இதிகாச, ஆரிய, பார்ப்பனியம் இவை மட்டுமே ஆண் பெண் வேறுபாட்டுக்கும் பெண்ணடிமை, பெண்ணிழிவு இவற்றிற்கு காரணங்களாக அமைகிறன்றன.
செய்நன்றியறியும் சிறப்பு
அறிவியல் சொல்வதன்படி ஆண் என்ன? பெண் என்ன? நான் என்ன? நீ என்ன? எல்லாம் ஓரினம்தான்! உயர்வு தாழ்வற்ற மாந்த இனம்தான். பாலியல் அநீதி (Gender injustice) ஏற்படக்கூடாது. பாலியல் நீதி, சமூக நீதி (Social Justice) போல பெண்ணினத்திற்கு ஏற்படுவதே, ஏற்படுத்துவதே தந்தை பெரியாருக்கு நாம் காட்டும் நன்றிக்கடன்!
காட்டுவோமா? காட்டுவோமே!
http://kulasaivaralaru.blogspot.in/2014/10/blog-post_34.html