Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இல்லறத்தில் உணர்ச்சி வெள்ளம்!

Posted on November 15, 2014 by admin

இல்லறத்தில் உணர்ச்சி வெள்ளம்!

[“என் மேல் என்ன தப்பு?” என்று இருவருமே நினைப்பதனால், “கருத்துப் பரிமாற்றம்” நின்று போய் விடுகிறது.]

திருமண வாழ்வில் உணர்ச்சிப் பிரவாகம்! அப்படி என்றால் என்ன?

ஒரு கணவனின் மன நிலை இது:

“என் மனைவி என்னைக் கடுமையாக வெறுக்கிறாள்! அதனால் தான் அவள் அடிக்கடி என்னை ஆழமாகப் புண்படுத்தி வேடிக்கை பார்க்கிறாள்! நான் என்ன நினைக்கிறேன் என்பது குறித்தோ, எனது உணர்வுகள் குறித்தோ கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் வேண்டுமென்றே என்னைச் சீண்டிக் கொண்டே இருக்கிறாள்!

அவள் சீண்டுதல்கள் தொடர்கதையாகி விட்டன! கொஞ்சம் கூட கணவன் மனைவி உறவு என்னாகும் என்பது குறித்து அவள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை!”

இப்படிப்பட்ட கடுமையான அச்சமூட்டுகின்ற ஒரு மன நிலையிலேயே பெரும்பாலான நேரம் கழிகின்றது அந்தக் கணவனுக்கு!

இவ்வாறு ஒரு கணவன் (அல்லது மனைவி)  அலைமோதும் உணர்ச்சிகளால் அனுதினமும் அலைக்கழிக்கப்படுகின்ற மன நிலை எப்படிப்பட்டதென்றால் –
கடுமையான வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒருவன் எவ்வாறு அங்கும் இங்கும் அலை மோதி அலைக்கழிக்கப் படுகின்றானோ அது போலவே இங்கே கணவன் “உணர்ச்சி வெள்ளத்தில்” சிக்கிக் கொண்டு  அலைக்கழிக்கப்படுகின்றார்கள்!

ஒரு முறை பெண்களைப்பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: “அறிவிலும் மார்க்கத்திலும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் சிந்தனையை போக்கக்கூடியவர்களாக உங்களை விட  வேறு யாரையும் நான் பார்க்கவில்லை!” (புகாரி)

என்ன செய்வது என்று அவனால் சிந்திக்கக் கூட முடிவதில்லை! தவிப்பான்! துடிப்பான்! நாடித்துடிப்பு அதிகரித்திடும்! என்பது, தொண்ணூறு, ஏன் நூறு வரைக்கும் கூட எகிறி விடும்! இதனையே ஆங்கிலத்தில்  emotional flooding in marriage – என்று அழைக்கிறார்கள்! தமிழில் நாம் இதனை “திருமண வாழ்வில் உணர்ச்சிப் பிரவாகம்” என்று அழைக்கலாம்.

இந்த உணர்ச்சி வெள்ளத்தில் கணவன் மட்டும் தான் சிக்கிக் கொள்கிறான் என்று எண்ண வேண்டாம். ஒரு மனைவியும் கணவனின் சொல் அல்லது செயல்களால் அதே போன்ற மன நிலைக்குத் தள்ளப்படுகின்றாள்.

உணர்ச்சி வெள்ளத்தில் சிக்கியிருக்கின்ற கணவனால் (அல்லது மனைவியால்) தெளிவாக ஒன்றைக் காதில் வாங்கிக் கொள்ள இயலாது. கேட்கப்படுகின்ற கேள்விக்குத் தெளிவான பதிலையும் அளித்திட முடியாது. மனதை ஒருமுகப்படுத்திட முடியாது. அவனால் செய்ய முடிவதெல்லாம், எங்கேயாவது ஓடி விடலாமா என்று தோன்றும்; அல்லது ஒங்கி மனைவியை அடித்து விடலாமா என்று தோன்றும்;

தனித்தனியே போய்ப் படுத்துக் கொள்வார்கள்; ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். பேசிப் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளலாம் எனில் “யார் முதலில்?” என்ற கேள்வி எழும்.

“என் மேல் என்ன தப்பு?” என்று இருவருமே நினைப்பதனால், “கருத்துப் பரிமாற்றம்” நின்று போய் விடுகிறது.

இத்தனைக்கும், இந்த உணர்ச்சி வெள்ளப் பிரவாகத்துக்கு ஆரம்ப காரணம் ஏதோ பெரிதான ஒன்றாகத்தான் இருந்திட வேண்டும் என்பதில்லை! ஒரு மிகச் சிறிய பிரச்சனை கூட இறுதியில் இருவரையும் சோகத்துக்கு ஆளாக்கி விடும்.

