காகிதப் பூ மணக்காது, கள்ளிப்பாலும் சுவைக்காது!
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
2014, நவம்பர் மாதம், கொச்சிக் கடற்கரையிலும், புது டெல்லியிலும் ‘லவ் கிஸ்’ என்ற அமைப்பு ஒன்று கூடி ஒருவருக்கொருவர் நேசத்தினைத்தினை பரிமாற ‘கிஸ்’ செய்வது என்று அறிவிப்பு வந்து, அதனால் எதிர்ப்பும், போலிஸ் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு சென்று விட்டது ஒரு செய்திக் குறிப்பு.
அதுவும் ஒரு ஆணுக்கு இன்னொரு ஆணும் ஓரினை சேர்க்கையினை வெளிப்படுத்தும் அளவிற்கு உதட்டில் முத்தமிடும் காட்சிதான் உச்ச்சகாட்டம். ஏனென்றால் அறையில் நடக்க வேண்டிய செயல்கள் அந்தரத்திற்கு வந்து விட்ட அதிசயம் தான்.
சிறார்கள் உணவுப் பழக்க வழக்கங்களால் சமீப காலங்களில் இளம் வயதிலேயே பாலுணர்வு உச்சக் கட்டத்தினை எட்டும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். அதன் வடிகாலாய் ‘லவ்’ என்ற ஒரு ஆயுதத்தினை கையில் எடுக்கின்றனர்.
பாலுணர்வு ஆராச்சியாளர் டாக்டர் நாராயண ரெட்டி கூறும்போது, ‘பாலுணர்வு தவறல்ல, ஆனால் அவற்றினை அறிவுடன் கட்டுப் படுத்துவது புத்திசாலித் தனம்’ என்று சொல்கிறார்.
சமீபகால சினிமாவும், டிவியும் பாலுணர்வைத் தூண்டக் கூடிய பாடல்களையும், தொடர்களையும், படங்களையும் வெளியிடுவதால், அதனை பெரியோரும், சிறார்கள் ஒருங்கே அமர்ந்து வீடுகளில், தியேட்டர் போன்றவற்றில் அமர்ந்து பார்த்து ரசிப்பதால் பாலுனர்வினை மேலும் தூண்டுவதிற்கு வழி விடுகிறோம். பீச், தியேட்டர், பூங்கா, போன்ற பொது இடங்களில் சிறார்கள் தங்கள் பள்ளி, கல்லூரி சீருடையினைக் கூட மாற்றாமல் மெய்மறந்து அமர்ந்து லவ்வினைப் பரிமாறிக் கொள்வதினை நீங்களும் கண்டு மனம் வெதும்பி இருப்பீர்கள்.
பார்வை, சிரிப்பு, கடித பரிமாற்றம், பரிசு அன்பளிப்பு என்றுத் தொடங்கி உரசுதல், அணைத்தல், முத்தமிடல், பின்பு பெண் சிறார்கள் தங்களையே உடல் ரீதியாக ‘தியாகம்’ செய்யுதல் என்று எல்லை மீறிப் போகும். அதால் பாதிக்கப் படுவது பெற்றோரும், உடன் பிறந்தவர்களும், அவர்களுடைய மான, மரியாதையும் தான். அதில் பாதிக்கப் பட்டவர்கள், ‘கௌ ரவக் கொலை’என்ற ஆயுதத்தினைக் கடைசியாக கையாள்கின்றனர். அவையெல்லாம், ‘கண் கெட்டதும் சூரிய நமஸ்காரம்’ என்பது போன்ற செயலாகும்.
சிறார்கள் பாலுனர்விற்கு அடிமையாவதிற்கு என்ன முக்கியமான காரணம்:
1) குடும்பத்தில் பெற்றோர் நல்ல சுமுகமான இணக்கமின்மை:
குடும்பத்தில் பெற்றோர் நல்ல சுமுகமான இணக்கமின்மை சிறார்களை பெற்றோர்களிடமிருந்து விலகி நிற்க வழிவிடுகிறது. பெற்றோர்கள் சிறார்களில் பராமரிப்பிளிருந்தும், வழி நடத்துவதிலிருந்தும் கவனம் செலுத்தாதது சிறார்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இல்லாமல் வளர்கிறார்கள். சில வீடுகளில் பெற்றோர்களின் ‘கூடா ஒழுக்கம்’ குழந்தைகளை வழிக்கேட்டுக்கு இழுத்துச் செல்கிறது.
