வெளிநாட்டவரை மணக்க விரும்பும் சவூதி அரேபியப் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஜித்தா: சவுதி அரேபியா பெண்கள் உள்ளுர் பிரஜைகளைவிட வெளிநாட்டுப் பிரஜைகளை திருமணம் செய்துகொள்வதற்கு அதிக ஆர்வம் காட்டிவருவது அதிகரித்திருக்கின்றது. சவுதி ஆண்களைத் திருமணம் செய்து வாழ்வதில் இறுக்கமான பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தங்களும், இதன் காரணமாக அதிகளவான விவாகரத்துக்களையும் எதிர்நோக்க வேண்டிய சிக்கல்களும் இருப்பதாக சவுதிப்பெண்கள் தெரிவிக்கின்றனர்.
உலகிலுள்ள முஸ்லிம் பெண்கள் எவ்வாறு இஸ்லாமிய அடிப்படையில் உரிமைகளைப் பெற்று மகிழ்ச்சியாக தங்களது நாடுகளில் வாழ்கிறார்களோ, அத்தகைய வாழ்க்கை சவுதியில் வாழும் சவுதிப் பெண்களுக்கு கிடைப்பதில்லை. சவுதிப் பிரஜையை திருமணம் செய்து வாழும்போது, சுதந்திரமற்ற வாழ்வே அதிகமான பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
“அதிகமான இளம் சவுதிப் பெண்கள் உள்ளுர் அரபிகளையும், குடும்ப பரம்பரையில் வந்தவர்களையும் மணக்க விருப்பமற்றிருக்கின்றனர். கலாச்சார இறுக்கங்களும், அதிகரித்துவரும் விவாகரத்துகளுமே இதற்குக் காரணம்” என்பதாக ஹாதி மக்கி எனும் தாதி ஒருவர் தெரிவிக்கிறார்.
”சொந்தமாக எங்களது பணிகளை மேற்கொள்வதற்கும், நவீன கால கலாச்சாரங்களுக்கு ஏற்ப தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உள்ளுர் அரபிகள் அனுமதிப்பதில்லை” எனவும் அவர் கூறுகிறார்.
“வெளிநாட்டு ஆடவர்களை அதிகமாக மக்கா, ஜித்தா, தாயிப் மற்றும் மதீனா பெண்கள் மணந்துகொள்வது அதிகரித்துவருகிறது. இதற்குக் காரணம் “ஹஜ் மற்றும் உம்ரா மூலமாக சவுதி அரேபியாவுக்குள் நுழையும் வெளிநாட்டினர் இப்பிரதேசங்களில் அதிகமாக நிலைத்துவருவதும் ஓர் காரணமாகும்”.
“ஆனால் றியாத் மற்றும் கிழக்குப் பிரதேசத்தில் வாழும் பெண்கள் இத்தகைய வெளிநாட்டினரை மணந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்படுவதாக” சஆத் அலி எனும் சவுதி நபர் தெரிவிக்கிறார்.
“2012 கணிப்பின்படி சவுதிப் பெண்கள் மணந்துகொள்வதில் முதலாவதாக குவைத் அரபிகள் காணப்படுகின்றனர். இதற்கு அடுத்ததாக யெமன் அரபிகளும் மற்றும் ஏனைய நாட்டு அரபிகளும் காணப்படுகின்றனர். இதே ஆண்டின் கணிப்பின்படி, 118 பாகிஸ்தானியர்களை சவுதிப்பெண்கள் திருமணம் செய்திருந்தனர். இந்நிலை அரபி அல்லாத வெளிநாட்டினரையும் சவுதிப்பெண்கள் மணமுடிப்பதில் அதிக ஆர்வம் காட்டிவருவது வெளிக்கொணரப்படுவதாக” சட்ட ஆலோசகர் அப்துல் அஸீஸ் டஸ்னன் தெரிவிக்கிறார்.
“ஏழு இலட்சம் சவுதிப் பெண்கள் இதுவரைக்கும் வெளிநாட்டினரை மணந்துள்ளனர். இது சவுதிப்பெண்கள் தொகையில் பத்து வீதமானது” என சூறா கவுன்ஸில் உறுப்பினர் ஸதகா பாடெல் குறிப்பிடுகிறார்.
“ஆனாலும், வெளிநாட்டினரை சவுதிப்பெண்கள் மனமுடித்தால் கனவருக்கும், குழந்தைகளுக்கும் சவுதி அரேபிய பிரஜா உரிமை பெறுவதில் அதிக சிக்கல் இருப்பதாகவும், தனது குழந்தைகளுக்கு இதுவரைக்கும் சவுதி கடவுச்சீட்டு பெறமுடியாமல் இருப்பதாகவும்” சவுதி பெண் பத்திரிகையாளரான நூரா அல் சாத் தெரிவிக்கிறார்.
நன்றி : yourkattankudy.com