நாம் முன்பு குறிப்பிட்டது போல ஆண்களே அதிகமாக “அமைதி வழி பின்வாங்குதலை” (stonewalling) நாடுகிறார்கள்!

அது போலவே பெண்களே அதிமாக கணவன்மார்களைக் கடுமையான சொற்களால் வசை பாடுகிறார்கள். (harsh cricism)

ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்கு உபதேசம் செய்திடும்போது இவ்வாறு கூறினார்கள்:

‘பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது’ என்று கூறினார்கள். அது ஏன் என்று அப்பெண்கள் கேட்டதற்கு, அதற்கான காரணங்களில் ஒன்றாக பெண்கள் அதிகமாகச் சாபமிடுவதைக் குறிப்பிட்டார்கள் நபியவர்கள். (புகாரி) 
 .
பெண்களின் கடுமையான விமர்சனம் எப்படி இருக்கும் எனில் தவறு எதுவோ அதனை விமர்சிப்பதற்கு பதிலாக தவறு செய்த கணவனை நோக்கியே விமரிசனம் அமைந்திருக்கும்.

“இப்படி தாமதமாக வருவது தப்பில்லையா?” என்பதற்கும் நீங்க என்னைக்கு நேரத்துக்கு வந்திருக்கீங்க? என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள்.

நபிமொழியைக் கவனியுங்கள்:

அந்தப்பெண்களின் ஒருத்திக்கு காலம் முழுக்க உபகாரம் செய்து, பின்பு உங்களில் ஒரு தவறை அவள் கண்டுகொண்டால், நான் உன்னிடத்தில் எந்த நலவையும் கண்டதில்லை என்று கூறிவிடுவாள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி)

இப்போது மனைவியின் கடுமையான விமர்சனம் அதனைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படுத்தும் படுபாதகமான பின் விளைவுகளை சற்று ஆழமாக கவனியுங்கள்:

கணவன் ஏதோ தவறு செய்து விடுகிறான். (சிறிய விஷயம் தான்! பல் இடுக்கில் உள்ள உணவை சுண்டு விரலை விட்டு எடுக்கும் கெட்ட பழக்கம் தான்!)

மனைவி கடுமையாகத் திட்டுகிறாள்! (ஏங்க! உங்களுக்கும் சுத்தத்துக்கும் சம்பந்தமே கிடையாதுங்க!)

பயங்கரமான கோபம் கணவனுக்கு! (“ஏன்? என் தம்பி மனைவி அருகில் இருக்கும்போது தான் என்னை இப்படி திட்டுவியா?).

கணவன் இப்போது உணர்ச்சிப் பிரவாகத்தில்!

“ஆமாம், அவங்க நாம பேசுறத எல்லாம் காதில வாங்கிக்கிட்டுத் தான் உட்கார்ந்து இருக்கிறாங்களாக்கும்!”

இவளிடம் இனியும் பேசினால் இன்னும் என்னென்ன பதில்கள் எல்லாம் அவள் வாயிலிருந்து வருமோ என்று அஞ்சியவனாக “அமைதி வழி” ஒதுங்க ஆரம்பிக்கிறான்!

இது தான் stonewalling!

கணவன் தன்னை அலட்சியம் செய்து விட்டு ஒதுங்குவது மனைவியை இன்னும் கோபப்படுத்துகிறது! அவள் குரலை இன்னும் உயர்த்திப் பேசுகிறாள்!

“ஏன், ஓடி ஒளியறீங்க?”

கணவனிடம் பதில் இல்லை! சுவர் போல!

தனக்கு பதில் ஏதும் சொல்லாமல் சுவர் போல் நிற்கும் கணவன் இந்த அமைதி மூலம் தன்னை அவமானப் படுத்துவதாகவும் தன்னை தன் கணவன் தண்டிப்பதாகவும் எண்ணுகிறாள். அவளது உணர்வுகளை சற்றும் மதிக்காத கணவன் மீது கோப உணர்ச்சி கொப்பளிக்கிறது! குரலை உயர்த்தி மேலும் திட்டுகிறாள் கணவனை!

இப்போது மனைவி “உணர்ச்சிப் பிரவாகத்தில்!”

இங்கே ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது பொதுவாகவே பெண்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதில் ஆண்களை விட மிகச் சிறப்பானவர்கள். அது போலவே அந்த உணர்ச்சிகளுக்கு சொல் வடிவம் தந்து விலாவாரியாக வர்ணிப்பதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள்.

ஆனால் பரிதாபம்! ஆண்களின் நிலை இதற்கு நேர் மாறானது! அவர்களால் உணர்ச்சிகளைச் சரிவர புரிந்து கொள்ளவே முடியாது!  அது போல உணர்ச்சிகளை அவர்களால் விவரித்துச் சொல்லிடவும் முடியாது!