வளரும் சிறார்களுக்கு வெளியிடங்களில் தங்களுடைய பாலுனர்விற்கு அடிமையாகி விட்டு வாழ்க்கையினை பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று அறிவுரை சொல்லும் பெற்றோர், உற்றார், உறவினர் மிகக் குறைவே. சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் வரும் செயல்முறைகள் அலங்காரமானது மட்டுமல்ல மாறாக அபாயகரமான பொய்யானது, பாதுகாப்பற்றது என்று சிறார்களுக்குச் சொல்ல வேண்டும். அதன் உதாரணமாக 10.11.2014 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
சென்னை கொடுங்கையூரில் வினோத் என்ற 28 வயது வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிள் மெக்கானிக். அவர் வித்யா(27) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து நான்குமாத கர்ப்பிணியாக்கி உள்ளார். அதன் பின்பு காதல் மனைவி மீது உள்ள பாசம் விலகி, அருகில் உள்ள பள்ளி சிறுமிகள் பக்கம் பார்வையினை செலுத்தியிருக்கின்றார். அவர் வலையில் பிளஸ் 1 படிக்கும் மாணவி நக்மா, ‘காதல்’ படத்தில் வரும் கதாயகி போன்று விழுந்திருக்கின்றார். இருவரும் பொழுது போக்கு இடங்களில் சுற்றியிருக்கின்றார்கள். இதனை அறிந்த நக்மாவின் பெற்றோர் நக்மாவினை சொந்த ஊரான டெராடூனுக்கு அழைத்துச் சென்று இருக்கின்றார்கள். இதனை அறிந்த வினோத்தும் டெராடூனுக்குச் சென்று பெற்றோருக்குத் தெரியாமல் சென்னையில் திருமணம் செய்ய ஜி.டி. ரயில் மூலம் அழைத்து வந்துள்ளார். வினோத் டெராடூனுக்குச் சென்றதினை அறிந்து மனைவி வித்யா சென்னை சென்ரல் ரயில் நிலயத்தில் உறவினர்களுடன் காத்து அந்த இருவரும் சென்னை வந்து சேர்ந்ததும் கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளார். போலீசாரும் நக்மாவின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார்கள் என்ற செய்தி எவ்வளவு சிறார்கள் பாலுணர்வுக்குப் பழியாகி விடுகிறார்கள் என்று தெரிந்திருக்கும்.
2) சுய மரியாதை, கவுரவம் இல்லாமை:
சுய மரியாதை மற்றும் கவுரவம் இல்லாத சிறார்கள், பெண்கள் மனோ இச்சைகளுக்கு காட்டுப் பட வேண்டியதுள்ளது. குழந்தைகள் வளரும் போதே வேற்று ஆடவர் கொடுக்கும் இனிப்புப் பண்டங்கள், அன்பளிப்பு போன்றவைகளை இலவசமாகப் பெறக் கூடாது என்று பெற்றோர் அறிவுரை வழங்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் சிறார்கள் பெரியவர்களாக வளரும்போது வேற்று ஆடவர் கொடுக்கும் செல்போன், பாக்கெட் மணி, பிறந்த நாள் பரிசுப் பொருள்கள் வாங்க மாட்டர்கள். அவ்வாறு சுய கவுரவுத்துடன் வளர்க்கப் பட்ட பெண் சிறார்கள் ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருக்கும்போது பாலுணர்வுக்கு உந்தப்பட்டு தங்களது கற்பினை இழக்க மாட்டார்கள் என்றும், சுய கவுரவமில்லாது இருக்கும் பெண் சிறார்கள் தங்கள் கற்பினையும் இழந்து பால் வினை நோய்களையும் பெற்றுக் கொள்கிறார்கள் என்று டாக்டர் நாராயண ரெட்டி சொல்கிறார்.
அது மட்டுமா, காதலன் பெண் சிறார்களின் கற்பினை சூறையாடி கரு உண்டாக்கி விட்டு அதனைக் கலைக்க யோசனைகளான கடுகுச்சாறு குடித்தல், கள்ளிப் பாலை பெண் உறுப்பில் செலுத்துதல், ஹேர்பின் மற்றும் குத்தூசி கொண்டு கற்பபையினை குத்துடல், போலி டாக்டர் உதவியுடன் கொடூரமான முறையில் கருக்கலைப்பது போன்ற கொடூரமான யோசனைகளுக்கும் அவர்களை வற்புறுத்துகிறான். அந்த விசப் பரிட்சையில் பெண் சிறார்கள் உயிர் இழக்கவும் நேருடுகிறது உங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். அது மட்டுமல்லாமல் ஒரு பூவினில் தேனெடுத்து சுவை கண்ட காதலன் தன் காதலியினைப் பார்த்து, ‘நீ திருமணத்திற்கு முன்பு என்னுடன் உறவு கொண்டது போல வேறு ஆண்களுடன் உறவு கொண்டிருப்பாய்’ என்று சந்தேகமும் காதலியினை விட்டு ஒதுங்கும் பேர்வழிகளைப் கண்டுள்ளோம்.