இதனால் தான் – மனைவி கணவனிடம் பேச்சைத் தொடர்கிறார் (she wants to engage!) . ஆனால் கணவன் பேச்சைத் தொடங்க பயப்படுகிறார்! பின் வாங்கி விடுகிறார்1 (he wants to withdraw!).

கணவன் பின் வாங்குவதற்கு “பழி” வாங்கிட மனைவி மேலும் அவமானப் படுத்தும் சொற்களைப் பயன்படுத்தி திட்டுகிறார்!

கணவனோ தன்னை “ஒரு பாவமும் அறியாத சூழ்நிலைக் கைதி” (innocent victim!) என்று தன்னை நினைத்துக் கொள்கிறார்!

நாம் முன்பு குறிப்பிட்டது போல “உணர்ச்சிப்பிரவாகம்” நாடித்துடிப்பை அதிகரிக்கச் செய்து விடும்! ஆனால் அமைதியாக பின் வாங்கிடும்போது நாடித்துடிப்பு நார்மலாகி விடுமாம்! இது கணவனுக்கு சற்றே ஆறுதல் தான்!

ஆனால் – கணவனின் இந்தப் பின் வாங்கலால் –  இப்போது மனைவி உணர்ச்சிப் பிரவாகத்தில்!

இப்படி மாறி மாறி கணவனும் மனைவியும் உணர்ச்சிப் பிரவாகம் எனும் சக்கரத்தைச் சுற்றிக் கொண்டிருந்தால் இல்லற வாழ்க்கை அறுபட்டுப் போய்விடும் என்பதே ஆய்வுகளின் தீர்க்கமான முடிவாக உள்ளது!

இதிலிருந்து கணவன் மனைவியரைக் காத்திட என்ன வழி?

கணவனுக்கு தனி அறிவுரை! மனைவிக்குத் தனி அறிவுரை!

அது என்ன?

உணர்ச்சிப் பிரவாகமான சூழ்நிலைகளை கணவனும் மனைவியும் எவ்வாறு எதிர்கொள்வது?

அறிவுரை முதலில் கணவன்மார்களுக்கு –

பொதுவாகவே பெண்கள் “உணர்வுகளுக்கு” அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

எனவே, மனைவி ஒரு பிரச்னையை உங்களிடம் கொண்டு வந்தால் – அந்தப் பிரச்னைக்குப் பின்னணியில் உள்ள அவளின் உணர்வை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் முதலில் குறிப்பிட்டது போல் பிரச்னை மிக அற்பமானது என்று கணவன் நினைக்கலாம். ஆனால் அது மனைவியை உறுத்துகிறது எனில், ஒன்று – மனைவியின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் மனைவியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட வேண்டியது தானே! பல்லிடுக்கின் உணவை விரல்களை விட்டு நீக்கும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் தானே! “என் கணவர் என் பேச்சுக்கு (உணர்வுக்கு) மதிப்பளித்து விட்டாரே!” – என்று மனம் குளிர்ந்து போய் விடுவார் அவர்!

ஆனால் உங்கள் மனைவியின் கோரிக்கையில் நியாயம் இல்லை எனில் – அமைதியான சூழல் ஒன்றில் வைத்து மனைவியிடம் உங்கள் நிலையை எடுத்துச் சொல்லலாம். உணர்ச்சிவசப்பட்ட சூழலில் விவாதங்கள் எடுபடாது என்பதால் சற்றே ஒத்திப்போட்டு பின்னர் பேச்சைத் தொடங்குவது நல்லது!

மிக முக்கியமாக கணவன் இங்கே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் – மனைவி தன் உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசத்தொடங்கினால் – அவசரப்பட்டு – ஒரு தீர்வை (solution) வழங்கி விடக்கூடாது! அப்படி மனைவியின் பேச்சை இடைமறித்து ஒரு முடிவை முன்வைப்பதை மனைவி எப்படி எடுத்துக் கொள்கிறார் எனில், “நம்மை இவர் பேசவே விட மாட்டேன் என்கிறாரே! முழுமையாக காதில் வாங்கினால் என்ன குறைந்தா போய்விடும்?”

ஆனால் அமைதியாக முகம் பார்த்து காது தாழ்த்திக் கணவன் கேட்கும்போது மனைவி என்ன நினைக்கிறார்: “இவர் என்னைப் புரிந்து கொள்கிறார்! என் உணர்வுகளை மதித்து நான் சொல்ல வருகின்ற அனைத்தையும் பொறுமையாகக் கேட்கின்றார்! என் நிலைமையில் தன்னை வைத்து என் கண்ணோட்டத்தில் இருந்து பிரச்சனையைப் பார்க்கிறார்! அது போதும் எனக்கு!”