3) நேசமும், பாசமும்:
காதலர்கள் காதலியின் உடல் உறவிற்காக நேசத்துடன் பழகுவர். ஆனால் காதலிகள் பாசத்திற்காக உடல் உறவினை ஒப்புக் கொள்கிறார்கள். என்று 1999 ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் இயங்கும், ‘பவுண்டேசன் ஒப் ரிசர்ச் அண்ட் ஹெல்த் சிஸ்டம்’ என்ற நிறுவனத்தில் பணிபுரியும், நிர்மலா மூர்த்தி மற்றும் அகிலா வாசன் ஆகியோர் கூறுகின்றனர். அவர்கள், ‘பெண்கள் ஆண்களின் மேல் உள்ள பாசத்தினை ‘பியார்,பிரேம்’ என்று நவுன் ஆன பெயர் சொல்லைப் பயன் படுத்துகின்றனர். ஆனால் ஆண்கள் அதனை வினைச் சொல்லாக மாற்றி தங்களின் நேசம் வேண்டுமென்றால் அதற்கு பரிகாரமாக காதலியின் கற்பைத் தரவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
புது டெல்லியின் ஒரு ஆய்வு அறிக்கையில், ‘ஆண்களின் தோற்றத்தில் மயங்கும் பெண்கள் 57 சதவீதம்’ என்று கூறுகிறது. சென்னையில் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட், காதில் வலயம், கழுத்தில் கவரிங் செயின், கையில் வெள்ளி பிரேஸ்லெட், போன்று அணிந்து பெண்கள் பள்ளி, கல்லூரி, பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் மால்ஸ் போன்ற வற்றில் வளம் வந்து தங்கள் வலையில் சிக்கும் கன்னிகள் சுற்றி வட்டம் போடுவதினை நீங்கள் காணலாம். அதுபோன்ற வல்லூருகளிடமிருந்து பெண் சிறார்களை கண்மணியினை காக்கும் இமைகளைப் போல் பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
4) ஆணாதிக்கம்:
காதலில் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. ஒரு ஆய்வுக் கட்டுரையில், ‘பெண்கள் சுகமில்லாது இருந்தாலும் ஆண் காதலர்கள் உடலுறவு கொள்ள வற்புறுத்தலுக்குப் பணிவதாக’ சொல்கிறது. அதே அறிக்கையில் ஆண்கள் காதலிகளிடம் உடலுறவு கொள்ளும்போது தற்காப்பிற்கான ஆணுறைகளை 75 சதவீதம் பேர்கள் தவிர்ப்பதாக கூறுகிறது. இதன் மூலம் கள்ளத்தனமாக காதலர்களை கர்ப்பிணியாக்கி விட்டு தப்ப நினைக்கும் கயவர்களிடமிருந்து பெண் குழந்தைகளை காப்பது பெற்றோர்களின் கடமையல்லவா?
5) உற்றார், உறவினர், ஆலோசகர் கடமை:
மும்பையினைச் சார்ந்த ஆராய்ச்சியாளர் ராக்கி ஜெயின் கூறும் பொது, ‘பெண் சிறார்களுக்கு உடலுறவிற்கும், கற்பமாவதிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாததால் 98 சதவீத காதலர்கள் பாதுகாப்பற்ற உடலுறவிற்கு தள்ளப்படுகிறார்கள்’.
ஆகவே பெற்றோர், உற்றார், உறவினர் மற்றும் ஆலோசகர்கள் பெண் சிறார்களுக்கு பருவமடைடல், அதனால் உடலில் மற்றும் மன அளவில் ஏற்படும் மாற்றங்கள், கற்பு பிறழா ஒழுக்கம், பாலுணர்வு அதனை பாதுகாக்கும் விதம் ஆகியவற்றினை தன் நண்பர்களுக்கு சொல்லும் புத்திமதி போல் எடுத்துச் சொல்லி, குழந்தைகள் தேவைகள் குறிப்பறிந்து ஆடம்பரமில்லா செலவினங்களுக்கு உதவி செய்து அவர்களை காதல் என்ற மாய வலையில் விழாமல், வாழ்க்கையில் வெற்றிகாண ஒவ்வொருக்கும் ஒரு குறிக்கோள் வேண்டும் எனச் சொல்லி நல்வழியில், வாய்க்காலில் ஓடும் தண்ணீர் வீணாகாமல் நெல்லுக்குப் பாய எப்படி வழிவகை செய்கிறோமோ அதனைப் போன்று சமூதாய மக்களும்செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகுமல்லவா?
– AP.Mohamed Ali