இதில் வேடிக்கை என்னவென்றால் – தாங்கள் சொல்வதை முழு மனதுடன் தங்களின் கணவன்மார்கள் காதில் வாங்கிக் கொண்டாலே போதும் என்று நினைக்கிறார்கள் மனைவிமார்கள்!  கணவன்மார்கள் தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அது அவர்களுக்கு உறுத்துவதில்லை!

“என் கணவன் என்னை மதிக்கிறாரா? நான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்கிறாரா? – இதுவே அவர்களுக்கு மிக முக்கியம்!

மனைவிக்கு என்ன அறிவுரை?

கணவனின் எந்த செயல் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ, உங்களுக்கு எது உறுத்தலாக இருக்கிறதோ – அந்த செயலை மட்டுமே விமர்சியுங்கள்!

கணவனின் அந்தச் செயலால் நீங்கள் எப்படி பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை உணர்த்திடுங்கள்! ஆனால் – அதனை விமர்சிக்கும்போது அந்தச் செயலைச் செய்திட்ட உங்கள் கணவனை விமர்சித்திட வேண்டாம்! அது உங்கள் கணவனை அவமானத்துக்கு உள்ளாக்குகிறது!

சுற்றுலா ஒன்றுக்குத் திட்டமிடுகிறார் கணவர். மனைவி எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக பயணம் மேற்கொள்ள இயலாமல் போய் விடுகிறது!

ஊர் முழுவதும் ஒரே அரசியல் போராட்டம். வாகனங்களின் மீது கல்லெறிகின்றார்கள்! ஒரு பயணி இறந்தும் போய் விடுகின்றார். பலருக்குக் காயம். பேருந்துகள் எரிக்கப்படுகின்றன! ஒரு பதற்றமான சூழ்நிலையில் வேண்டாமே ஒரு சுற்றுலா என்று கணவன் தன் முடிவை மாற்றிக் கொண்டு விடுகிறார்!.

அவ்வளவு தான்! மனைவிக்கு வந்ததே கோபம்.

“போடுகின்ற எந்த திட்டத்தையாவது நீங்கள் உருப்படியாகச் செய்து முடித்ததுண்டா? எத்தனை தடவை இது போல ஏற்பாடு செய்து பின்பு அதனை கேன்ஸல் செய்திருக்கிறீர்கள்! உங்களை நம்பி நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தேனே! எனக்கு வேண்டும்! – என்று பேசுவதற்கு பதிலாக,

“ஏங்க! பிள்ளைகள் எல்லாம் ஆசையாக ரெடியாகி விட்டார்கள்; நானும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்; ஊரில் போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும்; மற்றவர்கள் எல்லாம் போய்க் கொண்டு தானே இருக்கிறார்கள்! இப்படி திடீரென்று நீங்கள் வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வது எனக்குச் சரியாகப் படவே இல்லைங்க! உங்கள் முடிவை மாற்றிக் கொண்டு நீங்கள் புறப்பட்டால் எனக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி தானே!”  – என்று பேசிடலாம் அல்லவா?

எனவே தான் சொல்கிறார்கள் – செயலை விமர்சியுங்கள்! செய்தவரை விமர்சிக்க வேண்டாம்! அது உறவுகளைக் கெடுத்து விடும்!

சுருக்கமாகச் சொல்வதென்றால் – உணர்ச்சிகரமான சூழ்நிலை கணவன் மனைவியருக்குள் ஏற்படும்போது

1. இருவருமே அமைதி காத்தல் அவசியம் (calm down)

2. ஒருவர் மற்றவரின் கண்ணோட்டதிலிருந்து பிரச்சனையைப் பார்த்திட முன் வர வேண்டும். (empathy)

3. ஒருவர் மற்றவரின் கருத்துக்களை காது தாழ்த்திக் கேட்டிட வேண்டும். குறுக்கீடுகள் கூடாது! (மனைவிமார்கள் சற்று சுருக்கமாகப் பேசிட கற்றுக்கொள்தல் அவசியம்) (active listening)

4. நமக்குப் பழகி விட்ட எந்த ஒரு “பழக்கமும்” ஒரே நாளில் மாறி விடாது. பயிற்சி தேவை (practice)! அதற்குப் பொறுமை தேவை! பொறுமையுடன் பயிற்சி செய்து அதன்படி நம் செயல்பாடுகளை நாம் மாற்றிக் கொண்டால் இல்லறம் பாதுகாக்கப்படும் – அது முறிக்கப்படுவதிலிருந்து!

source: http://muslimkudumbam.blogspot.in/2013/05/3_23.html#more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb